Wednesday 30 March 2022

அற்பனுக்கு வாழ்வு வந்தால்....!

 
                                        UITM Lecturer hates to lecture B40 students!
UITM விரிவுரையாளர், ரோஷானா தாகிம், ஒரு மாணவனைப் பற்றிப்  பேசிய ஒரு சொல் அவருக்கே ஆபத்தாக முடிந்தது! 

அவர் நல்லதைச் சொல்ல முயன்றிருந்தாலும் அது கெடுதலான வார்த்தையாகவே பொது மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது!  என்ன செய்வது? நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள்! உடம்பில் கொழுப்பு ஏறிவிட்டால் குறைப்பது கஷ்டம் தான்!

மாணவன் ஒருவனிடம் கணினி இல்லை. தந்தைக்கு வேலை இல்லை. தாயார்  இல்லை. அவன் என்ன செய்வான்?  அந்த மாணவன் கணினிக்குப் பதிலாக தனது ஸ்மார்ட் ஃபோனை பயன் படுத்தியிருக்கிறான். அதில் வந்தது தான் இந்தப் பிரச்சனை!

அந்த விரிவுரையாளர் நல்லபடியாகவே அந்த மாணவனிடம் அறிவுரைகளைக் கொட்டித் தீர்த்திருக்கலாம்!  அறிவுரை இலவசம்! கேட்டால் என்ன! கேட்காவிட்டால் என்ன!  ஆனால் அவருக்கு  நாக்கில் சனி வந்து இறங்கிவிட்டது! அதனால் தான் தன்னை மறந்து போனார்!

அவர் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் கடுமையானது. அதனால் தான் அனைவரும் பொங்கி எழுகின்றனர்.

"அதனால் தான் B40 யைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு நான் படித்துக் கொடுக்க விரும்புவதில்லை!"

அப்படியென்றால் பணக்காரர்கள் படிக்கும்  பள்ளிகளை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தத் தகுதி அவருக்கு இல்லை என்பது அவருக்கே தெரியும். அங்கே அவரை வரவேற்க யாரும் தயாராக இல்லை. அதனால் தான் அவர் இங்கே விரிவுரையாளராக இருந்து கொண்டு இருக்கிறார்!

ஆனால் அதைவிட முக்கியமான ஒன்றை அவர் மறந்துவிட்டார் என்பது தான் பலருக்கு அவர்மீது கோபம். B40 மக்கள் யார்? இன்று ஆசிரியர்களில் பலர் B40 மக்களிடையே இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் T20 மக்களிலிருந்து  வர வாய்ப்பில்லை. T20 தரப்பினருக்கு  உள்நாட்டுக் கல்வியே தேவையில்லை!

குறிப்பிட்ட இந்த விரிவுரையாளரான ரோஷானா அவர்கள் நிச்சயமாக B40 மக்களிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். அவர் மட்டும் அல்ல. அங்கு விரிவுரையாளர்களாக இருக்கும் அனைவருமே B40  பின்னணியிலிருந்து  வந்தவர்கள் தான்.

இங்கு நாம் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். B40 ஏழ்மை நிலைமையிலிருந்து வருபவர்களில் பலருக்குக் கை கொடுப்பது  ஆசிரியர் தொழில் தான். அதன் பின்னர் மருத்துவ தாதியர் தொழில். இதையெல்லாம் கடந்து தான் வேறு துறைகளுக்கு மாற வேண்டும்.

B40 மக்களைக் கேவலமாகப் பேசும் ஒரு விரிவுரையாளருக்கு என்ன கிடைக்க வேண்டுமா அது நிச்சயம் கிடைக்கும்.  ஏழ்மை நிலையில் இருப்பவர்களைக் கைதூக்கி விட வேண்டுமே தவிர அவர்களை மட்டம் தட்டி அவர்களை இயங்க விடாமல் செய்வது மிகவும் கொடுமை.


No comments:

Post a Comment