Sunday 24 April 2022

ஏன் நடவடிக்கை இல்லை?

 

                                        எம் ஏ சி சி ஆணையர் அசாம் பாக்கி

எதிர்க்கட்சித் தலைவர் லிம் குவான் எங் சரியான நேரத்தில் சரியான கேள்வியை  எழுப்பியுள்ளார்.

மேல் முறையீட்டு நீதிபதி நஸ்லாம் முகமட் கஸாலி மீது சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.  அவரது கணக்கில் ஒரு மில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டிருந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அது பற்றி அவர் போலிஸ் புகாரும் செய்திருந்தார்.

இப்போது இலஞ்ச ஒழிப்பு ஆணையம் உடனடியாக, நீதிபதியை ஒரு குற்றவாளியாக எடுத்துக்கொண்டு அது பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அதாவது யாரும் எதிர்பாராத வகையில் அதிவேகமாக  ஆணையம் இயங்க ஆரம்பித்துவிட்டது!

அது சரி என்று எடுத்துக் கொண்டாலும் அதற்கு முன்னரே இலஞ்ச ஒழிப்பு ஆணையர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.  கோடிக்கணக்கில் பங்குகளை கொள்முதல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. இது பற்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.  ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! அது ஏன் என்பதற்கான எந்த விளக்கமும் இதுவரை  கொடுக்கப்படவில்லை!

நீதிபதி நஸ்லான் முகமட் கஸாலி யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இவர் தான்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், முன்னாள் பிரதமர் நஜிப் குற்றவாளி என SRC International Sdn.Bhd.  வழக்கில் தீர்ப்பளித்தவர். அதன் பின்னர் தான் நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

இப்போது அதற்கும் இதற்கும் கொஞ்சம் முடிச்சுப்போட்டால் கொஞ்சம் விளங்கும். நஜிப்பை மாட்டிவிட்டவர் என்பதனால் நீதிபதி மஸ்லான் மீது உடனடியாக விசாரணையை ஆரம்பித்துவிட்டனர். இலஞ்ச ஒழிப்பு ஆணையர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரது வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர். அவர் மேல் மட்டத்தினருக்கு வேண்டியவர் என்பதனால் நடவடிக்கை இல்லை. நீதிபதி வேண்டாதவர் பட்டியலில் இருப்பதால் உடனடி நடவடிக்கை.

இங்கு யார் குற்றவாளி என்பது பற்றி நாம் விவாதிக்கவில்லை. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சி என்பது ஏறக்குறைய அம்னோவின் ஆட்சி தான். இன்று அது 'ஏறக்குறைய'  என்று சொல்லுகிறோம். நாளை,  தேர்தலுக்குப் பின்னர்,  நாடு அவர்களது கட்டுப்பாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? நஜிப் நிச்சயமாக சிறைக்குப் போக வாய்ப்பில்லை! ஆனால் நீதிபதி நஸ்லான் போக வாய்ப்புண்டு! இது தான் வித்தியாசம்!

வல்லவன் வகுத்ததே சட்டம்!  அரசியலில் ஆளுபவனே ஆசான்! இன்று  மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த பலர் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே சிறைக்கு உள்ளே கம்பி எண்ண வேண்டியவர்கள் எல்லாம் வெளியே சீமானாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!

நீதி நிலைநாட்டப்பட நல்லவர்களையே அரசியலுக்குக் கொண்டு வருவோம்! அப்போது தான் நீதி கிடைக்கும்! வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment