Wednesday, 23 October 2024

நஜிப்பின் மன்னிப்பை ஏற்கலாமா?

                  
 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டு மக்களிடம் கேட்டிருக்கும்  மன்னிப்பை ஏற்றுக்கொள்ளலாமா என்கிற கேள்வி இப்போது மலேசியரிடையே  பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அவருக்கு மிகவும் நெருக்கமான ம.இ.கா. வட்டாரங்கள் கூட இதுவரை வாயைத் திறக்கவில்லை.  நன்றி உணர்வு எங்கே போயிற்று? அவர்கள் தான் நஜிப் நல்லவர், வல்லவர், உன்னதர்  என்று பேசியவர்கள்.  அவர் என்ன செய்தாரோ அதைத்தான் இவர்களும் செய்தார்கள்.  அவ்ர் பெரிதாகச் செய்தார். இவர்கள் சிறியதாகச் செய்தார்கள். ஆக, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

தன்னை வீட்டுக் காவலில் வைக்க வேண்டுமென்று அவர் 'போராடி' வருகிறார். அவர் கேட்ட ஒவ்வொன்றையும் அரசாங்கம்  நிறைவேற்றிவிட்டது. இப்போது அவர் தன்னை வீட்டுக்காவலில்  வைக்க வேண்டும் என்று 'மிரட்டி' வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது கட்சியினர் தனக்கு ஆதரவு கரம் நீட்டுவர் எனவும்  எதிர்பார்க்கிறார்.

அவர் செய்த குற்றம் என்பது சிறிய குற்றம் என்றால்  யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் கூட  நாட்டுப்பற்று இல்லாத மனிதரை அவர் விரும்பும் வழியிலேயே  நடத்த  வேண்டும் என்றால் நாம் எப்படி ஏற்றுக்கொள்வது?

ஒரு சிலர் சொல்லுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  அவர் நல்லவர் தான் அவரின் மனைவியால் தான்  அவருக்கு இந்த நிலைமை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?  மக்கள் தேர்ந்தெடுத்தது  அவரைத்தான்  அவரது மனைவியை அல்ல என்பதை  முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அப்படியென்றால் இன்று நாட்டில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை விட்டுவிட்டு அவர்களின் மனைவியருக்குத் தண்டனைக் கொடுக்கலாமே!

அவரின் சிறைத் தண்டனை 12 ஆண்டுகளிலிருந்து  6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதுவே அவருக்கு இலாபம். இப்போது 6 ஆண்டுகள் வீட்டுக்காவல்  என்பதைவிட 12 ஆண்டுகள் வீட்டுக்காவல்  என்றால் அவர்  ஏற்றுக்கொள்வாரா? எல்லாம் தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும்  என்று குற்றவாளி நினைத்தால் அப்புறம் எதற்கு நீதிமன்றம்? குற்றவாளியே தீர்ப்பை எழுதிக்கொள்ளலாமே!

No comments:

Post a Comment