தம்பியின் (Ee Tai Zhi) கல்விக்காக எதனையும் செய்யத் தயார் என்பதைக் காட்டியிருக்கிறார் அண்ணன் (Ee Tai Quing). தனது தம்பியின் உயர்கல்விக்குத் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்திருக்கிறார்.
மலாக்கா மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் இவர்கள். தம்பி படிக்க வேண்டிய, பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய இடம், கெடா மாநிலத்தில் உள்ள சிந்தோக் என்னும் நகரம். அங்குள்ள வடமலேசிய பலகலைக்கழகத்தில் பட்டப்படிப்புப் பயில தம்பிக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
மலாக்காவிலிருந்து கெடா போவதற்குப் போதுமான வசதிகள் இல்லை. இருப்பதோ மோட்டார் சைக்கள். "எடுடா மோட்டார் சைக்களை!' என்று அண்ணன் மோட்டாரை முடுக்கினார்! அப்புறம் என்ன? இரண்டு நாள் பயணம்/ இரண்டு நாட்கள் உட்கார்ந்து பயணம் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. கஷ்டம் தான். ஆனால் கல்வி என்று வரும் போது கஷ்டத்தைப் பார்க்க முடியுமா? தம்பி பட்டம் பெற வேண்டும் என்பது அண்ணனின் ஆசை. எல்லாத்தடைகளையும் மீறித்தான் ஆக வேண்டும்.
அவர்கள் பலகலைக்கழகம் சேர்ந்தபோது தம்பிக்கு நல்ல தடபுடல் வரவேற்பு. பல்கலைக்கழக துணை வேந்தரே அவரை நேரடியாக வரவேற்றார்! அதுவே ஒரு பெருமைக்குரிய வரவேற்பு.
தம்பியின் கல்விக்காக அண்ணனின் தியாகம் இது. இந்தப் பயணம் மட்டும் அல்ல. இனி வரும் ஆண்டுகளில் கல்விக்கானச் செலவுகளையும் அண்ணன் தானே கவனிக்க வேண்டும்? அதனால் அண்ணனின் பாசம் நமக்குப் புரிகிறது.
நமக்கும் இதில் ஒரு பாடம் உண்டு. கல்வியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். சீனர்கள் அதில் நிறைவானவர்கள். நம்மிடம் இன்னும் அந்தக் குறைகள் உண்டு. "படிச்சு என்ன கிழிக்கப் போற?" என்கிற வார்த்தை இன்னும் நம் சமுதாயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.
கல்வியில், இதோ அந்த அண்ணன் - தம்பி போல, நாமும் நமது கல்வியில் அக்கறை காட்டுவோம்.
No comments:
Post a Comment