Tuesday 8 March 2022

தொற்று தொடரும்!

 

                                தொற்று தொடரும்!  வாழப்பழகிக் கொள்ளுங்கள்!   

பிரதமர் கொடுத்த சுருக்கமான செய்தி இது தான். தொற்று தொடரும்! அதோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்! 

இனி வேறு வழியில்லை.  மூடப்பட்ட அனைத்தும் திறந்து விடப்படுகின்றன. வெளி உலகத்தைப் பார்க்கலாம். வெளி நாடுகளைப் பார்க்கலாம். வெளி மாநிலங்களைப் பார்க்கலாம். சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளலாம். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாகப் பார்க்காதவற்றை இப்போது பார்க்கலாம்.

வீட்டில் அடைந்து கிடந்த நாள்கள் போதும் போதும் என்றாகிவிட்டது! பலரை அது பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. வீடுகளில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துவிட்டன! வீடுகளில் அடைந்து கிடப்பதை யாரும் விரும்பவதில்லை! ஏன் பள்ளிப்பிள்ளைகள் கூட வீடுகளில் அடைந்து கிடப்பதைக் கவலையோடு தான் பார்க்கிறார்கள்! ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்கும் இதனால் 'டென்ஷன்' ஏற்படுகிறது!

ஆமாம் இதற்கெல்லாம் ஒரு  முடிவு கட்டுவதுதான் பிரதமரின் அறிவிப்பு. வரும் ஏப்ரல் 1-ம் தேதி  (ஒன்றாம் தேதி)  அனத்துக் கட்டுப்பாடுகளும்  நீக்கப்படுகின்றன. ஒன்றே ஒன்றை தவிர! அது என்ன? உங்கள் முகக்கவசத்தை மட்டும் விட்டுவிடாதீர்கள். முகக்கவசத்தை வழக்கம் போல் அணிந்து கொள்ளுங்கள். அது ஓரளவு உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும்.

இந்த நேரத்தில் ஓர் எச்சரிக்கையும் நாம் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டு விட்டதாக  செய்தி வந்தாலும்  நாம் நிதானமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும். " காஞ்சமாடு  கம்பு தோட்டத்தில புகந்த" கதையாகி விடக்கூடாது! 

நாம் நிதானமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். நமது பயணங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தேவை என்றால் மட்டும் பயணங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.  கூட்டம் கூடும் இடங்களுக்குப் போவதை குறைத்துக் கொண்டு கூட்டம் குறைந்த பின்னர் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.  

சினிமாப் படங்களை முதல் நாளே பார்க்க வேண்டும் என்கிற ஆசைகளைத் தள்ளிப் போடலாம்! ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் கூட பார்க்கலாம். அதைவிட தொலைகாட்சிகளில் பார்க்கக் கூடிய வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. செலவும் மிச்சம். வீட்டிலிருந்தே பார்க்கலாம்.

இதையெல்லாம் அரசாங்கம் சொல்லித்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.  எல்லாம் நமது பாதுகாப்புக்காக, நமது நலனுக்காக, நமது சுற்றுபுறத்தின் சுமைகளைக் குறைப்பதற்காக, மக்களிடையே நோய் பரவாமல் இருப்பதற்காக - நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள்.

ஒன்றைப் புரிந்து கொள்வது அவசியம். நமது நாட்டில் பெரும்பாலானோர் கோரோனாவிலிருந்து விடுபட தடுப்பூசி போட்டிருக்கின்றனர். நம்மிடையே போடாதவர்களும் உண்டு. போலி சான்றிதழ்களை வைத்திருப்போரும் உண்டு. இப்படி போடாத நபர்களிடமிருந்து நமக்குப் பாதிப்பு ஏற்படலாம்! இது சாத்தியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான்  நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் அனைத்தையும் நீக்கினாலும்  தொற்று என்னவோ முழுமையாக நீக்கப்படவில்லை. இன்று அரசாங்க செய்வதெல்லாம் இத்தனை கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது  அதனால் நாம் இந்தக் கெடுபிடிகளைத் தளர்த்துவோம் என்கிற ரீதியில் தான் இந்த நோயை அணுகுகிறார்கள்!

நமது கடமை என்ன?  நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வோம்!
     

No comments:

Post a Comment