Friday 4 March 2022

இது தான் மனிதம் என்பது!

 


இப்போது தீவிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ரஷிய- யுக்ரேனியன் போர் எண்ணற்ற உயிர்களைக் காவு  வாங்கிக் கொண்டிருக்கிறது  என்பது புதிய செய்தி அல்ல.  இந்த சண்டையில்  யுக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே அதிக உயிருடற் சேதம் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் செய்திகள் மூலம் அறிகிறோம்.

ரஷியாவின் தாக்குதல் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.. மிகவும் சக்தி வாய்ந்த ஒரு போர். அதனை எதிர்க்கும் சக்தி  யுக்ரேனுக்கு உண்டா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு ஏதோ ஒரு நகரை ரஷியா பிடித்துவிடுகிறது. 

ரஷியாவைப் பொறுத்தவரை.  ஆட்டம் ஆரம்பித்துவிட்டது! அதனை நிறுத்த வேண்டுமானால் யுக்ரேனை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது ஒழித்துக்கட்ட வேண்டும்.  யுக்ரேனின் அணு உலையைக் கைப்பற்றியாயிற்று.  இராணுவ முகாம்கள் தகர்த்தெறியப்படுகின்றன. மக்கள் குடியிருப்புப் பகுதிகளும் அழிக்கப்படுகின்றன.  பெரும்பாலான மக்கள்  பக்கத்திலுள்ள அண்டை  நாடுகளுக்கு  அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இடையிடையே ரஷ்ய வீரர்கள் சிலர் யுக்ரேனில் சரண் அடைபவர்களும் உண்டு.  காரணங்கள் பல,  அதில் தாங்க முடியாது குளிரும் ஒன்று.

அப்படிப்பட்ட  ஒரு நிலையில் ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் யுக்ரேனில் சரணடைந்தார். அவரைச் சுற்றி இருந்த மக்கள் கூட்டம் அவரை எதிரியாகப் பார்க்கவில்லை! என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் ரஷ்யர்களோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள் தானே! உடனே அந்த வீரருக்கு தேநீரும், ரொட்டித்துண்டும் கொடுத்து உபசரித்து அவரை வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்தனர். அதோடு அவரை அவர்கள் விட்டுவிடவில்லை. அதற்கு மேலும் ரஷ்யாவில் உள்ள அவரது தாயாருடன் பேச   தொலைப்பேசி இணைப்பையும் செய்து கொடுத்தனர்!

இவர்கள் எல்லாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் அவர்களிடம் மனிதாபிமானம் உண்டு. மனிதாபமானத்தைச் சொல்லிக் கொடுக்காத எந்த மதமும் தேவையில்லை.

போர் நடக்கும் இடத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரண விஷயம் அல்ல. பண்பாடு உள்ள மக்களால்  தான் இதனைச் செய்ய முடியும். போர் செய்தாலும், மக்கள் பலர் மடிந்தாலும், வீட்டிலுள்ள ஆண்கள்  பலர் போருக்குப் போயிருந்தாலும்  - எதிரிக்கு துன்பம் விளவிக்கக் கூடாது என்று நினைக்கும் மக்கள் வெறும் மனிதர்களல்ல! மகான்கள்! போர்க்களத்தில் இப்படியெல்லாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது உண்மை!

அடிப்படையில் மனிதனுக்கு மனிதம் இருக்கிறது! அதனை யாராலும் அவனிடமிருந்து பிரித்துவிட முடியாது என்று இந்த நிகழ்வு நமக்குக் கூறுகிறது!

ரஷ்யா தன் தாகுதல்களை நிறுத்த வேண்டும் என்பதே  நமது பிரார்த்தனை.

No comments:

Post a Comment