Sunday 20 March 2022

போரை நிறுத்துக!


 "போரை நிறுத்துக!" என்பது தான் உலக மக்களின் ஒன்றுபட்ட குரலாக இப்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனாலும் யாரும் கேட்பதாக இல்லை!  ரஷ்யா போரை நிறுத்துவதாகவும் இல்லை. அதே சமயத்தில் இன்றைய நிலையில் அதிகமாக 'வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கும்' யுக்ரேனும் தனது வீம்புத்தனத்தை விடுவதாகவும் இல்லை.

பொதுவாக எந்த நாடாக இருந்தாலும் சரி மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர். யுக்ரேனும் அதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் போர் வேண்டாம் என்பதைத்தான் விரும்புகின்றனர். ஆனால் பல சமயங்களில் நாட்டை ஆள்பவர்கள் மக்கள் மீது போரைத் திணிக்கின்றனர்.

இந்தப் போரினால் யுக்ரேனுக்குப் பெரிய அளவில் பாதிப்பு என்பதை மறுப்பதற்கில்லை. சுமார் ஒரு கோடி மக்கள் இதுவரை நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்றனர். அகதிகளாக பல அண்டை நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சொந்த நாட்டிலிருந்து, சொந்த மண்ணிலிருந்து, சொந்த வீடுகளிலிருந்து  புலம் பெயர்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை விடத்  துயரம் உலகில் எதுவும் இல்லை. அகதிகளாக வருபவர்களுக்குத் தான் அந்த வலி புரியும்.

வெளியேறுபவர்களில் அனைவரும் பெண்களும் குழந்தைகளும் தான் அதிகம் என்கின்றன செய்திகள். ஆண்களில் பெரும்பாலும் நாட்டைக் காப்பாற்ற கையில் ஆயுதங்களை ஏந்திவிட்டனர். நாட்டில் சமாதானம் ஏற்படும் போது எத்தனை பெண்கள் சுமங்கலிகளாக வீடு திரும்புவார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆண்கள் இல்லாத நாடாக மாறவும் சாத்தியங்கள் உண்டு. இதனால் எத்துணை பெரிய பாதிப்பு என்பது உடனடியாகத் தெரியாது. ஆனால் மக்களிடையே ஏற்படுகின்ற அந்த வன்மம் ஆண்டு கணக்கில் நீடிக்க வாய்ப்புண்டு. சமாதானமே கொண்டு வரமுடியாத ஒரு சூழல் என்றென்றும் தொடரும்.

நல்ல தலைமை இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது இந்தப் போரிலிருந்து நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.  யுக்ரேன் தன் நாடு இருக்கின்ற சூழல் நன்றாகத் தெரிகிறது. அது ரஷ்யாவின் அண்டை நாடு. தனது அண்டை நாட்டில் "நேட்டோ" படைகள்  வருவது தனக்கு ஆபத்து என்பது ரஷ்யா புரிந்து வைத்திருக்கிறது. யுக்ரேன்  அதிபர்  ஒரு யூதர். அவர் ரஷயாவுக்கு எதிரானவர். அவர் யூதர் என்கிற காரணத்தால் "நேட்டோ" படைகள் வருவதை அவர் விரும்புகிறார். ஒன்றைக் கவனிக்க வேண்டும். மக்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அவர்களது  அதிபர் போரை விரும்புகிறார். அவர் ரஷ்யாவை அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். இது மேலோட்டமான ஒரு பார்வை.

நாட்டில் சமாதானம் வேண்டும் என்று நினைத்திருந்தால் பேச்சு வார்த்தைகளின் மூலமே இதற்கு ஒரு தீர்வைக் கண்டிருக்கலாம். இப்போது போரை நிறுத்துக என்று எல்லாத் தரப்பும் வேண்டுகோள் விடுக்கின்றன. எதுவும் ஆகவில்லை. போர் நீடிக்கிறது. அதன் பயனாய் விலைவாசிகள் ஏறிவிட்டன. எல்லா நாடுகளையும் அது பாதிக்கிறது.

நாம் "போரை நிறுத்துக!" என்று மீண்டும் சொல்லுவதைத் தவிர வேறு எதனையும் சொல்லும் நிலையில் இல்லை!


No comments:

Post a Comment