Sunday 3 April 2022

விலையேற்றத்தை தடுக்க முடியவில்லை!

 

                                                                       Ramadan Bazaar

ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. ரம்லான் சந்தைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனா  தொற்று தொடங்கியதிலிருந்து எந்த சந்தைகளும் எடுபடவில்லை. இப்போது தான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

ஆனாலும் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அப்படிப் போய்விடும் என்பதற்கான அறிகுறிகளும் இல்லை. அது தொடர்ந்து நம்மிடையே இருக்கத்தான் போகிறது. அதோடு நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய நிலை!

முன்பு போல ஊரடங்கு என்பதெல்லாம் இல்லை என்றாலும் இன்னும் ஒரு சில விஷயங்களில் நாம் கட்டுப்பாட்டோடு தான் இருக்க வேண்டும். எல்லாம் மக்களின்  நலன் கருதி தான். இடைவெளிவிட்டு நடப்பது, நிற்பது என்பதெல்லாம் நமது பாதுகாப்புக்காகத்தான். நமது சுகாதார அமைச்சர் ஒன்றை மட்டும் தவறாமல் குறிப்பிடுகிறார். முகக்கவசத்தை எப்போதும் அணிந்து கொள்ளுங்கள் என்கிறார். அதனை அலட்சியம் செய்ய வேண்டாம். எல்லா நாடுகளிலும் இது இன்னும் அமலில் உள்ளது. ஆனாலும் பலர் முகக்கவசம் அணிவது அநாவசியம் என்று நினைக்கின்றனர். அலட்சியப் படுத்துகின்றனர்.   "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன  இலாபம்" என்று பாடிவிட்டுப் போக வேண்டியது தான்!  இந்தத் தொற்றை ஒழிக்க வேண்டும் என்றால் அது கூட்டு முயற்சியால் தான் நடக்கும். அதனைப் புரிந்துகொண்டால் போதும்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்லான் மாதத்தில் கலகலப்பாக இயங்கும் இந்த சந்தைகளில் சாப்பாட்டுப் பொருள்களே அதிகம் விற்பனையில் உள்ளன. உணவுப் பொருள்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்திருந்தாலும் இங்கு சந்தைகளில் சமைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாது. அதனால் அதிக விலை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.  வேண்டும் என்றால் அதிக விலையில் வாங்கத்தான் வேண்டும். வேண்டாம் என்றால் தவிர்த்துவிடலாம். தேர்வு  உங்களது கையில்!

ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்ய வேண்டும். முடிந்தவரையில் உங்களின் குழந்தைகளைச் சந்தைகளுக்குக் கூட்டிச் செல்லாதீர்கள். சந்தை மட்டுமல்ல கூட்டங்கள் கூடுகிற எந்த இடமாக இருந்தாலும் குழைந்தைகள் வேண்டாம். அவர்கள் தொற்றுகளின்  தாக்குதலுக்கு மிக எளிதாக  ஆளாவார்கள்.

சந்தைகளுக்குப் போகிறவர்கள் பெரும்பாலும் வேலை செய்பவர்கள். அதனால் அவர்களுக்கு மாற்று வழியில்லை. வீட்டில் ஆட்கள் இருந்தாலும் சமைக்கக் கூடியவர்கள்  இருந்தால்  சமைப்பார்கள். பெரும்பாலானோர் நோன்பை கடைப்பிடிப்பவர்கள். அதனால்  சந்தைகளை நம்பியே இருப்பவர்கள்.

அதனால் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதது!

No comments:

Post a Comment