Sunday 10 April 2022

கட்சித் தாவல் தடுப்பு சட்டம் ஒத்திவைப்பு!

 


கட்சித் தாவலை தடுக்கும் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை!

இந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு அதன் பின்னர் சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்தும்  ஒன்றுமில்லையென்றாகி விட்டது! மீண்டும் பூஜ்யம் என்கிற நிலைக்கே சென்றுவிட்டது!

இப்போது பிரதமர் கூறுகின்ற காரணங்கள் என்ன? இந்த தடைச்சட்டம் பற்றி இன்னும் முழுமையான  ஆய்வுகள் வேண்டுமாம். அறிஞர் பெருமக்களின் இன்னும் ஆழமான கருத்துக்கள் வேண்டுமாம். இது தவறு என்று சொல்லுகின்ற நிலைமையில் நாம் இல்லை.  காரணம் இது சட்ட திருத்தம் சம்பந்தப்பட்டது. 

ஆனால் இப்பொழுதே ஒரு சிலர் இந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதனால் பயனில்லை என்கிறார்கள்! அப்படியென்றால்  சட்டத்தில் ஓட்டை இருக்கும் என்று சொல்ல வருகிறார்கள் என்பது தான் அர்த்தம்! எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும்  சட்டத்தை மீற நினைப்பவர்களுக்குச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைத்தான் முதலில் பார்ப்பார்கள்!  என்ன செய்தால் தப்பிக்க முடியும். தப்ப முடியும். இதைத்தான் முதலில் ஆராய்ச்சி செய்வார்கள்!

அதனால் சரியான முறையில் சட்டம் அமலாககப்பட வேண்டும் என்பதில் நமக்கும் அக்கறை உண்டு. நாமும் அக்கறை இல்லாமல் எதையாவது எழுதுவதோ பேசுவதோ சரியான அணுகுமுறை இல்லை என்பதும் புரிகிறது!

பிரதமர் இப்போது  அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில், ஜூலை மாதம் நடைபெறும் என்கிற அறிவிப்போடு இந்த கட்சித் தாவலை தடுக்கும் சட்டம்  நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பதாக கூறியிருக்கிறார். நாமும் அதனை நம்புகிறோம்.

இன்னொன்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. அம்னோ கட்சியினர் பொதுத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் நமக்குத் தெரிகிறது.  ஆக, ஜுலை மாதத்திற்கு முன்னரே அதாவது நாடாளுமன்ற கூட்டம் கூடும் முன்னரே 15-வது பொதுத் தேர்தல் நடக்கக் கூடிய சாத்தியமும் உண்டு! பிரதமரும் அவர்களோடு கைகோர்த்துக் கொள்வார் என்பதையும் மறுப்புதற்கில்லை!

இது அரசியல். எந்த சாத்தியமும் உண்டு. அரசியலர்கள் புனிதர்கள் அல்ல. எல்லா அற்பத்தனங்களும் அவர்களிடம் உண்டு.

பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment