Saturday, 26 October 2024

வெடிச்சத்தம் வேண்டாமே!


 பட்டாஸ் வெடிப்பதில் ஒரு சந்தோஷம்  உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  அதுவும் குழந்தைகளுக்கு அளவில்லா சந்தோஷம்.

ஆனால் அந்த சந்தோஷத்தில் ஆபத்தும் உண்டு என்பதும் நமக்குத் தெரியும். தீபாவளிக்கு அடுத்த நாள் அது போன்ற செய்திகளைப்  பத்திரிக்கைகளில் பார்க்கலாம்.

ஆபத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் ஏற்படும் நஷ்டங்களை யாரிடம் போய் சொல்லுவது?  காசை கரியாக்குகிறோம் என்று சொல்லுகிறார்களே அது இதுதான்.

பணம்! பணம்! பணம்!  அந்தப் பணத்தை குழந்தைகளுக்குத் துணிமணிகள் வாங்குவதில் செலவு செய்யுங்கள்.  அதுவும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் தானே.  துணிமணிகள் நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்தலாம்.

தீபாவளி என்றாலே புத்தாடை, புதிய துணிமணிகள்  தானே முக்கியம்.   இந்த பட்டாஸ்களில்  செலவுகள் செய்வதை விட  குழந்தைகளுக்கு  நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுங்களேன்.  பட்டாஸ் என்பது ஒரு நாள் கூத்து.  அத்தோடு அது முடிந்தது.   ஆனால் அதனால் வரும் விபரீதங்கள், ஏற்படும் நஷ்டங்கள் இவைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.

அக்கம் பக்கத்தாரையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  பெரியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் அவர்கள் மட்டும் அல்ல.  நாய்கள், பூனைகள், பறவைகள் இவைகள் கூட வெடிச்சத்தம் கேட்டு  தலைதெறிக்க ஓடுவதை நாம்  பார்க்கிறோம். இந்த வெடிகள்,  எல்லா உயிர்களுக்கும் அச்சத்தைத்  தருகின்றன. 

சத்தம் இல்லாத  அடக்கமான  மத்தாப்பு வகைகளைப் பயன் படுத்துங்களேன்.  அவைகளினால் யாருக்கும்  எந்த இடைஞ்சலும் இல்லை. பிள்ளைகள் வேண்டாம் என்றா சொல்லுகிறார்கள்?  வெடிச்சத்தங்களும்  வன்முறைக்குத் தான் இட்டுச்செல்லும். குழைந்தைகளை வன்முறையாளர்களாகப் பயிற்சி கொடுக்காதீர்கள்.  பெருநாட்களை அமைதியாகக் கொண்டாட பிள்ளைகளுக்கு வழி காட்டுங்கள்.

வெடிச்சத்தம்  வேண்டாம் என்பதே நமது ஆசை!

No comments:

Post a Comment