Thursday 24 March 2022

சாலைகளைக் கவனியுங்கள்!

 


இன்று பெரும்பாலான சாலை விபத்துகள் கைபேசிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் ஏற்படுகின்றன!

ஓர் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் வாகனங்களைப் பாயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காட்டினர் கைபேசிகளில் பேசிக்கொண்டே  வாகனங்களில் பயணிக்கின்றனர்..  "நாங்கள் எல்லாம் அதில் நிபுணர்கள்! எங்களுக்கு ஒண்ணும் ஆகாது!" என்று வீண் பெருமை பேசுகின்றனர்.

ஓர் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். விபத்து என்று வரும்போது அது உங்களை மட்டும் தான் பாதிக்கும் என்றால் யாரும் அதுபற்றிப் பேசப்போவதில்லை! நீங்கள் எக்கேடு கெட்டால் யாருக்கு என்ன நட்டம்? ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் விபத்து உங்கள் எதிரே வருபவரைப் பாதிக்கும் என்றால் எல்லாக் கேடுகளும் உங்களுக்கு வரவேண்டும் என்றுதான் அவர்கள் சபிப்பார்கள்!

நீங்கள் எப்போது பேச வேண்டும் என்பதில் ஒரு வரையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.  நீங்கள் காரை ஓட்டாமல் வேறு யாராவது ஓட்டுகிறார் என்றால்  அப்போது நீங்கள்  ஃபோனில் அரட்டை அடித்தால் கூட யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை! நீங்கள் மட்டும் தான் ஓட்டுகிறீர்கள் என்றால் கரை நிறுத்திவிட்டுத் தான் பேச வேண்டும்.

வாகனங்களைச் செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்துவது  சட்டப்படி குற்றம். இப்படி ஒரு சட்டம் இருப்பதே எல்லாருக்கும் மறந்து போய்விட்டது!

அரசாங்கத்தின் அறிவுரை, காவல்துறையினரின் அறிவுரை, பொதுமக்களின் அறிவுரை -  சொல்லவருவதெல்லாம் ஒன்றே.  தயவு செய்து நீங்கள் கார்களை ஒட்டும்போது அல்லது வேறு வாகனங்களை ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பது தான். அது ஆபத்தை விளைவிக்கும்.  மரணங்கள் சம்பவிக்கும். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

சமீப காலமாக நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பல விபத்துகள்  யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விபத்துகள்.நிறைய மரண சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதிலும்  சில மிகவும் கொடுமையான சம்பவங்கள்.

ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் விபத்து நடந்த இடத்திலேயே முடிந்து போனார்கள். மிகவும் துன்பமான ஒரு விஷயம். எப்படி இந்த விபத்து நடந்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் கைபேசிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

விபத்துகள் கூடாது என்பது தான் அனைவரின் ஆசையும். அதிலும் கைபேசிகளைப் பயன்படுத்தும் போது வருகின்ற விபத்துகள் நம்மால் மறக்க முடியாது. அது எல்லாக் காலங்களிலும் நம்மோடு ஓட்டிக் கொண்டிருக்கும். நம்மை நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.

சாலைகளைப் பயன்படுத்தும் போது  கைபேசிகள் வேண்டாம். தவிர்க்க முயற்சி செய்யுங்கள். "அது இல்லாமல் உயிர் வாழ முடியாது!" என்கிற வீர வசனம் எல்லாம் வேண்டாம்! ஆபத்துகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எந்நேரத்திலும் தாக்கலாம்.

சாலைகளில் பயணிக்கும் போது சாலைகள் தான் முக்கியம்!  கைபேசிகள் அல்ல!

No comments:

Post a Comment