முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களுக்கு இப்போது தான் உலகம் புரிந்திருக்கிறது. Sorry sir! It's too late!
இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தவருக்கு இது கூடத் தெரியாதா? என்னவோ சிறிய குழந்தை மாதிரி புலம்பித் தீர்த்திருக்கிறார்!
பதவியில் இருக்கும் போது அத்தனையும் சொந்தம் தான். கழுதை கூட சொந்தம் கொண்டாடும். பதவி இல்லையென்றால் சொந்த கொண்டாட ஆளில்லை. இதைத்தான் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம்.
பதவி வரும் போது பணிவு வரவேண்டும். அப்படியெல்லாம் பணிவு வந்துவிடாது. என்னன்னவெல்லாம் வரக்கூடாதோ அத்தனையும் வந்துவிடும். பணம் பண்ணுவதற்கு என்னன்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளும் தானாக வந்துவிடும். அதுவே பெருமையாகப் பேசப்படும்.
பதவி என்றால் சாதாரணமானது அல்ல. எல்லா அநியாயங்களையும் செய்யக் கூடியது. ஆனால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை அரசியல்வாதிகள் மறந்து விடுகிறார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்த நேரத்தில் போய் 'என் கூட இருந்தவனை எல்லாம் காணவில்லை' என்றால் அவன் எப்படி வருவான்? அவன் தனக்கு எந்தக் கெடுதலும் வருமோ என்று எட்டி நின்றே வேடிக்கைப் பார்ப்பான்! அவனுடைய பயம் அவனுக்கு! பதவியில் இருந்த போது ஒன்றாக அனுபவித்தீர்கள். அப்போது நிதானம் வரவில்லை. என்ன செய்ய? பதவி அதிகாரம் அப்படிப்பட்டது. இப்போது நிதானம் வருகிறது. துணைக்கு ஆளில்லை! பதவியும் இல்லை.
நஜிப் ஒன்றை உணர வேண்டும். நாட்டுக்குத் துரோகம் செய்தவர்கள், மக்களுக்குத் துரோகம் செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கொலைகாரர்கள் யாராக இருந்தாலும் சரி கடைசி காலம் துன்பமாகத்தான் இருக்கும். தனிமையில் ஏங்க வேண்டித்தான் வரும். யாரும் தப்பிக்க முடியாது. அது தான் நான்குமறை தீர்ப்பு.

No comments:
Post a Comment