Tuesday 19 April 2022

ஆசிரியர்களின் பணிச் சுமையா?

 


ஆசிரியர்கள் முன்பு போல தங்களது பணி காலம் முடியும்வரை வேலையில் இருப்பதில்லை. சீக்கிரம் ஒயவு பெறவே விரும்புகின்றனர்.

இப்போது தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் இந்தக் கட்டாய ஓய்வு மிக  மோசமான நிலையை அடைந்திருப்பதாக ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

இப்படி ஒரு நிலை வருவதற்கான காரணங்கள் என்ன? எல்லா காலங்களிலும் சொல்லப்படுவது ஒரே காரணம் தான். பணிச் சுமை அதிகம். இந்த ஒரே காரணம் தான் நம் காதில் விழுவது! இன்னும் பல வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும் பணிச் சுமை தான் முக்கியமாகக் கூறப்படுவது. நம்மால் அதனை மறுக்க முடியாது என்பது உண்மை தான்.

ஆசிரியர் சங்கம் கொடுத்திருக்கின்ற  புள்ளிவிபரம் நம்மைத் திகைக்க வைக்கின்றது! ஆமாம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள் தங்களது வேலையிலிருந்து இடைப்பட்டக் காலத்திலேயே ஓய்வு பெற விண்ணப்பிக்கிறார்கள் என்பதாகக் கூறுகிறது. அதே சமயத்தில் வயதின் காரணமாக  ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்தாயிரம் ஆசிரியர்கள்  ஓய்வு பெறுகின்றார்கள் என்பதும் ஓர் அதிர்ச்சி செய்தி தான். இந்த நிலை நீடித்தால் வருங்காலங்களில் ஆசிரியர் தொழிலின் நிலை என்ன என்கிற கேள்வியும் எழுகிறது.

பணிச்சுமை மட்டும் தான் இதற்கான காரணமா அல்லது வேறு காரணங்கள் உண்டா? பத்து, பதினைந்து  ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்களின் ஆசிரியர் தொழில் பற்றியான கருத்து வேறு விதமாக இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை. இதனிடையே பல்வேறு அரசாங்க விடுமுறை. ஒவ்வொரு ஆண்டும்  நீண்ட பள்ளி விடுமுறைகள். இப்படியே விடுமுறை, விடுமுறை என்பது தான் மக்களுக்குத் தெரிந்தது! அதனால் இது போன்ற விடுமுறைகளுக்காகவே  ஆசிரியர் தொழில் அன்று இளையவர்களை ஈர்த்தது.

ஆனால் இப்போது விடுமுறை என்பதெல்லாம் இல்லை என்கிறார்கள் ஆசிரியர்கள். விடுமுறை என்றாலும் நாங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள்!

இப்போது கோவிட்-19  நோய் தொற்று பள்ளி ஆசிரியர்களை மிகவும் நொந்து போகச் செய்து விட்டது என்பதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புக்களினால் பல பிரச்சனைகள்.  எல்லா ஆசிரியர்களுக்கும் கணினி பயிற்சி உண்டு என்று சொல்ல முடியாது. அதுவும் இப்போது முக்கிய காரணமாகவும் அமந்து விட்டது. வேலைச் சுமையோடு இப்போது தொற்றும் ஆசிரியர்களை அலைக்கழிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கல்வித்துறைக்கு இப்போது எல்லோரும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைக்குச் சீக்கிரமாக முடிவு காணுங்கள்.  இல்லையேல் நமது கல்வி முறையே பாழாகிவிடும் என்பதாக எச்சரிக்கிறார்கள்!

ஆசிரியர்களின் பணிச்சுமை குறைய என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment