Friday, 25 October 2024

இந்திய சமூகம் புறக்கணிப்பா?

 

அடுத்த  2025 க்கான வரவுசெலவு திட்டத்தில்  இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அனைத்து அரசியல்வாதிகளும் கூறிவிட்டனர்.

ஜனநாயக செயல் கட்சியினர் வாய் திறந்திருக்கின்றனர். பி.கே.ஆர்., ம.இ.கா.  கட்சியினர் வாய் திறக்கவில்லை.   கட்சிக் கட்டுப்பாடு கருதி வாய் திறக்க வழியில்லை. துணை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன்  அரசாங்கத்தின் சார்பில் "அனைத்தும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது"   என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்! 

ஆனால் இப்படித்தான் அரசியல்வாதிகள் பேசுவார்கள்  என்பது நமக்குத் தெரியும்.  கடந்த ஒன்பது ஆண்டுகளாக  இதே தொகையைத் தான் இந்திய சமூகத்திற்காக  அரசாங்கம் ஒதுக்கி  வருகிறது  என்று சொல்லப்படுகிறது.  ஆரம்ப காலங்களில் 'இந்தத் தொகை அதிகம்'  என்று மீண்டும் அரசாங்கத்திற்கே திருப்பி கொடுத்த கதைகள் எல்லாம் நம்மிடம் உண்டு.  அது ம.இ.கா.வின் பெருந்தன்மை!

இப்போதும் கூட பலர் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  மித்ரா பணம் என்னவாயிற்று என்கிற கேள்விகள்  இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. அவர்களோ பணம் எல்லாம் காலியாகிவிட்டது  இப்போது பணத்தேவை அதிகம் என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

மாண்புமிகு ரமணன் அவர்களாவது  அவ்வப்போது சில அறிவுப்புக்களையாவது  வெளியிட்டு வருகிறார். இத்தனை சிறு வியாபாரிகள், குறுவியாபாரிகள் கடனுதவி பெற்றோர்கள் என்று  அறிவிப்புக்கள் வருகின்றன. ஏதோ கேட்பதற்கு ஆறுதலாகவும் நமக்கு  இருக்கின்றது. 

ஆனால் மித்ராவுக்கு அப்படியெல்லாம் ஒரு நிலைமை இல்லை. பணம் முடிந்து விட்டது அவ்வளவு தான். என்ன அப்படியா?  அப்படியென்றால் அரசியல்வாதிகள் மீண்டும் தங்களது  சித்து விளையாட்டுக்களை ஆரம்பித்து விட்டார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது!

முதலில் கொடுத்த பணத்தை இவர்கள் என்ன செய்தார்கள்  என்று கணக்குக் காட்டட்டும்.  பொது மக்கள் பார்வைக்கு அதனை வைக்கட்டும். பிறகு தான் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா   என்கிற முடிவு செய்ய முடியும்.   அதுவரை அரசாங்கம் செய்தது சரிதான்  என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

"பலர் வாட வாழ சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை"

No comments:

Post a Comment