Sunday 13 March 2022

மாபெரும் வெற்றி!

 

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரு முடிவுக்கு வந்தது!

ஒரு இக்கட்டான சூழலில் நடந்த இந்தத் தேர்தல் ஆளும் பாரிசான் கட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தேர்தலாக அமைந்துவிட்டது.  பாரிசான் கட்சியினரே எதிர்பாராத ஒரு வெற்றி என்று சொல்லலாம்.

பொதுவாகவே கொவிட்-19 தொற்று பாரிசான் கட்சியினருக்கு  மிக நல்ல சகுனத்தைக் கொண்டு வந்திருக்கிறது  என்று தாராளமாகச் சொல்லலாம். மலாக்கா மாநிலத்தில் கிடைத்த வெற்றியையும் இதனோடு சேர்த்துக் கொள்ளவும் செய்யலாம்.

வாக்குப் பதிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. தொற்று நோயின் காரணமாக பலர் வீட்டைவிட்டு வெளியாகவில்லை. இது எதிர்பார்த்தது தான்!  புதிய வாக்காளர்களான 18-வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அவ்வளவாக வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை! இன்னும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை!

இது போன்ற காரணங்கள் எல்லாம் பாரிசான் கட்சிக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இந்த வெற்றியின் காரணத்தினால் இன்னும் ஓரிரு  மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வரக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.  அல்லது நாடாளுமன்ற தேர்தல் கூட வரலாம்.

இந்த சமீபகால வெற்றிகள் பாரிசான் கட்சிக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.  அது மட்டும் அல்லாமல் ஒரு புதிய உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஆமாம் அவர்கள் எதிர்பார்ப்பது அதே மலாக்கா பாணி, அதே ஜொகூர் பாணி அவர்களுக்கு வெற்றியைக் கொண்டு வரும் என நினைக்கிறார்கள். அதே பாணி அவர்களுக்கு வெற்றியை வாரிக் கொடுக்கும் என்றால் ஏன் வேறு மாநிலங்களுக்கும் அதே பாணியை விரிவுபடுத்தக் கூடாது? இது அரசியல்! நேர்மை, நியாயம் பற்றிப் பேசினால் இருக்க வேண்டிய இடம் வேறு!

எப்படியோ பாரிசான் கட்சியின் வெற்றிக்கு நாம் எதிரியல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது நடக்க வேண்டும். அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். விலைவாசிகளைக் கட்டுப்படுத்தாமல்  மக்களைத் துன்பத்துக்கு உள்ளாக்கக் கூடாது. விலைவாசி மட்டும் அல்ல, வேலை வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும், உயர்கல்வியில் சம வாய்ப்புக்களை வழங்க வேண்டும், அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும், இலஞ்ச ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் -  இது போன்ற விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நாம் ஏன் அரசாங்கத்தை எதிர்க்கிறோம்?

இந்த மாபெரும் வெற்றி மக்கள் பாரிசானுக்குக் கொடுத்த மாபெரும் அங்கீகாரம். அதை நன்மையாக்குவதும் தீமையாக்குவதும் பாரிசான்  கையினிலே!

No comments:

Post a Comment