Wednesday 9 March 2022

இவர்களை விசாரிக்க ஏன் தாமதம்?

 


வழக்கம் போல ஒரு சில விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை!

யாரையோ காப்பாற்றுவதற்குத் தாமதம் செய்யப்படுகிறதோ என்று நமக்குத் தோன்றுகிறது.

தனித்து வாழும் தாய் லோ, அவரது மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.  பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்தக் குழந்தைகளை மதமாற்றம் செய்தவர்கள்  சட்டம்  அறியாதவர்கள் என்று சொல்லவிட  முடியாது. சட்டம் அறியாதவர்கள் என்றால் அவர்களுக்கு மதமாற்றம் செய்ய உரிமை இல்லை!

சட்டம் அறியாதவர்களால் எந்தப் பிரச்சனையும் எழுவதில்லை. சட்டத்தை அறிந்தவர்களே பிரச்சனையை ஏற்படுத்தி, குழப்பங்களை ஏற்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்!

சட்டம் அறிந்தவர்கள் தான் இப்போது அந்தத் தாய்க்கு  நிம்மதி இல்லாமல் செய்கின்றனர். 

கஞ்சா அடிக்கும் கணவனுக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு  தனித்து வாழும் தாய்க்கு அவர்கள் கொடுக்க மறுக்கிறார்களே  என்னும் போது இவர்களுக்கு ஒரு தாய் அனுபவிக்கும் துயரம் என்ன என்பது ஏன்  தெரியவில்லை என்பது  தான் நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!

சமயம் என்று பேசும் போதே ஒரு தாயின் முக்கியத்துவம் என்ன என்பதைப் புரிந்திருக்க வேண்டும். சமயப் போதகர்கள் தாயைப்பற்றி அறியாதவர்களா?  "தாயின் காலடியில் சொர்க்கம்" என்பதை  அறியாதவர்களா நாம்? நாமே அறிந்திருக்கும் போது  சமய அறிஞர்கள் அறியாதவர்களாகவா  இருக்க முடியுமா?  

ஒரு தாயை இப்படியெல்லாம்  அலைக்கழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை  என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.  தாய் ஒரு மதத்தைச் சார்ந்தவர். அவருடைய அத்துணைக் குழந்தைகளும் வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் என்றால் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? தாய் எந்த தவற்றையும் செய்யவில்லை. செய்தவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்று கேட்க நமக்கும் உரிமை இருக்கிறது அல்லவா?

சமய அறிஞர்களும்  "இது சரிதானா?" என்கிற கேள்வியைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். நாளை இந்த அவலநிலை உங்களுக்கும்   ஏற்படலாம்  என்பதையும் மறந்துவிடக் கூடாது. வெளி நாடுகளில் உங்கள் பிள்ளைகள் யாரைக் கும்பிடுகிறார்களோ! இப்போது இங்கே உங்கள் அராஜகம்  அதிகமாகிக் கொண்டே போகிறது என்பது உங்களுக்கே தெரியும்! 

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!  தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி! மறுக்கப்பட நியாயமில்லை என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம்!

No comments:

Post a Comment