இன்றைய நிலையில் எந்த ஒரு பழத்தையும் நம்மால் கடைகளில் வாங்கிச் சாப்பிட முடிவதில்லை.
எதைத் தொட்டாலும் ரசாயன கலப்பு என்று சர்வ சாதாரணமாகச் சொல்லப்படுகிறது. எதையும் நம்பி வாயில் வைக்க முடிவதில்லை. நமக்கு வாழைப்பழங்களைப் பற்றி நன்றாகவே தெரியும். நமக்குப் பிடித்த பழங்களில் அதுவே முதன்மையானது. ஆனால் சமீபகாலங்களில் அந்தப் பழமோ அதிகமான இனிப்பைக் கொடுக்கிறது! எங்கே கோளாறு? பழத்திலா, மனத்திலா? புரியவில்லை!
மேலே உள்ள பச்சை திராட்சைப் பழத்தைப் பற்றியான செய்தி ஒன்று வெளியாகியது. தாய்லாந்து சுகாதார அமைச்சு திராட்சைப் பழத்தில் அதிக இரசாயனக் கலப்பு இருப்பதாக சந்தேகத்தைக் கிளப்பியது. ஆனால் உறுதிப்படுத்தவில்லை. நமது சுகாதார அமைச்சும் நமக்குக் கிடைக்கும் பழத்தைச் சோதனை செய்ததில் பழத்தில் நச்சுத்தன்மை ஏதும் இல்லையென அறிவித்துவிட்டது.
எல்லாம் சரிதான். இப்போது பழங்கள் என்றாலே நமக்கு அச்சம் தருகிறது! இந்தத் திராட்சைப் பழத்தையே எடுத்துக் கொள்வோம். பழத்தைப் பார்க்கும் போதே பழம் பளபள வென்று இருப்பதால் அதுவே நமக்கு அச்சத்தைக் கொடுக்கிறது. ஏன் இந்த அளவு பளபளப்பு? ஆனால் அந்த வகைப்பழம் Shine Muscat என்பதால் அது ஷைன் ஆகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அதன் பெயரில் உள்ளதைப் போலவே அது பளபளப்பாக இருக்கிறது. பழத்தில் ஆபத்து ஒன்றுமில்லை என்பதால் தைரியமாகவே சாப்பிடலாம்.
சுகாதார அமைச்சு எல்லா வகைப்பழங்களையும் இரசாயன சோதனைக்குப் பின்னரே மக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வருகிறது என்பது தெரியும். ஆனால் ஒரு சில விஷயங்கள் மக்கள் பயன்படுத்திய பின்னரே அமைச்சுக்குத் தெரியவரும் என்பதும் உண்மையே.
எப்படியோ மக்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பது தான் நமக்கு உள்ள கவலை. சுகாதார அமைச்சு எப்போதும் விழிப்போடு இருக்கும் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment