Wednesday 20 April 2022

ஆறு மில்லியன் என்ன ஆறு காசா?

 


இன்று ஒரு செய்தியைப் படித்த போது மனதைக் கொஞ்சம் பாதிக்கத்தான் செய்தது.

பணத்தைச் செலவு செய்வதில் எல்லாருக்கும் அக்கறை உண்டு. அரசாங்கத்திற்கு இன்னும் அதிக அக்கறை தேவை. அது யார் வீட்டுப் பணமோ அல்ல. மக்கள் கொடுக்கும் வரிப்பணம்.  அது சரியாகச் செலவு செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று ஸ்ரீலங்காவில் என்ன நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது? பணத்தைப் பொறுப்பற்ற முறையில் செலவு செய்ததின் பலன் இன்று மக்கள் வீதிக்கு வந்து விட்டார்கள். இங்கு நம் நாட்டில் அது நடைபெறாது என்று சொல்லுவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? எந்தத் தகுதியும் இல்லை.

வீணடிப்பு செய்வதில் நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.  சிலாங்கூர் மாநிலத்தில் பிராவ்ன்ஸ்டன் என்கிற  தோட்டத்தில் ஒரு புதிய பள்ளியைக் கட்டியிருக்கிறார்கள். அந்தப் புதிய பள்ளி கட்டி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன! ஆனால் பள்ளி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இன்னும் ஆபத்தான சூழலில்  பழைய பள்ளியே இயங்கி வருகிறது!

இந்தப் புதிய பள்ளி சுமார் 6.1 மில்லியன் செலவில் கட்டப்பட்ட பள்ளி என்று சொல்லப்படுகிறது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதற்கான காரணங்கள் நமக்குத் தேவையில்லை. இனி மேலும் பயன்பாட்டிற்கு வருமா என்றும் தெரியவில்லை. 

இப்போது இந்தப் பள்ளி இந்த நிலைமையில் இருப்பதற்கு  யார் பொறுப்பு? யாரை நாம் குற்றம் சொல்லுவது? நம்மைப் பொறுத்தவரை கல்வித்துறையின் அலட்சியமானப் போக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மில்லியன் வெள்ளியைச் செலவு செய்துவிட்டு  இப்போது வாய் மூடி மௌனியாக இருந்தால் தன் மீது குற்றம் இல்லை என்று கல்வி இலாகாவினர் சொல்ல முடியுமா? ஆறு மில்லியன் என்பது திருடர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம்.  நம் கல்வி இலாகா எப்படி சும்மா வாய்மூடிக் கொண்டிருக்க முடியும்? மக்கள் பணம் அல்லவா?

ஒரு சில அரசாங்க அதிகாரிகள் நினைப்பது போல பணம் எங்கிருந்தோ வந்து நாட்டிற்குள் கொட்டுவதில்லை!  மக்களின் உழைப்பு. மக்களின் வரிப்பணம். இதையெல்லாம் மறந்துவிட்டு ஆறு மில்லியனைச் செலவு செய்துவிட்டு  ஒன்றுமே தெரியாதது போல நடிப்பவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட  வேண்டும். 

இப்போது தவறு செய்பவர்களுக்கு விரைவாகத் தண்டனைகள் கிடைப்பதில்லை. ஆறு மில்லியனை எதற்காக செலவு செய்தார்கள்! பாடசாலைக் கட்ட. இப்போது அது முடியுமா முடியாதா என்கிற இழுபறி! கல்வி இலாகா தானே அதற்குப் பொறுப்பு. அந்தப் பொறுப்பை கல்வி இலாகா தட்டிக்கழிக்க நினைத்தால் அவர்கள் அந்தப் பள்ளியைக் கட்டியிருக்கவே கூடாது.  கட்டியபின் எதுபற்றியும் பின்வாங்கக் கூடாது.

எப்படிப் பார்த்தாலும் கடந்த ஆறு வருடங்களாக பொறுப்பற்ற கல்வி இலாகா கட்டிய அந்தப்பள்ளியை  இப்போது யாருக்கும் பொறுப்பில்லாமல் சும்மா கிடக்கிறது!

ஆறு மில்லியன் வெள்ளி என்பது கல்வி இலாகாவுக்கு  ஆறு காசு மாதிரி போல் இருக்கும் போல் தோன்றுகிறது!

நமக்கும் ஸ்ரீலங்காவுக்கும் அதிகம் வித்தியாசாமில்லை!

No comments:

Post a Comment