Tuesday 22 March 2022

நாடாளுமன்றம் நிராகரித்தது!

 

                                                         No bail under SOSMA!
விசாரணையின்றி  ஒருவரை 28 நாள்கள் தடுத்து வைக்கும் "சோஸ்மா" சட்டத்தை, இன்னும் ஐந்து ஆண்டுகள்  நீடிக்க வைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை,  இன்று கூடிய மக்களவை நிராகரித்தது.

சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை  யாரும் சென்று காண முடியாத  அளவுக்கு மிகவும் கடுமையான சட்டம் என்பதை மலேசியர்கள் அறிவர். அவர்கள் வழுக்குரைஞராக இருக்கலாம் அல்லது அவர்களது உறவுகளாக இருக்கலாம். ஊகும்! மன்னிக்கவும்! முடியவே முடியாது! என்பது சட்டம்.

இது போன்ற சட்டங்கள் நமது நாட்டுக்குத் தேவையில்லை என்பது தான் அந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லுகின்ற காரணம். தீவீரவாதிகள் என்பவர்கள் எல்லா நாடுகளில் உள்ளனர். நமது நாட்டிலும் அவர்கள் உள்ளனர். 

தீவிரவாதிகளைக் கைது செய்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இன்று உலகளவில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கையில் குண்டுகளோடு பல்வேறு ஆயுதங்களோடு தான் தங்களது இலக்கை நோக்கி சுற்றி வருகின்றனர். அவர்களைக் கூட கைது செய்யக்கூடாது. காரணம்  அவர்களை நேரடியாகவே  விசாரணை செய்து அவர்களுக்கான தண்டனையைக் கொடுக்கலாம். அது தவறு என்று யாரும் சொல்லப்போவதில்லை. தவறு செய்தால் அதற்கான தண்டனையை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

ஆனால் ஒருவரை வெறுமனே தீவிரவாதி என்று சொல்லி எந்த ஒரு காரணமுமின்றி கைது செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது. சமீபகாலத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லி பலரைக் கைது செய்தனர். மிகவும் கோமாளிததனமான ஒரு குற்றச்சாட்டு! ஆனால் என்ன செய்வது? "நாங்கள் நினைத்தால் எதனையும் செய்வோம்!" என்கிற ஆணவம் தான் மிஞ்சி நின்றது. வெறும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து  அவர்கள் தீவிரவாதிகள் என்பதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டனர்! கேலிகூத்தே தவிர வேறு என்ன?

பொதுவாகவே இந்த சோஸ்மா சட்டத்தினால் யாருக்கு என்ன பயன்? காவல்துறை எந்த விசாரணையுமின்றி ஒருவரை சிறையில் போடலாம். அரசியல் பழிவாங்கள் கூட நடக்கத்தான் செய்கிறது! யாரும் கேள்வி கேட்க முடியாது. காவல்துறை எந்த சிரத்தையும் எடுத்து வேலைசெய்ய வேண்டிய அவசியமில்லை. சோஸ்மா என்றால் காவல்துறைக்கு வேலை இல்லை!

இப்படி ஒரு சட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடிக்க முடியாதபடி நாடாளுமன்றம் நிராகரித்ததற்காக மிக்க நன்றி!

No comments:

Post a Comment