பெருநாள் காலங்களையும் சாலை விபத்துகளையும் சேர்ந்தே பார்க்க வேண்டியுள்ள நிலையில் தான் நாம் உள்ளோம்.
உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. பெருநாள் காலங்கள் மட்டும் அல்ல மற்ற சாதாரண நாள்களிலும் நிலைமையில் மாற்றமில்லை.
இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? தகுதி இல்லாதவர்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள். இலஞ்சம் கொடுத்து உரிமம் பெறுபவர்கள் ஒரு பக்கம். கஞ்சா அடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒரு பக்கம். இந்தக் காரணங்களே போதும் அதிக விபத்துகள் நடப்பதற்கு! விபத்துகளுக்கான தண்டனைகளும் போதுமானதாக இல்லை எனவும் சொல்லலாம்.
மிக மிகக் குறைவான விபத்துகள் நடக்கும் ஒரு நாட்டில் அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயும் போது அந்த நாட்டில் கொடுக்கப்படும் தண்டனை கடுமையானது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆமாம், அந்த ஓட்டுநரின் சொத்துகள் முற்றிலுமாக அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமாம். அவருடைய கணக்கு வழக்கு அனைத்தும் சுழியம் ஆகிவிடுமாம்! தண்டனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். எப்படியோ நம் நாட்டில் இது நடக்கப் போவதில்லை!
இந்த ஆண்டு தீபாவளி நீண்ட நாள் விடுமுறை. அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்பது தான் நமது ஆலோசனை. வாகனங்களைக் கட்டுப்பாட்டோடு ஓட்டுங்கள். வேகத்தைக் குறையுங்கள். தூரத்துப் பயணம் செய்கிறீர்கள். பயணக் களைப்போடு வாகனங்களைச் செலுத்தாதீர்கள்.
ஆனால் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் தம்பிகளுக்குத் தான் நம்மால் எந்தவித ஆலோசனையும் சொல்ல முடியவில்லை. இவர்களால் கட்டுப்பாட்டோடு எதனையும் செலுத்த முடிவதில்லை. நீங்கள் வீடு போய் சேர வேண்டுமானால், நண்பர்களோடு சிரித்துப்பேசி மகிழவேண்டுமானால் எல்லாவற்றுக்கும் ஒழுங்கு இருக்க வேண்டும். அதிலும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் சரி, மோட்டர் சைக்கிள்களைப் பயன்படுத்தும் போதும் சரி இன்னும் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெருநாள் காலங்களில் விபத்து நடப்பது இயல்பு தானே என்கிற அலட்சியம் வேண்டாம். இது உயிர் சம்பந்தப்பட்டது. வீடு போய் சேர வேண்டும். குடும்பத்தினரோடு குதூகளிக்க வேண்டும் நண்பர்களோடு மகிழ வேண்டும் இதனையெல்லாம் யோசித்து சாலை விதிகளைப் பார்த்து ஓட்டுங்கள்.
No comments:
Post a Comment