Thursday 14 April 2022

பொறுப்புணர்வு நமக்கும் வேண்டும்!

 

                                                          River Pollution!

நமது வீடுகளைச் சுற்றிருக்கும் ஆறுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லையோ என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

நான் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது. ஒரு காலத்தில் அந்த ஆறு ரப்பர் மரங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆறு. இப்போது வீடுகள் வந்து விட்டதால் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானத் தோற்றத்தோடு முன்பு இருந்ததை விட  கொஞ்சம் பெரிதாகத் தோற்றமளிக்கிறது.

எல்லாம் சரிதான். ஆனால் இப்போது அந்த ஆற்றின் தூய்மை தான் கேள்விக்குறியதாகி விட்டது! ஆறுகள் குப்பைகள் கொட்டும் இடம் என்று யார் கண்டுபிடித்தார்களே, தெரியவில்லை!  மக்களிடம் பொறுப்புணர்ச்சி இல்லை. குப்பை இருந்தால் அதைக் கொண்டு ஆற்றில் கொட்டுங்கள் என்று வீட்டில் கற்றுக் கொடுத்த பாடத்தை பிள்ளைகளும் பின்பற்றுகிறார்கள்!

அதைவிட அரசாங்கமும் நமக்கு  ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளைக் கொண்டு போய் ஆற்றில் கொட்டுகின்றன.  கழிவுநீர் என்றால் தொழிற்சாலையிலிருந்து நேராக ஆற்றுப்பக்கம் திருப்பிவிடுகின்றன.  இப்படி ஆறுகளை ஏதோ குப்பைக் கொட்டும் இடமாகவும் கழிவுநீர் செல்லும்  இடங்களாகவும் வழிகாட்டிவிட்டனர்! வழிகாட்டுகின்றனர்!

ஆனால் அவர்களை யார் கேட்பது? அரசாங்கம் தான் கேட்க வேண்டும். தண்டனைகளைக் கொடுக்க வேண்டும்.  யாரும் கேட்காததால் இது போன்றச் செயல்கள் நன்றாகச் செழித்து வளர்ந்துவிட்டன! அப்படியே தண்டனைகள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை! காரணம் தண்டனைக் கொடுப்பவர்கள் தானே முதலாளிகளாகவும் இருக்கின்றனர்!

பொறுப்புணர்வு என்பது எல்லாப் பக்கங்களிலிருந்தும் வரவேண்டும். அரசாங்கம் முதலில் அதனைச் செய்து காட்ட வேண்டும். அரசாங்கம் கடுமையாக இருந்தால் மக்களும் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்கிற அக்கறை இருக்கும். இப்போது  யாருக்குமே அக்கறை இல்லை என்கிற நிலைமை உருவாகிவிட்டது!

ஆனால் ஒன்றை நம்மால் செய்ய முடியும். நாம்  நமது குடும்பத்தினருக்கும் நமது பிள்ளைகளுக்கும் வழிகாட்டியாக இருந்தாலே அதுவே பெரிய சாதனை! அதுவும் கூட பார்க்கின்ற மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

நாம் நினைத்தால் தூய்மைக்கேட்டை ஒழித்துவிட முடியும். நாம்  நம்மளவில் சரியாக இருந்தால் மற்றவர்களும் சரியாக இருப்பார்கள். ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக்கொள்வார்கள்.

ஆக,  அரசாங்கம்  என்ன செய்கிறது என்பதை மறந்துவிடுங்கள். அவர்கள் செய்வதை செய்யட்டும். நாம் செய்வதை செய்வோம். பொறுப்புணர்வு நம் அனைவருக்கும் பொதுவானது. அதைக் கடைப்பிடிப்போம்.

தூய்மைக்கேட்டிலிருந்து நமது ஆறுகளைப் பாதுகாப்போம்! சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம். நமது நலனைக் காப்போம்!

No comments:

Post a Comment