Tuesday 5 April 2022

எது முதலில்?

                கட்சி தாவலைத் தடுக்க பக்காத்தான் தலைவர்கள் ஆதரவு

கட்சி தாவலைத் தடுக்கும் மசோதா வருகிற திங்கள் கிழமை, 11-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படும் என்று மலேசியர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிட்டது!

பக்காத்தான் கட்சியினர், தாவலைத் தடுக்கும் மசோதாவுக்கு, தங்களது முழு ஆதரவை பிரதமர் இஸ்மாயிலிடம் உறுதி அளித்த நிலையில் இப்போது அது திசை திருப்பப்பட்டு விட்டது!

பக்காத்தான் கட்சியினர் முழு ஆதரவைத் தந்துவிட்டனர். ஆனால் எதிர்பார்த்தபடி  கட்சி தாவலின் கதாநாயகர்களான அம்னோவும் (பாரிசான் நேஷனல்),  பெரிக்காத்தான் நேஷனலும் வழக்கம் போல பின்கதவு வழியாக வெளியேறிவிட்டனர்!

இப்போது கதை மாறுகிறது!  சிறப்பு நாடாளுமன்றம திங்கள் கிழமை  கூடும் என்று  பிரதமர் உறுதி அளித்தபடி  அதில் எந்த  மாற்றமுமில்லை. ஆனால் எதற்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்? அது தான் கதாநாயகர்கள் ஓடி ஒளிகிறார்களே!

கட்சி தாவல் சட்ட  மசோதாவுக்கு அமைச்சரவை இன்னும் இணக்கம் காணவில்லை என்பதால்  இந்த மசோதா இப்போது ஒத்தி வைக்கப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்!

நாம் வெளியே இருந்து பார்க்கும் போது இது ஒன்றும் மலையைப் பெயர்த்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தக்கூடிய வேலையில்லை என்று நமக்குத் தெரிகிறது. அப்படி என்ன பெரிய பிரச்சனை? தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள் எந்தக் கட்சியில் வெற்றி பெற்றார்களோ அந்தக் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும். வேறு கட்சிகளுக்கு மாறக் கூடாது! மாற வேண்டுமானால் தேர்தலுக்குப் பின்னர் மாறலாம்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் எந்தக் கட்சியிலிருந்து ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அவர் பதவியில் இருக்கும் காலத்தில் வேறு கட்சிக்கு மாறக்கூடாது, அவ்வளவு தான். 

இதில் என்ன சிக்கல்? இதில் என்ன ஆயிரம் ஆய்வுகள் செய்ய வேண்டும்? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கட்சித் தாவலை ஆரம்பித்த வைத்தவர்கள் அம்னோ கட்சியினர் தான்! இப்படி மாறுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தனர்! அதனால் பக்காத்தான் அரசாங்கம் முழுமையாக ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர்கள் செய்ய நினைத்த வேலைகள் அனைத்தும் தடைபட்டு விட்டன. 

இப்போது இது போன்ற கட்சித் தாவல் சட்டம் வந்தால் தாங்கள் தொடர்ந்து அரசியலில் இருக்க முடியாதே என்று அஞ்சுகின்றனர்!

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமா என்பதே சந்தேகம் தான். அதனால் தான் அடுத்த பொதுத் தேர்தலை சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அம்னோ கட்சியினர் நெருக்குதல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது நம் முன்னே உள்ள கேள்வி: கட்சித் தாவலை தடுக்கும் மசோதா முதலில் வருமா அல்லது 15-வது பொதுத் தேர்தல் முதலில் வருமா என்பது தான்! காரணம் அம்னோ பொதுத் தேர்தலைத் தான் விரும்புகிறது! அவர்கள் பக்கம் தான் காற்றும் வீசுகிறது!

No comments:

Post a Comment