Thursday 10 March 2022

வாருங்கள்! மலை ஏறுவோம்!

 

                            "எவரஸ்ட்"  ரவி தனது மலையேறும் குழுவினருடன்!

மலை ஏறுவது அதுவும் உலகில் உயரமான எவரஸ்ட் மலையை ஏறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

மலை ஏறுபவர்களுக்கெல்லாம் அவர்கள் வெற்றி பெற நினைப்பது எவரஸ்ட் மலையை அடைவது தான்.  உலகில் உயரமான மலையை அடைவது என்பது  மலையேறுபவர்களின் கனவு!

ஆனால் நமது ரவிசந்திரன்  தர்மலிங்கம் இரண்டுமுறை எவரஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார்.  2006 - 2007 - ம் ஆண்டு அந்த சாதனையைப் புரிந்திருக்கிறார். அதனால் தான் அவரை அனைவரும் எவரஸ்ட் ரவி என அழைக்கிறார்கள்.

இந்த எவரஸ்ட் பயணங்களின்  போது அவர் தனது கைகளில் உள்ள எட்டு விரல்களை இழந்திருக்கிறார். ஆனால் அந்த இழப்பு என்பது அவரது மலையேறும் ஆர்வத்தைக் குறைத்துவிடவில்லை! அவருக்கு அது ஊக்குவிப்பாகவே அமைந்தது! அது தான் மலையேறுபவர்களின் தன்னம்பிக்கை!

வருகிற  மார்ச் 24-ம்  தேதி மீண்டும் எவரஸ்ட் பயணத்தை மேற்கொள்கிறார்  எவரஸ்ட் ரவி. இந்தப் பயணம் இரண்டு மாதங்கள் நீடிக்கும்.   இம்முறை அவரோடு ஐந்து பேர் மலையேறுகின்றனர். இதில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த இரு பெண்களும் கலந்து கொள்கின்றனர். எவரஸ்ட் சிகரத்தை எத்தனையோ பெண்கள் ஏறி இறங்கியிருக்கின்றனர். இந்த இரு மலேசியப்  பெண்களும்  சிகரத்தை அடைய நமது வாழ்த்துகள்!

இன்னொரு விசேஷமும் உண்டு. இந்த முறை  இளங்கோவன் ராஜமுத்து என்கிற 63 வயதான மலையேறியும் கலந்து கொள்கின்றார். இந்தக் குழுவில் இவரே அதிக வயதான மனிதர். அப்படி இவர் சிகரத்தை ஏறி வெற்றி பெற்றால் மலேசியாவின் மிக அதிக வயதான மனிதர் என்கிற சாதனைக்குரிய மனிதராகத் திகழ்வார்! அவர் அந்த சாதனையைப் புரிய வேண்டும் என நாம் வாழ்த்துவோம்!

எவரஸ்ட் ரவியும்  இளங்கோவனும்  வருகின்ற காலங்களில்  நல்ல நோக்கங்களைக்  கொண்டுள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலையேறுதலில் ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க பல திட்டங்களை வைத்துள்ளனர். வருங்காலங்களில் நமது சந்ததியினர் தொடர்ந்து சாதனைகள் புரிய வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அதே ஆசைகள் உண்டு.

இளைய தலைமுறையினர் மலையேறுதலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா!  வாருங்கள் இளைஞர்களே! நாமும் மலையேறுவோம்!

No comments:

Post a Comment