Monday 14 March 2022

இனி உங்கள் பாடு!

 

                                                 MIC President Tan Sri SA. Vigneswaran

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா. வினருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது உண்மைதான்!

இனி வருங்காலங்களில் அவர்களின் "உண்மை" தான் அவரகளுக்குக் கை கொடுக்கும் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.  இது  நாள் வரை அது மட்டும் தான் அவர்களிடம் இல்லாத ஒரு குறை! இந்த வெற்றியின் மூலம் அரசாங்கத்தோடு  ஒட்டிக் கொண்டிருந்த சில சில்லறைக்கட்சிகள் "சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும்!"  என்று  தெறித்து ஓடும்  என நம்பலாம்!

இந்த வெற்றியைப் பற்றி கருத்துரைக்கையில் ம.இ.கா. தலைவர் "இதற்கு முன் ஆதரவு வழங்குவதிலிருந்து  ஒதுங்கியிருந்த இந்திய சமூகத்தினர் இப்போது மீண்டும் ம.இ.கா.வை ஆதரித்ததோடு அவர்களது நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது" என்பதாகக் கூறியிருக்கிறார்!

இந்த ஆதரவை நீங்கள் எப்படிப்  புரிந்து கொண்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்திய சமூகத்தினர் ஏன் ஒதுங்கி இருந்தனர் என்பது  உங்களுக்குத் தெரிந்த கதை தான். அதன் விரிவான பட்டியலே உங்களிடம் உண்டு. அதனை நீங்கள்  இப்போது எடுத்துப் பார்த்தாலும் இந்திய சமூகம் ஒதுங்கி இருந்தது சரிதான்  என்று நீங்களே  ஒப்புக்கொள்வீர்கள்! 

எது எப்படியோ தேசிய முன்னணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே இந்தத் தேர்தலின் மூலம்  எதிர்பாராத அளவுக்கு நல்ல அறுவடை செய்திருக்கின்றன! வாழ்த்துகிறோம்!

ஆனால் இத்தோடு உங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். இது நாள்வரை அப்படித்தான் உங்கள் செயல்கள் அமைந்திருந்தன.  இப்போது நீங்கள் மாற வேண்டும்.

இங்கு நாம் பெரும்பாலும் ம.இ.கா. வைப்பற்றிதான் பேசுகிறோம். ஒன்றை ம.இ.கா.வினர் புரிந்துகொள்ள வேண்டும்.  சீனர்களைப்பற்றி நாம் பேச ஒன்றுமில்லை.    சீனர்களைப் பிரதிநிதித்து யார் வந்தாலும் சீனர்களை ஏமாற்ற முடியாது. அவர்களுக்குத் தூக்கவும் தெரியும் தொப்பென்று போடவும் தெரியும்! 

ஆனால் இந்தியர்களின் நிலை வேறு. காலங்காலமாக ம.இ.கா.வினரால் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம். அதனால் தான் ம.இ.கா. என்றாலே சாமிவேலுவின் பெயர் இன்றும் அடிபடுகிறது!  இப்போது அவரது பாணி அரசியல் நமக்குத் தேவை இல்லை! நம்முடைய எடுத்துக்காட்டு என்றால் அது வீ.தி.சம்பந்தன் அவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இதுநாள் வரை சாமிவேலுவின் பெயர் தான் அடிபடுகிறது!

இந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் ம.இ.கா.  விற்கு  ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வேண்டும்.  ஒரு புதிய பாதையை அமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்தியர் நலன் சார்ந்த விஷயங்களில்  விட்டுக் கொடுக்கும் போக்கு இனிமேலும் இருக்கக் கூடாது. 

ஒரு சட்டமன்ற உறுப்பினரால் பள்ளிக்கூடத்திற்கு ஒரு பாதை போட்டுக் கொடுக்க முடியவில்லை. இறந்த பின் 31-வது நாள்   சடங்குகள்செய்ய இடமில்லை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள்.  இதைக்கூட அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களுக்கு ஏன் அந்தப் பதவி என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

இனி  மேலும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை. கேள்விகள் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வேறு என்ன? பந்து உங்கள் கைகளில்! இனி உங்கள் பாடு!

No comments:

Post a Comment