மித்ரா ஏதும் நல்லது செய்கிறதோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு சிலர் மித்ரா நல்லதே செய்யக் கூடாது என்று நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அதன் தலைவர் பிரபாகரன் என்னவோ அறிக்கைகள் விடுகிறார் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்கிறார்! சரி, கொஞ்சம் நாள் பொறுத்திருங்களேன்? என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே! அவர் பொய்யா சொல்லப் போகிறார்? ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.
எல்லாமெ நாம் நினைப்பது போல நடக்க வாய்ப்பில்லை. அவர் எதனைச் செய்தாலும் அது ஏதோ ஒரு வகையில் இந்தியர்களுக்குத்தான் போய்ச் சேரப்பொகிறது. வேறு யாருக்கும் அல்ல. இந்தியர் அல்லாதவர் என்றால் கேள்விகள் எழுப்பலாம்.
மித்ரா வசதி படைத்த, தொழிலில் உள்ளவர்களுக்குத் தான் உதவுகிறது என்கிற குற்றச்சாட்டு எப்போதும் சொல்லப்படுகிறது. அவர்கள் வசதிபடைத்தவர்கள் என்பதற்கு என்ன அளவுகோல்? அவர்களுடைய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வசதி இல்லையென்றால் அவர்களுக்கும் மித்ரா உதவி செய்யத்தான் வேண்டும். அதனைத் தவறு என்று சொல்ல வழியில்லை.
இன்றைய நிலையில் எது நடந்தாலும் அதற்கு பிரபாகரன் தான் பொறுப்பு என்று சொல்லுவதை ஏற்க முடியாது. முன்பு துணை அமைச்சர் ரமணன் பொறுப்பிலிருந்தார். அவர் தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் உதவிகளைக் கொண்டு வந்தார். குறிப்பாக மாணவர்களைக் குறிவைத்துக் காய்களை நகர்த்தினார்.
ஆனால் இன்று பிராபாகரன் நிலைமை வேறு. மித்ரா பிரதமரின் அலுவலகத்திலிருந்து செயல்படுகிறது. அரசு சார்பில் உள்ளவர்கள் அதில் அங்கம் வகிக்கிறார்கள். இப்போது அது ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராபகரன் அரசியல்வாதி என்கிற முறையில் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அரசு சார்பில் உள்ளவர்கள் பொறுப்பானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியர்களின் நிலைமை தெரியும். அவர்களுக்குப் பிரதமரின் கட்டளை என்ன என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள்.
எல்லாமே நம்பிக்கை தான். நல்லது நடக்கும் என நம்புவோம். யார் வந்தாலும் புழுதிவாரி தூற்றத்தான் வேண்டும் என்கிற அவசியமில்லை; கட்டாயமும் இல்லை. பொறுத்திருப்போம். எப்போதும் ஒளிந்து கொண்டா இருக்க முடியும்? சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.
மித்ராவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுதந்திரமாக செயல்பட விடுவோம்.
No comments:
Post a Comment