Saturday 5 March 2022

படிப்பதற்கு மட்டுமா பிச்சை?


 "உன்னை நான் பிச்சை எடுத்தாவது படிக்க வைக்கிறேன்!" என்கிற வசனத்தை  நமது தமிழ்ப் படங்களில் பல முறை நாம் பார்த்திருக்கிறோம்!  அப்படி யாராவது பிச்சை எடுத்து படிக்க வைத்திருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.

அது கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே அந்த வசனம் நமது படங்களில் வருவதாக நான் நினைக்கிறேன்.

சென்ற ஆண்டு வாக்கில் நான் படித்த செய்தி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தாய் பிச்சை எடுப்பவர். தெய்வம் தந்த வீடு 'வீதி' தான் அவரது குடியிருப்பு.  அவருக்கு ஒரு மகன். அவர்களுக்கு அருகில் ஒரு தொண்டூழிய அமைப்பு அந்தப் பையனுக்குக் கல்வியைக் கொடுக்கிறது. பின்னர் அவன் பட்டதாரியாகி விமான ஓட்டுநராக  மாறிவிட்டான்! அவன் படித்ததெல்லாம் அந்த  தெய்வம் தந்த  வீதியில் தான். இப்போது அவன் தாயாரோடு வீடு மாறிவிட்டான். இது கற்பனயல்ல, உண்மைச் சம்பவம்! சென்னையில் நடந்தது.

ஆனால் இந்தியா, மேற்கு வங்காளத்தில்   பிச்சைக்காரப்  பெண்மணி ஒருவர்  தனது குடும்பத்திற்காக ஒரு புதையலையே விட்டுச் சென்றிருக்கிறார்! தான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை தனது குடும்பமாவது நல்ல வளத்தோடு வாழட்டுமே என்கிற பரந்த மனப்பான்மையோடு செய்திருக்கிறார்.

அந்தப் பெண்மணி தான் இறக்கும் தருவாயில் தனது உறவுகளிடம் தனது வீட்டில் வைத்திருக்கும் சில்லறை காசு பெட்டிகள், பைகள் இவைகளில் பணம் இருப்பதாகக் கூறி அவற்றை எடுத்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். அவர் இறந்த பிறகு அவ்ருடைய பெட்டிகளை ஆராய்ந்ததில் பணம் ஒர் இலட்சத்திற்கு மேலாக இருந்தாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அவைகள் சில்லறைகளாக இருந்தன.

ஒரு விஷயம் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.  வேலை செய்து சம்பாதிப்பவர்களிடம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை சேமிப்புக்காக ஒதுக்குங்கள்  என்றால் யாரும் சட்டை செய்வதில்லை. கஷ்டமான நேரத்தில் யாரிடம் போவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்கள். உங்கள் பணம் தான் உங்கள் கஷ்ட காலத்தில்  உங்களுக்கு உதவும். மற்றவர்களின் பணம் உங்களுக்கு உதவாது என்பது உங்களுக்கே தெரியும்.

ஆனால் இந்தப் பிச்சைக்கார பெண்மணி தனது கஷ்ட காலத்திற்காக சேமித்து வைத்தப் பணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல்! அவர் பிச்சை எடுக்கும் போது அதனை அவர் கஷ்ட காலமாக நினைக்கவில்லை! அதனை ஒரு வேலையாகவே  நினைத்துச் செய்திருக்கிறார்!  அவர் சேமித்து வைத்த பணம் தனது குடும்ப நலனுக்காக சேர்த்து வைத்திருக்கிறார். எப்படியோ அந்தப் பணத்தை அவர் வீணடிக்கவில்லை! தனது குடும்பம் பயன் பெறட்டுமே என்கிற நல்ல நோக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.

இப்படியும் மனிதர்கள்  இருக்கிறார்கள்! பாராட்டுவோம்!

No comments:

Post a Comment