பிரிக்ஃபீல்ட்ஸ் தீபாவளி சந்தை
இன்று நாடெங்கிலும் தீபாவளி சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.
மற்ற சந்தைகளில் என்ன நிலைமை என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் பிரிக்பீல்ட்ஸில் எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக டிக்டாக்கில் போட்டு அவர்களுக்கு என்ன முடியுமோ அதனைச் செய்கிறார்கள்.
நமக்கும் வருத்தம் தான். அவர்கள் பாவம், சிறு வியாபாரிகள். இலட்சக்கணக்கில் ஒன்றும் சம்பாதித்துவிடப் போவதில்லை. ஏதோ சில ஆயிரங்களாக இருக்கலாம். அந்த இடத்தில் போய் "நாங்கள் கலை நிகழ்ச்சியை நடத்தியே தீருவோம்" என்று பிடிவாதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
கலை நிகிழ்ச்சியாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சமுதாயம் சிறு சிறு வியாபாரிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். "மித்ரா" போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவர்களோ தங்களால் முடியவில்லை என்பதால் தான் வெவ்வேறு பணிகளில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதோ, நம் கண்முன்னே சிறு வியாபாரங்கள் செய்பவர்களை கலைநிகழ்ச்சி என்னும் பெயரில் அவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறோம்.
கலைநிகழ்ச்சிகளை, கலைஞர்களை நாம் புறக்கணிக்கவில்லை. ஆனால், இன்றைய நிலையில், சிறு வியாபாரிகள் நமக்கு முக்கியம். இங்கிருந்து தான் வருங்காலங்களில் பெரும் நிறுவனங்கள் உருவாக வேண்டும். இன்றைய பெரும் நிறுவனங்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய பின்ன்ணியைக் கொண்டவைகள் தாம். அதனால் சிறு வியாபாரிகளின் பங்களிப்பு நம் சமுதாயத்திற்கு மிக மிகத் தேவையானது.
ஆட்டம்பாட்டம் என்பதையெல்லாம் எவ்வளவோ பார்த்துவிட்டோம். நமது சமுதாயம் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
நாம் சொல்ல வருவதெல்லாம் ஆட்டம்பாட்டங்களுக்குக் கொஞ்சம் நாளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம். சிறுசிறு வியாபாரங்களுக்குக் கைகொடுப்போம்.
அரசியல்வாதிகளே! சிறு வியாபாரங்களை ஊக்குவிப்பது உங்கள் கடமை. நம் கண்முன்னே இருக்கும் சிறு வியாபாரிகளை உதாசீனப்படுத்தாதீர்கள். அவர்களை வளர விடுங்கள்.
No comments:
Post a Comment