Monday 28 March 2022

புதிய கூட்டணி உருவாகுமா?

 

                                    Gerakan Pejuang Nasional (GPN) - the next Ruling Party?

நாட்டில் பெரிய அரசியல் மாற்றங்கள் வருமா என்று மலேசியர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிதாக மாபெரும் கட்சியாக மாறக் கூடிய வாய்ப்புகள்  டாக்டர் மகாதிரால் ஆரம்பிக்கப்பட்ட பெஜுவாங் கட்சிக்கு  உண்டா என்று கொஞ்சம்  ஆராய்ந்து பார்ப்போம்!

சமீபத்தில் நடைபெற்ற ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பெஜுவாங் வேட்பாளர்கள் அனைவரும் சரியான அடிவாங்கியிருக்கிறார்கள் என்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல!

அவர்கள் வெகு வரைவில் எதிர்பார்க்கப்படும் 15-வது பொதுத்  தேர்தலில் போட்டியிட்டால் நிலைமை என்னவாகும்? பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை! அதே அடி தான்! டெபாசிட்  பறி போகும் நிலை தான் அதிகம்!

மலேசிய அரசியலில் டாக்டர் மகாதீரின் சகாப்தம் முடிந்து போன கதை. மேலும் அவருடைய வயதுக்கு அவரிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்கவும்  முடியாது.

இப்போது அவர் ஓர் அகண்ட கூட்டணியை அமைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். அந்த கூட்டணியில் பெஜுவாங், பெர்சத்து, பியாகம் ராக்யாட்,  பாஸ், கெரக்கான், வாரிசான்  போன்ற கட்சிகளை இணைத்துக் கொண்டு "கெராக்கான் பெஜுவாங் நேஷனல்" என்னும் பெயரில் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த கட்சிகள் எல்லாமே ஏதோ வயதானவர்களைக் கொண்ட ஒரு கட்சியாகத்தான் நமக்குத் தெரிகின்றன.  டாக்டர் மகாதிர் ஓடி ஆடி கட்சிக்காக வேலை செய்யும் நிலையில் இல்லை! மற்றத் தலைவர்களும் ஏறக்குறைய அவருடைய நிலைமையில் தான் இருக்கின்றனர். இளம் இரத்தம் என்பது குறைவு.  எவ்வளவு தான் பெரும் ஆளுமைகளைக் கொண்டிருந்தாலும் அடிமட்ட வேலைகளைச் செய்ய தொண்டர்கள் வேண்டும். இந்தப் புதிய கட்சியால் அத்தகைய அடிமட்டத்  தொண்டர்களை ஈர்க்க முடியுமா என்பதும் ஒரு கேள்வி.

மக்களிடையே உள்ளே இன்னொரு கேள்வி. இரண்டாவது முறையாக  நாட்டின் பிரதமராக வந்த டாக்டர் மகாதீர் திடீரென அரசாங்கம்  கவிழ்ந்து போகும் அளவுக்கு ஏன் காரணமாக அமைந்தார்? அப்போது ஏற்பட்ட அந்த அமளி இன்னும் ஓயவில்லையே!  இத்தனைக்கும் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட  ஓர் அரசாஙத்தை அவர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவர அவரே காரணமானாரே! 

வயது மூப்பின் காரணத்தால் அவர் இப்படி எல்லாம் தடம் புரண்டு போனார் என்று சொல்வதற்கில்லை. அவர் திட்டம் போட்டே செயலாற்றினார் என்பது தான் உண்மை!

டாக்டர் மகாதிர் உண்மையில் ஒரு நம்பகமான மனிதர் அல்ல. அவரால் ஆரம்பிக்கப்படும் கட்சியும் நம்பக்கூடியதாக இல்லை! அவருடன் கூட்டுச் சேர்பவர்களும் அவரைப் போன்றே  ஒத்தக்கருத்து உடையவர்கள்! அவர்கள் மேல்மட்டு மக்களின் பிரதிநிதிகள்!  கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் உயர்வுக்குப் பாடுபடும் அளவுக்கு அவர்கள் கீழே இறங்கி  வரமாட்டார்கள்!

புதிய கூட்டணி உருவாகாது! வெறும் செய்தியாகவே போய்விடும்!

No comments:

Post a Comment