Saturday 19 March 2022

இளையோர்களே! கொஞ்சம் உதவுங்கள்!

 

            35 விழுக்காட்டினர் பூஸ்டர் ஊசி இன்னும் செலுத்தவில்லை!

இதுவரை தடுப்பூசி போட்ட பெரியவர்களில் - 60 வயதுக்கு மேற்பட்டோர்களில் - சுமார் 65 விழுக்காட்டினரே தடுப்பூசி போட்டிருக்கின்றனர்  என்கிற செய்தி வரவேற்கத்தக்க செய்தி அல்ல!

பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது என்கிற நோக்கம் எதுவும் இல்லை. ஆனால் இவர்களில் பலர் தாங்களாகவே போய் இதனைச் செய்ய இயலாதவர்களாக இருக்கின்றனர் என்பது தான் உண்மை.

ஆக, அவர்களுக்குத் தேவையெல்லாம் சிறியவர்களின் உதவி. குறிப்பாக அவர்களின் பிள்ளைகளின் உதவி அல்லது நண்பர்களின் உதவி. ஊசி போடுமுன் இருக்கின்ற நடைமுறைகளை அவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நடமுறைகளைக் கடந்த பின்னர் தான் ஊசி போட வேண்டிவரும். அதற்கு அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இவைகளையும் பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு செய்தியையும், குறிப்பாக பிள்ளைகள், புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாத வயதானோர்களின் மரண எண்ணிக்கையே கூடுதலாக இருப்பதாக சுகாதார அமைச்சுக் கூறுகிறது. அதனால் அவர்கள் அவசியம் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டே ஆக வேண்டும். மற்றும் ஒரு பிரச்சனையும் உண்டு. தடுப்பூசி போடாத பெரியவர்களின் மூலம் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கோரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம்! அதற்கான சாத்தியங்கள் உண்டு.

இன்னும் இவர்கள் வெளியே சுற்றுபவர்களாக இருந்தால்  இவர்கள் மூலம் தொற்று பரவுவதற்கான சாத்தியங்கள் உண்டு.  கோரோனா வென்பது  ஒருவரோடு முடிந்து போகிற விஷயம் அல்ல. இது பரவக்கூடிய தன்மை உடையது என்பது நமக்குத் தெரிந்த விஷயம். ஒருவரோடு போகிற விஷயம் என்றால் நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையுடையது கோரோனா.

அதனால் நாம் சொல்ல வருவதெல்லாம், இளைய  தலைமுறையினரே,  உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கொஞ்சம் தயை செய்யுங்கள். அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் கொஞ்சம் அக்கறைக் காட்டுங்கள். 

பெரியவர்களுக்குப் பூஸ்டர் ஊசி  போடுவதன்  மூலம்  அதன் பலன் அவர்களுக்கு மட்டுமல்ல,  நமக்குத் தொடர்பே இல்லாத மனிதர்களும் பயன் அடைகின்றனர். தொடர்பு உள்ளவர்களும் பயன் அடைகின்றனர். பொது நலனும் இங்கே உள்ளது.

இப்போது நாம் கொரோனா நோயினால் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முடிந்தவரையில் நாம் நமது கடமைகளைச் சரியான முறையில் செய்வோம். மற்றவர்களுக்குத் தொற்று பரவாமலிருக்க நாம் நமது கடமைகளைச் சரியாகக் கடைப்பிடிப்போம்.

பெரியவர்களைக் கவனியுங்கள். அவர்களைப் பூஸ்டர் ஊசி போட வையுங்கள். வருங்காலம்  நன்றாகவே அமையட்டும்!

No comments:

Post a Comment