Sunday 27 March 2022

இனத் துரோகிகள்!

   

ஏற்கனவே அமுக்கப்பட்ட ஒரு பிரச்சனை இப்போது வெளி வந்திருக்கிறது.  மற்றபடி புதிது ஒன்றுமில்லை. நம் இனத்தில் துரோகிகளுக்குத் தான் பஞ்சமில்லையே! நம்மவனை வைத்தே நம்மை அமுக்குவது ஒன்றும் நமக்கும் புதிதல்லவே! அதற்கென்று தானே ம.இ.கா என்று ஒன்றை நாம்  வைத்திருக்கிறோம்!

இது "வணக்கம் மலேசியா" இணைய இதழில் வந்த செய்தி. படிக்க மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் நமது இனத்துக்கு துரோகம் செய்ய, நமது மொழிக்குத் துரோகம் செய்ய எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதிலும் இவர்கள் படித்தவர்கள் என்கிற பெருமை வேறு!  ஓர் இனத்துக்கோ, மொழிக்கோ துரோகம் செய்வதற்கு என்ன படிப்பு  வேண்டிக்கிடக்கு?  அதற்கு ஒரு முட்டாள், ஒரு மடையன் போதுமே!

நடந்தது இது தான். கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கு இஸ்லாமிய பாடம் போதிக்க ஒரு இஸ்லாமிய ஆசிரியர் வந்து சேர்ந்தார். அந்த நேரத்தில் கலைக்கல்வி பாடம் போதிக்க ஆசிரியர் இல்லை. ஆசிரியர் மாற்றப்பட்டார். அப்போது தலைமை ஆசிரியர் இஸ்லாமிய பாடம் போதிக்க வந்த ஆசிரியரைக் கலைக்கல்வி பாடம் போதிக்க பயன்படுத்திக் கொண்டார். அவர் தமிழ் மொழியில் பாடத்தை நடத்தியிருந்தால் எந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. அவர் பாடத்தை  நடத்தியதோ மலாய் மொழியில்! பரிட்சை என்று வரும்போது மாணவர்கள் நிலையை அந்த தலைமையாசிரியர் கவனத்தில் கொள்ள முடியாத அளவிற்கு அவருக்கு வேலை பளு!

இங்கே ஒன்றை நாம் நினைவுறுத்துகிறோம். தங்களுடைய தவறுகளை மறைக்க தலைமையாசிரியர்கள் இன்னொரு தவறைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஒரு ஆசிரியர் மாற்றப்பட்டால்  இன்னொரு ஆசிரியர் மாற்றலாகி வருவார். அது தான் நடைமுறை. இவர்கள் எதற்குமே முயற்சிகள் செய்யாமல் அக்கறையற்று இருக்கின்றனர். இவர்கள் குடும்பப் பிரச்சனைகளுக்காக எதுபற்றியும் கவலை கொள்வதில்லை.  அப்புறம் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிருபிக்க என்னன்னவோ தில்லுமுல்லுகளைச் செய்ய வேண்டியுள்ளது!

தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பொதுவாகவே மாணவர் நலனில் அக்கறை உள்ளவர்கள் . அதனால் தான் நமது பள்ளிகள் பல விஷயங்களில் சிறந்து விளங்குகின்றன.  இடை இடையே சில செருகல்களும் உள்ளன. என்ன செய்வது? "வாயைத் திறந்தால் மாற்றிவிடுவார்கள்! மேலே உள்ளவர்கள் சொல்வதைக் கேட்டால் பதவி உயர்வு கிடைக்கும்!"  என்று திட்டம் போட்டு நம்மைக் காட்டிக் கொடுக்கின்றனர். அதனால் தான் சீனப்பள்ளிகளில் காணப்படும் ஒற்றுமை நமது பள்ளிகளில் சிதைந்து விடுகிறது!

ஆனால் ஒன்று. தப்புச் செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும்!
                           

No comments:

Post a Comment