Wednesday 30 October 2024

சரவணன் சார் நன்றி!

            நன்றி:  தமிழ் லென்ஸ்

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர்  அன்வார் அவர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டி  பேசியிருந்தார்.

இந்தியப் பிரதமர் மோடி கூட பல இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

நமது பிரதமரோ அல்லது இந்தியப்  பிரதமரோ  திருக்குறளின் வரிகளை மேற்கோள் காட்டுவதில் எந்தத் தவறுமில்லை. தமிழ் அவர்களின் தாய் மொழி அல்ல. அதனால் அவர்களின் உச்சரிப்பில் குறைகள் இருக்கலாம். ஆனால்  அவர்கள் மேற்கோள் காட்டும் திருக்குறள் வரிகளில் எந்தக் குற்றமும் இல்லை. மேலும் அந்தக் குறளின் அர்த்தம் புரிந்து தான்  அவர் அந்தக் குறளை அவையில் கூறியிருக்கிறார்.  அந்த முயற்சியைப் பாராட்டுகிறோம். 

பிரதமர் அந்தக் குறளைக் கூறும்போது  அவையில் உள்ள சிலர் கேலியாக - சிரித்து மழுப்பியிருப்பார்கள் என்பது நமக்குப் புரிகிறது.  அதனைத்தான் டத்தோஸ்ரீ சரவணன்  கூறியிருக்கிறார்  கேலி கிண்டல் வேண்டாமென்று. திருக்குறள்  கேலிப் பொருள் அல்ல    தமிழ் அறியாதவர்கள் கூட, குறளின் பெருமை அறிந்து, அதனைப் பொது அவைகளில்  இன்றளவும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்த நாடாளுமன்ற அவையில் கூட ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களின் ஆங்கில உச்சரிப்பே நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்.  இந்தியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் மூன்று மொழிகள் அறிந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் மலாய் மட்டுமே அறிந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.  இந்த நிலையில் மற்றவர்களின் உச்சரிப்பைப் பார்த்து கேலி செய்வது சரியானப் போக்கு அல்ல.  அந்த குறள் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்வது தான் புத்திசாலித்தனம். அதற்காகத்தானே பிரதமர் அந்த அவையில் அந்தக் குறளைக் கூறுகிறார்.

டத்தோஸ்ரீ சவணன் அவர்களுக்கு மனமார்ந்த  நன்றி! திருக்குறள் கேலிப் பொருள் அல்ல  என்பதற்காகவே மீண்டும் நன்றி

Tuesday 29 October 2024

என்னதான் பிரச்சனை?


 மித்ரா ஏதும் நல்லது செய்கிறதோ இல்லையோ  நமக்குத் தெரியாது.  ஆனால் ஒரு சிலர் மித்ரா நல்லதே செய்யக் கூடாது என்று நினைப்பவர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்!

அதன் தலைவர் பிரபாகரன் என்னவோ அறிக்கைகள் விடுகிறார் அதைச் செய்கிறோம்,  இதைச் செய்கிறோம்  என்கிறார்!  சரி, கொஞ்சம் நாள் பொறுத்திருங்களேன்? என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே!   அவர் பொய்யா சொல்லப் போகிறார்? ஏதோ நடந்து கொண்டிருக்கிறது.  அவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார். 

எல்லாமெ நாம் நினைப்பது போல  நடக்க வாய்ப்பில்லை.  அவர் எதனைச் செய்தாலும் அது ஏதோ ஒரு வகையில் இந்தியர்களுக்குத்தான்  போய்ச்  சேரப்பொகிறது.   வேறு யாருக்கும் அல்ல.  இந்தியர் அல்லாதவர் என்றால் கேள்விகள் எழுப்பலாம். 

மித்ரா வசதி படைத்த,   தொழிலில் உள்ளவர்களுக்குத் தான் உதவுகிறது என்கிற குற்றச்சாட்டு எப்போதும் சொல்லப்படுகிறது.  அவர்கள் வசதிபடைத்தவர்கள் என்பதற்கு என்ன அளவுகோல்?  அவர்களுடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல  வசதி இல்லையென்றால் அவர்களுக்கும் மித்ரா உதவி செய்யத்தான் வேண்டும். அதனைத் தவறு என்று சொல்ல வழியில்லை.

இன்றைய நிலையில் எது நடந்தாலும்  அதற்கு பிரபாகரன் தான் பொறுப்பு என்று சொல்லுவதை  ஏற்க முடியாது.  முன்பு துணை அமைச்சர் ரமணன் பொறுப்பிலிருந்தார். அவர் தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் உதவிகளைக் கொண்டு வந்தார்.  குறிப்பாக மாணவர்களைக் குறிவைத்துக் காய்களை நகர்த்தினார். 

ஆனால் இன்று பிராபாகரன் நிலைமை வேறு.  மித்ரா பிரதமரின் அலுவலகத்திலிருந்து செயல்படுகிறது.  அரசு சார்பில் உள்ளவர்கள் அதில் அங்கம் வகிக்கிறார்கள். இப்போது அது ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது.  பிராபகரன் அரசியல்வாதி என்கிற முறையில்  நம்பாமல் இருக்கலாம். ஆனால் அரசு சார்பில் உள்ளவர்கள் பொறுப்பானவர்கள்  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியர்களின் நிலைமை தெரியும்.  அவர்களுக்குப் பிரதமரின் கட்டளை என்ன என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள்.

எல்லாமே  நம்பிக்கை தான். நல்லது நடக்கும் என நம்புவோம்.  யார் வந்தாலும் புழுதிவாரி தூற்றத்தான் வேண்டும் என்கிற அவசியமில்லை; கட்டாயமும் இல்லை.  பொறுத்திருப்போம்.  எப்போதும் ஒளிந்து கொண்டா இருக்க முடியும்?   சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.

மித்ராவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுதந்திரமாக செயல்பட விடுவோம்.

Monday 28 October 2024

சாரி! இப்பதான் புரிகிறதா?

 

முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களுக்கு இப்போது தான் உலகம் புரிந்திருக்கிறது. Sorry sir! It's too late!

இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தவருக்கு  இது கூடத் தெரியாதா?  என்னவோ சிறிய குழந்தை மாதிரி  புலம்பித் தீர்த்திருக்கிறார்!

பதவியில் இருக்கும் போது அத்தனையும் சொந்தம் தான். கழுதை கூட சொந்தம் கொண்டாடும்.  பதவி  இல்லையென்றால்  சொந்த கொண்டாட ஆளில்லை.  இதைத்தான் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம்.

பதவி வரும் போது பணிவு வரவேண்டும். அப்படியெல்லாம் பணிவு வந்துவிடாது. என்னன்னவெல்லாம் வரக்கூடாதோ  அத்தனையும் வந்துவிடும்.  பணம் பண்ணுவதற்கு  என்னன்ன வழிகள் உண்டோ  அத்தனை வழிகளும் தானாக வந்துவிடும்.  அதுவே பெருமையாகப் பேசப்படும்.

பதவி என்றால் சாதாரணமானது அல்ல. எல்லா அநியாயங்களையும்  செய்யக் கூடியது.  ஆனால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை அரசியல்வாதிகள் மறந்து விடுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 

இந்த நேரத்தில் போய் 'என் கூட இருந்தவனை எல்லாம் காணவில்லை' என்றால்  அவன் எப்படி வருவான்?  அவன் தனக்கு எந்தக் கெடுதலும் வருமோ  என்று எட்டி நின்றே வேடிக்கைப் பார்ப்பான்!  அவனுடைய பயம் அவனுக்கு!  பதவியில் இருந்த போது ஒன்றாக அனுபவித்தீர்கள்.  அப்போது நிதானம் வரவில்லை. என்ன செய்ய?  பதவி அதிகாரம் அப்படிப்பட்டது.  இப்போது நிதானம் வருகிறது.  துணைக்கு ஆளில்லை! பதவியும் இல்லை.

நஜிப் ஒன்றை உணர வேண்டும். நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள்,  மக்களுக்குத் துரோகம் செய்தவர்கள்,  கொள்ளையடித்தவர்கள், கொலைகாரர்கள்  யாராக இருந்தாலும் சரி கடைசி காலம் துன்பமாகத்தான் இருக்கும். தனிமையில் ஏங்க வேண்டித்தான் வரும். யாரும் தப்பிக்க முடியாது.  அது தான் நான்குமறை தீர்ப்பு.

Sunday 27 October 2024

ஆனாலும் நம்பிக்கை இல்லை!


 இன்றைய நிலையில் எந்த ஒரு பழத்தையும் நம்மால் கடைகளில் வாங்கிச் சாப்பிட முடிவதில்லை.

எதைத் தொட்டாலும் ரசாயன கலப்பு என்று சர்வ சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. எதையும் நம்பி வாயில் வைக்க முடிவதில்லை. நமக்கு வாழைப்பழங்களைப் பற்றி நன்றாகவே தெரியும். நமக்குப் பிடித்த பழங்களில் அதுவே முதன்மையானது.  ஆனால் சமீபகாலங்களில் அந்தப் பழமோ அதிகமான இனிப்பைக் கொடுக்கிறது! எங்கே கோளாறு? பழத்திலா, மனத்திலா? புரியவில்லை!

மேலே உள்ள பச்சை திராட்சைப் பழத்தைப் பற்றியான  செய்தி ஒன்று  வெளியாகியது.  தாய்லாந்து சுகாதார அமைச்சு திராட்சைப் பழத்தில் அதிக இரசாயனக்  கலப்பு  இருப்பதாக   சந்தேகத்தைக்  கிளப்பியது. ஆனால் உறுதிப்படுத்தவில்லை.  நமது சுகாதார அமைச்சும் நமக்குக் கிடைக்கும் பழத்தைச்  சோதனை செய்ததில்  பழத்தில் நச்சுத்தன்மை ஏதும் இல்லையென அறிவித்துவிட்டது.

எல்லாம் சரிதான். இப்போது பழங்கள் என்றாலே நமக்கு அச்சம் தருகிறது! இந்தத் திராட்சைப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். பழத்தைப் பார்க்கும் போதே பழம்  பளபள வென்று இருப்பதால் அதுவே நமக்கு அச்சத்தைக் கொடுக்கிறது. ஏன் இந்த அளவு பளபளப்பு?  ஆனால் அந்த வகைப்பழம் Shine Muscat என்பதால் அது ஷைன் ஆகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.   அதன் பெயரில் உள்ளதைப் போலவே அது பளபளப்பாக இருக்கிறது.  பழத்தில் ஆபத்து ஒன்றுமில்லை என்பதால்   தைரியமாகவே சாப்பிடலாம். 

சுகாதார அமைச்சு எல்லா வகைப்பழங்களையும் இரசாயன சோதனைக்குப்  பின்னரே  மக்களின் பயன்பாட்டிற்காக  விற்பனைக்கு வருகிறது   என்பது தெரியும்.  ஆனால் ஒரு சில விஷயங்கள் மக்கள் பயன்படுத்திய  பின்னரே  அமைச்சுக்குத் தெரியவரும் என்பதும் உண்மையே.

எப்படியோ மக்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பது தான் நமக்கு உள்ள  கவலை. சுகாதார அமைச்சு எப்போதும் விழிப்போடு இருக்கும் என நம்புகிறோம்.

Saturday 26 October 2024

வெடிச்சத்தம் வேண்டாமே!


 பட்டாஸ் வெடிப்பதில் ஒரு சந்தோஷம்  உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  அதுவும் குழந்தைகளுக்கு அளவில்லா சந்தோஷம்.

ஆனால் அந்த சந்தோஷத்தில் ஆபத்தும் உண்டு என்பதும் நமக்குத் தெரியும். தீபாவளிக்கு அடுத்த நாள் அது போன்ற செய்திகளைப்  பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.

ஆபத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் ஏற்படும் நஷ்டங்களை யாரிடம் போய் சொல்லுவது?  காசை கரியாக்குகிறோம் என்று சொல்லுகிறார்களே அது இதுதான்.

பணம்! பணம்! பணம்!  அந்தப் பணத்தை குழந்தைகளுக்குத் துணிமணிகள் வாங்குவதில் செலவு செய்யுங்கள்.  அதுவும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் தானே.  துணிமணிகள் நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தலாம்.

தீபாவளி என்றாலே புத்தாடை, புதிய துணிமணிகள்  தானே முக்கியம்.   இந்த பட்டாஸ்களில்  செலவுகள் செய்வதை விட  குழந்தைகளுக்கு  நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுங்களேன்.  பட்டாஸ் என்பது ஒரு நாள் கூத்து.  அத்தோடு அது முடிந்தது.   ஆனால் அதனால் வரும் விபரீதங்கள், ஏற்படும் நஷ்டங்கள் இவைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.

அக்கம் பக்கத்தாரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  பெரியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் அவர்கள் மட்டும் அல்ல.  நாய்கள், பூனைகள், பறவைகள் இவைகள் கூட வெடிச்சத்தம் கேட்டு  தலைதெறிக்க ஓடுவதை நாம்  பார்க்கிறோம். இந்த வெடிகள்,  எல்லா உயிர்களுக்கும் அச்சத்தைத்  தருகின்றன. 

சத்தம் இல்லாத  அடக்கமான  மத்தாப்பு வகைகளைப் பயன் படுத்துங்களேன்.  அவைகளினால் யாருக்கும்  எந்த இடைஞ்சலும் இல்லை. பிள்ளைகள் வேண்டாம் என்றா சொல்லுகிறார்கள்?  வெடிச்சத்தங்களும்  வன்முறைக்குத் தான் இட்டுச்செல்லும். குழைந்தைகளை வன்முறையாளர்களாகப் பயிற்சி கொடுக்காதீர்கள்.  பெருநாட்களை அமைதியாகக் கொண்டாட பிள்ளைகளுக்கு வழி காட்டுங்கள்.

வெடிச்சத்தம்  வேண்டாம் என்பதே நமது ஆசை!

Friday 25 October 2024

இந்திய சமூகம் புறக்கணிப்பா?

 

அடுத்த  2025 க்கான வரவுசெலவு திட்டத்தில்  இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அனைத்து அரசியல்வாதிகளும் கூறிவிட்டனர்.

ஜனநாயக செயல் கட்சியினர் வாய் திறந்திருக்கின்றனர். பி.கே.ஆர்., ம.இ.கா.  கட்சியினர் வாய் திறக்கவில்லை.   கட்சிக் கட்டுப்பாடு கருதி வாய் திறக்க வழியில்லை. துணை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன்  அரசாங்கத்தின் சார்பில் "அனைத்தும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது"   என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! 

ஆனால் இப்படித்தான் அரசியல்வாதிகள் பேசுவார்கள்  என்பது நமக்குத் தெரியும்.  கடந்த ஒன்பது ஆண்டுகளாக  இதே தொகையைத் தான் இந்திய சமூகத்திற்காக  அரசாங்கம் ஒதுக்கி  வருகிறது  என்று சொல்லப்படுகிறது.  ஆரம்ப காலங்களில் 'இந்தத் தொகை அதிகம்'  என்று மீண்டும் அரசாங்கத்திற்கே திருப்பி கொடுத்த கதைகள் எல்லாம் நம்மிடம் உண்டு.  அது ம.இ.கா.வின் பெருந்தன்மை!

இப்போதும் கூட பலர் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  மித்ரா பணம் என்னவாயிற்று என்கிற கேள்விகள்  இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. அவர்களோ பணம் எல்லாம் காலியாகிவிட்டது  இப்போது பணத்தேவை அதிகம் என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

மாண்புமிகு ரமணன் அவர்களாவது  அவ்வப்போது சில அறிவுப்புக்களையாவது  வெளியிட்டு வருகிறார். இத்தனை சிறு வியாபாரிகள், குறுவியாபாரிகள் கடனுதவி பெற்றோர்கள் என்று  அறிவிப்புக்கள் வருகின்றன. ஏதோ கேட்பதற்கு ஆறுதலாகவும் நமக்கு  இருக்கின்றது. 

ஆனால் மித்ராவுக்கு அப்படியெல்லாம் ஒரு நிலைமை இல்லை. பணம் முடிந்து விட்டது அவ்வளவு தான். என்ன அப்படியா?  அப்படியென்றால் அரசியல்வாதிகள் மீண்டும் தங்களது  சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்து விட்டார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது!

முதலில் கொடுத்த பணத்தை இவர்கள் என்ன செய்தார்கள்  என்று கணக்குக் காட்டட்டும்.  பொது மக்கள் பார்வைக்கு அதனை வைக்கட்டும். பிறகு தான் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா   என்கிற முடிவு செய்ய முடியும்.   அதுவரை அரசாங்கம் செய்தது சரிதான்  என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

"பலர் வாட வாழ சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை"

Thursday 24 October 2024

கடன் இல்லாமல் கொண்டாடுங்கள்!


 ஆண்டுக்கு ஒரு முறை தான் தீபாவளி. தீபாவளி மட்டும் அல்ல எல்லாப்  பெருநாள்களும்  அப்படித்தான்.  ஆண்டுக்கு ஒரு முறை தான். 

ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்காக  வட்டி முதலைகளான ஆலோங்களிடம்  கடன் வாங்கியா தீபாவளியைக் கொண்டாடுவது? அதனையும் செய்கின்றனர்  ஒரு சிலர்.

அது தனிப்பட்ட கடனாக இருந்தால் 'எப்படியோ தொலைந்து போ' என்று விட்டு விடலாம்.  ஆனால் அந்தக் கடனால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படுகிறது  என்பதை அறியாமலா கடன் வாங்குவர்?  கொடுமையிலும் கொடுமை.  அந்தக் குடும்பமே நிம்மதியாக வாழ முடியாமல் தெருவுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது.

குடிகார அப்பன் எதையாவது செய்துவிட்டுப் போய்விடுவான்.  ஆனால் அந்தக் குடும்பம், குழந்தைகள்  என்னபாடு படுவர் என்பதைக் கொஞ்சமாவது  சிந்திக்காமலா கடன் வாங்குவது?

நண்பர்களே,  பெருநாளைக் கொண்டாடுங்கள்.  அளவாகக் கொண்டாடுங்கள்.   உங்கள் வசதிக்கேற்ப கொண்டாடுங்கள். கடன் வாங்கி பெருநாளைக் கொண்டாட  வேண்டிய அவசியமில்லை.

இதோ இன்னும் ஓரிரு மாதங்களில்  குழந்தைகள் பள்ளி போக வேண்டிய கட்டாயம் உண்டு.  செலவுகள் உண்டு.  கல்வி என்றாலே செலவுகள் இல்லாமல் எதுவும் முடியாது.  உதவிகள் வரும் என்று எல்லாக் காலங்களிலும்  கையேந்தவா  முடியும்? வரலாம் அல்லது வராமல் போகலாம்.  யாரையும் நம்ப முடியாது. நம்மை நம்பித்தான்  வாழ வேண்டும்.

நமக்குத் தேவை கடன் இல்லாத் தீபாவளி.  ஆடம்பரம் இல்லாத் தீபாவளி. ஆடம்பரமற்ற  தீபாவளி. எச்சரிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நாள் கொண்டாட்டம் தான். ஆனால் கடன் வேண்டாம்!

Wednesday 23 October 2024

நஜிப்பின் மன்னிப்பை ஏற்கலாமா?

                  
 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டு மக்களிடம் கேட்டிருக்கும்  மன்னிப்பை ஏற்றுக்கொள்ளலாமா என்கிற கேள்வி இப்போது மலேசியரிடையே  பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அவருக்கு மிகவும் நெருக்கமான ம.இ.கா. வட்டாரங்கள் கூட இதுவரை வாயைத் திறக்கவில்லை.  நன்றி உணர்வு எங்கே போயிற்று? அவர்கள் தான் நஜிப் நல்லவர், வல்லவர், உன்னதர்  என்று பேசியவர்கள்.  அவர் என்ன செய்தாரோ அதைத்தான் இவர்களும் செய்தார்கள்.  அவ்ர் பெரிதாகச் செய்தார். இவர்கள் சிறியதாகச் செய்தார்கள். ஆக, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

தன்னை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென்று அவர் 'போராடி' வருகிறார். அவர் கேட்ட ஒவ்வொன்றையும் அரசாங்கம்  நிறைவேற்றிவிட்டது. இப்போது அவர் தன்னை வீட்டுக்காவலில்  வைக்க வேண்டும் என்று 'மிரட்டி' வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது கட்சியினர் தனக்கு ஆதரவு கரம் நீட்டுவர் எனவும்  எதிர்பார்க்கிறார்.

அவர் செய்த குற்றம் என்பது சிறிய குற்றம் என்றால்  யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் கூட  நாட்டுப்பற்று இல்லாத மனிதரை அவர் விரும்பும் வழியிலேயே  நடத்த  வேண்டும் என்றால் நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

ஒரு சிலர் சொல்லுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  அவர் நல்லவர் தான் அவரின் மனைவியால் தான்  அவருக்கு இந்த நிலைமை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?  மக்கள் தேர்ந்தெடுத்தது  அவரைத்தான்  அவரது மனைவியை அல்ல என்பதை  முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அப்படியென்றால் இன்று நாட்டில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை விட்டுவிட்டு அவர்களின் மனைவியருக்குத் தண்டனைக் கொடுக்கலாமே!

அவரின் சிறைத் தண்டனை 12 ஆண்டுகளிலிருந்து  6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே அவருக்கு இலாபம். இப்போது 6 ஆண்டுகள் வீட்டுக்காவல்  என்பதைவிட 12 ஆண்டுகள் வீட்டுக்காவல்  என்றால் அவர்  ஏற்றுக்கொள்வாரா? எல்லாம் தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும்  என்று குற்றவாளி நினைத்தால் அப்புறம் எதற்கு நீதிமன்றம்? குற்றவாளியே தீர்ப்பை எழுதிக்கொள்ளலாமே!

Tuesday 22 October 2024

இங்கேயும் நிறவெறியா?

                              "எங்களுக்கு நீதி வேண்டும்" எனப் போராட்டம்

 நிறவெறி நம் நாட்டிலுமா? அதுவும் படித்தவர்கள்  அவை என்று  கருதப்படும்  வங்கியிலா"

ஆம், அது தான் நடந்திருக்கிறது.  அந்த வங்கி MayBank.  இடம்; பத்துகாஜா கிளை, பேராக்.  பாதிக்கப்பட்டவர்: இந்தியப் பெண் குமாஸ்தா. கேவலமாக பேசியவர்:  வங்கியின்  பெண் நிர்வாகி, சீனப் பெண்மணி.

வங்கியில் வேலை செய்கின்ற அந்தக் குமஸ்தா பெண்ணை அந்த நிர்வாகி 'கருப்பி' என்று  சீன கெண்டனீஸ் மொழியில்  அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.  இது பற்றி மேலிடத்தில் புகார் செய்தும் எந்த மாற்றமும் அவரிடம் ஏற்படவில்லையாம். சும்மா ஒப்புக்காக சுமார் 20 மைலுக்கு அப்பாலுள்ள கிளைக்கு அவர் மாற்றப்பட்டாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள்  இதோ மேலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நம்மால் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சக பணியாளரை இப்படி இனத்துவேஷத்துடன்  நடத்தும் ஒருசில நிர்வாகிகள் இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.  பல இனத்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட வேண்டியுள்ளது.

அப்படியென்றால் இந்தியர்கள்  அவருடைய வங்கியில் பணம் போடவேண்டுமென்றால்  அதனை 'கருப்பர்' பணம் என்று கையால்  தொட மாட்டாரா அல்லது பணத்தை வங்கியில் போட அனுமதிக்கமாட்டாரா?  கருப்பர் தொட்ட பணத்தை அவர் வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவாரா? இப்படிப் பல கேள்விகள் உண்டு.

இவருடைய பின்னணி என்ன என்பது நமக்குப் புரியவில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலேயே வாழ்ந்தவராக இருப்பாரோ?  அப்படி என்றாலும் எல்லா நாடுகளிலும் கருப்பர்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கின்றனர்.  இவர் என்ன அதிசயத்தைக் கண்டார்?  

இது இனத்துவேஷம் என்று தான் சொல்ல முடியும். நிறத்துவேஷம்  அல்ல. ஒரு சில மெத்த படித்த சீனரிடையே இனத்துவேஷம் இருக்கத்தான் செய்கிறது.  அதிலே இவரும் ஒருவர்.

வங்கி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது. பொறுத்திருப்போம்.

Monday 21 October 2024

சாலை விபத்துகளே வேண்டாம்!


 பெருநாள் காலங்களையும்  சாலை விபத்துகளையும் சேர்ந்தே பார்க்க வேண்டியுள்ள நிலையில் தான் நாம் உள்ளோம்.

 உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று.  பெருநாள் காலங்கள் மட்டும் அல்ல மற்ற சாதாரண  நாள்களிலும் நிலைமையில் மாற்றமில்லை.

இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?  தகுதி இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள்.  இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறுபவர்கள் ஒரு பக்கம்.  கஞ்சா அடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம்.  இந்தக் காரணங்களே போதும் அதிக விபத்துகள் நடப்பதற்கு!  விபத்துகளுக்கான தண்டனைகளும்  போதுமானதாக  இல்லை எனவும் சொல்லலாம்.

மிக மிகக் குறைவான விபத்துகள் நடக்கும் ஒரு நாட்டில்  அதற்கான காரணங்கள்  என்ன என்று ஆராயும் போது  அந்த நாட்டில் கொடுக்கப்படும் தண்டனை கடுமையானது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.  ஆமாம், அந்த ஓட்டுநரின் சொத்துகள் முற்றிலுமாக  அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமாம்.  அவருடைய கணக்கு வழக்கு அனைத்தும் சுழியம் ஆகிவிடுமாம்!  தண்டனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். எப்படியோ நம் நாட்டில் இது நடக்கப் போவதில்லை!

இந்த ஆண்டு தீபாவளி நீண்ட நாள் விடுமுறை. அதனால்  எச்சரிக்கையாக இருங்கள்  என்பது தான் நமது ஆலோசனை.  வாகனங்களைக் கட்டுப்பாட்டோடு ஓட்டுங்கள்.  வேகத்தைக்  குறையுங்கள்.  தூரத்துப் பயணம் செய்கிறீர்கள். பயணக் களைப்போடு  வாகனங்களைச் செலுத்தாதீர்கள்.

ஆனால் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் தம்பிகளுக்குத் தான்  நம்மால் எந்தவித ஆலோசனையும் சொல்ல முடியவில்லை.  இவர்களால் கட்டுப்பாட்டோடு எதனையும் செலுத்த முடிவதில்லை.   நீங்கள் வீடு போய் சேர வேண்டுமானால், நண்பர்களோடு சிரித்துப்பேசி மகிழவேண்டுமானால்  எல்லாவற்றுக்கும் ஒழுங்கு இருக்க வேண்டும். அதிலும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் சரி,  மோட்டர் சைக்கிள்களைப் பயன்படுத்தும் போதும் சரி  இன்னும் கடுமையான  ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருநாள் காலங்களில் விபத்து நடப்பது இயல்பு தானே  என்கிற அலட்சியம் வேண்டாம்.  இது உயிர் சம்பந்தப்பட்டது.  வீடு போய் சேர வேண்டும்.  குடும்பத்தினரோடு குதூகளிக்க வேண்டும் நண்பர்களோடு மகிழ வேண்டும் இதனையெல்லாம் யோசித்து  சாலை விதிகளைப் பார்த்து ஓட்டுங்கள்.

Sunday 20 October 2024

இந்திய மாணவர்களுக்கு கோட்டா முறை வேண்டும்

 

இந்திய மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும் என்பதற்காக பலவேறு வகைகளில்  பலவேறு வழிகளில் பலர் வழிகாட்டுகின்றனர்.

அரசியல்வாதிகளை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். வழிகாட்டும் அளவுக்கு அவர்கள் எந்த ஒரு திறனையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கல்விக்கான மானியம் மட்டுமே.

இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் எதிர்பார்க்கும் அளவுக்கு நிறைவு தரவில்லை என்பதை அனைவரும் புரிந்து வைத்திருக்கின்றனர். ஏன் நாடாளுமன்றத்தில் ஓரு மலாய் எம்.பி. கூட இது பற்றி பேசியிருந்தார்.

நமது பிரதமருக்குக் கூட இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. பழங்குடி மக்களான பூர்வக்குடிகளைவிட இந்தியர்களின் நிலை மோசம் என்பதை அவர் தான் முதன் முதலில் சுட்டிக்காட்டியவர்.  இப்போது அவர் சொன்ன வார்த்தையையே அனைவரும் பிடித்துக் கொண்டனர்.

ஆனால் அதற்கான தீர்வு என்ன என்பதில் மட்டும் சிக்கல்.  மலாய், சீன மாணவர்களுக்குப் பிரச்சனையில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது  கிடைத்து விடும்.   அரசாங்கம் மனம் வைத்தால் நமக்கும் கிடைக்கும்.  நமக்கு ஐம்பது, அறுபது ஆண்டு திட்டங்கள் வேண்டாம்.  நமக்கென்று கோட்டா உண்டு. அதனை ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்ய வேண்டும்.  எல்லாத் துறை சார்ந்த கல்விகளிலும் நமக்குக் கிடைக்க வேண்டிய ஏழு விழுக்காடு நமது மாணவர்களுக்குக்  கிடைக்க வேண்டும். இதன் மூலம் தான் நமது பிரச்சனைகளைக் களைய முடியும்.

அப்படி ஒரு கோட்டா  முறை இந்திய மாணவர்களுக்கு இல்லை என்றால் இப்போதே  அதனை உருவாக்கலாமே?  அதனை ஏன் இழுத்தடித்துக் கொண்டே போக வேண்டும் இந்தியர்களின் பிரச்சனையை முற்றிலுமாக அறிந்தவர்  பிரதமர்.  கல்வி மட்டும் அல்ல எல்லாத் துறைகளிலுமே நமக்கு வேண்டும் இந்த கோட்டா முறை.

இப்போது நடப்பது என்ன? இந்திய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை அல்லது இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டியவை  அனைத்தும் மற்ற  இனத்தவருக்கு  மடைமாற்றம்  செய்யப்படுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.  இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்  குறை சொல்லிக் கொண்டும், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும் இப்படியே நாம் காலம் தள்ள முடியாது.

இந்திய எம்.பி.க்கள் ஒன்று சேர வேண்டும். இதன் தொடர்பில் கலந்து ஆலோசித்து  பிரதமரிடம் கொண்டு செல்ல வேண்டும்.  இனி இது தான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். வேண்டும் ஒரு தீர்வு, அவ்வளவு தான்.

Saturday 19 October 2024

இப்படியெல்லாமா நடக்கும்?

வரவர யாரை நம்புவது என்றே தெரியவில்லை.  உணவில் கலப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 

இதென்னடா புதுசு என்று  இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகிறேன். அட நான் விரும்பி சாப்பிடும் 'கரிபாப்' புக்குக் கூடவா இப்படி ஒரு சோதனை?  எல்லாம் காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல?

உணவு பொருள்களைத் தயாரிப்பவர்களுக்கு ஒரு தராதரம் வேண்டும். சுத்தம் சுகம் தரம் என்பது பாலர்பள்ளி பாடம். இப்போது அதனையெல்லாம் சொல்லிக் கொடுக்க ஆளில்லை.  ஏன் வீட்டில் கூடவா ஆளில்லை?

மேல்நாடுகளில் இப்படியெல்லாம் நடப்பதில்லை என நம்பலாம். அவர்கள் உணவு என்று வரும் போது கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.  இங்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை இலகுவாகச் சரி செய்துவிடலாம். கையில் காசு இருந்தால்  போதும்  என்கிற நிலைமை!

என்னடா இது?  ஒரு கரிபாப் கூடவா நிம்மதியாக  சாப்பிட முடியவில்லை? அதிலேயும் சிகிரெட் துண்டுகளா?  என்ன தான் இவர்கள் நினைக்கிறார்கள் என்பது  நமக்கும் புரியவில்லை. பணமும் கூடுதலாக வாங்குகிறார்கள்.  சிகிரெட்டையும்  கலப்படம் செய்கிறார்கள்! தவறுகள் நடக்கலாம். ஆனால் சாப்பிடும் பொருள்களில் தவறுகள் நடக்கக் கூடாது என்று யார் இவர்களிடம் சொல்லுவது? 

உணவுத் துறைகளில் உள்ளவர்கள் மக்களைப் பற்றி என்ன தான் நினைக்கிறார்கள்?  ஒன்று மட்டும் நமக்குப் புரிகிறது. சுகாதார அதிகாரிகளால் இவர்கள் கண்காணிக்கப் படுவதில்லை. அதனால் இவர்கள் தனிக்காட்டு ராஜாக்களைப் போல செயல்படுகிறார்களென்பது மட்டும்  தெரிகிறது.

பாதிக்கப்பட்ட நபர் அந்த கரிபாப் விற்பனையாளரிடம்  அந்த கரிபாப்பை திரும்ப கொடுத்த போது  அவர் சிரித்துக் கொண்டே வாங்கிய மூன்று வெள்ளியைத் திருப்பிக்  கொடுத்து விட்டாராம். அவ்வளவு தான்.

தறிகெட்ட அரசாங்கம் இருந்தால் இப்படித்தான் நடக்கும்!

Friday 18 October 2024

என்னடா நடக்குது?

                                                 

                                         பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி சந்தை
இன்று நாடெங்கிலும் தீபாவளி சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

மற்ற சந்தைகளில்  என்ன நிலைமை என்பது நமக்குத் தெரியவில்லை.  ஆனால் பிரிக்பீல்ட்ஸில்  எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக டிக்டாக்கில் போட்டு அவர்களுக்கு என்ன முடியுமோ அதனைச் செய்கிறார்கள்.  

நமக்கும் வருத்தம் தான்.  அவர்கள் பாவம், சிறு வியாபாரிகள்.  இலட்சக்கணக்கில் ஒன்றும் சம்பாதித்துவிடப்  போவதில்லை. ஏதோ சில ஆயிரங்களாக இருக்கலாம்.  அந்த இடத்தில் போய் "நாங்கள் கலை நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம்" என்று  பிடிவாதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

கலை நிகிழ்ச்சியாளர்கள்  ஒன்றைப்  புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சமுதாயம் சிறு சிறு வியாபாரிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். "மித்ரா" போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவர்களோ தங்களால் முடியவில்லை என்பதால் தான்  வெவ்வேறு பணிகளில் ஈடுபாடு காட்டிக்  கொண்டிருக்கிறார்கள்.  இதோ, நம் கண்முன்னே சிறு வியாபாரங்கள் செய்பவர்களை கலைநிகழ்ச்சி என்னும் பெயரில் அவர்களை   விரட்டிக் கொண்டிருக்கிறோம்.

கலைநிகழ்ச்சிகளை, கலைஞர்களை  நாம் புறக்கணிக்கவில்லை.  ஆனால், இன்றைய நிலையில், சிறு வியாபாரிகள் நமக்கு முக்கியம். இங்கிருந்து தான் வருங்காலங்களில் பெரும் நிறுவனங்கள் உருவாக வேண்டும். இன்றைய பெரும் நிறுவனங்கள் எல்லாம்  ஒரு காலத்தில் சிறிய பின்ன்ணியைக் கொண்டவைகள் தாம்.  அதனால் சிறு வியாபாரிகளின்  பங்களிப்பு நம் சமுதாயத்திற்கு மிக மிகத் தேவையானது.

ஆட்டம்பாட்டம் என்பதையெல்லாம்  எவ்வளவோ பார்த்துவிட்டோம்.  நமது சமுதாயம் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.  

நாம் சொல்ல வருவதெல்லாம் ஆட்டம்பாட்டங்களுக்குக் கொஞ்சம் நாளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு  பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்.  சிறுசிறு வியாபாரங்களுக்குக் கைகொடுப்போம். 

அரசியல்வாதிகளே! சிறு வியாபாரங்களை ஊக்குவிப்பது உங்கள் கடமை.  நம் கண்முன்னே இருக்கும் சிறு வியாபாரிகளை உதாசீனப்படுத்தாதீர்கள்.  அவர்களை வளர விடுங்கள்.

Thursday 17 October 2024

அருளினி என்றால் தன்னம்பிக்கை!

                            ZEE, பாடல்திறன் போட்டியில் பங்கேற்ற அருளினி

Zee தொலைக்காட்சியின் சரிகமப பாடல் திறன் போட்டியில் பங்கேற்ற  நம் நாட்டின்  அருளினி  சிறப்பாகவே தனது திறமையை வெளிப்படுத்தினார்  என்பதில் எந்த ஐயமுமில்லை.

பங்கேற்பாளர் அனைவரின்  குறிக்கோளும்  முதல்பரிசு தான் என்றாலும் அது சாத்தியமில்லை.  யாராவது ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்புக் கிடைக்கும்.  அருளினிக்கு அந்த வாய்ப்பு இல்லை என்றாலும்  அவர் சக போட்சியாளர்களுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுத்தார் என்பது தான் முக்கியம்.

ஆனால் இவைகளையெல்லாம் விட அவரின் தன்னம்பிக்கை தான் நம்மை வியக்க வைக்கிறது.  அதுவும் இப்போது நாம் நேரிடையாகவே பார்க்கிறோம்.  சிறு சிறு தொழில்கள் செய்யும் பெண்கள் இன்று  பலவகையான விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள்.  அவர்களுடைய கண்ணீர் விடியோக்களை டிக்டோக்கில் பார்க்கிறோம்.  காரணம்  சம்பந்தப்பட்டவர்களை மட்டும அவர்கள் விமர்சிக்கவில்லை அவர்களின் குடும்பத்தையே விமர்சனம் செய்கிறார்கள் என்கிற புலம்பல்களை நாம் பார்க்கிறோம்.

இதற்கெல்லாம் பதில் தான் அருளினியின் தன்னம்பிக்கை பேச்சு. ஆட்டிசம் வியாதியினால் பாதிக்கப்பட்டவர் என்றாலும்  பார்வையாளருக்கு அப்படி ஒரு வியாதி அவருக்கு இருப்பதாகவே  தோன்றவில்லை.   அதனை அவர் பலவீனமாகவே பார்க்காதது எப்படியோ அதே போல  நாமும்  அதனைப் பலவீனமாகப் பார்க்கவில்லை.

அதுவும் பெண்கள் என்றால் தேவையற்ற விமர்சனங்கள் வரும், கல்லடி விழும்,  குடும்பங்கள் நடுவீதிக்கு இழுக்கப்படும், உண்மையில் எங்கேயாவது ஓடிப்போவோமா என்று எண்ணங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனால் வெற்றிபெற்ற பின்னர்  அத்தனையும் மறந்து "நான் அப்போதே நினைத்தேன்!" என்று சொல்லி  ஆரத்தழுவுவார்கள். எல்லாம் வேடம் என்பது நமக்குத் தெரியும்.

எல்லா கல்லடிகளையும் பட்டுத் தான் பெண்கள் தலை நிமிர வேண்டும். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது என்பது தான்  அருளினியின் மூலம் நமக்குக் கிடைத்த பாடம்.

அவருடைய எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்!
 

Wednesday 16 October 2024

இது தான் அரசியல்!

தீபாவளி நெருங்கிவிட்டது. இனி நமது அரசியல்வாதிகள்  கூட்டம் போடுவார்கள். மேடை போடுவார்கள்.  

இது தான் சரியான தருணம். இதைத் தவற விட்டால் அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். அதனால் இப்போதே இந்த பி40 மக்களைக் கூப்பிடுங்கள். உணவுக் கூடைகளைக் கொடுங்கள். பரிசுக் கூடைகளைக் கொடுங்கள்.  

ஓர் இடைத்தேர்தலின் போது அந்தத் தொகுதியைச் சேர்ந்த நண்பரே  என்னிடம் சொன்னது.  குடிக்க மதுபானம், இறைச்சி வகைகள், அரிசி பருப்பு வகைகள் - இவையெல்லாம் கொடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.  நமக்கும் ஆச்சரியத்தான்.  நான் அரசியலிலிருந்த போது இப்படி எதுவும் நடந்ததில்லை. இப்போது நடக்கிறது  என்றால் நம்மால் என்ன செய்ய முடியும்?

இப்போது,  செய்த சாதனைகளை வைத்து  யாரும்  வாக்குச் சேகரிப்பதில்லை. அந்த வாய்ப்பு மிக மிகக் குறைவு.  டி. ஏ. பி.யில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் சீனத் தலைவர்களின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. பி.கே.ஆர். கட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள்  அவர்களின் தலைமைத்துவத்தை மீற முடியாது, ஆக,  இவர்களால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் இதற்குப் பொருள். சாதனைகள் செய்ய இவர்கள் எங்கே போவார்கள்?

இவர்களால் செய்ய முடிந்ததெல்லாம்  உணவு கூடை, பரிசு கூடை இவைகள் தான்.  மேலே உள்ளவர்கள் கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்கள். கணபதி ராவுக்கு நன்றி. சுமார் 50 மாணவர்களுக்குத் தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கியிருக்கிறார்கள்.  பரவாயில்லை, ஏற்புடையது தான். ஸ்ரீராசி சில்க் சென்டருக்கு  நமது நன்றிகள் உரித்தாகுக.

ஓய்பி கணபதிராவுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த பி40 மக்கள் ஒவ்வொரு வருஷமும் உங்களிடம் உதவிக்கு வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அடுத்த ஆண்டு அவர்கள் பி40 யிலிருந்து அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். சிறு வியாபாரங்களில் ஈடுபட நிதி உதவி செய்ய வேண்டும். இது நமது தாழ்மையான வேண்டுகோள்.

இதெல்லாம் ஓர் அரசியல் விளையாட்டு அவ்வளவு தான்.  ஆடும்வரை ஆடுவார்கள்! அதுவரை தான் ஆட்டம்! பாட்டம்!

Tuesday 15 October 2024

குடியுரிமைச் சட்ட திருத்தம்

சமீபத்தில் நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட  மலேசியப் பெண்கள் வெளிநாட்டவரை வெளிநாட்டில்   திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்குப்   பிறக்கும் குழந்தைகள் இயல்பாகவே மலேசியக்குடிகளாக  ஏற்றுக்கொள்ளும் சட்டம்  அமலுக்கு வந்தது.  

நமக்கும் அதில் மகிழ்ச்சியே.  ஆனாலும்  நாம் எப்போதுமே இங்கு உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளிலேயே அதிகம் கவனம் செலுத்துவதால் அந்தப் பிரச்சனை நமக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

உள்ளுரில் பிறந்து நாடற்றவர்களாக வாழும் நம் இந்தியர்களின் பிரச்சனையே நமக்கு  முதன்மை பிரச்சனையாகத் தோன்றுகிறது. இது போன்று நாடற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட   அனைத்து இனத்தவரிலும்  சுமார் 30,000 பேர் இருப்பதாக  சொல்லப்படுகிறது.

நம்மைப் பொறுத்தவரை உள்ளுரில் பிறந்தவர்களுக்கு உடனடியாக ஒரு தீர்வைக் காண வேண்டும்.  குடியுரிமை என்று வரும் போது அதில் பல சிக்கல்கள் இருக்கலாம்.  ஆனால்  அந்தப் பிரச்சனையை ஆண்டுக்கணக்கில்   இழுத்துக் கொண்டுப் போவதால் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே போகும்.  யாராவது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

உள்துறை அமைச்சர் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பார் என்று நம்புகிறோம். இதற்கு முன்னர் உள்ள அரசாங்கம்  பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால்  இப்போது இந்தப் பிரச்சனையே எழ வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால் யார் வந்தாலும் இழுத்தடிக்கும் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.  அதனால் தான் எந்தக்காலத்திலும் தீர்க்கவே முடியாத  பிரச்சனையாக  இது தோற்றமளிக்கிறது.

இனி மேலாவது, இன்றைய நடப்பு அரசாங்கம், இந்தக் குடியுரிமைப் பிரச்சனையில்  ஒரு நிரந்தரத் தீர்வைக் காணும் என நம்புகிறோம். இதில் பாவப்பட்ட இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான் இந்தப் பிரச்சனை இன்னும் இழுத்தடித்துக் கொண்டு போகிறது.  இதுவே மற்ற இனத்தவராக இருந்தால்  எப்போதோ இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்.  

Monday 14 October 2024

நாடு பூராவும் இப்படித்தானோ!


 இப்போதெல்லாம் நாசி கண்டார் உணவகம் என்றாலும் சரி மாமாக் உணவகம் என்றாலும் சரி -  ஐயோ உங்களுக்குக் கேடு - என்று பயப்பட வேண்டியிருக்கிறது.

தொடர்ந்தாற் போல செய்திகள் வரும்போது யாருக்குத்தான் பயம் வராமலிருக்கும்?  இப்போது ஒரு செய்தி. கடைசியாக என்று சொல்ல முடியாது. அது தான் தொடர்ந்து வருகிறதே? எப்படிக்  கடைசி என்று சொல்ல முடியும்?

அலோர்ஸ்டார் நகரில் இயங்கும் ஒரு நாசி கண்டார் உணவகத்தில்  உப்பு கலந்த முட்டையை வியாபாரம் செய்கிறார்கள். அங்கு வாங்கிய முட்டையில்  புழுக்கள் நெளிவதைப் பார்த்திருக்கிறார் வாடிக்கையாளர். அப்புறம் சுகாதார அதிகாரிகளிடம் புகார்  போக  இப்போது உணவகத்திற்கு  இரண்டு வாரங்கள் ஓய்வைக் கொடுத்திருக்கிறார்கள்.

உணவகத்தில் கெட்டுப் போன முட்டைகளை விற்கிறோமே  என்கிற மனசாட்சியே இல்லாமல் விற்பனை செய்தால்  அவர்களை என்ன செய்யலாம்?  நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் முட்டை கெட்டுப்போகும் என்கிற அடிப்படை அறிவு கூடவா இல்லை?  உப்பு போட்டுவிட்டால் மட்டும் மாத கணக்கிலா தாங்கும்?

உணவகங்களில் தவறுகள் நடந்தால் இப்போதெல்லாம் உடனடியாக படம் பிடித்து அனுப்பிவிடுகிறார்கள். மற்ற வியாபாரங்களை விட உணவக வியாபாராம் என்பது மிகவும் சிக்கலானது. பழைய உணவுகளை வைத்து வியாபாரம் செய்ய வழியில்லை.  அப்படியெல்லா சம்பாதிக்க இது காலம் அல்ல. கெட்டுப்போன பொருள்களை குப்பையில் போட வேண்டியதுதான்.

பாய்களே (Bhai) மாமாக்களே உங்களுக்காக உங்கள் சங்கம் எவ்வளவோ கஷ்டமான சூழ்நிலையில்  அரசாங்கத்துடன் பேச்சு வர்த்தைகள் நடத்துகின்றது.  நீங்கள் இப்படியெல்லாம் வியாபாரம் செய்தால்  அவர்கள் என்னதான் செய்வார்கள்?  உங்களுக்காக வாதாட முடியுமா?

இன்னும் என்ன என்ன செய்திகள் வருமோ? பயத்துடன் தான் காத்துக்கிடக்க  வேண்டியுள்ளது.


Sunday 13 October 2024

இது சாதாரண விஷயமல்ல

                                    Home Minister : Datuk Sri Saifuddin Nasution Ismail

உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கொடுத்த விளக்கம் அதிர்ச்சியளிப்பது தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும்  இரண்டு  சிறார்கள்  காணாமல் போகிறார்கள்  என்கிற செய்தியை சாதாரணமாக  எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த 2020 ஆண்டிலிருந்து போன மாதம் செப்டம்பர் வரை தினசரி இரண்டு சிறார்கள்  காணாமல் போயிருக்கின்றனர். என்றாலும் அவர்களில் 98 விழுக்காடு சிறார்கள் காவல்துறையினரால் மீடகப்பட்டிருக்கின்றனர் என்பது நல்ல செய்தியாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் 18  வயதுக்குக் கீழ்பட்டவர்கள்.

இதனை யாருடைய குறைப்பாடு என்று சொல்லுவது? ஊர் உலகத்தைக் குறை சொல்லுவதை விட்டு  நம்முடைய, நம்முடைய பெற்றோருடைய குறைப்பாடு  என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்நாட்களில் நம்மைச் சுற்றி  ஏகப்பட்ட வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர்.  அவர்களில் பலர் அவர்களின் நாடுகளில் குற்றப்பின்னணியோடு  வந்தவர்கள்.  அவர்கள் எங்கிருந்தாலும்  தங்களது புத்தியைக் காட்டத்தான செய்வார்கள். அதோடு உள்நாட்டில் உள்ளவர்களும்  அவர்களோடு கைகோர்த்துச் செயல்படுவதையும்  நாம் பார்க்கிறோம்.

அதனால் கவனம் என்பது  பெற்றோர்களுக்குத்தான் இருக்க வேண்டும்.   இன்றையநிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலை செய்கிறார்கள். அதனால்  வீட்டில்  பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும்.  வேறு யாரும் அவ்வளவாக அக்கறையுள்ளவர்களாக  இருக்கப் போவதில்லை.

இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான்.  ஆனால் பெற்றோர்களுக்கு அது ஓர் எச்சரிக்கை.  பெற்றோர்கள் தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.  பொறுப்பு உங்களுடையது தான்.

நமது பொறுப்பை நாம் உணர்வோம். 

Saturday 12 October 2024

இனியும் வேண்டாம் திராவிடம்!



 

                                      திராவிடம் வேண்டாம் தமிழா

திராவிடம் இந்நாட்டில் நிறையவே உழைத்துக் களைத்துவிட்டது.  இனி மேலும் உழைக்க வேண்டிய சூழல் இல்லை என்பதால் அவர்கள் நமது கலாச்சாரங்கள் மீது தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு.  தமிழ் நாட்டில் திராவிடம் பேசிய  நாயக்கர்கள்   தமிழ் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள்.  தமிழன் வீதியில் நின்று கொண்டு  கத்திக் கொண்டிருக்கிறான். ஆட்சி அவன் கையில் இல்லை. மொழியை இழந்துவருகிறான். ஆட்சி மொழி ஆங்கிலமாகிவிட்டது.   தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் தொலைக்காட்சிகளில் கூட  தமிழர்களுக்கு வாய்ப்பில்லை. சினிமா?  வாய்ப்பே இல்லை!  பெரும் வியாபாரிகள் நாயக்கர்கள் தான்.

சரி, இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எல்லாமே வழிபாட்டில் தான் ஆரம்பித்தது. மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி  நாத்திகர்கள். அவர்கள் வீட்டுப் பெண்மணிகள்  அனைவரும் ஆத்திகர்கள். அவர்கள் வீட்டிலேயே அவர்களின் நாத்திகம் எடுபடவில்லை. ஆனால் இவர்கள் இங்கே அதே நாத்திகத்தைப் பேசுகிறார்கள்! எடுபடாத ஒன்றைப் பற்றி பேசுகிறார்கள்.

அதுவும் பாட நேரத்தில் அந்த வழிபாட்டை நடத்துகிறார்களாம். அதனைக் கேள்வி கேட்க இவர்கள் யார். தலைமை ஆசிரியர்களைவிட உங்களுக்கு அதிகம் தெரியுமோ?  நீங்கள் சொல்லுவதைப் போல  அதனைத் தடை செய்துவிட்டால் அது ஒரு பெரிய சாதனையா? அது  இந்த சமுதாயத்திற்குச் செய்யும் துரோக்ம் என்கிற அறிவே உங்களுக்கு வராதா?

திராவிடம்  என்கிற சொல்லே நமது இலக்கியங்களில் இல்லை. திராவிடம் தமிழர்களின் எதிரி.  தமிழர்களை ஏமாற்றவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சொல். 

திராவிடம் என்று தமிழ் நாட்டில் பேசினாலும் சரி நம் மலேசியாவில் பேசினாலும் சரி  தமிழர்களை அடிமைப்படுத்தும் ஒரு சொல். திராவிடமே நமக்கு வேண்டாம். தமிழர்களாகவே இருப்போம். நம் கலாச்சாரங்களைக் கட்டிக்காப்போம். 

நாம் நாமாகவே வாழ்வோம்.

Friday 11 October 2024

யாருக்கு என்ன நட்டம்?

 

            சரஸ்வதி பூஜை - புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி 

சரஸ்வதி பூஜை என்பது நமது தமிழப்பள்ளிகளில்  காலங்காலமாக நடைப்பெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு என்பது தான் நமது புரிதல்.

அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  நமது பிள்ளைகள் நல்ல கல்வி அறிவு பெற வேண்டும்  என்று தான் அந்தப் பூஜையின் முக்கிய நோக்கம்.  அதனை நல்லதாகவே நாம் எடுத்துக் கொள்வோம்.

வேண்டாம் என்று சொல்லுவதற்கு  எந்தக் காரணமும் இல்லை.  அதனைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  ஒரு நல்ல காரியத்திற்காக அந்த பூஜை நடந்து வருகிறது.  பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தான் எல்லாப் பெற்றோர்கள் விரும்புவார்கள். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை தான் அந்த விழா கொண்டாடப்படுகிறது. அதையும் தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவது, மனசாட்சியே உங்களுக்கு இல்லையா?

இந்த விழா தமிழர் கலாச்சாரம் அல்ல என்றால்  ஒரு வேளை தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற கலாச்சாரங்களிலிருந்து வந்திருக்கலாம்.  தீபாவளி கூட தமிழர் கலாச்சாரம் அல்ல என்கிறார்கள், அதற்கு என்ன செய்வது?  நமது கலாச்சாரமாக அது புகுத்தப்பட்டு விட்டது. நாமும் ஏற்றுக் கொண்டோம்.  வேண்டாம்  என்றால் நாம் கொண்டாட வேண்டாம்.  தெலுங்கு மக்கள் உகாதியைத் தான் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மலையாளிகள் ஓணம் பண்டிகையைத் தான் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் பொங்களைத் தான் சிறப்பாகக்    கொண்டாடுகிறார்கள். ஆனால் தீபாவளி அனைவருக்கும் பொதுவானதாக ஆகிவிட்டது. கொண்டாடத்தானே வேண்டும்?  

அதே போலத்தான் இந்த சரஸ்வதி பூஜை என்பதும். அனைவரும் ஏற்றுக்கொண்ட பிறகு  இது நமது கலாச்சாரம் அல்ல என்றால் என்ன அர்த்தம்? வேறு யாரும் எதிர்க்கவில்லையே? தமிழர்கள் மட்டும் எதிர்க்க வேண்டும் என்று ஏன் தமிழர்களை வம்புக்கு இழுக்கிறீர்கள்?

அது யாருடைய கலாச்சாரமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.  இப்போது நமது கலாச்சாரமாக ஆக்கப்பட்டு விட்டது.  அதனால் எந்தப் பாதகமும் இல்லை  என்றால்  அதனை எதிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

சரஸ்வதி பூஜை பள்ளிகளில் கொண்டாடுவது  நல்லது தான்  என்று நினைத்துச் செயல்பட்டால் போதும்.  யாருக்கும் எந்த நட்டமும் இல்லை.

Thursday 10 October 2024

இது பெருநாள் காலம்!

 

                                        பெருநாள் கால பரிசு பொருள்கள்

இது பெருநாள் காலம். தீபாவளி நேரத்தில் தான் ஏழைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்து  பரிசு கூடைகளை அல்லது உணவு கூடைகளை அனபளிப்பாகக் கொடுக்கின்ற பழக்கத்தை அரசியல்வாதிகள்  கொண்டிருக்கின்றனர்.

சரி,  அவர்கள் என்ன நினைக்கின்றனரோ அதை செய்யட்டும்.  நாம் ஒன்றும் அவர்களுக்கு எதிரியல்ல. அவர்களின் கையாலாகாதனத்திற்கு வேறு எதனையும் செய்ய முடியாது  என்பது நமக்கும் தெரியும்.  ஆனால் ஒன்று செய்யலாம்.  கொடுக்கின்ற பரிசு கூடைகளில் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 வெள்ளி வைத்துக் கொடுத்தால், அவர்கள் யாரை ஏழையாக நினைக்கிறார்களோ அவர்கள், பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும்.  அவர்கள் தலைவர்களைப் போல வசதியாகக் கொண்டாட முடியாது என்பது  உங்களுக்குத் தெரிந்து தான் செய்கிறீர்கள்.  அதைக்  கொஞ்ச தாராளமாகச் செய்யுங்கள் என்பது தான் நமது  கோரிக்கை.

உண்மையைச் சொன்னால் பெருநாள் காலங்களில் இது போன்ற பரிசு கூடைகள் தேவை  என்கிற நிலையை  அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டார்கள்.   காரணம் வேறு எதனையும் அவர்களால் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்டு "ஏதோ இதையாவது செய்வோம்" என்கிற மனநிலைக்கு  வந்துவிட்டார்கள்.

ஆனால் ஒன்றை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அன்பளிப்பு என்னும் போது  அதனைப் பெறுபவர்கள் மனநிறைவு அடைய வேண்டும். சும்மா ஏனோ தானோவென்று சில பொருள்களை வாங்கிக் கொடுத்து  திருப்தி அடையக் கூடாது.  பெறுபவர்கள் திருப்தி அடைய வேண்டும்.

என்னவோ இது பெருநாள் காலம். ஒரு சிலர் இது போன்ற பரிசு கூடைகளை   எதிர்பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் கஷ்டம் நமக்குத் தெரியவில்லை.  அதற்காக அவர்களை ஏமாற்ற முயற்சி செய்யாதீர்கள்.  இந்திய சமுதாயத்தில் வேலை இல்லாதோர் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.  அதனால் எதனையும் வேண்டாம் என்று மறுப்பதற்கு வழியில்லை.

நல்லதைச் செய்யுங்கள். நல்லதையே நினையுங்கள்.

Wednesday 9 October 2024

எலியின் கழிவுகளா?

                                எலியின் கழிவுகளோடு  -  Popiah Basah
நினைக்கும் போதே அருவருப்பைத் தருகிறது.  ஆனால் இதனை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள்  வியாபாரிகள் என்றால் அவர்களை என்ன செய்வது?

சிந்தித்துப் பார்க்கும் போது இவர்களின் வியாபாரங்களைச் சுகாதாரத்துறை இத்தனை ஆண்டுகள் எப்படி விட்டு வைத்தது என்று கேடக வேண்டி உள்ளது.  இத்தனை  ஆண்டுகள் இவர்கள் வியாபாரம் செய்ய  எப்படி அனுமதித்தது?

இதற்கு முற்றிலுமாக பழியை ஏற்கவேண்டியவர்கள் சுகாதாரத்துறை தான்.  அவர்களுக்குத் தெரியாமலா இத்தனை ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்?  சுகாதாரத்துறையின்  செயல்பாடுகளைத்தான் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. மனிதர்கள் சாப்பிடும் உணவுகளில்  இப்படி விஷத்தை ஏற்றி விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த அளவு தைரியத்தைக் கொடுத்தது யார்>  பொது மக்கள் இத்தனை ஆண்டுகள்  எலியின் கழிவுகளையும் சேர்த்துத்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இதனைப் நாம் எப்படி எடுத்துக் கொள்வது?

 அவர்கள் மீது குற்றம் சாட்டி  இர்ண்டு வாரங்கள் கடையை மூடுவதால்  பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக  சுகாதாரத்துறை எண்ணுகிறதோ? அவர்களுக்குத்  தண்டையனாக ஒரு சிறிய தொகையைக் கட்டச்சொல்லி அப்படியே அனைத்தையும் மூடிவிடுவதால் இது மீண்டும் நடக்காதா?

இதுவல்ல தண்டனை.  அந்தக்கடையை நடத்தும் முதலாளிக்கு குறைந்தபட்சன்  ஐந்து ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கொடுத்து அவர்களை உள்ளே தள்ள வேண்டும்.  அந்த அளவுக்கு அது மிகவும் கொடுரமான ஒரு குற்றம்.

அது சரி மலாக்காவில் மட்டுமா இப்படி? மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியவில்லையே?  எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றால்....?  நம்ப முடியவில்லையே!

Tuesday 8 October 2024

உலகில் 13-வது இடமா?

                                   



உலக அளவில் முட்டை சாப்பிடுவதில் மலேசியர்கள் பதிமூன்றாவது  இடத்தில் இருப்பதாக  கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

முதலிடத்தில் ஜப்பானும் இரண்டாவது இடத்தில் சீனாவும் இருக்கின்றன. அதாவது இந்த இரு  நாட்டு மக்கள் தான் அதிக முட்டைகளைச் சாப்பிடுபவர்கள்.

வழக்கம் போல நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. முட்டை சாப்பிடுங்கள் ஆனால் மஞ்சள் கருவைச் சாப்பிடாதீர்கள்  என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவு சரி என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.  குழந்தைகள் சாப்பிடலாம் வயதானவர்கள் சாப்பிடக்கூடாது  என்று சொல்லுவதுண்டு.

உலகில்  இந்த இரண்டு நாடுகளுமே அதிபுத்திசாலிகளைக் கொண்ட நாடாக இருக்கின்றன.  நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பலரும் தெரிந்து  தான் வைத்திருக்கிறார்கள். பொருளாதாரத்தில்  இரு நாடுகளுமே மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.

ஜப்பானின் வளர்ச்சி இன்று நேற்றல்ல எப்போதோ அதன் வளர்ச்சி ஆரம்பமாகிவிட்டது.  குண்டு போட்டு எப்போது நாடு சீரழிந்ததோ அன்றிலிருந்தே அதன் போக்கு மாறிவிட்டது. இன்று பலவகைகளில் அந்நாடு முதலிடத்தில் இருக்கின்றது.  இவர்கள் தான் உலகிலேயே முட்டை சாப்பிடுவதில் முதலிடத்தில் இருக்கிறார்களாம்.  அப்படியென்றால்  முட்டை அவர்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறது. நாம் சாப்பிடுவதில் என்ன கெட்டுப்போய்விட்டது?

இரண்டாவதாக சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  ஒரு காலத்தில் இரும்புத்திரைக்குப் பின்னால் வாழ்ந்த நாடு. அன்று என்ன நடக்கிறது  என்பதை வெளி உலகிற்குத் தெரியாமல்  அனைத்தையும் மறைத்த நாடு. ஆனால்  இன்றைய நிலைமை அனைத்தையும் மாற்றிவிட்டது. இன்றைய சந்தையில்  நம்மால் சீனப்பொருள்களைத் தான் வாங்க முடியும்.  அவர்களின் பொருள்கள் தான் எங்கும் பரவிக்கிடக்கின்றன. இப்போது அவர்கள் எல்லா நாடுகளிலும், எல்லா மூலை முடுக்குகளிலும்  அவர்களின் நிறுவனங்கள் தான்  செயல்படுகின்றன  இப்போது மற்ற நாடுகளையும் விலைக்கு வாங்கும் நிலையில் இருக்கின்றனர். கடைசியாக இலங்கையும் அவர்களுடைய  வாங்கும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்பது சோகம். அரசியல்வாதிகள் இலஞ்சமே பிரதானம் என்று அரசியல் விளையாடினால்  கடைசியில் அவர்கள் நாட்டை அடகு வைப்பது சீனாவிடம் தான். இந்த நிலையில் தான் முட்டை சாப்பிடுவதில்  சீனர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்த  வெற்றிகள் எல்லாம் சீனர்கள் அதிகம் முட்டைகள்  சாப்பிடுவதால்  தானோ? என்ன இரகசியும் புரியவில்லை!

ஒரு வேளை நாமும் அதிகம் முட்டை சாப்பிட்டால் மூளையும் வளரும்  முன்னேற்றமும் வரும் என்று நினைப்பவர்கள் இன்றே ஆரம்பியுங்களேன்! நாம் வளர்ந்தால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள்? அப்படியாவது  முதலிடத்தைப் பிடிப்போமே!

Monday 7 October 2024

யாருக்கு கட்டுப்பாடு?


புகைப்பிடித்தல் உடல்  நலனுக்குக் கேடு என்று சொன்னாலும், சொல்லுகின்ற டாக்டர்களே புகைப்பிடிக்காமலா இருக்கிறார்கள்?  அதனால் என்ன தான் கேடு என்று சொன்னாலும் எதுவும் எடுபடவில்லை!

இன்னொரு கேடு அதிக ஆபத்தானது.  புகைப்பிடிப்பவன் அவன் உடல்நலனைப் பற்றி கவலைப்படவில்லை. அது அவன் பாடு.  ஆனால் புகைப்பிடிக்காமல் அருகே அமர்ந்திருக்கிறானே,  இவன் புகைப்பதால் அவன் உடல் பாதிப்பு அடைகிறான், என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

குறிப்பாக உணவகங்களில் இது பெரிய பாதிப்பு. ஒருவன் பிடிப்பதால்  அவனைச்சுற்றி  அமர்ந்திருப்பவர்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் தான் உணவகங்களில்  புகைப்பிடிக்க வேண்டாம்  என்று அரசாங்கம்  வலியுறுத்துகிறது.  

ஆனால் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம்  என்று அடம்பிடிக்கும்  கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக  இருக்க வேண்டியவர்களே  இப்படி உணவகங்களில் புகைப்பிடித்தால்  உணவக முதலாளிகள் என்ன செய்வார்கள்?  அவர்கள் தான்   அபராதம் கட்ட வேண்டும் என்று சொன்னால்  அது  என்ன நியாயம்?

உணவகங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்  என்பதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏன் மற்ற பொது இடங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்

ஆனால் நடைமுறையில் அமலாக்கம் செய்வதில் பல பிரச்சனைகள் உண்டு.  பெரிய மனிதர்கள், பெரிய அரசியல்வாதிகள் இவர்கள் அனைவரும்  சட்டத்தை மதிப்பதில்லை. சட்டத்தை மீறுபவர்கள்.  இவர்களை யார் என்ன செய்ய முடியும்?  இந்த இடத்தில் சட்டம் தனது கடமையைச் செய்ய இயலவில்லை.  அதனால் தான்  சட்டத்தால் பெரிய மீன்களைப் பிடிக்க இயலாது என்கிறனர் பொது மக்கள்! சரி தானே?

Sunday 6 October 2024

இது ஏன் நடக்கிறது?

இது ஏன் நடக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை. ஒரு தடவை இரண்டு தடவை அல்ல  தொடர்ந்தாற் போல்  நடந்து கொண்டிருக்கிறது.

மாமாக் உணவகங்கள் என்றாலே  பயப்பட வேண்டியுள்ளது.  ஏற்கனவே அவர்களைப்பற்றி  பல புகார்கள்.  ஆனால் சிலர் செய்கின்ற தப்புகளினால்  நாம் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது.  இப்போது யாரைத்தான் நம்புவது என்று  நம்மாலும்  ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

மேலே படத்தைப் பாருங்கள்.  ஒரு மாமாக் உணவக ஊழியர்  சமையலுக்குப் பயன்படுத்தும் பானைகளைத் துடைப்பத்தால் சுத்தம்  செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ நமக்கு  இந்தக் காட்சி அருவருப்பைத் தருகிறது.

பொதுவாக சுகாதார அதிகாரிகள் இது போன்ற குற்றங்களுக்கு ஏனோதானோ போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.  இரண்டு வாரங்கள் கடையை மூடு என்றால் அவர்கள் மூடிவிட்டு  சுற்றுப்பயணம் போய்விடுவார்கள்!  உணவக ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளம் கொடுக்கப் போவதில்லை.  முதலாளிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை.

இதற்கு என்ன தான் தீர்வு?  நீண்ட காலமாக இந்தப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை.  ஒரே ஒரு வழிதான் தீர்வு. ஆமாம் உணவகத்தை நடத்தும் முதலாளியை ஆறு மாதம் சிறையில் தள்ளுங்கள். அப்புறம்   இதெல்லாம் நடக்காது. சுற்றுப்பயணத்தை உள்ளேயே வைத்துக் கொள்ளட்டும்.

இந்த செய்தி வரும் போதே இன்னொரு செய்தியும் வருகிறது. இதுவும் மாமாக் உணவகம் தான்.  பெண் ஊழியர் ஒருவர்  சமையலுக்குப் பயன்படுத்தும்  இரும்புச் சட்டியை அல்லூர்  தண்ணியில் கழுவிக் கொண்டிருக்கிறார். சுத்தம் செய்ய அழுக்குத் தண்ணீர் .......?

ஊழியர் குற்றம் புரிந்தாலும் பொறுப்பு என்னவோ உணவக முதலாளி மீது தான்.  முதலாளியே ஊழியர்களைத் தூண்டிவிட்டு  தெரியாதவர் போல நடிக்கலாம். எல்லாமே நடக்கும். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்வதில் தப்பில்லை.  ஆனால்,  அவர்கள் நாட்டிலுள்ள கலாச்சாரத்தை இங்கே கொண்டுவந்து  திணிப்பது  மிகவும் அநாகரிகமானது என்று முதலாளிகள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மாமாக் உணவகங்கள் அதிகம் மலாய்க்காரர்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதால்  இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர்கள் நினைக்கலாம்.  ஆனால் சுத்தம், சுகாதாரம்  என்பது அனைத்து மலேசியர்களுக்கும்  என்பதை  அவர்கள் புரிந்து கொண்டால் சரி.

Saturday 5 October 2024

வங்காளதேச போலி மருத்துவர்கள்!


 வங்காளதேசிகள் நாட்டில் கிளினிக் வைத்து மருத்துவம்  செய்யும்  அளவுக்குத் துணிச்சலாக செயல்படுகிறார்கள்  என்றால்  அவர்களின்  துணிச்சலைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.  அந்தக் கிளினிக்குகளை வைத்து நடத்தும்  மருத்துவர்களும்  போலி மருத்தவர்கள் என அறியும் போது  இந்த அளவு அவர்களுக்குத் துணிச்சலைக் கொடுத்தவர் யார்?

நல்ல வேளை ஒரு ஆறுதல் நமக்கு.  அவர்களுடைய நோயாளிகள் எல்லாம் வெளிநாட்டவர்.  நம் நாட்டவர் அல்ல.  இவர்கள் பயன்படுத்தும் மருந்துகளும்  வங்காளதேசத்திலிருந்து  கொண்டு வரப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

ஒரு வகையில் வங்காளதேசிகளைப் பார்க்கும் போது  மிகவும் ஆச்சரியமான மனிதர்களாகவே நமக்குத் தோன்றுகிறது. மிகத் திறமைசாலிகள்.  அவர்களால் கிளினிக் வைத்து நடத்த முடிகிறது. அவர்கள் நாட்டுக்குப் பணம் அனுப்ப  அவர்களே வங்கிகளை நடத்துகிறார்கள்.  கடப்பிதழ்களைத் தயார் செய்யும் அளவுக்குத் திறமைசாலிகளாக  இருக்கிறார்கள்!  விட்டால் அவர்களே தனியாக அரசாங்கத்தையே கூட நடத்துவார்கள்!

வங்காளதேசிகள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.  மலேசிய நாடு செல்வமிக்க நாடு.  இங்குப பணம் தான் பிரதானம்.  பணம் கொடுத்தால் எதுவும் நடக்கும் என்கிற இரகசியத்தைப் புரிந்து கொண்டார்கள். அது அவர்களுக்குப் பயன் அளிக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

மலேசியாவின் தாராளமயக் கொள்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.  எல்லாத் துறைகளில் அவர்கள் தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.  மலேசியர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளும் அவர்களுத்தான் கொடுக்கப்படுகிறது. 

இன்று இந்தியர்கள் செய்யகின்ற தொழில்கள் அனைத்திலும்  அவர்களின் ஈடுபாடு அதிகரித்துவிட்டது.   இன்றைய நிலையில் அவர்கள் இந்தியர்களுக்குப் போட்டியாகவே  விளங்குகின்றனர். ஆனாலும் நாம் அவர்களுக்குச் சாதகமாகவே நடந்து கொள்கிறோம்!   நாம் வழக்கம் போலவே 'வந்தாரை வாழவைப்பவர்'களாகவே  இருக்கிறோம். நமக்குள் அடித்துக் கொள்கிறோம்!

மருத்துவம் மட்டும் அல்ல  இன்னும் என்னென்ன போலிகள் இருக்கின்றனவோ நமக்குத் தெரியவில்லை.  அவர்கள் அனைத்திலும் ஊடுருவிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  அவர்களின் 'திறமையை' நான் மெச்சுகிறேன்.

Friday 4 October 2024

பெயரில் என்ன இருக்கிறது?


 

சுங்கை சிப்புட்டில புதிய பிரமாண்ட தமிழ்ப்பள்ளியை பிரதமர் திறந்து வைத்திருக்கிறார்.

இது நாட்டின் 530-வது தமிழ்ப்பள்ளி. பெருமைக்குரிய விஷயம் தான் அதே சமயத்தில் மாணவர் பற்றாக்குறையால்  ஒரு சில பள்ளிகள் இணைக்கப்படும் சாத்தியமும் உண்டு.

இந்தப் புதிய பள்ளிக்கு என்ன பெயர் வைக்கலாம்  என்கிற பேச்சும், இல்லையென்றால் விவாதமும்,  நம்மிடையே நடந்து கொண்டு தான் இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும்  துன் சாமிவேலு அவர்களின் பெயர்  ம.இ.கா.வினரால்  பரிந்துரைக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அது இயல்பானது தான்.  காரணம் சுங்கை சிப்புட் தொகுதி என்பது ம.இ.கா.வின் தொகுதி . அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்  துன் அவர்கள். அதுவும் முப்பத்து நான்கு  ஆண்டுகள். நீண்ட காலம் தான்.

பொதுவாகவே பள்ளிகளுக்குப் பெயர் வைக்கும் [போது அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.   கல்வி அமைச்சும் அதைத்தான்  விரும்புகிறது.  

பள்ளிகளுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்களை வைப்பதுதான்  சிறப்பானது.  ஆனால் இன்றைய நிலைமையில்  அரசியல்வாதிகளே தங்களை அறிஞர்களாகவே கருதுவதால்  அந்த வாய்ப்பும்  கிடைப்பதில்லை.   நீதி, நேர்மை, ஒழுக்கம் இவைகளையும் அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடுவதால்   அவர்களை விட்டால் ஆளில்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது!

சுங்கை சிப்புட் அரசியல் கட்சிகளைவிட  அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் மூக்கியம். ஆனால் அவர்களையும் எதுவும் நினைக்க விடமாட்டார்கள் அரசியல்வாதிகள்!  அரசியல்வாதிகளின் கைகள் தான் ஓங்கி நிற்கிறது!  அதனால் நாமும் பெயரில் என்ன இருக்கிறது என்று விட்டுவிட வேண்டியது தான்!

Thursday 3 October 2024

பெற்றோர்களே! பிள்ளைகளைக் கவனியுங்கள்!

பெற்றோர்களுக்கு இது  போதாத காலம்.  என்ன தான் செய்ய முடியும்?  சிகிரேட்டின்  பிடியிலிருந்து  குழந்தைகளைக் காப்பாற்ற  எத்தனை பிரச்சனைகளை  அவர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது!

சிகிரெட்டுகளைப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க இந்த சிகிரெட் கம்பனிகள் எந்த எந்த வழிகளைப் பின்பற்றுகிறார்கள், பாருங்கள். மின் சிகிரெட்டுகள் இப்போது பல்வேறு  வடிவில் வருகின்றன. அதனைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  "என் பிள்ளை சிகிரெட் பிடிக்கமாட்டான்"  என்று  அப்பாவித்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.  இப்போதெல்லாம் பிள்ளைகள் வீட்டில் அப்பாவி வெளியே அடப்பாவி!  அலட்சியம் வேண்டாம்.

எப்படியும் பிள்ளைகள் பெற்றோரின் கண்காணிப்பில் தான்  இருக்கின்றனர்.  இனி கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கலாம்.  அவர்களுடைய  புத்தகப்பைகளைக் கொஞ்சம் சோதிக்க வேண்டி வரும்.  ஏன்? சிலுவார் பாக்கெட்டுகள், சட்டை பாக்கெட்டுகள்  இவைகளைத் தினசரி  சோதித்துப் பார்க்க வேண்டி வரும்.

பிள்ளைகளுக்குத் தாராளமாக பணம் கொடுத்தால் வேண்டாத பழக்கங்கள் எல்லாம் வந்து சேரும்.  இதைத்தான் முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்.

பொதுவாக மாணவர்களுக்கு Marker Pen, UHU Gum  போன்றவை  தேவைப்படாத ஒன்று.  ஒரு வேளை தொழில் கல்வி பயிலும்  மாணவர்களுக்குத் தேவைப்படலாம்.  மற்றபடி பள்ளி மாணவர்களுக்குத் தேவை இல்லை.

இன்றைய நிலையில்  சிகிரெட்டுகளை எப்படி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்  என்று சிகிரெட் வியாபாரிகள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்களோ தங்களது பிள்ளைகள் எந்தக் கெட்டப்பழக்கத்துக்கும்   அடிமையாகிவிடக் கூடாது என்று பிரார்த்தனைச் செய்து கொணடிருக்கின்றனர்.   ஆனால் எப்படியோ வியாபாரிகள் தான் வெற்றி பெறுகின்றனர்.  அந்த அளவுக்கு 'பொருட்கள்' சந்தையில் கிடைக்கின்றன.  கடுமையான தண்டனைகள் இல்லை. என்ன செய்ய?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Wednesday 2 October 2024

இது தான் பாசம் என்பது!

அண்ணன் - தம்பி பாசம்  என்றால் சும்மாவா? தாங்கள் பாசமலர்கள் என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

தம்பியின் (Ee Tai Zhi) கல்விக்காக எதனையும் செய்யத் தயார்  என்பதைக் காட்டியிருக்கிறார்  அண்ணன் (Ee Tai Quing).  தனது தம்பியின் உயர்கல்விக்குத் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்திருக்கிறார்.

மலாக்கா மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் இவர்கள். தம்பி   படிக்க  வேண்டிய, பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய இடம், கெடா மாநிலத்தில் உள்ள சிந்தோக் என்னும் நகரம். அங்குள்ள வடமலேசிய பலகலைக்கழகத்தில் பட்டப்படிப்புப்  பயில  தம்பிக்கு  வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. 

மலாக்காவிலிருந்து கெடா போவதற்குப் போதுமான வசதிகள் இல்லை. இருப்பதோ மோட்டார் சைக்கள்.  "எடுடா மோட்டார் சைக்களை!'  என்று  அண்ணன்  மோட்டாரை  முடுக்கினார்!  அப்புறம் என்ன? இரண்டு நாள் பயணம்/ இரண்டு நாட்கள் உட்கார்ந்து பயணம் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.  கஷ்டம் தான். ஆனால் கல்வி என்று வரும் போது கஷ்டத்தைப் பார்க்க முடியுமா?  தம்பி பட்டம் பெற வேண்டும் என்பது அண்ணனின் ஆசை.  எல்லாத்தடைகளையும் மீறித்தான் ஆக வேண்டும்.

அவர்கள் பலகலைக்கழகம்  சேர்ந்தபோது  தம்பிக்கு நல்ல தடபுடல் வரவேற்பு. பல்கலைக்கழக துணை வேந்தரே  அவரை நேரடியாக வரவேற்றார்!  அதுவே ஒரு பெருமைக்குரிய வரவேற்பு.

தம்பியின் கல்விக்காக அண்ணனின் தியாகம் இது. இந்தப் பயணம் மட்டும் அல்ல.  இனி வரும் ஆண்டுகளில் கல்விக்கானச் செலவுகளையும் அண்ணன் தானே கவனிக்க வேண்டும்?  அதனால் அண்ணனின் பாசம் நமக்குப் புரிகிறது.

நமக்கும் இதில் ஒரு பாடம் உண்டு. கல்வியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்.  சீனர்கள் அதில் நிறைவானவர்கள்.  நம்மிடம் இன்னும் அந்தக் குறைகள்  உண்டு.  "படிச்சு என்ன கிழிக்கப் போற?" என்கிற  வார்த்தை இன்னும் நம் சமுதாயத்தில்  ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பது  வருத்தமான விஷயம்.

கல்வியில், இதோ அந்த அண்ணன் - தம்பி போல, நாமும் நமது கல்வியில் அக்கறை காட்டுவோம்.

Tuesday 1 October 2024

முப்பது வயதில் கடன் சுமையா?

                            Finance Minister 11 Datuk Sri Amir Hamzah Azizan 

இன்றைய இளைஞர்கள், முப்பது வயதுக்கு  உட்பட்டவர்கள், பெரும் கடன் சுமையில் சிக்கி  இருப்பதாக இரண்டாவது நிதி அமைச்சர் கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகவே நமக்குப் படுகிறது. 

முப்பது வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 53,000 பேர் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் அவர்களின் கடன் சுமார் நூற்றுத் தொண்ணூறு கோடி  என்பதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஒன்றும்  புதிய பிரச்சனையாக நமக்குத் தோன்றவில்லை. என்று கடன் அட்டை நாட்டில் அறிமுகமானதோ அன்றே பிடித்தது பீடை. எல்லாரும் கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு நினைத்த போதெல்லாம்  செலவு செய்கிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

அதுவும் இளைஞர்களுக்கு எதனையும் சொல்லிக்கொடுக்கத் தேவை இல்லை.  ஆடம்பரத்தை  விரும்பும் சமுதாயமாக இளைஞர் சமுதாயம் மாறிவிட்டது.  பெரும்பாலும் படித்த இளைஞர்கள் தாம்.  ஆனால் என்ன செய்ய?  சாதாரண நடைமுறையில் கூட கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் தான் வாங்குகின்றனர்.  ஆனால் எப்போதுமே இது சாத்தியமா?

அதைவிட மிகவும் அதிர்ச்சியான விஷயம்  என்னவென்றால் தங்களின் குடுமபத்தைக் காப்பாற்றும் திறனையும் பலர் இழந்து வருகிறார்களாம். தங்களின் தினசரி வாழ்க்கையை நடத்தக் கூட மற்றவர்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பது தான் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம்.   வேலை செய்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் வேலை இல்லாதோர்  நிலைமை எப்படி இருக்கும்?

உங்களை யாராவது "கஞ்சப் பிரபு"  என்று சொன்னால்  கவலைப்படாதீர்கள்.  உங்கள் குடும்பத்தின் நலனுக்காக கஞ்சத்தனமாக  இருப்பதில்  நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.  மற்றவர்களிடம்  கையேந்துவதைவிட  சிக்கனம்  மிக மிக உயர்வானது. கையில் பணம் இல்லையென்றால் நண்பர்கள் இல்லை, உறவுகள் இல்லை - எல்லாமே  விலகி நிற்கும்.  அது தான் உலகம்.

நிதி அமைச்சர் கூறியிருப்பதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.  பணத்தில் சிக்கனம் இல்லை என்றால் குடும்பங்கள் சீரழியும்.  பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்யுங்கள்.

கடன் இல்லா வாழ்வே நமக்குத் தேவை. அதுவே நமக்கு நிம்மதியைத் தரும்.