Friday 4 March 2022

பெயரைக் கெடுக்கும் பிள்ளைகள்!

 

                                            பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ்

பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ்ஸைப் பற்றி  இன்றைய தலைமுறையினர் அறியவில்லை என்றால் தவறில்லை. அவரை அறிந்து கொள்ள - கொண்டு சேர்க்க - கல்வித்துறை  - தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை என்று தான் பொருள்.

ஆனால் இவரது ஒரே மகளின் பெயரைச் சொன்னால் இவர் யார் என்று புரிந்து கொள்ளலாம். பேங் நெகாரா வின் முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ். இவரது தந்தை தான் பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ்.

அதையும் விட இப்போது நடந்து கொண்டிருக்கும் 1MDB வழக்கில் இவரது பெயர் மலேசியர் ஒவ்வொருவர் காதிலும் டமாரம் அடித்துக் கொண்டிருக்கிறது!  அவரது  தந்தையார் பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியாராக இருந்தவர். விரிவுரையாளர், பொருளாதார நிபுணர்.

தந்தையார் எட்ட முடியாத அளவுக்கு நாட்டின் பெரியதொரு பதவியைப் பெற்றவர் ஸெட்டி.  அந்தப் பதவியை அவர் அடைந்தார் என்றால்  அவர் உங்கு அஸிஸீன் மகள் என்பதும் ஒரு காரணம்.

உங்கு அஸீஸ் நீதி, நேர்மையான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவரைப் பற்றி யாரும் குறை சொன்னதாகவோ, கொள்ளை அடித்தாகவோ அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை! கடைசிவரை அவர் நேர்மையான மனிதராகவே வாழ்ந்துவிட்டுப் போனார். மலாய்க்காரர் முன்னேற்றத்திற்காக கடைசிவரையில் பாடுபட்டவர். ஆனால் கடைசி காலத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட வழக்குகள், வக்கிரங்கள்  அவரை நிச்சயம் பாதித்திருக்கும். அரசியல்வாதிகளுடன் அவருடைய நெருக்கும் பெரிய அளவில் இல்லை!  அதனால் அவர் பாதுகாப்பாக இருந்தார்.

அவருடைய மகளும் தந்தையாரின் குணத்தைக் கொண்டவர் தான். ஆனால்  ஆதிக்கவாதிகள் அவரைத் தவறான வழியில் தடம் புரள வைத்து விட்டனர்!  அவருடைய கணவரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தது ஒரு சோகம்!  இன்னும் எந்த அளவுக்கு பேராசிரியரின் பெயரைக் கெடுப்பார்களோ தெரியவில்லை!

இதே போல முன்னாள் பிரதமர் நஜிப்பின் நிலையும் அதே நிலை தான். அவரது தந்தை முழு நேர அரசியல்வாதியாக இருந்தாலும் மகன் நஜிப் செய்த தில்லுமுல்லுகளைப் போல அவர் செய்ததில்லை! அந்த அளவுக்கு அவர் கை நீண்டதில்லை!

ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நஜிப் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாம் அவர் மனைவி செய்த கைங்கரியம் என்கிறார்கள். மக்கள்,  நஜிப்பைத் தானே பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் மனைவியை அல்லவே! அதனால் அப்போதைய பிரதமர் என்கிற முறையில் அவர் தானே பதில் சொல்ல வேண்டும். அவர் தானே பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும்! அது தான் நடந்தது. அவர் குற்றவாளி என்று தீர்ப்பும் வந்துவிட்டது. பெண்டாட்டியை நம்பி தந்தையின் பெயரைக் கெடுத்த மகன்!

இது போல அப்பனின் பெயரைக் கெடுத்த மகன்கள் மன்னிக்க முடியாதவர்கள்! என்ன செய்வது? இது தான் உலகம் என்று நாமும் வேடிக்கைப் பார்க்க வேண்டியது தான்!


No comments:

Post a Comment