Tuesday 15 March 2022

குறைந்தபட்ச சம்பளம் அமல்!

 

குறைந்தபட்ச சம்பளமான ரி.ம. 1500 வெள்ளி சிக்கிரம் அமலுக்கு வரும் என்பதாக  மனிதவள அமைச்சர்  கூறியிருப்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி தான். 

அடுத்த ஆண்டு என்று தள்ளிப்போடாமல் அல்லது ஆண்டு இறுதி என்று கூறாமல்  விரைவில்  அமலுக்கு வரும் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் என்று எடுத்துக் கொள்ளலாம்.

15-வது பொதுத்தேர்தல்  வரப்போகிறது என்கிற பேச்சு இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பே இதனை அமலுக்குக் கொண்டு வரவேண்டும். கொண்டு வந்தால் தான்  நடப்பு அரசாங்கத்திற்குக் கொஞ்சம் கூடுதல் பெயர் கிடைக்கும்! அரசியல் என்பது இப்படித்தான் இருக்கும் நாமும் அறிவோம்!

இதனை நாம் வரவேற்கும் வேளையில் இன்னொரு தரப்பு பற்றி நாம் பேசுவதில்லை. நகர்ப்புறங்களில் உள்ளவர்களைப் பற்றி பேசுவதற்கு ஒருசிலராவது கிடைத்துவிடுகிறார்கள். ஆனால் தோட்டப்புறங்களில் உள்ளவர்களைப் பற்றி பேச எப்போதுமே ஆள் கிடைப்பதில்லை. அவர்களைப்பற்றி பேச தொழிற்சங்கம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தும் போதும் இன்னொரு ஐந்து வெள்ளி, இன்னொரு பத்து வெள்ளி என்று தான் போகுமே தவிர பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.  அது ஏனோ அந்தத்  தோட்டத்துறை மட்டும் அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது! எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை!

என்ன தான் இது பற்றிப் பேசினாலும், அரசாங்கமே ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தாலும்  இந்த புதிய அறிவிப்பு மூலம் பயன் அடையப்போகிறவர்கள் யார்? தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தான் இவர்களின் நோக்கம் என்றால் தொழிற்சாலைகள் அப்பாற்பட்டு பணிபுரியும் ஊழியர்கள் நிலை என்ன? 

நாட்டில் ஏகப்பட்ட சிறு சிறு நிறுவனங்கள் இயங்குகின்றன. கடைகளில் பணிபுரிவோர் பலர் இருக்கின்றனர்.இரண்டு மூன்று பேர் வேலை செய்கின்றவர்கள், ஐந்தாறு பேர் வேலை செய்கின்ற நிறுவனங்கள் பல இயங்குகின்றன. இவர்களுடைய நிலை என்ன? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எப்படி இருப்பினும் ஏதோ ஒரு தரப்பு இந்த புதிய குறைந்தபட்ச சம்பளம் மூலம் பயன் பெறுகின்றனரே என்று ஆறுதல் அடையலாம். இப்போது உள்ள விலைவாசியேற்றம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. அது இயல்பு தான்! விலையேற்றம் என்று சொல்லுகிறோமே தவிர விலையிறக்கம் என்று எந்தக்காலத்திலும் நாம் சொல்லுவதில்லையே!

இந்தப் புதிய குறைந்தபட்ச சம்பளத்தை காலதாமதம் இல்லாமல் வெகு விரைவில் அமல்படுத்த வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். கொடுக்கிறோம் என்று உறுதி அளித்தபின்னர் ஏன் அதனை தாமத்தப்படுத்த வேண்டும்?

No comments:

Post a Comment