Tuesday, 22 October 2024

இங்கேயும் நிறவெறியா?

                              "எங்களுக்கு நீதி வேண்டும்" எனப் போராட்டம்

 நிறவெறி நம் நாட்டிலுமா? அதுவும் படித்தவர்கள்  அவை என்று  கருதப்படும்  வங்கியிலா"

ஆம், அது தான் நடந்திருக்கிறது.  அந்த வங்கி MayBank.  இடம்; பத்துகாஜா கிளை, பேராக்.  பாதிக்கப்பட்டவர்: இந்தியப் பெண் குமாஸ்தா. கேவலமாக பேசியவர்:  வங்கியின்  பெண் நிர்வாகி, சீனப் பெண்மணி.

வங்கியில் வேலை செய்கின்ற அந்தக் குமஸ்தா பெண்ணை அந்த நிர்வாகி 'கருப்பி' என்று  சீன கெண்டனீஸ் மொழியில்  அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.  இது பற்றி மேலிடத்தில் புகார் செய்தும் எந்த மாற்றமும் அவரிடம் ஏற்படவில்லையாம். சும்மா ஒப்புக்காக சுமார் 20 மைலுக்கு அப்பாலுள்ள கிளைக்கு அவர் மாற்றப்பட்டாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அங்கு வேலை செய்யும் பணியாளர்கள்  இதோ மேலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நம்மால் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  சக பணியாளரை இப்படி இனத்துவேஷத்துடன்  நடத்தும் ஒருசில நிர்வாகிகள் இன்னும் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.  பல இனத்தவர்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட வேண்டியுள்ளது.

அப்படியென்றால் இந்தியர்கள்  அவருடைய வங்கியில் பணம் போடவேண்டுமென்றால்  அதனை 'கருப்பர்' பணம் என்று கையால்  தொட மாட்டாரா அல்லது பணத்தை வங்கியில் போட அனுமதிக்கமாட்டாரா?  கருப்பர் தொட்ட பணத்தை அவர் வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவாரா? இப்படிப் பல கேள்விகள் உண்டு.

இவருடைய பின்னணி என்ன என்பது நமக்குப் புரியவில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலேயே வாழ்ந்தவராக இருப்பாரோ?  அப்படி என்றாலும் எல்லா நாடுகளிலும் கருப்பர்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கின்றனர்.  இவர் என்ன அதிசயத்தைக் கண்டார்?  

இது இனத்துவேஷம் என்று தான் சொல்ல முடியும். நிறத்துவேஷம்  அல்ல. ஒரு சில மெத்த படித்த சீனரிடையே இனத்துவேஷம் இருக்கத்தான் செய்கிறது.  அதிலே இவரும் ஒருவர்.

வங்கி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் நாம் சொல்ல வருவது. பொறுத்திருப்போம்.

No comments:

Post a Comment