இது தான் சரியான தருணம். இதைத் தவற விட்டால் அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். அதனால் இப்போதே இந்த பி40 மக்களைக் கூப்பிடுங்கள். உணவுக் கூடைகளைக் கொடுங்கள். பரிசுக் கூடைகளைக் கொடுங்கள்.
ஓர் இடைத்தேர்தலின் போது அந்தத் தொகுதியைச் சேர்ந்த நண்பரே என்னிடம் சொன்னது. குடிக்க மதுபானம், இறைச்சி வகைகள், அரிசி பருப்பு வகைகள் - இவையெல்லாம் கொடுக்கப்பட்டன என்று அவர் சொன்னார். நமக்கும் ஆச்சரியத்தான். நான் அரசியலிலிருந்த போது இப்படி எதுவும் நடந்ததில்லை. இப்போது நடக்கிறது என்றால் நம்மால் என்ன செய்ய முடியும்?
இப்போது, செய்த சாதனைகளை வைத்து யாரும் வாக்குச் சேகரிப்பதில்லை. அந்த வாய்ப்பு மிக மிகக் குறைவு. டி. ஏ. பி.யில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் சீனத் தலைவர்களின் சம்மதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. பி.கே.ஆர். கட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் அவர்களின் தலைமைத்துவத்தை மீற முடியாது, ஆக, இவர்களால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் இதற்குப் பொருள். சாதனைகள் செய்ய இவர்கள் எங்கே போவார்கள்?
இவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் உணவு கூடை, பரிசு கூடை இவைகள் தான். மேலே உள்ளவர்கள் கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்கள். கணபதி ராவுக்கு நன்றி. சுமார் 50 மாணவர்களுக்குத் தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கியிருக்கிறார்கள். பரவாயில்லை, ஏற்புடையது தான். ஸ்ரீராசி சில்க் சென்டருக்கு நமது நன்றிகள் உரித்தாகுக.
ஓய்பி கணபதிராவுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் இந்த பி40 மக்கள் ஒவ்வொரு வருஷமும் உங்களிடம் உதவிக்கு வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அடுத்த ஆண்டு அவர்கள் பி40 யிலிருந்து அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். சிறு வியாபாரங்களில் ஈடுபட நிதி உதவி செய்ய வேண்டும். இது நமது தாழ்மையான வேண்டுகோள்.
இதெல்லாம் ஓர் அரசியல் விளையாட்டு அவ்வளவு தான். ஆடும்வரை ஆடுவார்கள்! அதுவரை தான் ஆட்டம்! பாட்டம்!
No comments:
Post a Comment