Thursday, 24 October 2024

கடன் இல்லாமல் கொண்டாடுங்கள்!


 ஆண்டுக்கு ஒரு முறை தான் தீபாவளி. தீபாவளி மட்டும் அல்ல எல்லாப்  பெருநாள்களும்  அப்படித்தான்.  ஆண்டுக்கு ஒரு முறை தான். 

ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்காக  வட்டி முதலைகளான ஆலோங்களிடம்  கடன் வாங்கியா தீபாவளியைக் கொண்டாடுவது? அதனையும் செய்கின்றனர்  ஒரு சிலர்.

அது தனிப்பட்ட கடனாக இருந்தால் 'எப்படியோ தொலைந்து போ' என்று விட்டு விடலாம்.  ஆனால் அந்தக் கடனால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படுகிறது  என்பதை அறியாமலா கடன் வாங்குவர்?  கொடுமையிலும் கொடுமை.  அந்தக் குடும்பமே நிம்மதியாக வாழ முடியாமல் தெருவுக்கு வரும் சூழல் ஏற்படுகிறது.

குடிகார அப்பன் எதையாவது செய்துவிட்டுப் போய்விடுவான்.  ஆனால் அந்தக் குடும்பம், குழந்தைகள்  என்னபாடு படுவர் என்பதைக் கொஞ்சமாவது  சிந்திக்காமலா கடன் வாங்குவது?

நண்பர்களே,  பெருநாளைக் கொண்டாடுங்கள்.  அளவாகக் கொண்டாடுங்கள்.   உங்கள் வசதிக்கேற்ப கொண்டாடுங்கள். கடன் வாங்கி பெருநாளைக் கொண்டாட  வேண்டிய அவசியமில்லை.

இதோ இன்னும் ஓரிரு மாதங்களில்  குழந்தைகள் பள்ளி போக வேண்டிய கட்டாயம் உண்டு.  செலவுகள் உண்டு.  கல்வி என்றாலே செலவுகள் இல்லாமல் எதுவும் முடியாது.  உதவிகள் வரும் என்று எல்லாக் காலங்களிலும்  கையேந்தவா  முடியும்? வரலாம் அல்லது வராமல் போகலாம்.  யாரையும் நம்ப முடியாது. நம்மை நம்பித்தான்  வாழ வேண்டும்.

நமக்குத் தேவை கடன் இல்லாத் தீபாவளி.  ஆடம்பரம் இல்லாத் தீபாவளி. ஆடம்பரமற்ற  தீபாவளி. எச்சரிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நாள் கொண்டாட்டம் தான். ஆனால் கடன் வேண்டாம்!

No comments:

Post a Comment