Tuesday 12 April 2022

இதையும் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்!

 


விஜய் இரசிகர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்! பீஸ்ட் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அது எப்படியிருந்தாலும் நீங்கள் அதனை இரசிக்கக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது எப்போதும் உள்ளதுதான். அது பழக்க தோஷம்! அது நல்லா இருக்கோ, நல்லாயில்லையோ அது தளபதி படம்! அவ்வளவு தான்!

உங்களைப் போல ஒரு குறிப்பிட்ட நடிகரின் இரசிகன் அல்ல நான். பொதுவாக சினிமாப் படங்கள் எனக்குப் பிடிக்கும். ரஜினி, கமல்ஹாசன் படங்கள் பிடிக்கும். மற்ற நடிகர்கள் மேல் எனக்கு எந்த வெறுப்புணர்ச்சியும்  இல்லை. காரணம் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள். என் வேலையை நான் பார்க்கிறேன். அதில் என்ன காழ்ப்புணர்ச்சி?

நான் இங்குச்  சொல்ல வருவது எல்லாம் எப்படியோ நாம் ஒரு குறிப்பிட்ட நடிகரின் நடிப்பில் சிக்கிக் கொண்டோம்! அது தவறில்லை. ஆனால் அவர்மீது சும்மா வெறும் அபிமானம் மட்டும் போதாது! அவர் மிக உயரத்தில் இருக்கிறார். நாம் நமது துறையில் அவரைப் போன்று உயரத்தில் இருக்க வேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.

விஜய், அஜீத் போன்றவர்கள் வெறும் நடிப்பில் மட்டும் அல்ல அவர்கள் பொருளாதார ரீதியிலும் மிகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.  நடிப்பில் உயர நம்மால் முடியாது. ஆனால் பொருளாதார ரீதியில் அவர்கள் அளவிற்கு உயர முடியும்.

நடிகர்கள் எவ்வளவு தான் உயர உயரப் பறந்தாலும் ஒரு தொழிலதிபரோடு போட்டிப்போட முடியாது என்பதை மறக்க வேண்டாம். நமக்கும் ஒரு தொழில் அதிபராகக் கூடிய அனைத்துத் தகுதிகளும் உண்டு. அவர்களின் ஈடாக நம்மால் முடியாது என்றால் பரவாயில்லை. நம்மளவில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும்.

மிக உயரிய நிலையில் உள்ள ஒரு தொழிலதிபர் என்ன சொல்லுகிறார் பாருங்கள். "முதலில் நீங்கள் ஒரு இலட்சத்தைச் சம்பாதித்து விடுங்கள். அதன் பின்னர் அடுத்த இலட்சத்தை எப்படி சம்பாதிப்பது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்"  என்கிறார்.

இங்கு நான் சொல்ல வருவதெல்லாம் நீங்கள் ஓரு நடிகரின் இரசிகன். அவரைப் பார்க்க வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருக்கும். அவரைப் பார்க்கும் போது உங்களுக்குள் ஒரு கம்பீரம் வர வேண்டும். நாமும் அவரைப்போல உயர்ந்து நிற்கிறோம் என்கிற அந்த எண்ணம் சும்மா வராது.  நாமும் அந்த நடிகரைப் போல கடுமையாக உழைக்க வேண்டும்.  அவரின் உழைப்பை அவர் நிருபித்துக் காட்டியிருக்கிறார்.  அதனால் தான் நாம் அவரைக்  கொண்டாடுகிறோம். நாமும் நமது உழைப்பை  நிருபித்துக் காட்ட வேண்டும். அது தான் அவருக்கும் பெருமை.

தளபதி உயர்ந்து நிற்கிறார். அதனால் என்ன? நாம் தாழ்ந்தா போக முடியும்? அவரின்  கால்வாசியாவது  நாம் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை!

No comments:

Post a Comment