Wednesday 23 March 2022

ரம்லான் மாதம் வரை பொறுத்திருங்கள்!

 

இப்போதைய நாடாளுமன்றத் தொடரில் கட்சித்தாவலைத் தடுக்கும் சட்ட மசோதா  நிறைவேற்றப்படவில்லை! அதற்கான காரணங்களையும் பிரதமர் கூறிவிட்டார்!.

ஆனாலும் எதிர்க்கட்சியினர் விட்டபாடில்லை. அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மீறப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க  மாட்டோம்  என்று போர்க்கொடி தூக்கிவிட்டனர்!

இப்போது ரம்லான் மாதத்தில் நடக்கப்போகும் சிறப்பு  நாடாளுமன்ற கூட்டத்தில் கட்சித்தாவலை தடுக்கும் சட்டம் விவாதிக்கப்படும் என்பதாக  பிரதமர் கூறியிருப்பதாக அறிவிப்பு வெளியாகிருக்கிறது.   சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த மசோதா பற்றியான விவாதம் ஒரு நாளில் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அடுத்த நாளும் விவாதம் தொடரும் என்பதாகவும்  கூறப்படுகிறது.

ஒன்று புரிகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் கொஞ்சம் கூர்மையாகவே வருவார்கள் என்று தோன்ற இடமிருக்கிறது! அதனால் தான் முன்கூட்டியே  'விவாதம் தொடரலாம்' என்று சொல்லிவைக்கிறார்கள்!

அப்படி ஒன்றும் ஓரே குரலில் இந்த மசோதாவை அனைவரும் ஆதரிப்பார்கள் என்று சொல்ல இடமில்லை. பணத்தைக் கொடுத்து யாரையும் வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக இந்த மசோதாவை ஆதரிக்கப்போவதில்லை! பல உள்குத்து வேலைகளும் நடக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்!

காலங்காலமாக அரசியலைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் அவ்வளவு எளிதில் இந்த மசோதாவை ஆதரிக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. நல்லதை, நாட்டுமக்களுக்கு நல்லதை செய்யும் எதனையும் அவர்கள் ஆதரிக்கப் போவதில்லை.

கட்சிதாவல் தடுக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் அமோகமாக வெற்றி பெற வேண்டும் என்பது மக்களின் கனவு. அந்த மசோதா விவாதிக்கப்படும் போது  எத்தனை பேர் கட்சி மாறுவார்களோ  அதனையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

ரம்லான் மாதம் புனித மாதம். நல்லது நடக்க பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment