Friday 11 March 2022

அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியுமா?

 

                                                 வட்டி முதலைகளின் பயமுறுத்தும் வேலை!

வட்டி முதலைகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

வட்டி முதலைகள் அல்லது ஆலோங் இது நமது நாட்டில் பயன்படுத்தும் வார்த்தை. தமிழ் நாட்டில் கந்துவட்டி என்று கூறுகிறார்கள். பெயரில் தான் வித்தியாசம் மற்றபடி செயல்பாடுகள் எல்லாம் ஒன்று தான்!

ஏதோ ஆபத்து அவசரத்துக்காக வட்டி முதலைகளிடம்  மக்கள் போகிறார்கள். அதுவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அங்கும் சரி இங்கும் சரி அவர்களிடம் பணக்காரர்கள் யாரும் போவதில்லை. அடித்தட்டு மக்கள் தான் அவர்களின் வாடிக்கையாளர்கள். ஆனால் அவர்கள் ஐநூறோ, ஆயிரமோ வாங்கிவிட்டு படுகிற பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. அவர்கள் ஆயுள்வரை அந்தக் கடனைக் கட்டி முடிக்க விடமாட்டார்கள்!

இந்த முதலைகள் எப்போதோ நம்மிடையே இருந்து முற்றிலுமாக  ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் அவர்கள் ஒழிந்தபாடில்லை! அவர்கள் ஒழிக்க முடியாதவர்கள் என்கிற எண்ணம் நமக்கும் வந்துவிட்டது! காரணம் அரசியல்வாதிகள்  இதில்  சம்பந்தப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது! அரசியல்வாதிகள் என்றால் அவர்களோடு மோத யாரும் தயாராக இல்லை! காவல்துறை மட்டும் முடியுமா?

ஆனாலும் இப்போது அவர்கள் எடுத்திருக்கும் ஒரு சில நடவடிக்கைகளுக்காக காவல்துறையைப் பாராட்டுவோம். 

காவல்துறை இப்போது நாடெங்கிலும் சுமார் 44 பேரை கைது செய்திருப்பதாக புக்கிட் அமான் அறிவித்திருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கை, வழக்கம் போல, தலைகளைத் தவிர  வால்களாகத்தான் இருக்கும் என நம்பலாம்! மற்றபடி ஆட்டிவைக்கும் சூத்திரதாரிகளின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது  என்பது திண்ணம். அந்த எல்லைக்கு அவர்கள் போகமாட்டார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 வாகனங்கள், 107 கைத் தொலைபேசிகள், 55 ATM கார்டுகள்,  27 காசோலைகள் - இவைகளைப் பார்க்கும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சலைக் கொடுத்தவர்கள் யார்?  மேலிடத்து ஆதரவு இல்லாமல் இப்படியெல்லாம் இவர்கள் இயங்க முடியாது என்பதை நாமும் புரிந்து கொள்கிறோம்! அதுவும் வாகனங்களைப் பறித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்குள்ள துணிச்சல்  அசாத்தியமானது! இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் அசாத்தியமான மனிதர்கள்!

காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்காக நாம் பாராட்டுகிறோம். ஆனால் இந்த 'வால்கள்' மேல் எடுத்திருக்கும் நடவடிக்கை எங்கே கொண்டு போகும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment