Monday 25 April 2022

இது என்ன நியாயம்?

 

இந்தோனேசிய பணிப்பெணகளைப் ப்ற்றி பேசும் போது நமக்கு ஏனோ மனம் வலிக்கிறது. 

அவர்களில் பெரும்பாலும் படிக்காதவர்கள். அவர்கள் பிழைக்க வழியில்லாமல் வேலை தேடி நமது நாட்டிற்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது.

இவர்களின் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்களே இவர்கள் என்ன பெரிய கோடிஸ்வரர்களா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.  இவர்களில் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் தான். கணவன்-மனைவி இருவரும் வேலை செய்பவர்கள். இவர்களுக்குத்தான் இந்தப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றனர்.

இவர்கள் இல்லாமல் இன்னொரு தரப்பும் உண்டு.  இவர்கள் பணக்காரர்கள். பரம்பரை பணக்காரர்கள் அல்ல. ஏதோ ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் தீடீர் பணக்காரர் ஆனவர்கள். அதாவது அரசியல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசியல்வாதியின் குடும்பத்தில் நடந்தது இந்த நிகழ்வு. அந்த அரசியல்வாதியின் மகன் இந்தோனேசிய பணிபெண்ணின் மீது இஸ்த்ரி பெட்டியை எடுத்து சூட்டோடு அவள் முதுகின் மீது தேய்த்து விட்டானாம். பின்னர் இந்த செய்தி காணாமல் போனது! 

இன்றைய நிலவரப்படி, கடந்த 16 மாதங்களில், இந்தோனேசிய தூதரகம் சுமார் 400  பணிப்பெண்களிடமிருந்து பலவேறு குற்றச்சாட்டுகளைப் பெற்றிருக்கிறது. அவர்களுக்கு முறையான சம்பளம் கொடுப்பதில்லை. அவர்கள் உடல் ரீதியான கொடுமைகளை அனுபவித்திருக்கின்றனர். இந்த  400 பணிப்பெண்களும்  இந்தோனேசிய தூதரகத்தில் அடைக்கலம் நாடி  வந்தவர்கள். இவர்கள் அனைவரும் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானவர்கள்.

ஒரு வகையில் பார்க்கும் போது மலேசியர்கள் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த தகுதியில்லாதவர்கள்  என்றே தோன்றுகிறது. இந்தப் பெண்களுக்கு வேலை நேரம் என்பதெல்லாம் கிடையாது. ஒரு சில பெண்கள் 24 மணி நேரமும் வேலை தான். சில மணி நேரங்கள் கூட தூங்க முடியாத நிலை.

ஒன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு சில நல்ல முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். . எனக்குத் தெரிந்த குடும்பத்தில் அவர்களிடம் வேலை செய்யும் இந்தோனேசிய  பணிப்பெண்  பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார், வீட்டுவேலைகளையும் செய்வார். குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் தான் பேசுவார். ஜாலியாக இருப்பார். ஏதோ குடும்பத்தில் ஒருவர் போல் தான் நடத்தப்படுகிறார். இப்படியும் சிலர் உண்டு.

பெரும்பாலும் நல்லவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் செய்கின்ற செயல்களால் நாட்டின் பெயரே கெட்டுப் போகிறது.

ஒரு சிலரின் நியாயமற்ற செயல்களால் இன்று மலேசியா,  இந்தோனேசிய பணிப்பெண்கள் விவாகாரத்தில் தலைகுனிந்து நிற்கிறது!

No comments:

Post a Comment