Wednesday 13 April 2022

ம.இ.கா. ஏன் மௌனம் சாதிக்கிறது?

 


இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மித்ரா  அமைப்புப் பற்றியான விவாதங்கள் இன்னும்  போய்க்கொண்டு தான் இருக்கின்றன!

அது தவறு என்று யாரும் சொல்லவும்  முடியாது. காரணம் அந்த அமைப்புப்பற்றி தொடர்ந்தாற் போல ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

மித்ரா என்று அமைக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை ம.இ.கா. வின் பெயர் தொடர்ந்து அடிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தான் இங்கு முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டியது. 

ஆரம்ப காலத்தில் ம.இ.கா,வின் கட்சியின் ஒரு பிரிவு போல அது செயல்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இங்கும் ம.இ.கா. வின் பெயர் தான் அடிபட்டுக் கொண்டிருக்கிறது!  ஆக, ம.இ.கா. வையும்  மித்ராவையும் ஏனோ பிரிக்க முடியவில்லை!

ம.இ.கா. குற்றவாளி என்று பேசப்பட்டாலும் இவைகள் அனைத்தும் வெறும் "இந்த காதில் வாங்கி அந்த காதில் விடும்!" செய்திகளாகவே இருக்கின்றன!. அவர்களின் மீதான குற்றத்தை எப்படி நிருபணம் செய்வது என்கிற கேள்வி வருகிறது. நீதிமன்றத்திற்குப் போனால் கூட இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றே தோன்றுகிறது!

ஆனாலும் ம.இ.கா. வினருக்கு நாம் சொல்ல வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. நீதிமன்றத்தை நீங்கள் ஏமாற்றினாலும் மக்களுக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏதோ சில குறிப்பிட்ட காலம்வரை சிலரை ஏமாற்றலாம். ஆனால் மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது!

மக்களை ஏமாற்ற வேண்டும் என்று நீங்கள் அரசியலுக்கு வரவில்லை. நல்லெண்ணத்தோடு தான் வந்தீர்கள்.  ஒரு வேளை இடையிலே ஏதோ தவறுகள் நேர்ந்திருக்கலாம். உங்கள் பாதை மாறி இருக்கலாம்.   அதையே தொடர்வேன் என்று அடம் பிடிக்காமல் ஆரம்பக் காலத்தில் நீங்கள் நினைத்தபடி மக்கள் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

எல்லா காலத்திலும் கெட்ட பெயரோடு தான் வாழ்வேன் என்று மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதீர்கள்.

உங்கள் குறிக்கோள் என்பது இந்தியர்களின் முன்னேற்றம் தான். அந்த முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்காதீர்கள். இன்று எல்லாத் துறைகளிலும் நலிந்து கிடப்பது இந்திய சமுதாயம். குறிப்பாக சிறிய தொழிலைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அதற்கான முதலீடு அவர்களிடம் இல்லை. அதற்கான திறன் அவர்களிடம் இல்லை. உதவக் கூடியவர்கள் யாரும் இல்லை. இந்தக் கொரோனா காலத்தில் இந்தியர்களின் நிலை இன்னும் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தெரிந்தும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ம.இ.கா.வே  தடையாக இருக்கிறது என்றால் உங்களைப் பார்த்து நாங்கள் பெருமைப் படவா முடியும்?

அடுத்த பொதுத் தேர்தலின் போது நீங்கள் மக்களை நோக்கி வரத்தான் வேண்டிவரும். அதற்கு முன்னர் உங்கள் சாதனைகளைக் காட்டுங்கள்!

No comments:

Post a Comment