மாமாக் உணவகங்கள் என்றாலே பயப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே அவர்களைப்பற்றி பல புகார்கள். ஆனால் சிலர் செய்கின்ற தப்புகளினால் நாம் அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. இப்போது யாரைத்தான் நம்புவது என்று நம்மாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மேலே படத்தைப் பாருங்கள். ஒரு மாமாக் உணவக ஊழியர் சமையலுக்குப் பயன்படுத்தும் பானைகளைத் துடைப்பத்தால் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ நமக்கு இந்தக் காட்சி அருவருப்பைத் தருகிறது.
பொதுவாக சுகாதார அதிகாரிகள் இது போன்ற குற்றங்களுக்கு ஏனோதானோ போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். இரண்டு வாரங்கள் கடையை மூடு என்றால் அவர்கள் மூடிவிட்டு சுற்றுப்பயணம் போய்விடுவார்கள்! உணவக ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளம் கொடுக்கப் போவதில்லை. முதலாளிகளுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
இதற்கு என்ன தான் தீர்வு? நீண்ட காலமாக இந்தப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரே ஒரு வழிதான் தீர்வு. ஆமாம் உணவகத்தை நடத்தும் முதலாளியை ஆறு மாதம் சிறையில் தள்ளுங்கள். அப்புறம் இதெல்லாம் நடக்காது. சுற்றுப்பயணத்தை உள்ளேயே வைத்துக் கொள்ளட்டும்.
இந்த செய்தி வரும் போதே இன்னொரு செய்தியும் வருகிறது. இதுவும் மாமாக் உணவகம் தான். பெண் ஊழியர் ஒருவர் சமையலுக்குப் பயன்படுத்தும் இரும்புச் சட்டியை அல்லூர் தண்ணியில் கழுவிக் கொண்டிருக்கிறார். சுத்தம் செய்ய அழுக்குத் தண்ணீர் .......?
ஊழியர் குற்றம் புரிந்தாலும் பொறுப்பு என்னவோ உணவக முதலாளி மீது தான். முதலாளியே ஊழியர்களைத் தூண்டிவிட்டு தெரியாதவர் போல நடிக்கலாம். எல்லாமே நடக்கும். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்வதில் தப்பில்லை. ஆனால், அவர்கள் நாட்டிலுள்ள கலாச்சாரத்தை இங்கே கொண்டுவந்து திணிப்பது மிகவும் அநாகரிகமானது என்று முதலாளிகள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
மாமாக் உணவகங்கள் அதிகம் மலாய்க்காரர்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதால் இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் சுத்தம், சுகாதாரம் என்பது அனைத்து மலேசியர்களுக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் சரி.
No comments:
Post a Comment