Monday, 14 October 2024

நாடு பூராவும் இப்படித்தானோ!


 இப்போதெல்லாம் நாசி கண்டார் உணவகம் என்றாலும் சரி மாமாக் உணவகம் என்றாலும் சரி -  ஐயோ உங்களுக்குக் கேடு - என்று பயப்பட வேண்டியிருக்கிறது.

தொடர்ந்தாற் போல செய்திகள் வரும்போது யாருக்குத்தான் பயம் வராமலிருக்கும்?  இப்போது ஒரு செய்தி. கடைசியாக என்று சொல்ல முடியாது. அது தான் தொடர்ந்து வருகிறதே? எப்படிக்  கடைசி என்று சொல்ல முடியும்?

அலோர்ஸ்டார் நகரில் இயங்கும் ஒரு நாசி கண்டார் உணவகத்தில்  உப்பு கலந்த முட்டையை வியாபாரம் செய்கிறார்கள். அங்கு வாங்கிய முட்டையில்  புழுக்கள் நெளிவதைப் பார்த்திருக்கிறார் வாடிக்கையாளர். அப்புறம் சுகாதார அதிகாரிகளிடம் புகார்  போக  இப்போது உணவகத்திற்கு  இரண்டு வாரங்கள் ஓய்வைக் கொடுத்திருக்கிறார்கள்.

உணவகத்தில் கெட்டுப் போன முட்டைகளை விற்கிறோமே  என்கிற மனசாட்சியே இல்லாமல் விற்பனை செய்தால்  அவர்களை என்ன செய்யலாம்?  நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் முட்டை கெட்டுப்போகும் என்கிற அடிப்படை அறிவு கூடவா இல்லை?  உப்பு போட்டுவிட்டால் மட்டும் மாத கணக்கிலா தாங்கும்?

உணவகங்களில் தவறுகள் நடந்தால் இப்போதெல்லாம் உடனடியாக படம் பிடித்து அனுப்பிவிடுகிறார்கள். மற்ற வியாபாரங்களை விட உணவக வியாபாராம் என்பது மிகவும் சிக்கலானது. பழைய உணவுகளை வைத்து வியாபாரம் செய்ய வழியில்லை.  அப்படியெல்லா சம்பாதிக்க இது காலம் அல்ல. கெட்டுப்போன பொருள்களை குப்பையில் போட வேண்டியதுதான்.

பாய்களே (Bhai) மாமாக்களே உங்களுக்காக உங்கள் சங்கம் எவ்வளவோ கஷ்டமான சூழ்நிலையில்  அரசாங்கத்துடன் பேச்சு வர்த்தைகள் நடத்துகின்றது.  நீங்கள் இப்படியெல்லாம் வியாபாரம் செய்தால்  அவர்கள் என்னதான் செய்வார்கள்?  உங்களுக்காக வாதாட முடியுமா?

இன்னும் என்ன என்ன செய்திகள் வருமோ? பயத்துடன் தான் காத்துக்கிடக்க  வேண்டியுள்ளது.


No comments:

Post a Comment