Sunday, 20 October 2024

இந்திய மாணவர்களுக்கு கோட்டா முறை வேண்டும்

 

இந்திய மாணவர்கள் கல்வியில் உயர வேண்டும் என்பதற்காக பலவேறு வகைகளில்  பலவேறு வழிகளில் பலர் வழிகாட்டுகின்றனர்.

அரசியல்வாதிகளை இதில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். வழிகாட்டும் அளவுக்கு அவர்கள் எந்த ஒரு திறனையும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கல்விக்கான மானியம் மட்டுமே.

இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் எதிர்பார்க்கும் அளவுக்கு நிறைவு தரவில்லை என்பதை அனைவரும் புரிந்து வைத்திருக்கின்றனர். ஏன் நாடாளுமன்றத்தில் ஓரு மலாய் எம்.பி. கூட இது பற்றி பேசியிருந்தார்.

நமது பிரதமருக்குக் கூட இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. பழங்குடி மக்களான பூர்வக்குடிகளைவிட இந்தியர்களின் நிலை மோசம் என்பதை அவர் தான் முதன் முதலில் சுட்டிக்காட்டியவர்.  இப்போது அவர் சொன்ன வார்த்தையையே அனைவரும் பிடித்துக் கொண்டனர்.

ஆனால் அதற்கான தீர்வு என்ன என்பதில் மட்டும் சிக்கல்.  மலாய், சீன மாணவர்களுக்குப் பிரச்சனையில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது  கிடைத்து விடும்.   அரசாங்கம் மனம் வைத்தால் நமக்கும் கிடைக்கும்.  நமக்கு ஐம்பது, அறுபது ஆண்டு திட்டங்கள் வேண்டாம்.  நமக்கென்று கோட்டா உண்டு. அதனை ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்ய வேண்டும்.  எல்லாத் துறை சார்ந்த கல்விகளிலும் நமக்குக் கிடைக்க வேண்டிய ஏழு விழுக்காடு நமது மாணவர்களுக்குக்  கிடைக்க வேண்டும். இதன் மூலம் தான் நமது பிரச்சனைகளைக் களைய முடியும்.

அப்படி ஒரு கோட்டா  முறை இந்திய மாணவர்களுக்கு இல்லை என்றால் இப்போதே  அதனை உருவாக்கலாமே?  அதனை ஏன் இழுத்தடித்துக் கொண்டே போக வேண்டும் இந்தியர்களின் பிரச்சனையை முற்றிலுமாக அறிந்தவர்  பிரதமர்.  கல்வி மட்டும் அல்ல எல்லாத் துறைகளிலுமே நமக்கு வேண்டும் இந்த கோட்டா முறை.

இப்போது நடப்பது என்ன? இந்திய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை அல்லது இந்தியர்களுக்குக் கிடைக்க வேண்டியவை  அனைத்தும் மற்ற  இனத்தவருக்கு  மடைமாற்றம்  செய்யப்படுகிறது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.  இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்  குறை சொல்லிக் கொண்டும், ஆர்ப்பாட்டம் செய்து கொண்டும் இப்படியே நாம் காலம் தள்ள முடியாது.

இந்திய எம்.பி.க்கள் ஒன்று சேர வேண்டும். இதன் தொடர்பில் கலந்து ஆலோசித்து  பிரதமரிடம் கொண்டு செல்ல வேண்டும்.  இனி இது தான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். வேண்டும் ஒரு தீர்வு, அவ்வளவு தான்.

No comments:

Post a Comment