Thursday 31 March 2022

தொழிற்சாலை மூடப்பட்டது!

 

                                                                            PAU
நாட்டில் என்னன்னவோ கலப்படங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன!

அதைத் தடுக்க வேண்டிய அரசாங்க அதனைச் செய்வதில்லை. காரணம் கேட்டால் நமக்கே மயக்க வரும். கலப்படங்கள் செய்யும் நிறுவனங்களை நடத்துபவர்களே அரசியல்வாதிகள் தான் என்கிறார்கள்! அவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள்!  ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். ஆளுபவர்களும் அவர்களாக இருக்கிறார்கள்!

பினாங்கு மாநிலத்தில்  நாம் சாப்பிடும் உணவான "பாவ்" தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை நடத்தப்படும் விதம் நம்மை அலற வைக்கும்! அங்கு கலப்படம் இல்லையென்றாலும்  ஒரு தொழிற்சாலை எப்படி நடத்தக் கூடாதோ அப்படி நடத்தப்படுகிறது!

ஏற்கனவே இது போன்ற தொழிற்சாலைகள் பற்றி எழுதியிருக்கிறோம். மீண்டும் மீண்டும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!  உணவு தயாரிக்கும் இடத்தில் நாய்கள் சுற்றுகின்றன! பூனைகள் சுற்றுகின்றன! கரப்பான் பூச்சிகள்  உணவை ருசி பார்க்கின்றன.  கரப்பான், பல்லிகளின் கழிவுகள் கிடக்கின்றன! எலிகள் சுற்றுகின்றன! பக்கத்திலேயே கக்கூஸ்  வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன!

இதையெல்லாம் சொல்லும் போது இந்த  Pau, Dimsum fishball  போன்ற சங்கதிகளையெல்லாம் எப்படி சாப்பிடுவது என்கிற அச்சம் வரத்தான் செய்யும்!

சரி இப்படியெல்லாம் செய்கிறார்களே அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை என்ன?  இரண்டு வாரங்கள்  தொழிற்சாலையை  மூட வேண்டும்! ஒரு ஐயாயிரம் வெள்ளி அபராதம்! இந்த தண்டனை என்பதெல்லாம் அவர்களுக்குத் தங்கபஸ்பம்  சாப்பிடுவது போல! பணத்தை தூக்கி வீசிவிட்டு தங்களது அடுத்த வேலையை ஆரம்பித்துவிடுவார்கள்!

நம்மைக் கேட்டால் தண்டனை எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டலாமே! தொழிற்சாலை நடத்தும் முதலாளிகளுக்கு  பத்து ஆண்டு சிறை என்று ஒரு சட்டம் போட்டால் இப்படியெல்லாம் நடக்குமா? யாராவது செய்யத் துணிவார்களா? உணவுத் துறை என்பது மனிதர்களுடைய உடல்நலம்  சம்பந்தப்பட்டது. இப்போதே நாம் சாப்பிடும் உணவுகளில்  ரசாயனக் கலப்பு அதிகமாக இருப்பது தெரிகிறது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையே! இப்போது இவர்களும் இப்படிச் செய்தால்  யாரிடம் முறையிடுவோம்?

தொழிற்சாலை மூடப்பட்டது என்பதெல்லாம் நமக்குச் செய்தி அல்ல. பத்து ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் செயல்படுகிறார்களே அது தான் செய்தி! இத்தனை ஆண்டுகள்  அந்த உரிமம் இல்லாமல் செயல்படுகிறவர்களை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை? ஆள் பற்றாக்குறை அது தான் பதில்! நாமும் நம்புகிறோம்!

No comments:

Post a Comment