உலக அளவில் முட்டை சாப்பிடுவதில் மலேசியர்கள் பதிமூன்றாவது இடத்தில் இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
முதலிடத்தில் ஜப்பானும் இரண்டாவது இடத்தில் சீனாவும் இருக்கின்றன. அதாவது இந்த இரு நாட்டு மக்கள் தான் அதிக முட்டைகளைச் சாப்பிடுபவர்கள்.
வழக்கம் போல நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. முட்டை சாப்பிடுங்கள் ஆனால் மஞ்சள் கருவைச் சாப்பிடாதீர்கள் என்று சொல்லப்படுகிறது. இது எந்த அளவு சரி என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. குழந்தைகள் சாப்பிடலாம் வயதானவர்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்லுவதுண்டு.
உலகில் இந்த இரண்டு நாடுகளுமே அதிபுத்திசாலிகளைக் கொண்ட நாடாக இருக்கின்றன. நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே பலரும் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள். பொருளாதாரத்தில் இரு நாடுகளுமே மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன.
ஜப்பானின் வளர்ச்சி இன்று நேற்றல்ல எப்போதோ அதன் வளர்ச்சி ஆரம்பமாகிவிட்டது. குண்டு போட்டு எப்போது நாடு சீரழிந்ததோ அன்றிலிருந்தே அதன் போக்கு மாறிவிட்டது. இன்று பலவகைகளில் அந்நாடு முதலிடத்தில் இருக்கின்றது. இவர்கள் தான் உலகிலேயே முட்டை சாப்பிடுவதில் முதலிடத்தில் இருக்கிறார்களாம். அப்படியென்றால் முட்டை அவர்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறது. நாம் சாப்பிடுவதில் என்ன கெட்டுப்போய்விட்டது?
இரண்டாவதாக சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இரும்புத்திரைக்குப் பின்னால் வாழ்ந்த நாடு. அன்று என்ன நடக்கிறது என்பதை வெளி உலகிற்குத் தெரியாமல் அனைத்தையும் மறைத்த நாடு. ஆனால் இன்றைய நிலைமை அனைத்தையும் மாற்றிவிட்டது. இன்றைய சந்தையில் நம்மால் சீனப்பொருள்களைத் தான் வாங்க முடியும். அவர்களின் பொருள்கள் தான் எங்கும் பரவிக்கிடக்கின்றன. இப்போது அவர்கள் எல்லா நாடுகளிலும், எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்களின் நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன இப்போது மற்ற நாடுகளையும் விலைக்கு வாங்கும் நிலையில் இருக்கின்றனர். கடைசியாக இலங்கையும் அவர்களுடைய வாங்கும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்பது சோகம். அரசியல்வாதிகள் இலஞ்சமே பிரதானம் என்று அரசியல் விளையாடினால் கடைசியில் அவர்கள் நாட்டை அடகு வைப்பது சீனாவிடம் தான். இந்த நிலையில் தான் முட்டை சாப்பிடுவதில் சீனர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்த வெற்றிகள் எல்லாம் சீனர்கள் அதிகம் முட்டைகள் சாப்பிடுவதால் தானோ? என்ன இரகசியும் புரியவில்லை!
ஒரு வேளை நாமும் அதிகம் முட்டை சாப்பிட்டால் மூளையும் வளரும் முன்னேற்றமும் வரும் என்று நினைப்பவர்கள் இன்றே ஆரம்பியுங்களேன்! நாம் வளர்ந்தால் யார் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள்? அப்படியாவது முதலிடத்தைப் பிடிப்போமே!
No comments:
Post a Comment