Sunday 27 December 2020

இனிமேலும் அப்படித்தானா!

மனிதன் என்றால்  என்றும் மாறிக் கொண்டிருப்பவன். அப்போது தான் அவன் மனிதன். 

குறிப்பாகச் சொன்னால் கருத்துகள் மாறும் போது நம்மை நாமே மாற்றிக் கொள்ளுகிறோம். தவறான கருத்துகளை அப்படியே இழுத்து வைத்துக் கொண்டிருப்பதில்லை. .நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடக்குமா என்பது கேள்விக்குறி என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இப்போதே இந்து  சங்கம் "வேண்டாம்!" என்கிறது என்பதாக ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது! நம்மால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை! 

நமது நாட்டில் இந்து சங்கம் மட்டும் தான் இந்துக்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அதிகாரப்பூர்வமான சங்கம் என்பதை  நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறைபாடுகள் இருக்கலாம். குறைபாடுகள் இல்லை என்றால் கூட இருக்கிறது என்று அடித்துச் சொல்ல நம்மில் பலர் தயாராக இருக்கிறோம்! என்ன செய்வது? நாம் அப்படியே வளர்ந்துவிட்டோம்!

திருவிழா நடக்குமா, நடக்காதா என்பது சுகாதார அமைச்சு என்ன சொல்லுகிறதோ அது தான் நடக்கும். முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்துமலை என்பது இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்ற ஒரு புண்ணிய தலம்.

இப்போது கொரோனா தொற்று குறைவதாகவும் தெரியவில்லை. அதனால் பத்துமலையில் எந்த அளவை வைத்து பக்தர்கள் வரலாம் போகலாம் என்று கணக்கிடுவது பெரும் சிரமம். மூன்றில் ஒரு பகுதி என்றாலும் சாதாரண விஷயமல்ல.

ஒவ்வொருவரையும் காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்து அனுப்ப வேண்டும். இவர்களும் உண்மையைச் சொல்லப் போவதில்லை. தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இப்படி ஒரு சூழலில் தைப்பூசத் திருவிழாவுக்கு இந்து சங்கம் தான் தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுவது சுத்த அபத்தம். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பது நமக்குப் புரிகிறது.

ஓர் இயக்கத்தை அவதுறு பேசுவது மிக எளிது.  ஆனாலும் அவர்களை நாம் நம்ப வேண்டும்.  யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டும், குறை கண்டு கொண்டும் இருந்தால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.  ஆனால் அதன் முடிவு தான் என்ன?

நாம், நமது தலைவர்களை நம்ப வேண்டும்.  சொல்லுவதை  ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி காலாகாலமும் நம்பாமலே போய்க் கொண்டிருக்க முடியாது.

நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது! திருந்துவோம்! இனிமேலாவது திருந்துவோம்!

Friday 25 December 2020

நன்றி உஸ்தாஸ்!

 மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு உஸ்தாஸ் எபிட் லூ ஒர் உதாரணம். வாழ்த்துகள் உஸ்தாஸ்!

Thanks: FMT News

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் கணேஷ் சௌந்தரராஜா-பரமேஸ்வரி தம்பதியினரைப் பற்றியான செய்தியை FMT வெளியிட்டிருந்தது.

அவர்கள் வீடு எரிந்த பின்னர் தங்குவதற்கு வீடு இல்லை.வாடகை வீட்டில் வாடகைக் கொடுக்க கணவரின் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர் செய்வது பாதுகாவலர் வேலை. 

அதனால், வேறு வழி இல்லாமல், அவர் தனது காரிலேயே தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வாழ வேண்டிய கட்டாயம். 


இப்படித்தான் கடந்த எட்டு மாதங்களாக தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.அவர்களது கடைசி  மகள் கீர்த்தனா தேவி, எட்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்தவள், காரைத் தவிர வேறு உலகத்தைப் பார்த்ததில்லை.  அவர்கள் தண்ணீர் பிரச்சனையத் தீர்த்துக் கொள்ள அருகிலுள்ள பொது கழிப்பறைகள் பயன்படுத்தினர். பசியைத் தீர்த்துக் கொள்ள ஏதோ அவ்வப்போது - சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

நமது இயக்கங்கள் பிரச்சனை வந்த போது, வந்தார்கள்! பார்த்தார்கள்! அரிசி பருப்புகளைக் கொடுத்தார்கள்! படம் எடுத்தார்கள்! அதற்கு அப்புறம் அனைவரும் மறந்து போனார்கள்! அவர்கள்  தங்குவதற்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை! ஒரு குடும்பத்திற்கு என்ன முக்கியம் என்பதைக் கூடத் தெரியாத தலைவர்கள் எல்லாம் தொண்டு செய்ய வந்துவிட்டார்கள்!

மனிதர்கள் கைவிட்டாலும் கடவுள் கைவிடமாட்டார் என்பார்கள். செய்தியைப் படித்துவிட்டு உஸ்தாஸ் எபிட் லூ,  ஜோகூரிலிருந்து பினாங்கிற்கு ஓடோடி வந்தார். ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்  கொடுத்தார்.  தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனைப் பெட்டி இன்னும் பல எலெக்டிரிக் பொருள்களை வாங்கிக் கொடுத்தார். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாங்கிக் குவித்திருக்கிறார்! அரசாங்கத்திலிருந்து எந்த நேரத்திலும் அவருக்கும் வீடு கிடைக்கலாம். அது வரை வீட்டுக்கான வாடைகையும் அவர் கொடுக்க உறுதி அளித்திருக்கிறார்.

இதைத்தான் நாம் மனிதம் என்கிறோம். இதற்கு முன்  எந்த ஒரு உஸ்தாஸும் இப்படி களத்தில் இறங்கி வேலை செய்ததாக ஞாபகமில்லை. உஸ்தாஸ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க பிரார்த்திக்கிறோம்.

இனி கணேஷ் சௌந்தரராஜா தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.  பலத்த அடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அது நடக்கும் என நம்பலாம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் மறக்கமாட்டார் எனவும் நாம் நம்பலாம்.

நண்பரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வளவு இக்கட்டான் நிலையிலும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

நன்றி உஸ்தாஸ்! சொல்ல வார்த்தை இல்லை!

Wednesday 23 December 2020

கோவிட் 19 தடுப்பூசி போடும் முதல் நபர்!

 கோவிட்-19 தடுப்பூசி போடும் முதல் நபர் யார் என்று நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

அந்த பொறுப்பை நமது பிரதமர் டான்ஸ்ரீ முகம்மது யாசின் எடுத்துக் கொண்டார். அதாவது இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று அதன் மூலம் அவர் உறுதிப்படுத்துகின்றார்.

இந்த தடுப்பூசியை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை தான். அந்த அளவுக்கு அவநம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் விஞ்ஞானிகளால் கண்டுபடிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை!

அதனால் தான் பிரதமரே முதல் தடுப்பூசியைப் போட்டு "பயப்படாதீர்கள்!" என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்!

இந்த நேரத்தில் நாமும் சில நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

பெரிதாக ஒன்றுமில்லை. பிரதமருக்குப் பிறகு அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் தடுப்பூசிகளைப் போட வேண்டும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.

இதன் மூலம் மக்களைப் பிரதிநிதிக்கும் பிரதிநிதிகள் தடுப்பூசிகளைப் போட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

இதற்குக் காரணம் இவர்கள் தான் மக்களை ஏமாற்றுபவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். இவர்கள் இங்குத் தடுப்பூசி போடாமல் நேரடியாக இங்கிலாந்துக்கோ, அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போய் தங்களது திமிரைக்  காட்டுபவர்கள்.

அதனால் பிரதமரின் முதல் குறி  இவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் இங்கு எதைச் செய்தாலும் அதில் தரமில்லை என்று சொல்லி மேற்கு நாடுகளைப் பார்ப்பவர்கள். அங்கு நோக்கி ஓடுபவர்கள்!

சாதாரணப் பிரச்சனைகளுக்குக் கூட வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் சிகிச்சை பெறுபவர்கள்.  இவர்கள் எல்லாம் அரசியலில் கொள்ளையடிப்பவர்கள்; கொள்ளையடித்தவர்கள்!

நாம் பிரதமருக்கு சொல்ல வேண்டிய ஆலோசனை என்பது முதலில் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு முதல் மரியாதையாக இருக்கட்டும்! அங்கு ஏதும் ஆபத்து இல்லையென்றால் அத பின்னர் பொது மக்களுக்கு வரட்டும். 

இந்த நேரத்தில் நாம் பிரதமரைப் பாராட்டுவோம்! அத்தோடு அவர்கள் குடும்பத்தையும் பாராட்டுவோம்! அவர்கள் தான் நாட்டுக்கு நல்லதை எண்ணுபவர்கள்!

பிரதமரை வாழ்த்துகிறோம்!

Tuesday 22 December 2020

மாநகர் மன்றத்தை வாழ்த்துகிறோம்!

 இன்று, இந்த கோரானா காலக் கட்டத்தில்,  அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்களே!  அது தான் உண்மை! வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது அதனை யாரும் மறுப்பதிற்கில்லை!

முதலில்,  வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். அதனால் வேலை இல்லை. ஏதோ முன்பு செய்த வேலையின் மூலம் ஒரு வாடகை வீட்டிலிருந்து கொண்டு தங்களது பிழைப்பை நடத்தி வந்தனர்.

குடும்பத்தில் ஒருவர் வேலை செய்தாலும் ஏதோ பிழைப்பு ஓடும். கணவன் மனைவி இருவருக்குமே வேலை இல்லையென்றால் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒன்று செய்ய முடியாத நிலையில் வீதிக்குத் தான் வர முடியும்!

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு!"  என்று சந்நியாசி பாடலாம் ஆனால் குடும்பஸ்தன் அப்படியெல்லாம் பாட முடியாது!

இந்த நிலையின் தான் கோலாலம்பூர் மாநகர் மன்றம் 18  பி40 பிரிவு இந்தியர்கள் மாநகர் மன்றத்தின் வாடகை வீடுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

மலிவான வாடகை என்பதால் அதனை அலட்சியப்படுத்த முடியாது. அதற்கும் முறையான வாடகைக் கட்ட வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும். வசதிகள் குறைவாக இருக்கலாம் ஆனால் தங்குவதற்கு என்று ஒரு கூரை இருக்கிறதே அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த அறிவுரையைத் தான் நாம் இந்த மக்களுக்குச் சொல்ல முடியும். இப்போதுள்ள நிலையில் மலிவாக யாரும் வாடகைக்கு வீடுகளைக் கொடுப்பதில்லை.

அதனால் கிடைத்த வீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.

இந்த நேரத்தில் கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா அவர்களைப் பாராட்டுகிறோம்! இந்தியர்களுக்கு நல்லது நடந்தால் அது நல்லது தானே!

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை வாழ்த்துகிறோம்!

வேண்டாம் பொறாமை!

 என்ன தான் ஒருவன் படித்திருந்தாலும் பொறாமை மட்டும் அவனிடமிருந்து விலகுவதில்லை! இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்களுக்கு வேறு என்ன நோக்கம் இருக்கும்? பொறாமையே முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

தேசிய மொழிப்பள்ளிகளைப் பற்றி அப்படி என்ன தான் குற்றச்சாட்டு?  அவைகள் இஸ்லாமியப் பள்ளிகளாக மாறி வருகின்றன என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாக சொல்லப்பட்டு வருகின்றன. 

நாட்டில் இஸ்லாமியப் பள்ளிகள் நிறையவே இருக்கின்றன. அதோடு சேர்த்து தனியார் இஸ்லாமியப் பள்ளிகளும் அதிக அளவில் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர் எணணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்து வருவதாக எந்த செய்தியும் இல்லை!

இப்படி இஸ்லாமியக் கல்வி கற்க வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.  மேலும் அந்தப் பள்ளிகளை நாம் குறைத்தும் மதிப்பிடவில்லை. அவைகளும் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சியும் பெறுகின்றன.

இந்த நிலையில் தேசியப் பள்ளிகளில் ஏன் இந்த இஸ்லாமியப் புகுத்தல் என்பது தான் கேள்வி. இஸ்லாமியர் அல்லாதார் அதிகமாகப் படிக்கும் பள்ளிகள் தான் தேசியப் பள்ளிகள்.  அங்கும் ஏன் இப்படி ஒரு வலுக்காட்டயமான இஸ்லாமியப் புகுத்தல்?

நமக்கு எது தேவை என்பதை நமது ஆட்சியாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. இஸ்லாமியக் கல்வி என்பது நன்னெறிக் கல்வி. அது நமக்குத் தேவை. அதனால் தான் தாய் மொழிப் பள்ளிகளில் நன்னெறி என்பது அவரவருக்கு ஏற்ற வகையில் போதிக்க்ப்படுகிறது. 

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது.  ஆனால் அதற்கான பதில் இது நாள் வரை கிடைக்கவில்லை. அது மட்டும் அல்லாமல் அந்தப் புகுத்தல் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

தாய் மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் இந்த கேள்விக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்? இஸ்லாமிய நாடுகளில் கூட இப்படி ஒரு நிலையில்லை. பள்ளிகள், கல்லூரிகள் என்பது எல்லா நாடுகளிலும் உள்ளன.  ஆனால் வெறும் இஸ்லாமியக் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவாது என்பது எல்லா நாடுகளும் அறியும். 

எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இஸ்லாமியக் கல்வியை புகுத்துவது யாருக்கும் உதவப் போவதில்லை. ஒன்றை நாம் குறிப்பிடலாம்.  இத்தனை ஆண்டுகள், இஸ்லாமியக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததினால் நாட்டில் இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டிருக்கிறதா அல்லது வளர்க்கப் பயன்பட்டிருக்கிறதா? இது ஒன்றே போது.  மேலும் விளக்கத் தேவை இல்லை.

தாய் மொழிப்பள்ளிகள் அறிவை வளர்க்கும் கல்விக் கூடங்களாக விளங்குகின்றன. அது ஒன்றே போதும் அதன் வளர்ச்சிக்கு!

மூட வேண்டும் என்று சொல்லுபவர்கள் தாய்மொழிப் பள்ளிகளைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கின்றனர். அதன்  வளர்ச்சி கண்டு பொறாமையால் புழுங்குகின்றனர்.

தேவை இல்லாத பொறாமை! வீண் பொறாமை!

Monday 21 December 2020

எண்ணிக்கை குறைகின்றது

 தமழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைகின்றது  என்கிற செய்தி நம்மை வருத்தமடையச் செய்கின்றது.

பத்து மாணவர்களுக்குக் குறைவான தமிழ்ப்பள்ளிகள் இப்போது நாடெங்கும் கூடிக்  கொண்டு வருகின்றன. மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகளில் சுமார் 28 பள்ளிகள் பத்து மாணவர்களை விடக்  குறைவாக இருக்கின்றன  என்பதாகக் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் பத்து ஆசிரியர்களாவது பணி புரிகின்றனர். ஆனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை என்பது ஆசிரியர்களை விடக் குறைவானதாக இருக்கின்றது. அதாவது ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள்,  ஐந்து மாணவர்கள் - என்று இப்படி பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கின்றனர்! அதாவது மாணவர்களை விட ஆசிரியர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அது தான் அதன் சுருக்கம்!

தாய் மொழிப்பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு வெறுப்பு ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களின் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிகள் தரமான கட்டிடங்களில் இயங்க வேண்டும்  என்பது தான் பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம். அந்த காலத்தின் நிலைமை வேறு. இப்போதுள்ள இளம் பெற்றோர்களின் நிலைமை வேறு. கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்பதோடு கல்வி கற்கும் சூழல் ஏற்றதாக இருக்க வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் அரசியல் விளையாட்டுகள் அதிகம்.  அதனால் மாணவர்களின் நலனை விட,  பள்ளிகளின் நலனை விட ஆசிரியர்களின் நலன் அதிகம் பேணப்படுகிறது.  தங்களுக்குச் சாதகமான சூழல் இல்லை என்றால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குத்  தூண்டப்படுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் ஒற்றுமையின்மை இன்னொரு பக்கம்.இவைகள் எல்லாம் பெற்றோர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

இப்போதெல்லாம் தமிழ்ப்பள்ளிகளின் கல்வியின் தரம் பாராட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.   ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும்  மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கின்றது.

வருங்காலங்களில் கல்வியின் தரம் தான் முக்கியமாகக் கவனிக்கப்படும்.  தரத்தை வைத்துத்  தான் பெற்றோர்கள் முடிவு செய்வார்கள். 

இப்போதெல்லாம் உலக அளவில் பல விஞ்ஞான போட்டிகளில்,  கண்டுபிடிப்புகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நிறைய தங்கப்பதக்கங்களை வாங்கிக்  குவிக்கின்றனர். UPSR தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி பெறுகின்றனர். பெற்றோர்களின் பார்வையில் இவைகள் தான் தரமான பள்ளிகள் என்பதாகப் பேசப்படுகின்றது. 

ஏன் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை  குறைகின்றது என்று கேட்டுக் கொண்டிருப்பதை விட  பள்ளிகளின் கல்வித்தரம் தான் அதனை முடிவு செய்யும் என்பதையும் நாம் புரிந்த கொள்ள  வேண்டும்.

ஆசிரியர் சமூகம் தான் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்!

Sunday 20 December 2020

அரசியல் வலிமை அசாத்தியமானது!

 முன்பை விட இப்போது நமக்கு அதிகமாகவே புரிகிறது,  அரசியல் வலிமை அசாத்தியமானது என்று!

நொண்டி அடித்துக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது நம்மை நொண்டி அடிக்க வைக்கிறது! நம்மால் ஒன்றும் செய்ய இயலாது! காரணம் அரசியல் வலிமை யாரிடம் இருக்கிறதோ அவன் தான் வலிமை வாய்ந்தவன்! அது ஒரு வாக்கோ இரண்டு வாக்குகளோ  கூடுதலாக இருந்தாலும் அதுவே போதும் பதவியில் நீடிப்பதற்கு!

இப்போது இந்த  வழக்கைப் பற்றி பார்ப்போம். இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்சா.  தனது மகள் பதினோரு மாத குழந்தையாக இருந்த போது அவரது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்டு இப்போது பதினோரு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றம் கொடுத்த ஆணை. ஆனால் அந்த கணவனோ நீதிமன்றத்தை மதிக்கவில்லை! குழந்தை தாயிடம் வந்தபாடில்லை.

காவல்துறைத் தலைவர் பலவிதமான சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறாரே தவிர குழந்தை தாயிடம் வந்து சேரவில்லை. 

இடையில் அரசாங்கத்தில் ஒரு மாற்றம். புதிய அரசாங்கம் பதவியேற்றது. இப்போது காவல்துறைத் தலைவரிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லி வந்தவர் இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டார்.  "இடம் தெரியும்! இப்போது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மூத்த தலைவர் மூலம் சமரசமாகப் போக பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று கொஞ்சம் இறங்கி வந்தார்!   

அவர் பேச்சு நமக்கும் நம்பிக்கை தந்தது.  சில பேச்சு வார்த்தைகளும் நடந்தன. எல்லாமே நம்பிக்கை தருபவனவாக இருந்தன. நாமும் காவல் துறைத் தலைவரைப் பாராட்டினோம். எல்லாமே சரியாக போய்க் கொண்டிருந்த நேரம்.

தீடீரென அரசாங்கம் கவிழ்ந்தது! யாரும் எதிர்பார்க்கவில்லை. சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த பேச்சு வார்த்தைகள் தீடீரென பின் வாங்கியது! ஏன் என்று புரியவில்லை!

மீண்டும் காவல்துறைத் தலைவர் பின் வாங்கினார். பழைய பூஜ்ய நிலைக்கே திரும்பிவிட்டார்! இப்போது அவர் என்ன சொல்லுகிறார்? "குழந்தையின் தகப்பனாரைக் கண்டு பிடிக்க முடியவில்லை! அவர் தொடர்ந்து தனது முகவரியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்!  அடிக்கடி இடம் மாறுவதால் காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியவில்லை! அவர் முகவரி தெரிந்தவர்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்!"

இங்கு நாம் காவல்துறைத் தலைவரைக்  குற்றம் சொல்லவில்லை. அவரை அரசியல் அதிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் நாம் சொல்ல வருகிறோம்.

குறைந்த மாதங்களே ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. நீதிமன்ற ஆணையை மதிக்க வேண்டும் என்கிற கடப்பாடு அவர்களுக்கு இருந்தது. அதனால் காவல்துறைத் தலைவரும் அவர்களைப் பின்பற்றினார்.  ஆனால் பின்னர் வந்த அரசாங்கம் - வெறும் கொல்லைப்புற அரசாங்கம் மட்டும் அல்ல, ஊழலுக்குப் பேர் போனவர்களைக் கொண்ட அரசாங்கம் - இவர்கள்  நீதி, நியாயம் பற்றி கவலைப்படாதவர்கள்! அதனால் காவல்துறைத்  தலைவரும் இவர்களைப் பின்பற்ற வேண்டிய அவலம்!

இப்போது நமக்கு என்ன தெரிகிறது!  காவல்துறைத் தலைவரின் பதவி என்பது மிகவும் வலிமை மிக்க ஒரு பதவி. ஆனால் ஊழலையே தொழிலாகக் கொண்ட ஓர் அரசியல்வாதியால் அவரையும் கட்டுப்படுத்த முடியும்! அது தான் நடக்கிறது!

அரசியல் அதிகாரம் என்பது வலிமைமிக்கது என்பது மீண்டும்  மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது!

தேர்தல் என்று வரும் போது நமது வலிமைய நாம் காட்டுவோம்!

Saturday 19 December 2020

நான் தயார்!

 நேரங்காலம் கூடி வந்தால் எல்லாமே சுபமாகத்தான் இருக்கும்!

அதுவும் இப்போது அரசியல்வாதிகளுக்கு மிக மிக நல்ல நேரம்.  அவர்கள் ஏன் கொல்லைப்புற அரசாங்கத்திற்குத் தங்களது முழு விசுவாசத்தையும், ஆதரவையும்  கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்போது நாம் அதனைப் பார்த்தும் இரசித்தும் கொண்டிருக்கிறோம்! அதைத்தான் நாம் செய்ய முடியும். வேறு என்ன செய்ய முடியும்?

அரியதொரு  வாய்ப்பை இழந்து விட்டோம். "வாராத வந்த மாமணி" என்று நினைத்தோம்.  ஆனால் மாமணி வந்தும்,  மகாதிராக மறைந்து போனது! என்ன செய்ய!

இது புலம்பல் அல்ல ஏதோ வயிற்றெரிச்சல் போல் தோன்றுகிறது அல்லவா! உண்மை தான்! கோடிக்கணக்கில்  ஊழல் செய்தவன்(ள்) எல்லாம்  இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறான்! நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடக்கிறான்! இப்போது அவன் ஊழல் பேர்வழி அல்ல! ஊழல் செய்தவன் தியாகி ஆகி விட்டான்! நாட்டுக்காக போராடும் போராளி ஆகிவிட்டான்!

"என் மீது வழக்கா? ஓ! நான் தயார்! என்கிறான் தைரியத்தோடு! சமீபத்தில்  ஓர் ஊழல்வாதி விடுதலை ஆகிவிட்டார்! பக்காத்தான் அரசாங்கத்தில் இது நடக்குமா என்று நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது!

இப்போது இந்த ஊழல்வாதிகள் எல்லாம் கொள்ளையடித்தவர்கள் பட்டியலில் வரப்போவதில்லை. இவர்கள் எல்லாம் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் பட்டியலில் வருவார்கள். இறந்தால் அரசாங்க மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவார்கள்!

உலக மகா திருடர்கள் என்று ஒரு சிலரைப் பற்றி நாம் கணித்து வைத்திருந்தோம். போகிற போக்கைப் பார்த்தால் அந்த மகா மகா வெல்லாம் இனி பலிக்காது என்றே தோன்றுகிறது! வெகு விரைவில் கையைத்  தூக்கி அசைத்து "ஹை! ஹை!" என்று நமக்கு "பை! பை!" காட்டிவிட்டுச் செல்வதைப் பார்க்கலாம்! அந்த அளவுக்கு நாடு மாறிவிட்டது!

கொல்லைப்புற அரசாங்கம் என்று சொன்னோம். அதிகபட்சமாக ஒரு இரண்டு பேரை வைத்துக் கொண்டு அரசாங்கம்  தள்ளாடுகிறது, சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்று சொன்னோம் ஒன்றும் நடக்கவில்லை!

இப்போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. அனைத்து ஊழல்வாதிகளின் வழக்குகள் முடிந்த பிறகு, விடுதலையான பிறகு,  ஒரு வேளை அரசாங்கம் கவிழலாம்! அதுவரை அந்த வாய்ப்பில்லை!

அதுவரை "நான் தயார்!" என்று அவர்கள் மார்தட்டுவார்கள்! நாம் பார்த்து பரவசமடைவோம்!


Friday 18 December 2020

இது ஆச்சரியந்தான்!

 ஒன்றை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்!

சர்ச்சைக் குறிய இஸ்லாமிய சமயப் போதகர் ஸாகிர் நாயக் எப்படி ஒரு விஷயத்தில் பின் வாங்கினார் என்று பார்க்கும் போது நமக்கும் வியப்பாகத்தான் இருக்கிறது.

தன்னை ஒரு மாவீரன் என்று மார்த்தட்டும் போதகர்  "நான் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!" என்று பல்டி அடித்தாரே அதைக் கண்டு நமக்கும் மனதிலே மகிழ்ச்சி தான்!

இவர் ஆரம்ப காலத்தில் இந்தியர்களையும் சீனர்களையும் ஒரே வித அளவுகோலினால்  அளந்து பார்த்தார்! இரு சமூகங்களையும் தன்னால் பயமுறுத்த முடியும் என்று கொஞ்சம் அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருந்தார்!

ஆனால் அவருடைய ஆசை தவிடுபொடியாகி விட்டது!  அவருக்கு அவருடைய சிஷ்யப்பிள்ளைகளிடமிருந்தே தேவையான புத்திமதியும்  கிடைத்துவிட்டது! புத்திமதி இது தான்:  "இந்தியர்களை, இந்துக்களை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்! அவர்களை அவர்களுடைய ஆள்களை  வைத்தே எங்களால் சமாளிக்க முடியும்! ஆனால் சீனர்கள் மீது கை வைக்க வேண்டாம்!  அவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்! அதற்கப்புறம் நாங்களே உங்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டி வரும்! அதனால் உங்கள் வேலை இந்தியர்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள்; சீனர்கள் வேண்டாம்!இந்தியர்களைக் கேவலப்படுத்துவது எங்களுக்கும் பிடிக்கும்! அது போதும்!"

இந்த அறிவுரைக்குப் பின்னர் ஸாகிர் நாயக் சீனர்களைப் பற்றி  வாய் திறப்பதில்லை!

என்ன தான் பணம் கொட்டிக் கிடந்தாலும் ஒர் சில இடங்களில் பணம் வலுவிழந்து விடுகிறது என்பதற்கு இது ஒன்றே  சாட்சி!

ஸாகிர் நாயக் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  அவர் அந்த நாட்டின் மீது எந்தக் காலத்திலும் விசுவாசமாக இருந்ததில்லை. அந்நாட்டின் மீது ஓர் எதிர்ப்புக் கொள்கையையே கொண்டிருந்தவர். காரணங்கள் இருக்கலாம்.

பொதுவாக எல்லா நாடுகளிலுமே இது போன்ற எதிர்ப்புக் கொள்கை உடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதற்காக மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது, மத வெறியைக் கிளப்பிவிடுவது, சமயத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது - இது மிகவும் ஆபத்தானது.

அதைத்தான் அவர் தொடர்ந்தாற் போல செய்து வந்திருக்கிறார். அதற்காக தீவிரவாத அமைப்புக்களிடமிருந்து அவருக்கு  பொருளாதார உதவியும் கிடைதிருக்கிறது; கிடைத்தும் வருகிறது.

இப்போது நமது நாட்டிலிருந்து கொண்டு அதே வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். இங்கிருந்து கொண்டு இந்தியாவில் உள்ள நகர்களைத்  தீவிரவாதிகள் மூலம்  தகர்க்கவும் முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது.

அதை விட இங்குள்ள இந்துக்கள் மீதும் அவருடைய காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் இரண்டு இந்து கோவில்கள் உடைப்புக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது!  இப்படியெல்லாம் அவர் மீது சந்தேகம் எழக்  காரணம் அவருடைய தீவிரவாதம் தான். அடைக்கலம் கொடுத்த நாட்டிற்கே ஆப்பு!

நம் நாட்டைப் பொறுத்தவரை அவருடைய குறி என்பது இந்து கோவில்களும் இந்துக்களும் தான்

பொறுத்திருப்போம்! இறைவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்!

நல்ல செய்தி எதுவும் வராதோ!

 சமய அறிஞர் ஜாகிர் நாயக் பற்றி ஏதாவது செய்தி வந்தால் அது நல்ல செய்தியாகவே இருக்காது என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம்!

அவரும் நாட்டுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்கிற திட்டம் எதுவும் அவருக்கு இருந்ததில்லை!

அவரை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது பெரும்பாலும் கீழறுப்பு செய்தியாகத்தான் இருக்கும்! குறிப்பாக இந்தியா மீதும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் மீதும் அவருக்கு ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் இருக்கின்றன  என்பதை நாம் அறிவோம்!

ஓரு சமய அறிஞர் இப்படியெல்லாம் செயல்படுவாரா என்பதே நமக்கெல்லாம் ஆச்சரியத்தைக் கொடுக்கும்! காரணம் நமது நாட்டில் அப்படி யாரும் இருந்ததில்லை. அதற்கு ஈடு செய்யவே அவருக்கு இப்போது ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

பாஸ் கட்சி ஜாகிர் நாயக்கின் பிடியில் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.`கெடாவில் பாஸ் கட்சியை ஜாகிர் நாயக் தான் இயக்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது!

நாட்டில் ஏதேனும் அழிவு ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஜாகிர் நாயக்  என்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. இரண்டு இந்து கோவில்களின் உடைப்புக்கும் அவரே காரணம் என்பதாகத்தான் சொல்லப்படுகின்றது!

இப்போது கடைசியாக வந்த செய்தி இந்திய நகரங்களைத் தகர்க்க அவர் சதிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ரோஹின்யா அகதிகளை வைத்து, அவர்களின் மூலமாக ஒரு பயங்கரவாத குழு அமைத்து இந்திய நகரங்களைத் தகர்க்க அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதாகக் கூறப்படுகிறது.

ஜாகிர் நாயக்கிடம் பணம் நிறையவே இருக்கிறது. அதை வைத்து சதி நாச வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர அவருக்கு வேறு பணிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை! மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்துவது,  சண்டைகளை மூட்டுவது, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவது - இவைகள் தான் அவரின் தலையாயப் பணி. 

தான் வைத்திருக்கும் பணத்தின் மூலம் நல்லதைச் செய்தார் என்கிற செய்தி எந்தக் காலத்திலும் அவர் பக்கமிருந்து வந்ததில்லை! அவரைப் பற்றியான செய்திகள் வந்தாலே அது நல்ல செய்தியாக இருக்காது என்று நாம் நம்பலாம்!

என்ன செய்வது? சிலரது வாழ்க்கை முறை அப்படி அமைந்து விட்டது! மனிதன் செய்கின்ற தவறுக்குக் கடவுளையா குறை சொல்ல முடியும்!

ஜாகிர் நாயக் என்றாலே கலவரத்தைத்  தூண்டும் சமய அறிஞர் என்கிற பெயர் அவரோடு ஓட்டிக் கொண்டது!

அது தொடரும் என்றே தோன்றுகிறது!

Monday 14 December 2020

ஒரு தண்ணி போய் இன்னொரு தண்ணி!

 கெடா மாநில மந்திரி பெசாருக்கு ஒரு தண்ணி போனால் இன்னொரு தண்ணி வம்பில் மாட்டி விடுகிறது!

இவருக்கும் தண்ணிக்கும் ராசி இருப்பதாகத் தெரியவில்லை!  தண்ணியிலேயே இவருக்குக் கண்டம் இருப்பதாகத் தெரிகிறது! ஒரு தண்ணியை விட்டால் இன்னொரு தண்ணி!

இந்தியர்கள் கள் (தண்ணி) அடித்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். கள் அடித்துவிட்டுப் பேசினால் நான் மகிழ்ச்சியடைவேன். கள் உடம்புக்கு எந்த பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று இன்றும் நம் பெரியவர்கள் சொல்லுவார்கள்!

ஆனால் இன்றைய நிலையில் கள் அடிப்பது என்பது மிகவும் குறைவு. கள் குடிப்பதற்குப் பேர் போன இடம் புக்கிட் பெளாண்டோக் - ராமநாதபுரம் என்று தமிழில் சொல்லுவார்கள்! அந்த இடத்திற்குத் தான் கள் குடியினர் தேவை என்றால் படையெடுப்பார்கள்!

ஆனால் இப்போது நாம் குடிப்பது எல்லாம் சம்சு தண்ணி. அதைப் கௌரவமாக போத்தலில் அடைத்து விற்பதை நாம் பார்க்கிறோம். அதனால் குடல் வெந்து சாகிறோம்!

இப்போது மந்திரி பெசாருக்கு வேறு தண்ணீர் பிரச்சனை.  பினாங்குக்கும் அவருக்கும் ஏற்பட்டிருக்கிறது!

"நாங்கள் பினாங்கிற்கு குடி தண்ணீர் கொடுக்கமாட்டோம்! அதற்கான கட்டணம் கொடுத்தால் மட்டுமே நாங்கள் தண்ணீர் கொடுப்போம்!" என்கிறார் கெடா மாநில மந்திரி பெசார்!

மந்திரி பெசார் பினாங்கிடமிருந்து கேட்கும் இழப்பீடு எவ்வளவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?  ஒவ்வொரு ஆண்டும் ரி.ம.50 மில்லியன் கொடுக்க வேண்டும் என்பது அவர் கேட்கும் இழப்பீட்டுத் தொகை!

"தண்ணீர் கொடுக்க மாட்டோம்!" என்கிறார் மந்திரி பெசார். ஆனால் பினாங்கு அரசாங்கமோ "தண்ணீர் கொடுப்பதை நிறுத்திப்பார்!" என்று சவால் விடுகிறது!

கெடா மந்திரி பெசாருக்கு இந்து கோவில்களை உடைப்பது என்பது எளிது! காரணம் அவர் கட்சியின் மேலிடம் அவரை ஆதரிக்கிறது! இப்போது மத்தியிலும் கொல்லைப்புற அரசாங்கத்தாலும் அவர் ஆதரிக்கப்படுகிறார்! அதனால் இந்து கோவில்களின் மேல் அவர் அலட்சியத்தைக் காட்டலாம்.

ஆனால் தண்ணீர் பிரச்சனை என்பதும் இந்து  கோவில்கள் உடைப்பது என்பதும் வெவ்வேறு பிரச்சனைகள். எல்லாவற்றிலும் அவர் அலட்சியமாக அணுகுகிறார்!

தண்ணிரை நிறுத்தினால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  பொது மக்கள் யார்? பாஸ், அம்னோ. ம.சீ.ச. ம.இ.கா. கெராக்கான் - இப்படி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் தான் பொது மக்கள்.

பினாங்கு அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் உதவி இல்லாமல் தன் சொந்த முயற்சியால் பல பிரச்சனைகளை இது வரை தீர்த்து வந்திருக்கிறது. இதனையும் தீர்த்துக் கொள்ள அவர்களால் முடியும் என்பதை மந்திரி பெசார் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள் வரும் போது "அது கடவுள் செயல்!" என்று கடவுளின் மேல் பழி போடுவது பினாங்கு மாநிலம் அல்ல! அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்!

இன்னும் என்ன என்ன தண்ணீர் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகிறாரோ!

Sunday 13 December 2020

ஜாவி மொழி போதனை தேவையா?

தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி மொழி போதனை தேவயான ஒன்றா என்கிற விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

கல்வி அமைச்சு இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கான காரணம் என்ன என்பது அவர்களுக்கும் புரியவில்லை, நமக்கும் புரியவில்லை!

ஜாவி மொழியை  வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்விக்கு எந்தப்  பதிலும் இல்லை!

ஜாவி தான் தேசிய மொழி என்றால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் நமக்கென்று ஒரு தேசிய மொழி இருக்கின்ற போது இன்னொரு, தேவையற்ற, அந்நிய மொழியைக் கற்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

தேசிய மொழியில்  தமிழ்ப்பள்ளிகள்  இன்னும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முயற்சிகள் நடைப் பெற்றுக்கொண்டிருக்கும் போது ஜாவி மொழியைக் கொண்டு வந்து திணிப்பது யாருக்கு என்ன பயன் என்பது புரியாத புதிராக இருக்கத்தான் செய்யும்.

இவ்வளவு பிடிவாதம் காட்டும் கல்வி அமைச்சு, முதலில் தங்களது அலுவலகத்தில்  வேலை செய்யும் பணியாளர்களில் எத்தனை பேர் ஜாவி மொழியை  அறிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியுமா? அங்கும் அந்த மொழியை அறிந்தவர்கள் பூஜ்யமாகத் தான் இருக்கும்! ஏதோ ஓரிருவர் அறிந்திருக்கலாம்!

ஜாவி மொழிக்கு நாம் எதிரியல்ல. அது போல எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. இன்றைய நிலையில் மட்டும் அல்ல எல்லாக் காலங்களிலும் நாட்டின் தேசிய மொழிக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம். அது தான் நாட்டின் அதிகாரத்துவ மொழி.  அரசாங்க மொழி. அரசாங்கத்தின் தொடர்பு மொழி.

ஆக, தேசிய மொழியின் மீது எந்த ஒரு மாற்றமுமில்லை. அப்படி மாற வாய்ப்புமில்லை. 

நாட்டின் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தான் இருக்கின்றது.

எந்த மாற்றமும் இல்லாத சூழலில் இப்போது ஏன் இந்த ஜாவி திணிப்பு என்பது இயற்கையாகவே வரத்தான் செய்யும்.

ஏற்கனவே தமிழ் மொழியின் போதனை நேரம் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் சூழலில் இப்போது இன்னொரு மொழியை வலுகட்டாயமாகக் கொண்டு வந்து திணிப்பதன் மூலம் இவர்கள் என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்? தமிழ்ப்பள்ளிகளின்  அடையாளத்தையே அழிப்பதாகத் தான் நாம் நினைக்க வேண்டி வரும். அது பற்றி நாம் நிச்சயமாகக் கவலை கொள்கிறோம்.

இன்றைய நமது பிரச்சனைகள் எல்லாம் அரசியல்வாதிகளால் வருகின்றவை. கல்வியாளர்களால் அல்ல!  அரசியலில் உள்ளவர்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை   நம்மால் ஒன்றும் செய்ய  முடியவில்லை.

மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழலில் இப்படி மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதைத் தவிர நம்மால் வேறு ஒன்றையும் சொல்ல முடியவில்லை.

காவி மொழி தேவை இல்லை என்பதே நமது நிலை!

Saturday 12 December 2020

இது பெருமை தரும் விஷயமல்ல!

 ஆமாம்! அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு அறிவுரை!

ஆனால் அரசியல்வாதிகள் எதைச் சொன்னாலும் காதில் ஏற்றிக் கொள்ளும் பரம்பரை இல்லை! சும்மா  திஷூ பேப்பரில் துடைத்து வீசிவிட்டு  போகும்  ஒரு அரிய  வகை மனித இனம்!

இந்த முறை பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்! புதிய மந்திரி பெசார் நியமனத்தின் போது இந்த அறிவுரை அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது!

தேர்தல் முடிந்த பின்னர் இப்போது மூன்றாவது மந்திரி பெசார் நியமனமாகியிருக்கிறார்! என்னடா சோதனை? மாநிலத்திற்கு வந்த சோதனை! என்று சுல்தான் நினைக்கத் தான் செய்வார்! ஒரு நிலையான அரசு இல்லையென்றால் மாநில மேம்பாடுகள்  தடைப்படத்தான் செய்யும். எந்த வேலையும் சுமுகமாக நடை பெறாது.

ஆனால் சுல்தான் கொடுத்த அறிவுரையை இவர்கள் ஏற்பார்களா? என்பதைப்  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பதவி என்று வரும் போது அனைத்தும் மறக்கப்பட்டு விடும். நான் பெரியவனா, நீ பெரியவனா என்று கயிறு இழுக்கும் போட்டி  மீண்டும் ஆரம்பித்து விடும்!

பதவிக்காக இவர்கள் எத்தனை முறையானாலும் சுல்தானை சந்திக்க சலிக்கமாட்டார்கள்! ஆனால் அவர் சொல்லுவதைக் காது கொடுத்து கேட்பார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!

ஆனாலும் அவர் கொடுத்த அறிவுரைக்கு இந்த முறை கொஞ்சமாவது மரியாதை இருக்கும் என நம்பலாம்!

காரணம் மீண்டும் நமபிக்கயில்லா தீர்மானம் கொண்டு வந்து, மீண்டும் அரசாங்கம் கவிழ்ந்து, மீண்டும் சுல்தானின் இஸ்தானாவுக்குப் படையெடுப்பது என்பது கொஞ்சமாவது வெட்கம் வரத்தான் செய்யும்! ஆனால் வெட்கம் எங்கு வருமோ அங்கெல்லாம் மரத்துப் போய்விட்ட பிறகு இவர்களுக்கு  எதுவும் உறைக்காது!

சுல்தானும் இவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் காரணம் தனது குடிமகன்களாயிற்றே! தவறு செய்யும் குடிகளை மன்னிகத்தானே வேண்டும்! வேறு என்ன செய்வது?

ஆயினும், மாநில சுல்தான் சொல்லியதை மனத்தில் இறுத்தி அவர்கள் சுயபுத்தியோடு செயல் படுவார்கள் என நம்புவோம்!

அரசியல் என்பது விளையாட்டுக்களம் அல்ல, விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுவதற்கு! இது மக்களின் உரிமை. மக்களின் வாழ்வாதாரம். மக்களின் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். களையப்பட வேண்டும்.

இப்போது கொரொனா தொற்று நோயினால் மக்கள் பல வழிகளில் பலவீனம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ வழி காட்ட வேண்டும். இந்த நேரத்திலும் பதவி, பணம் என்கிற நோக்கிலேயே அரசியல்வாதிகள் அலைந்து கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசியல்வாதிகளே! நீங்கள் செய்வது யாருக்கும் பெருமை தர்ப்போவதில்லை! கேவலத்தைத் தான் உண்டாக்கும்!

மேன்மைதங்கிய சுல்தான் கூறுவது போல "இது ஒன்றும் பெருமை தரும் விஷயமல்ல!"

Friday 11 December 2020

இவர்களை என்னவென்று சொல்வது?

 நமது அரசியல்வாதிகள் செய்கின்ற சில விஷமத்தனங்களால் சமுதாயம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றது என்பதை நமது மக்களும்  புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யாததால் தான் அவர்கள் தங்களின் விருப்பபடி செய்து கொண்டும், மக்களை ஏமாற்றிக் கொண்டும் வருகின்றனர்.

இந்து பெருமக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய  நிலமில்லை, இடமில்லை, ஆளுவோருக்கு மனமில்லை! இந்த பிரச்சனை  ஒராண்டு, ஈராண்டு காலம் அல்ல  கடந்த 61 ஆண்டுகாலமாக  தீர்க்கப்படாத ஒரு பிரச்சனை!

இது நடந்தது மலாக்கா மாநிலத்தில். ஆளுங்கட்சியில் ம.இ.கா.வினர்  ஆட்சிக் குழுவில் இருந்தனர். யாரும் கண்டு கொள்ளவில்லை. காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்குப் பயம் இருந்தது! பதவி பறி போய்விடும் என்கிற பயம்! நம்மாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.   அவர்களின் பிள்ளைக்குட்டிகள் பிழைக்க வேண்டுமே! அது தானே அவர்களுக்கு முக்கியம்! 

கடந்த பொதுத் தேர்தலில், அரசியலில் அபூர்வமாக, பக்காத்தான் ஹராப்பான் கட்சி பதவிக்கு வந்தது. அவர்கள் தேர்தலில் வாக்களித்தபடி அவர்கள் ஆட்சி காலத்தில் இரண்டு ஏக்கர் நிலம் இந்துக்களின் ஈமச்சடங்குக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு,  மாநில ஆட்சிக் குழுவிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த திட்டம் நிறைவேறு முன்னரே ஆட்சி கைமாறியது! திட்டம் நிறை வேறவில்லை! 

இப்போது இந்த திட்டம் மீண்டும் பூஜ்யமாகி விட்டது! நிலமும் கைமாறும் நிலைமைக்குத் தயாராகி வருகிறது! என்ன ஆயிற்று? 

இங்கு ஈமச்சடங்கு செய்தால் எங்களது ஆத்மா சாந்தியடையாது என்பது ம.இ.கா.வினர்  வாதம்! ம.இ.கா. வினருக்கு எந்த காலத்திலும் ஆத்மா சாந்தியடையப் போவதில்லை! அதனாலென்ன மற்றவர்களுக்காவது சாந்தியடையட்டுமே என்பது தான் நமது வாதம்!

இப்போது 61-ஆண்டுகளுக்குப் பின்னர் ம.இ.கா.வினர் மீண்டும் மலாக்கா இந்துக்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய நிலத்தைத் தேட ஆரம்பித்திருக்கினறனர்!

சரி, அப்படியே, அவர்களுக்கு நிலம் கிடைத்தாலும் ஒரு விஷயம் நம்மை உறுத்துகிறது. செனட்டர் பதவி என்னாவது? அரசு சார்பு நிறுவனக்களில் பதவிகள் கிடைக்குமே, என்னாவது?டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ. டத்தோ - இப்படி எத்தனையோ விருதுகள் கிடைக்க வேண்டும்!  இவர்களின் சாதனைகளைப் பார்த்து பெண்டாட்டிகள் மகிழ வேண்டுமே! இந்த கனவுகள் என்னாவது?

இந்த ஆசைகள் எல்லாம் தவிர்ப்பது முடியாது தான்! இதற்குத் தான் அவனவன்  பிழைப்பை அவனவன் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படி  சமுதாயத்திற்குத் துரோகம் செய்யும் எண்ணம் வராது!

என்ன செய்வது? பிழைப்பு நாறித்தான் ஆக வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்!

ஆனால் நமக்குக் காரியம் ஆக வேண்டும். ஈமச்சடங்குகள் மரியாதைகுரிய முறையில் நடக்க வேண்டும்.

மாநில மக்கள் சீறி எழ வேண்டும். இந்த துடைப்பக்கட்டைகளைத் தூக்கி எறிய வேண்டும்! வேறு வழி தெரியவில்லை! சமுதாய துரோகிகளுக்கு சாக்கடையைக் காட்ட வேண்டும்! வெண்சாமரம் வீசிக் கொண்டு இருக்க முடியாது!

மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! மரியாதை கிடைக்க வேண்டும்!

Thursday 10 December 2020

அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

 அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! இதை நான் சீனர்களுக்குச் சொல்லத் தேவையில்லை!  ஆனால் இந்தியர்களுக்கு?  மிக மிகத் தேவை!

நம் நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்பது ஒன்றும் புதிதல்ல. எப்போது ஆளுங்கட்சி என்று ஒன்று தோன்றி விட்டதோ அப்போதே எதிர்கட்சியும் தோன்றி விட்டது. 

எதிர்கட்சி என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டையே விற்றுவிடுவார்கள்! அந்த அளவுக்கு ஆரசியல்வாதிகளின் அராஜகம் அதிகமாகி விட்டது! ஏன் நமது இந்திய சமூகமே பலவழிகளில் பல்லாங்குழி ஆடப்பட்டிருக்கிறது!  ஆனால் அது பற்றி இப்போது நாம் பேசப் போவதில்லை!

நாம்  எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தால் என்ன?  கட்சி என்பது கொள்கை சார்ந்தது. கருத்து வேறுபாடுகள் என்பது சகஜம்.இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அதற்கும் நமது நட்புக்கும், நமது உறவுக்கும் சம்பந்தமில்லை. நாம் எப்போதும் போல நண்பர்கள் தான்.

அதுவும் குறிப்பாக இனம் சார்ந்த சில விஷயங்களில் நாம் நமக்கு எதிராக நடந்து கொண்டு எதிரிகளாக நடந்து கொள்ளக் கூடாது. ஆனால் நாம் அப்படி நடந்து கொள்ளுகிறோம்!

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் என்கிற பிரச்சனை வரும் போது நாம் ஒன்றிணைய வேண்டும். மொழி என்று வரும் [போது நாம் ஒன்று சேர வேண்டும். இந்தியர்களின் இடுகாடு, சுடுகாடு என்று வரும் போது நாம் பிரிந்து செல்வது கேடு.  இந்து கோவில்கள் என்று வரும் போது நாம் ஒருவர். காரணம் இவைகள் எல்லாம் நமது சமுதாயத்தைப் பாதிக்கும் விஷயங்கள். இதற்கெல்லாம் இரு அணிகளாக இருந்தால் "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்!" என்பார்களே அது போல அவர்கள் கூத்தாடுவார்கள் நாம் தோல்வியாளர்கள்!

அரசியல்வாதிகளை நாம் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகள்என்று  வரும் போது ஒன்று சேருங்கள்.  அது சீனர்களிடம் இயற்கையாகவே இருக்கிறது. அது ஏன் நம்மிடம் இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. சீனர்களைப் போலவே நாம் படித்தவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் படிக்காதவர்கள் போல் நடந்து கொள்ளுகிறோம்.

அரசியல்வாதிகளே! கொஞ்சம் சிந்தியுங்கள்! சமுதாயம் தான் முக்கியம்!

மலாய் புரியவில்லையா?

 கெடா மாநில மந்திரி பெசார் "இந்தியர்கள்  மலாய் மொழியை முறையாக காற்காதவர்கள்!"  என்று கூறியிருக்கிறார்!

நமக்கும் அது ஆச்சரியமான செய்தி தான்! நாம் மலாய் மொழியைக் கற்பது என்பது எந்த வெளி நாட்டிலும் இல்லை. எல்லாம் உள்ளூரில் தான், மலேசிய பள்ளிக்கூடங்களின் தான்! எல்லா இனத்தவரும் ஒரே விதமான கல்வியைத்தான் பெறுகின்றனர்.

மந்திரி பெசார் முகமட் சனுசி கூட இங்கிலாந்திலோ, அமரிக்காவிலோ மலாய் மொழியைக் கற்றிருப்பார் என்று நாம் நினைக்கவில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்தோனேசியாவில் அவர் கல்வி கற்றிருப்பார்.

இந்தோனேசியாவில் தான் அவர் கல்வி கற்றிருப்பார் என்றால் அது நமது குற்றமல்ல. அது அவரின் குற்றம். மலேசியா-இந்தோனேசியவில்  பேசப்படும் மலாய் மொழியில் வார்த்தைகளில், உச்சரிப்பில் ஓரளவு வித்தியாசங்கள் உண்டு.

தன் மேல் குற்றத்தை வைத்துக் கொண்டு இந்நாட்டில் மட்டுமே மலாய் மொழியைக் கற்ற இந்தியர்களைக் குற்றம் சொல்லுவது மிகவும் கண்டிக்கக்தக்கது.

மந்திரி பெசார் நாட்டின் சரித்திரம் அறியாதவரா?  மலாய் மொழியின் தந்தை எனப்படும் முன்ஷி அப்துல்லா யார்? அவர் ஒரு தமிழர். இப்படி மலாய்க்காரர்களுக்கே மலாய் கற்றுக் கொடுத்த தமிழ் இனத்தை "மலாய் அறியாதவர்கள்!" எனக் கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்று தான் நாம் சொல்ல வேண்டும்!

மந்திரி பெசார் இந்தியர்களை இழிவு படுத்த வேண்டும் என்னும் நோக்கத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது!

மந்திரி பெசார் என்பவர் அந்தந்த மாநிலத்தின் தந்தை போன்றவர்.  அனைவருக்கும்,  அனைத்து இனத்துக்கும், தலைவர். ஆனால் கெடா மந்திரி பெசார்  அப்படி நடந்து கொள்ளவில்லை. இந்திய இனத்தை மட்டும் சீண்டிப்பார்க்கிறார்.   தனது பலத்தைக் காட்டி பயமுறுத்துகிறார்

இப்படியெல்லாம் இந்தியர்களைத் தொடார்ந்தாற் போல தொல்லைகள் கொடுத்து ஒடுக்கப் பார்க்கும் ஒரு நிலையை மந்திரி பெசார் உருவாக்கி வருகிறார்!  

இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ மந்திரி பெசார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களால் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. அப்படியே பிரச்சனைகள் இருந்தால் அவைகள் பேசித் தீர்க்கப்பட்டிருக்கின்றன. கொல்லைப்புற வழியாக வந்த இவருக்கு ஓர் இனத்தை இழிவாகப் பார்ப்பதும் பேசுவதும் எங்குக் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை!

இந்தியர்களுக்கு மலாய் தெரியவில்லை என்பது மலாய் மொழி ஆசிரியர்களைக் கேவலப்படுத்தும் ஒரு செயல். ஆமாம், சரியாகக் கற்றுக் கொடுத்திருந்தால் சரியாகத் தானே பேசுவார்கள்?

எவ்வளவு தூரம் போவார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday 9 December 2020

இனி மேல் தான் அமைக்கும்!

கோவில்கள் ஏன் உடைக்கப்படுகின்றன என்று கேள்விகள் எழுப்பினால் ஒர் உடனடி பதிலாக ஒரு பதிலை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கைவசம் வைத்திருக்கின்றனர்!

இப்போதும் தான் கைவசம் வைத்திருந்த பதிலைஅமைச்சர் உடனடியாக வீசி எறிந்தார்! நாளை கேட்டாலும், நான்கு நாள்கள் கழித்துக் கேட்டாலும், நான்கு ஆண்டுகள் கழித்துக்  கேட்டாலும் - அதே உடனடி பதில் கிடைக்கும்!

இதில் எந்த சமரசமும் இல்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், எந்த அமைச்சர் வந்தாலும் உடனடியாக இந்தப் பதிலைக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்!

ஆனாலும் கோவில் உடைப்புகள் தொடர்கின்றன.  எந்த ஒரு முடிவும் காணப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ "ஏனோ தானோ" என்று பதில்!  பொறுப்பற்ற பதில். அதற்கு  மேல் யாரும் ஒன்றும் பேச முடியாத பதில்!

இந்தியர்களை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என்று மார்தட்டும் ஆளுங்கட்சியினரும் அதற்கு மேல் பேசுவதில்லை.  அவர்களுக்கு அந்த பதிலே  போதும்! தற்காலிகமாக பெருமூச்சு விடுவதோடு சரி!

ஆனால் அப்படி ஒரு பதில்  அரசாங்கத்திலிருந்து வந்த பின்னர் பொறுப்புள்ள ஒருவன் என்ன செய்வான்? இது நமது வழிபாடு சார்ந்த பிரச்சனை அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் அதுவும் நிரந்தர தீர்வு காண வேண்டும். சும்மா இழுத்துக் கொண்டே போகக் கூடாது  என்று மக்களின் நலனில் அக்கறை உள்ளவன் எண்ணுவான்.

ஆனால் ஆளுங்கட்சியில் அப்படி ஓர் அரசியல்வாதியை நாம் இது நாள் வரை கண்டதில்லை என்பது தான் நமது பிரச்சனை! இனி மேலும் காண முடியுமா?  முடியாது! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது! கட்டெறும்பு கூட ஆபத்து என்றால் துள்ளி எழும்! 

இனி மேல் அரசாங்க என்ன செய்யப் போகிறது என்பதைச் சொல்லி விட்டார்கள்! நாமும் கேட்டுக் கொண்டோம். நமது அரசியல்வாதிகளும் கேட்டுக் கொண்டார்கள். 

அடுத்ததொரு கோவில் இடிக்கும் வரை நாமும் சும்மா இருப்போம், அவர்களும் சும்மா இருப்பார்கள்! உடைத்த பிறகு கோவில் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து  அறிக்கை விடுவார்கள்.  நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்படும்.  அமைச்சர் மீண்டும்  ஒரு குழு அமைத்து பிரச்சனைக்குத் தீர்வு காண முற்சி செய்வோம் என்பார்!

இனி வரும் அந்த நாளை எதிர்பார்ப்போம்!

Tuesday 8 December 2020

பன்றிக்கு வந்த யோகம்!

 


ஆமை புகுந்த வீடும் அமினா நுழைந்த  வீடும் விளங்காது என்பார்கள்.

ஆனால் இப்போது காட்டுப்பன்றி ஒன்று பேரங்காடி ஒன்றில் வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பலர் ஆச்சரியமுற்றனர்; பலர் அச்சமுற்றனர்!

ஆமை வீட்டுக்கு ஆகாது! பன்றி? அதுவும் நாட்டின் நிர்வாகத் தலநகரான புத்ரா ஜெயாவில்! ஆகும் என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

நமக்கும் ஆச்சரியம் தான்.  மனிதர்களுக்காக பேரங்காடியா அல்லது மிருங்களுக்காக பேரங்காடியா என்கிற எண்ணம் வரத்தான் செய்யும்! ஆனால் அது தற்செயல்.  யார் மீதும் குற்றம் இல்லை.

பன்றிகளைப் பற்றி பேசும் போது நமக்குத் தெரிந்ததெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் வந்த பன்றிக் காய்ச்சல். ஜேயி என்று சொல்லப்பட்ட அந்தக் காய்ச்சலின் மூலம் பலர் அந்த நோயினால் இறந்திருக்கின்றனர்.

இப்போதும் நம் நாட்டில் 600 க்கும் மேற்பட்ட பன்றிப்பண்ணைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. சுமார் பதினைந்து இலட்சம் பன்றிகள்  வளர்க்கப்படுகின்றன. எல்லாம் உணவுக்காகத் தான்!

பன்றிப் பண்ணைகள் வைத்து பெரும் பணக்காரர்களான தமிழர்களும் இங்கு உண்டு. இன்றும் இருக்கின்றனர்.

ஆனால் காட்டுப்பன்றிகள் நிலை வேறு. அது வளர்க்கப்படுவதில்லை.  அதுவே காடுகளில் வளர்கின்றன.  காடுகளில் உணவுகள் இல்லையென்றால் தான் நாட்டுக்குள் வருகின்றன!  என்ன செய்வது? எல்லாப் வயிற்றுப்பாட்டுக்குத்தான்!

நமது நாட்டில் புலி,  காட்டுப்பன்றி இன்னும் பல விலங்குகள் அனைத்தும் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட விலங்குகளின் சட்டத்தின் கீழ் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பன்றிகள் வேட்டையாடுவது அனுமதிக்கப்படுகின்றது. வேட்டையாடப்படுகின்றது என்றால் மனிதர்களின் உணவுக்காகத்தான்! நமது உணவுக்காக மட்டும் அல்ல காடுகளில் வாழும் புலிகளுக்கும் அவை முக்கியமான உணவாகவும் விளங்குகின்றது!

எப்படியோ இந்தக்காட்டுப்பன்றி,  கொஞ்ச நேரத்திற்குப் பேரங்காடியைவச் சுற்றித் திரியும்   யோகம் அடித்திருக்கிறது. நமக்குத் தான் ஊரடங்கு; சுற்றித்திரியும் மிருகத்திற்கு என்ன ஊரடங்கு! ஆனால் பாவம்! இந்நேரம் அது போய்ச் சேர்ந்திருக்கும்.  மனிதனுக்கு,  மனிதன் மேலேயே  பாசம், பற்று, அன்பு இல்லை! மிருகத்திடமா அன்பைக்  காட்டுவான்!

பன்றிக்கு இது யோகமா?  ஊகும்! இது சோகம்!

Monday 7 December 2020

ஒரு போத்தலா! மூனு போத்தலா?

 கெடா மாநில மந்திரி பெசார் இந்தியர்களைப் பார்த்து நாக்கைப் பிடுங்குவது போல ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்!

"என்னா மச்சி! ஒரு போத்தல உள்ள தள்ளிட்டு மூனு போத்த அடிச்சவன் மாதிரி பேசற! மூனு போத்தல முழுசா பாத்துக்கினியா நீ!" என்று அவர் கேட்டிருக்கிறார்!

அந்த கேள்வி ம.இ.கா. வினரைப் பார்த்துக் கேட்டாலும் அது இந்தியர்களைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி தான். 

அவர் கேட்க வருவதெல்லாம் "நீ தண்ணி போட்டுட்டு வந்து கோயில் கோயிலா கட்டுவ! நாங்க பாத்துக்கினு இருக்கனுமா?" என்பது தான் அதன் சுருக்கம்!

உடைப்பட்ட கோவில்களுக்கு நீண்ட கால சரித்திரம் உண்டு. இன்றைய மந்திரி பெசாராக இருப்பவர் ஒரு நீண்ட கால மந்திரி பெசார் இல்லை. சமீப காலத்தில் வந்தவர்.

இவரது ஆட்சியில் உடைப்பட்ட கோவில்கள்,  ஏன்? இத்தனை ஆண்டுகள் மந்திரி பெசாராக இருந்தவர்கள்,  அந்தக் கோவில்களை உடைக்காமல் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கொடுத்தார்கள் என்பதை அவர் கொஞ்சம் ஆராய்ந்திருக்க வேண்டும்.

அந்த கோவில்களைப் பயன்படுத்தியவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை. அப்படி அந்த வழிபாட்டுத்தலங்கள் தீவிரவாதிகளை உருவாக்கி இருந்தால்  அவைகள் உடைப்பட்டிருப்பதில் நமக்கும் மகிழ்ச்சி தான்.

வழக்கமாக அந்தக் கோவில்களுக்குப் போகும் பக்தர்களினால் நாட்டுக்கு எந்த சேதாரமும் ஏற்பட்டதில்லை.  அவர்கள் ஆயுதங்களையோ, வெடிகுண்டுகளையோ தூக்கவில்லை; தாக்கவில்லை. வெளிநாடுகளுக்குப் போய் துப்பாக்கி ஏந்தவில்லை! ஒன்றுமே இல்லை என்பது தான் பிரச்சனையோ!

நமக்கு ஒரு கேள்வி உண்டு. மந்திரி பெசார் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாஸ் கட்சியின் கொள்கை என்ன என்பது நமக்குத் தெரியவில்லை. அந்தக் கட்சியின் சட்டதிட்டங்கள் என்ன, என்ன சொல்லுகிறது,  என்பதும் நமக்குத் தெரியவில்லை. பாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற வழிபாட்டுத் தலங்களை இல்லாமல் செய்து விடுவோம் என்று கூட சொல்லலாம்! நமக்குத் தெரியவில்லை. அதைத்தான் அவர் பரிட்சித்துப் பார்க்கிறாரோ?

இப்போதும் நமக்குத் தலை சுற்றுகிறது!  ஒரு போத்தலா! மூனு போத்தலா!

நம்மிடமும் நியாயம் வேண்டும்!

 ஒரு சில விஷயங்களில் நாம் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறோம் என்பது புரியாத புதிர்.

கோவில்கள் என்பது புனிதமான இடம். பொதுமக்கள் வந்து வழிபடுகிற இடம். அதற்குத் தனியாக இடம் வேண்டும். அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அது ஆகம முறைப்படி கட்டப்பட்டிருக்க  வேண்டும். அதன் பின்னர் அந்த கோவில் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற கோவில் என்கிற தகுதியைப் பெறும்.

கோவில்கள் கட்டுவதற்கு பல சட்ட திட்டங்கள் உள்ளன.   குடியிருக்கும் நமது வீடூகளுக்கு முன்பகுதியில் கோவில்கள் கட்டுவது இறைவனை அவமதிக்கும் செயல். நமது வீடுகளில், ஒவ்வொருவர் வீட்டிலும், நமது குடும்பம் வழிபடுவதற்கு "சாமி அறை" என்றே பலர் வைத்திருக்கின்றனர். அப்படியே சாமி அறை இல்லாவிட்டாலும் நமது வழிபாட்டுக்கு ஒர் இடத்தை ஒதுக்கியிருப்போம்.  நமது வீட்டிலேயே நாம் ஒவ்வொரும் கோவிலை வைத்திருக்கிறோம். அது தான் முறை.

நமது குடும்பம் வழிபட ஒரு கோவில், அதுவும் வீடுகளின் முன்னே அல்லது தெருவில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையில், ஒரு கோவிலைக் கட்டி, நான் வழிபட, என் குடும்பம் வழிபட, என்று ஏதோ தனக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று நினைப்பது மிகவும் கேலிக்குரிய செயல்.  கோவில் கட்டுவதாலேயே புனிதம் வந்து விடாது! பணம் இருக்கிறது கோவில் கட்டுவேன் என்று சொல்லுவது திமிரைக் காட்டும்!

கோவில் என்பது நமது பணத்திமிரைக் காட்டும் இடமல்ல! அதற்குப் பதில் நாலு  ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது தான் உண்மை.

கோவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக சொந்தமாக கோவில் கட்டுவேன் என்பது முட்டாள் தனம். கோவிலுக்குப் போவது இறைவனை வணங்க, நிர்வாகத்தை வணங்க அல்ல! அவ்வளவு தான்!

அதனால் கோவில்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டிக் கொள்ளாதீர்கள்.  நியாயமாக நடந்து கொள்ளுங்கள்!

Sunday 6 December 2020

கானா குயில் இசைவாணி

                                                          Gaana Queen Isaivaani  

கானா பாடல்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவர்கள் ஆண் பாடகர்கள் தான்.

அதில் நமக்கு மிகவும் அறிமுகமான பெயர் என்றால் அது கானா பாலா. இன்னும் பலர் அந்தத் துறையில் முட்டி மோதி முன்னேறி கொண்டிருக்கின்றனர். அவர்கள் வளர வேண்டும். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்.

இப்போது அங்கும் ஒரு பெண் பாடகர் இருக்கிறார் என்று கேட்கும் போது அது கொஞ்சம் பிரமிப்பான விஷயம். அது நமக்குப் புதிய செய்தி என்பதில் ஐயமில்லை.

அவர் தான் கானா பாடகி இசைவாணி."BBC செய்தி நிறுவனம் தேர்ந்தெடுக்கும் உலகின் தலைசிறந்த 100 பெண்கள் 2020" பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தமிழ்ப்பாடகி இசைவாணி.

உலகில் தலைசிறந்த  100 பெண்கள் என்பதை பிபிசி  தேர்ந்தெடுக்கும் முறை:  சவால்களை முறியடிப்பவர்கள்,  ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தானும் தான் சார்ந்த  சுமூகத்தினைரையும் முன்னேற்றப்பாதைக்கு வழி காட்டுவது - இப்படி மற்றவர்களுக்கு வழி காட்டும் பெண்களைத் தெர்ந்தெடுத்து அவர்களைக் கௌரவிப்பது தான் பிபிசி அவர்களுக்குக் கொடுக்கும் ஓர் அங்கீகாரம். பிபிசி இதனை 2013 ஆண்டிலிருந்து செய்து வருகிறது.

பிபிசி  கொடுக்கும் அந்த கௌரவம் இந்த ஆண்டு இசைவாணிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இசைவாணி சென்னையைச் சேர்ந்தவர். இயக்குநர் பா. ரஞ்சித் நடத்தும் இசைக் குழுவான Casteless Collective இசைக்குழுவின் முக்கியமான பாடகி. கானா பாடல்கள் பாடி - பாடுவதற்கு ஆண் என்ன, பெண் என்ன - என்று அனைத்துத்  தடைகளையும் தகர்த்தெறிந்தவர்!

இந்த பிபிசி யின் அங்கீகாரம் என்பது உலகளவில் அவருக்கும் அவரது குழுவினருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. 

இவரது வெற்றி நமது சமுதாயத்தின் வெற்றி!


                                   இசைஞானி இளையராஜாவுடன் இசைவாணி

இன்னும் பல விருதுகள் பெற்று பெருமைபட வாழ இறைவனை வாழ்த்துவோம்!

Saturday 5 December 2020

ரசம் கூட மருந்து தான்!

 

நமது இளைய தலைமுறை ரசம் என்றாலே "உவ்வே!" என்று சொல்லுகின்ற அளவுக்குத் தான்  வளர்க்கப்படுகின்றனர்! அது மட்டும் அல்லாமல் இப்போதுள்ள இளம் தாய்மார்கள் கூட "உவ்வே!" போடுகின்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்!

அதனால் இளம் தலைமுறையினரிடையே ரசத்திற்கு உள்ள மதிப்பு அவ்வளவு தான்.ஆனாலும் நிறைய விதிவிலக்குகளும் உண்டு. மறுப்பதற்கில்லை. அதுவும் எனது வீட்டிலேயே உண்டு. எனது பேரப்பிள்ளைகள் - மலாய், சீன, தமிழ் - பேரப்பிள்ளைகளுக்குத் தினசரி பெரும்பாலும் ரசம் வேண்டும். ஏதோ ஓரிரு நாள் தயிர் வேண்டும். அதுவும் ரசம் இல்லாவிட்டால் பெரும் ரகளையே நடக்கும்! அதற்குக் காரணம் எனது மனைவி ரசம் என்றால் "நோய் எதிர்ப்பு சக்தி" என்றும், கொரோனா வராது என்றும்  எப்போதும் அவர்களுக்கு நினைவூட்டுவார்.

ஆனல் இப்போது அதனை பெரிய தொழிலாகவும்,  கொரோனா தொற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தியாகவும்  பிரபலபடுத்தியிருக்கிறார் சமையல் கலைஞர் அருண் ராஜதுரை. இங்கல்ல, அமரிக்காவில்!

அருண் ராஜதுரை தமிழ் நாட்டில், அரியலூர் மாவட்டம்,  மீன்சுருட்டி என்னும் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவில் அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலில் பணிபுரிந்த போது இந்த ரசத்தைப் பிரபலப்படுத்தியிருக்கிறார். இந்த ரசத்தை  கொரோனா தொற்றின் எதிர்ப்பு சக்தியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நியு யோர்க், நியு ஜெர்சி மற்றும் கனடாவின் அவர்களின் கிளை உணவகங்களிலும் ரசம் வெகுவாகப் பாராட்டுப்பட்டதும் அல்லாமல் கொரோனா தொற்று நோயின் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் ஒன்றை நான் ஞாபகப்படுத்துகிறேன். நமது நாட்டில் இந்தியர்களுக்குப் பெரிய அளவில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு இல்லை என்கிற ஒரு கருத்து உண்டு. அதற்குக் காரணம் நமது உணவு முறை. நமது பாரம்பரிய உணவில் நாம் நிறையவே நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மூலிகை வகைகளைப் பயன்படுத்துகிறோம். இப்போதும் அது உண்டு. அது ரசத்திலும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. மஞ்சள், பூண்டு, மிளகு, வெங்காயம் அனைத்துமே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை. 

ஒரு வேளை வருங்காலங்களில் ரசம் நிரந்தரமாகவே கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படலாம். மருந்து கண்டு பிடித்தாலும் அதன் விலை  சராசரி மனிதனுக்குக் கட்டுபடியாகுமா என்பது கேள்விக்குறியே!

எப்படி இருப்பினும் ரசம் என்பது ஒரு மருத்துவம் என்பதை அருண் ராஜதுரை நிருபித்திருக்கிறார்.

ராஜதுரை பாராட்டுக்குரியவர். "உவ்வே!" என்று சொல்லப்படுகின்ற ரசத்தை  உயரிய இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்! அவரும் உயர்ந்திருக்கிறார்! ரசமும் ஒருவரை உயர்த்தும் என்பது இப்போது தான் நமக்குப் புரிகிறது!

தேவை எல்லாம் ஆர்வம் மட்டுமே!

 எந்தத் துறையில் நமக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறை தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

இப்போது நம் முன்னே உள்ள எடுத்துக்காட்டு: இந்தியாவின்,  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் என்னும் பெயர் கொண்ட தமிழக இளைஞர்.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். எனக்கும் கிரிகெட்டுக்கும் வெகு தூரம்.    அது பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை! கடந்து சில தினங்களாக நடராஜன் என்னும் பெயர் அடிபட்டதால் அந்த நடராஜனைப் பற்றித் தெரிந்து கொள்ள கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன்.


மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் நடராஜன்.  நடை பாதையில் ஒரு சிறிய பத்துக்கு பத்து  சிமெண்ட் அட்டை வீடு. வீட்டு முன்னே  ஓரு  சிறிய கடை அப்பா இன்றும் கூலி நெசவாளி. அம்மா அவருடைய கறிக்கடையில் கோழிகளுக்குச் சில்லி போட்டு விற்பனை செய்பவர். பதினைந்து ஆண்டுகள் நல்லதொரு சாப்பாடு சாப்பிடாத  குடும்பம்.  ரேஷன் கடை அரிசி, ரேஷன் கடை எண்ணைய். இதுவே போதும் நடராஜனின் வறுமையைப் புரிந்து  கொள்ள.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை தான் அவர்களால் படிக்க வைக்க முடிந்தது.  அது இலவச கல்வி. அதன் பின்னர் நடராஜனின் நண்பர் ஜெய்பிரகாஷ் தான் அவருக்கு  வழிகாட்டியாகவும், கல்லூரி வரையிலும் படிக்க வைத்திருக்கிறார்.

ஒரு முறை அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டும் கூட அவர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தவில்லை. விளையாடுவதற்குத் தேவையான சப்பாத்தும்  இல்லாத நிலை.அப்படி இருந்தும்  அத்துணை ஆர்வத்தையும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் காட்டியிருக்கிறார். அவரது குடும்பத்தினர் அவரது கிரிக்கெட் ஆர்வத்துக்கு என்றும் தடையாய் இருந்ததில்லை. அத்தனை கஷ்டத்திலும் அவரை வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவுமில்லை.

அவர்கள் வறுமையில் வாடியபோது அவர்களை ஊரார் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அவர்களாகவே வந்து பேசுகிறார்கள் என்கிறார் அவரின் தாயார் சாந்தா!  உங்கள் மகன் தானா என்று கேட்கிறார்களாம்! பெருமையாய்  இருக்கிறது என்கிறார்!

நாம் வறுமையில் பிறக்கலாம். ஆனால் அதனை நம்மால் மாற்றியமைக்க முடியும் என்பது தான் நடராஜனின்  வாழ்க்கை சொல்லுகின்ற பாடம்.

விளையாட்டுத் துறையில், மிக ஏழ்மை நிலையில் இருந்த பலர், தங்களது திறமையின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதில் பி.டி.உஷா நமக்கு மிகவும் அறிமுகமானவர்.  கேரள மாநிலத்தவர். தையல் கடை வைத்து பிழைப்பு நடத்தியவர் தந்தை.  ஆசிய தடகள போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தவர். வறுமையின் பிடியிலிருந்து அவர் குடும்பத்தை மீட்டு விட்டார்.

அடுத்து மேரி கோம் பற்றி சொல்லலாம். குத்துச்சண்டை வீராங்கனை. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.   விவசாய குடும்பம்.  நிலங்களில் கூலி வேலை.  குத்துச்சண்டை பின்னணி இல்லாதவர். ஆனால் குத்துச் சண்டையில் அவர் பல தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்டவர். இன்று வெற்றி வீராங்கனையாக உலா வருகிறார்.

இப்படி பல உண்மைச் சம்பவங்கள் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏழ்மையில் பிறக்கலாம். ஆனால் அதனை மாற்றியமைப்பது என்பது நம்மால் முடியும்.

நடராஜன் இன்னும் பல சிறப்புக்களைப் பெற்று தமிழர்களுக்கும்   நாட்டுக்கும் வீட்டுக்கும்  பெருமை சேர்க்க  வேண்டும். வாழ்க வளமுடன்!

நன்றி: பிபிசி


Friday 4 December 2020

இலஞ்சம் கொடுப்பதில்லையோ!

 ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், கெடா மாநில மந்திரி பெசாருக்கு,  சரியான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

"சட்டவிரோதமாக கட்டப்பட்ட இந்து ஆலங்களை இடித்துத்  தள்ளுவேன் என்று சூளுரைக்கும்  மந்திரி பெசார், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகளை இடித்துத் தள்ளுவாரா, உடைக்கும் தைரியம் உண்டா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் ம.இ.கா. தலைவர், விக்னேஸ்வரன்!

சபாஷ்! இது சரியான கேள்வி. ஏன், அவரால் முடியாதா? என்று நமக்கும் தான் தோன்றுகிறது.

கோவில்களை உடைப்பதால் சொர்க்கம் போகலாம் என்று எந்த ஒரு மதமும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை! அப்போதும் சொல்லவில்லை!  இப்போதும் இல்லை! அப்போதும் இல்லை! இனி மேலும் இருக்கப் போவதில்லை!

"வழிபாட்டுத் தலங்களை உடைத்தால் சொர்க்கம் போகலாம்" என்று மதங்கள் சொல்லவில்லை. மதம் பிடித்தவர்கள் சொல்லியிருக்கலாம்!

சரி, நமது மாண்புக்குரிய கெடா மந்திரி பெசார் இந்த இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள் பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகளினால் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

சமீப காலங்களில் சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்னைகள் அனைத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள் தான் காரணம்.

கோவில்கள் உடைபட மெனக்கெடும் மந்திரி பெசார் சட்டவிரோது தொழிற்சாலைகளை உடைக்க  அவர் ஏன் மெனக்கெடவில்லை? நாமும் கேட்கிறோம். இது போன்ற சட்டவிரோத தொழிற்சாலைகள் திறந்த வெளியில் குப்பைகளைக் கொட்டுவதால் ஏற்படும் காற்றுத் தூய்மைக்கேடு மிகச் சாதாரண விஷயம் என்று நினைக்கிறாரா மந்திரி பெசார். 

அல்லது வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் சட்டவிரோத தொழிற்சாலைகள், சட்டவிரோதமாக இயங்கினாலும் அவர்கள் மூலம் கிடைக்கின்ற சட்டவிரோத மாமூலை எப்படித் தவிர்ப்பது என்று நினைக்கிறாரா? 

இந்த இடத்தில் தான் நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு வேளை எல்லா வழிபாட்டுத் தலங்களும் அரசாங்கத்திற்கு மாமூல் கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ, தெரியவில்லை! அப்படி நினைத்தாலும் தப்பில்லை.  எல்லாவற்றிலும் அப்படித் தானே நடக்கிறது! இங்கு மட்டும் நடக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை! 

இப்போது சம்பந்தப்பட்டவர்கள் மாநில மந்திரி பெசாருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சர்வ சமய மன்றம் இதற்கான முன்னெடுப்பை எடுக்க வேண்டும். மந்திரி பெசார் என்ன நினைக்கிறார் அவருக்கு என்ன தேவை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோவில்கள் உடைபடுவதிருந்து தடுக்கப்பட வேண்டும். அது தான் முக்கியம்.

இது இலஞ்சம், ஊழல் என்று சொல்ல வேண்டாம். தேவை என்னவோ அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்!

Thursday 3 December 2020

இது சரியா தவறா?

 இது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை! இது முடியுமா முடியாதா என்பது எனக்குத் தெரியவில்லை! இது பயனா அல்லது பயனற்றதா என்பது எனக்குத் தெரியவில்லை!

இப்படி ஆயிரம் கேள்விகள் உள்ளன. ஆனால் இது சரியே என்பது தான் எனது கருத்து. ஆனால் எனது கருத்தை அரசியல் கொள்ளைக் கூட்டம் ஏற்றுக் கொள்ளாது  என்பது தான் துயரம். அதற்காக வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருக்க முடியுமா?

நம்மால் முடியாவிட்டாலும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதி மக்கள் துணிச்சலானவர்கள். அவர்களைப்  பாராட்டலாம்; பாராட்டுகிறேன்!

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலியின் மீது நம்பிக்கை மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அது என்ன மோசடி?  அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீறியிருக்கிறார்.  ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக - ஊழலலில் திளைத்துப் போன அம்னோ கட்சியைக் கடுமையாக எதிர்த்து,  14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி மலர பிரசாரம் செய்தார். அதனால் தான் "எங்கள் தொகுதி மக்கள் அஸ்மின் அலிக்கு ஆதரவு கொடுத்ததோடு அவரை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்தோம்."

ஆனால் அஸ்மின் அலி,  அவர் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார். அவர் கட்சி மாறினார். கட்சி மாறியது மட்டும் அல்லாமல் எந்தக் கட்சி ஊழலின் ஊற்றூக்கண் என்று சொன்னாரோ இன்று அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்! இப்போதும்  அவர் மேடைகளில் "ஊழல்"  என்று முழங்கிய அந்தக்  கட்சி ஊழல் மிக்க கட்சி என்கிற பெயரோடு தான் மக்களிடையே விளங்கிக் கொண்டிருக்கிறது! 

இப்படி ஒரு வழக்குப் போடுவதால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்று நமக்குத் தெரிகிறது.  பயன் இருக்கிறதோ இல்லையோ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் கூட "நான் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுகிறேன்" என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்!

ஆனால் இந்த வழக்கினால் எந்தப் பயனும் இல்லை என்று சொன்னாலும் எப்படி,  அப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்? அங்கும் ஆளுங்கட்சி வைத்தது தான் சட்டம்! ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் அஸ்மின் அலி தங்களுக்கு ஆபத்தானவர் என்று நினைத்தால் அவருடைய நிலை ஆபத்தாக முடியும்!

அரசியலில் எதுவும் நடக்கலாம். இங்கு நண்பன், விரோதி என்கிற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது! அங்கு உள்ளதெல்லாம் ஒரே கொள்கை: பணம், பதவி மட்டும்தான்!

ஆனால் இது ஒரு சரியான ஆரம்பம். இதற்குப் பதிலாக  நாடாளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்து தீர்மானம் போடலாமே என்று நினைத்தால் அங்கும் இந்தக் கொள்ளைக் கூட்டம் அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை! இதில் மட்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்!

இது சரியா, இது வெற்றி பெறுமா என்று கேட்டால், பதிலில்லை! இந்த வழக்கு வெற்றி பெற்றால் அது ஒரு முன்னுதாரணம்! வெற்றி பெறாவிட்டால் வெட்டி வேலை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்! ஆனாலும் முயற்சி செய்யட்டுமே, என்ன கெட்டுவிடப் போகிறது? நறுக் என்று நாக்கைப் புடுங்கவது போல  நாலு வார்த்தைகளையாவது கேட்கலாமே!

இது சரியா, தவறா என்று கேட்டால், பிரச்சனை அதுவல்ல, நாலு பேர்  அறிய வேண்டும் என்பது தான் முக்கியம்! இது சரியே!

Wednesday 2 December 2020

கேட்க நாதியில்லை!

 ஆமாம், கேட்க நாதியில்லை என்று  சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

கெடா மாநிலத்தில் அராஜகங்கள் தொடர்கின்றன. மீண்டும் ஓர் இந்து கோவில் தரைமட்டமாகப்பட்டிருக்கின்றது.

இந்து கோவில்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள்  பாக்கிஸ்தான் நாட்டிலே  நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த நாடு எந்த ஒரு காலத்திலும் வளர்ச்சி பெற்ற நாடு என்று இதுவரை நாம் சொல்லக் கேட்டதில்லை! அது ஒரு சாபக்கேடு.

கோவில்களை உடைப்பது என்பது அந்தந்த நாட்டுக்கு வருகின்ற சாபக்கேடு. கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என்றாலே புனிதம் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை.

கோவில்களை உடைப்பது எளிது. அதிகாரத்தில் இருப்பவர்கள்  அதனை எளிதாகச் செய்ய முடியும்.  

நான் ஒன்று கேட்கிறேன். உங்களால் ஊழலை உடைக்க முடியுமா?   ஊழலை ஒழிப்பதற்கு எந்த செலவும் இல்லை.  நகராண்மை கழகத்தினர் தேவை இல்லை. இருட்டு நேரத்தில் சென்று ஒளிந்து ஒளிந்து உடைக்க வேண்டியதில்லை. காவல்துறையின் சேவை தேவை இல்லை.

ஆனால் ஒரு கோவிலை உடைக்க 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். காவல்படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காக செலவு செய்யப்பட்ட பணம் கோடி கோடி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சில இலட்சங்களாக இருக்க வேண்டும்.  அதிலும் ஒரு சில பணியாளர்கள் பயத்தோடு தான்  பக்தியோடு அல்ல - அந்த வேலையைச் செய்ய பணிக்கப்பட்டிருப்பர். 

ஆனால் ஊழல் அப்படி அல்ல. மிக மிக எளிது. எத்தனை பேர், எத்தனை அரசியல்வாதிகள்  "நான் கை சுத்தமானவன்"  என்று தலை நிமிர்ந்து   சொல்ல முடியும்?  இதற்குப் பணம் தேவை இல்லை.யாருக்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை!  தேவையெல்லாம் ஒன்று தான். ஒழுக்கம். ஆம், அது மட்டும் தான். 

இப்போது என்ன நடக்கிறது என்பதை நாம்  தெரிந்து கொண்டோம். அரசியல்வாதிகளை நாம் புரிந்து கொண்டோம்.

எல்லாம் தெரிந்தும் நாம் அதே அராஜகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கிறோம்.

இப்போது உடைபடும் கோவில்களுக்காக யார் பேசுகிறார்கள்? மத்தியிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம். அவர்கள் சொன்னால் எடுபடாதா! மத்தியில் உள்ளவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாதா?

கேட்க நாதியில்லை! வேறு என்ன சொல்ல! கேட்க நாதியுள்ளவர்களையாவது தேர்ந்தெடுங்கள்! அதைத் தான் சொல்ல முடியும்!

`

Tuesday 1 December 2020

அஸ்மின் அலி என்ன செய்கிறார்?

 இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்குக் காரணகர்த்தா என்றால் அது அஸ்மின் அலி தான்!

மற்றைய அரசியல்வாதிகளைப் போல அவ்ருக்கும் "ஏன், நான் பிரதமராகக் கூடாது?" என்கிற ஆசை தீடீரென அவருக்கு ஏற்பட்டிருக்கிறது!! அப்படி ஒரு ஆசை அவருக்கு இருக்கிறது என்பது அதற்கு முன்னர் யாருக்கும் தெரியவில்லை.

அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் உடன் கூடி இருக்க வேண்டிய சூழலலை அவர் ஏற்படுத்திக் கொண்டார். டாக்டர் மகாதிருக்கு,  அவருக்கு அடுத்து,   பிரதமராக அன்வார் இப்ராகிம் வருவதை அவர் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டாலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொள்கைக்கு ஏற்ப அன்வாரை அவர் பெயரளவில் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் இங்கு தான் சிக்கல் ஏற்பட்டது.  அஸ்மின் அலி, மகாதிர்-அன்வார்- ரிடையே ஏற்கனவே இருந்த பகமையை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர்களிடையே இருந்த விரிசலை ஊதி ஊதிப்  பெரிதாக்கி அவர்களின் பகமையை வளர்த்து விட்டார். அவர்களின் பகமையை வளர்த்து, தனது பிரதமர் ஆசையை டாக்டர் மகாதிரின் மூலமே வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்!

ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை! இனி மேலும் நிறை வேற வாய்ப்பில்லை! இடையே முகைதீன் யாசின் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி விட்டார்!  அவருக்கும் பிரதமர் ஆசை இருந்திருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை! குழம்பிய குட்டையில் அவர் பிரதமராகிவிட்டார்!

பிரதமர் பதவிக்கு எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அன்வார் இப்ராகிம் வழக்கம் போல பின்னுக்குத் தள்ளப்பட்டார்! அன்வாருக்குத்  தற்காலிக பிரதமர் என்பதில் ஆசை இல்லை. நிரந்தர பிரதமர் என்பதில் தான் அவர் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.

ஆமாம், அஸ்மின் அலியின் இன்றைய நிலை என்ன?  எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் இன்றைய அமைச்சரவையில் அவர் அனைத்துலக தொழில்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

இனி பிரதமராக வரும் அளவுக்கு அவரால் உயர முடியுமா என்று கேள்வி எழுந்தாலும் அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் இப்போது மற்ற மலாய் கட்சிகள் அவரைப் புரிந்து கொண்டு விட்டனர்!  தங்களின் "பிரதமர்" ஆசைக்கு வேட்டு வைப்பவர் என்றே அவரைப் பற்றியான எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது! அதனால் அவர் பெரும்பாலும் வருங்காலங்களில் ஒதுக்கப்படுவார் என்று நாம் நம்பலாம்.

ஓர் ஆட்சி திறம்பட நடந்து கொண்டிருக்கும் போது அதனை ஒழித்துக்கட்டி ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியவர் அஸ்மின் அலி. அது ஒரு துரோகம் என்று அவர் அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அஸ்மின் அலி செய்ய வேண்டியதை செய்து விட்டார். இனி செய்ய ஒன்றுமில்லை!

அடுத்த தேர்தல் தான் எப்போது?

 அம்னோ கட்சியினர் கேட்டுக்  கொண்டதற்கு இணங்க, இன்றைய ஆட்சியில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் பிரதமர் முகைதீன் யாசின் நிறைவேற்றி விட்டார் என நமபலாம்.

அம்னோவினர் பல பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.  துணைப்பிரதமர் பதவி வெகு சீக்கிரத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வரும். அம்னோவின் அந்த மாபெரும், ஊழல் அற்ற, மனிதர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.   அடுத்த நிதி ஆண்டில் அரசியல் நியமனங்களுக்காக -  இவர்களுக்காகவே -  கூடுதலான  நிதிகளையும் பிரதமர் ஒதுக்கிவிட்டார்.

ஆனாலும் இவர்கள் இன்னும் கேள்விகள் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்! எப்போது தேர்தல் வரும் என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் இவர்களின் கேள்விகள் மனதிலிருந்து வருகின்றனவா அல்லது உதட்டிலிருந்து வருகின்றனவா என்று பார்த்தால் இப்போது அவர்கள் பேசுவது மனதிலிருந்து வரவில்லை என்றே  சொல்லலாம்.

காரணம் உண்டு. இப்போது அவர்கள் கேட்டவை கிடைத்துவிட்டன. இன்றைய அரசாங்கம் ஏறக்குறைய அம்னோ கட்சியின் அரசாங்கம் என்று தாராளாமாகச் சொல்லலாம். அதனால் இப்போது அடுத்த தேர்தல் என்பது அவர்களிடம் கொஞ்சம் பலவீனமாகி  வருகின்றது. அடுத்த  தேர்தல் காலம் வரும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது.

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தேர்தல்! தேர்தல்! என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர்! இது சும்மா வாய்ச் சவடால் என்று சொல்லலாம்!

இப்போது மீண்டும் ஒரு திருப்பம்.  கோவிட்-19 தொற்று சீரடைந்து விட்டால் தேர்தல் வைக்கலாம் என்று இப்போது பேச ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது நமக்கும் ஒரு பயம் வந்து விட்டது. அடுத்த தேர்தல் வரை, அதாவது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு, கோவிட்-19 தொடரும் என்று நினைக்கத் தோன்றுகிறது!

இது தான் இப்போதைக்கு நமக்குக் கவலை தரும் விஷயம். கோவிட் 19 - ம் தொடர்ந்து நம்மிடையே இருக்கும்படி அரசாங்கத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்!

பிரதமர் முகைதீன் முடிந்தவரை தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டார். உடனடியாக அரசாங்கம் கவிழும் அபாயமில்லை. அதனால் தேவையெல்லாம் கோவிட்-19 வைத்தே தனது ஆட்சியை நீட்டித்துக் கொள்வார் என்பது உறுதி.

திடீர்த் தேர்தல்  எதுவும் நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆக, உலகிலேயே கோவிட்-19 தொற்று ஒழிக்கப்பட்டாலும் நமது நாட்டில் அந்த தொற்று இன்னும் மூன்று ஆண்டு காலம் நீடிக்கும் என்பதே சரியாக இருக்கும்!

தேர்தல் இப்போது இல்லை!

Monday 30 November 2020

தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியங்கள் தொடர வேண்டும்!

 முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கைப் பற்றி நமக்குப் பலவித அபிப்பிராயங்கள் உண்டு.

அவரின் மிகப் பெரிய பலவீனம் ஊழல் தான்! அது அவரது மனைவியின் ரூபத்தில் வந்து அவருக்கு மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது.

அவரது முன்னாள் பெருமைகளை எடுத்துச் சொல்ல மேடை அமைத்துக் கொடுப்பதில்,  மக்கள் சக்தி இயக்கத் தலவர்  டத்தோஸ்ரீ தனேந்திரனும்  ஒருவர்.  அது அவரின் எஜமான விசுவாசத்தைக் காட்டுகிறது. நமக்கு அதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

முன்னா பிரதமர் நஜிப் அவர்களைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வருகின்றன. "நான் தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிகமாக உதவியிருக்கிறேன்"  என்று அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே போல இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் அவர் அதிகமாக உதவி செய்திருப்பதாக அவரே சொல்லுகிறார்.

இந்தியர்களின் நலனுக்காக நிறுவப்பட்ட "செடிக்" அமைப்பைப்பற்றித் தான் அவர் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக தான் உதவியதாகக் கூறுகிறார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்

.செடிக் அமைப்பைப் பற்றி நமக்கு ஏற்கனவே ஓரளவு தெரியும். பெரும்பாலான செடிக் நிதி உதவி ம.இ.கா.வினருக்குத் தான் சேர்ந்தது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அந்தப் பணம் இந்தியர்களுக்கு முழுமையாகப் போய்ச்  சேராமல்,  அந்த நிதி மீண்டும் அரசாங்கத்திற்கே ஒப்படைக்கப்பட்டதாக சொல்வதும் உண்டு.  அதாவாது நிதி உதவி பெற இந்தியர்களில் யாரும் தகுதி பெறவில்லை என்பதால் அந்தப் பணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதாவது அந்த நிதி  பிரதமரின் சொந்த பயனுக்காக ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது!

அதனால் இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது ம.இ.கா. அடுத்து பிரதமர் என்பதோடு அது முடக்கப்பட்டு விட்டது! அது இந்தியர்களின் வளர்ச்சி அல்ல!

அதனை விடுவோம். தமிழ்ப்பள்ளிகளுக்கு அவர் உதவி இருக்கிறார் என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம். அவர் காலத்தில் புதிய தமிழ்ப்பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன. குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் அது மனநிறைவானது என்பதில் ஐயமில்லை.

இன்னொன்றையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம். அவர் காலத்தில் மெட் ரிகுலேஷன் கல்வி,  போலிடெக்னிக் (தொழிற்கல்வி) போன்ற கல்விக்கூடங்களிலும் இந்திய மாணவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டன; இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்த முன்னாள் ம.இ.கா. தாலைவர் டத்தோஸ்ரீ  G.பழனிவேல் அவர்களையும் நினைவு கூறுகிறோம்.

ஆக, நாம் முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கான அவரது சேவை மறந்து விடவில்லை. அதனை நாம் பாராட்டுகிறோம். ஆனால் அவரது ஊழலைத் தான் நாம் வெறுக்கிறோம்.

இப்போது நமது கேள்வியெல்லாம்: இப்போதும் அதே ம.இ.கா. இப்போதும்  அதே அவர்களின் ஆட்சி.  ஏன் இப்போது இந்த  தேக்க நிலை? குறிப்பாக கெடா மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மலாக்காவில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரிகிறது. மத்தியில் என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆனால் நஜிப் அவர்களது தலைமையில் இனி ஆட்சி அமையும் என்பதை ஏற்பதற்கில்லை. அது நடவாத காரியம்.  இனி அவரது அளுங்கட்சி அவரது பணியைத் தொடர வேண்டும். தொடருமா என்பது தான் கேளவி.

அது தொடராத வரை நஜிப் அவர்களின் புகழைப் பாடலாம்!


Sunday 29 November 2020

தடுப்பு மருந்து உறுதிச் செய்யப்பட வேண்டும்!

 வெகு விரைவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கான மருந்துகள் நமது ஊர் எல்லைகளை அலங்கரிக்கும் என்னும் செய்திகள் நமக்கு ஆறுதலாக இருக்கின்றன.

என்ன செய்வது? உலகமே தொற்று நோயினால் துவண்டு போய்க் கொண்டிருக்கிறதே  தவிர இதுவரை எந்த ஒரு பயனான கண்டுபிடிப்புக்களும் வெளியாகவில்லை. 

இந்த நேரத்தில் சீனா தனது கண்டுபிடிப்பை நமது நாட்டில் அறிமுகப்படுத்தப் போகிறது. அதாவது நாம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தப் போகிறோம்.  அது  நல்ல  செய்திதான்.

நிச்சயமாக அந்த மருந்தை நமது நாட்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்த பின்னரே அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்.

ஆனால் சீனாவின்  பொருள்கள் என்றாலே நமக்கு இயற்கையாகவே கொஞ்சம்  அச்சம் எழத்தான் செய்கிறது. தரமற்ற பொருள்களுக்குப் பெயர் போனவர்கள் சீனர்கள். அதுவும் இலஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளை நாம் கொண்டிருந்தால் சொல்லவே வேண்டாம்.  தரமற்ற மருந்துகளைத் தான் நாம் வாங்க வேண்டி வரும்!  அதனைத்தான் நாம் பயன்படுத்தப்பட வேண்டி வரும். பிறகு தரமில்லை என்று சொல்லி கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படும்!  இதெல்லாம் நடக்காது என்று சொல்ல முடியாது. ஒரு சில நாடுகளில் அது நடந்திருக்கிறது. 

சீனர்கள் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. யாராக இருந்தாலும் அவர்களைத் தங்களது வலைக்குள் சிக்க வைத்து விடுவார்கள்! அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் நடக்கும்.

நமக்கு வேண்டியதெல்லாம் தரமான மருந்துகள். அவ்வளவு தான்.  ஆனால் நமது அரசியல்வாதிகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. அவர்களுக்கென்று தனி மருத்துவமனை, தனி சிகிச்சை அனைத்தும் தனி தனி! ஆனால் பொது மக்களுக்கோ அப்படி ஒரு நிலை இல்லை. அனைத்தும் அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன; இருக்கும்.

அதனால் அரசாங்கம் தனது ஆய்வுகளை ஒளிவு மறைவு இன்றி செய்ய வேண்டும். அது மக்களுக்கும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.  பொது மக்களுக்கு நல்ல சிகைச்சைகள் கிடைக்க வேண்டும். 

அது தான் நமது நோக்கம். தடுப்பு மருந்து தடுப்பு மருந்தாகவே இருக்க வேண்டும்.  ஏதோ தட்டுமுட்டு சாமான்களைப் போல வாங்கிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நல்லதே நடக்கும் என நம்புவோம்!

Friday 27 November 2020

நாட்டுக்கு அந்நியரா!

 ஒரு சில செய்திகள் நம்மை சிரிக்க வைக்கின்றன!

கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர்,   நாட்டுக்குப் புதியவரா  அல்லது இப்போது தான் எங்கிருந்தோ விடுதலையாகி வந்திருக்கிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது!

இந்து கோயில்களை உடைக்கும் உடைக்கிற வேலைகளை அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. அவராக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல இந்து கோயில்களுக்கு மானியங்கள் கிடையாது என்பதாக கையை விரைத்திருக்கிறார்.  இதுவும் அவராக எடுத்த முடிவு. அவருக்கு அந்த அதிகாரங்களை யாரும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள். அவராகவும் எடுத்துக் கொள்ள முடியாது.

வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் பூசாரி அல்ல.  எது நல்லது எது  கெட்டது என்று தீர்மானிக்கும் உரிமையை யாரும் அவருக்குக் கொடுக்கவில்லை.

முகமட் சனுசி நாட்டுக்குப் புதியவரல்ல. ஆனால் புதியவர் போல பாவ்லா காட்டுகிறார்! ஏன் பிறந்ததிலிருந்து இந்நாள் வரை இந்து கோவில்களை அவர்  பார்த்ததே இல்லையா? இப்போது தான் அவர் கோவிலகளைப் பார்க்கிறாரா? 

மந்திரி பெசார்,  ஒரு வேளை கோவில்களை இப்போது தான் புதிதாகப்  பார்ப்பவராக இருக்கலாம். ஆனால் கோவில்கள் இந்நாட்டுக்குப் புதிதல்ல என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர் கொஞ்சம் சரித்திரத்தைப் பின் நோக்கிப் பார்க்க வேண்டும். இவர் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன.அவர் தந்தையார் பிறப்பதற்கு முன்னரே இங்குக்  கோவில்கள் இருக்கின்றன. அவர் பாட்டனார் பிறப்பதற்கு முன்ன்ரே இங்குக் கோவில்கள் இருக்கின்றன.  

அதைவிட இன்னும் பின் நோக்கிப் போனால் இன்னும் பெரிதாக சரித்திர  சான்றுகள் வரும். அது தான் பூஜாங் பள்ளத்தாக்கு.  சரித்திரங்கள் பொய் சொல்லாது. கொஞ்சம் மெனக்கட்டு, ஆள் வைத்து, அதனையும் அவர் ஆராய்ந்து பார்க்கலாம். 

ஆக  மந்திரி பெசாருக்கு எதுவும் புதிது இல்லை. இன்று நேற்று புதிதாக அறிமுகமாகவும் இல்லை. 

இவருக்கு முன்னாள் இருந்த மந்திரி பெசார்களை விட தன்னை ஒரு படி மேல் என்று நினைக்கவும் வாய்ப்பில்லை.  அவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.   அவர்களை அப்படி இவர் நினைப்பதாகவே தொன்றுகிறது.

மந்திரி பெசார் என்பவருக்கு மிக முக்கியமான கடமைகள் உண்டு. ஏதோ ஓர் இனத்தைப் பிரதிநிதிப்பவர் அல்ல அவர் என்பதை முதலில்  புரிந்து கொள்ள வேண்டும். அவர் மாநிலம்,  ஏதோ ஓரினத்தைச் சார்ந்து உள்ளதாக அவர் நினைப்பதைக்  கைவிட வேண்டும். மூன்று இனங்கள் உள்ளது தான் ஒரு மாநிலம். எல்லா மாநிலங்களின் நிலைமையும் அப்படித்தான் உள்ளன.

கெடா மந்திரி பெசார், கெடா மாநிலத்தின் உள்ள அத்தனை குடிமக்களுக்கும் பொறுப்பானவர். மாநிலத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் அவருக்கு அந்த பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. பொறுப்பே பொறுப்பற்று நடந்தால் எப்படிப்  பொறுப்பது?

மந்திரி பெசார் தனது பொறுப்பை உணர்ந்து நடப்பார் என நம்புவோம்.

புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்

 கொரோனா தொற்று அல்லது கோவிட் 19 என்று எப்படிச்  சொன்னாலும் சரி இனி அதற்கு முடிவு உண்டா அல்லது இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை!

இனி இது தொடர்கதை தான். அதோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற தரப்பும்  உண்டு. ஆனால் அப்படி சொல்லுவதில் ஏதும் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.

இப்போது  நமது கண்ணுக்குத் தெரிவதெல்லாம் தீர்வு இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்பது தான்.  

இன்னும் மருந்தே கண்டு பிடிக்கவில்லை என்கிற போது தீர்வுக்கு இப்போதைக்கு வழியில்லை.

ஆனால் இந்த கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரே மாதிரியாக இருக்காது என்கிற பாடம் மிகவும் முக்கியமானது. மாடாக உழைப்பது, சம்பாதித்ததை செலவு செய்து ஜாலியாக இருப்பது,  பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்திக் கொள்ளலாம் - என்கிற மனப்பான்மையை தகர்த்தெறிந்து விட்டது கொரோனா தொற்று.

பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியுமா?  முடியாது என்பதை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.  வேலை இல்லாமல் எப்படி சம்பாதிக்கப் போகிறோம்? அடுத்த அடி எடுத்து வைக்க வழியில்லாமல் இப்போது பலர் விழிபிதுங்குகின்றனர்.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி நமக்கு என்ன தெரியுமோ அதனை வைத்து பிழைக்கக்  கற்றுக்கொள்ள வேண்டும். வெட்கப்பட்டால் கதைக்கு ஆகாது. குடும்பம், பிள்ளைகள் என்று இருக்கும் போது நமது கடமைகளை அலட்சியப்படுத்த முடியாது.

சமீபத்தில் நான் படித்தவை, நேரில் கண்டவைகளை  கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு குடும்பப் பெண் தனது மோட்டார் சைக்கிளில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஓர் இளைஞர் ஸ்பைடர்மேன் உடைகளை அணிந்து கொண்டு காரில் பத்தாய் வியாபாரம் செய்கிறார். ஒர் இளைஞர் தனது சைக்கிளில் தேநீர் வியாபாரம் செய்கிறார். ஓர் விமான ஓட்டுநர் சிறிய அங்காடி கடை ஒன்றை வைத்துக் கொண்டு , தனது விமான உடையுடன்,  பலகார வகைகளை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.  ஒரு விமான பணிப்பெண் பலகாரங்கள் செய்து உணவகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஓர் ஆசிரியை வேலை பறிபோக சிறியளவில் பிரியாணி கடை ஒன்றை நடத்துகிறார். நல்ல வேலையில் இருந்த இளைஞர் ஒருவர், வேலை பறிபோக, மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். 

இன்னும் எத்தனையோ இருக்கலாம். நாம் வாழ வேண்டும். நமது குடும்பம் வாழ வேண்டும். நமக்குத் தெரிந்த தொழிலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது தான். 

குறை சொல்லுவதில் பயனில்லை. யதார்த்தம் இது தான். ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மறக்க வேண்டாம்! எந்த சூழ்நிலையிலும் வெற்றி ஒன்றே நமது இலக்கு!

Thursday 26 November 2020

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா?

 எது எப்படியோ தனது முதல் பரிட்சையில் தேர்வு பெற்று விட்டது  பிரதமர் முகைதீனின் பெரிகாத்தான் நேசனல் அரசாங்கம்!

ஆனால் அத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னும் சில முட்டுக்கட்டைகளைக் கடந்து செல்ல வேண்டும். குறைந்தபட்சம் வரும் திங்கள் கிழமை வரை! 

போகிற போக்கைப் பார்க்கின்ற போது அப்போதும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

இப்போது இந்த நாடாளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சிக்கு முக்கியமான கதாநாயகனாக விளங்குபவரும் எதிர்கட்சிகளுக்கு வில்லனாக விளங்குபவரும் நாடாளுமன்ற சபாநாயகர் அஸார் ஹருன் என்பது தான் இங்கு விசேஷமாக கவனிக்கப்பட வேண்டியது.

அவர் மனம் வைத்தால் முடியாததும் முடிந்து விடும்! அந்த திறமை அவருக்கு உண்டு!  அவர் முன்னால் எதிர்கட்சிகள் வலுவிழந்து விடுகின்றன.  எங்கே கோடு போட வேண்டும், எங்கே வாயை அடைக்க வேண்டும், எங்கே அவர்களை நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத காரியங்களைச் செய்ய அவர் தயங்க மாட்டார்! அது அவர் பிரதமருக்குச் செய்ய வேண்டிய செஞ்சோற்றுக்கடன்! அற்காக அவரைப் பாராட்டாலாம்!

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். முதல் தேர்வில் பிரதமர் முகைதீன் வெற்றி பெற்று விட்டார் என்பதை வேறு ஒரு கோணத்திலும் நாம் கவனிக்க வேண்டும்.  பிரதமர் முகைதீன் இந்த ஆதரவைக் கண்டு நான் மனம் நெகிழ்ந்து விட்டேன் என்கிறார்.   அதே போல மாமன்னரும்  ஆதரவு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

இவைகளெல்லாம் நமக்கு எதையோ சுட்டுகின்றன என்றே நமக்குத்  தோன்றுகிறது. இதனையே  சபாநாயகர் நடப்பு அரசாங்கத்திற்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இனி புதிதாக நம்பிக்கைத் தீர்மானம் தேவையில்லை என்பதாகக் கூட அவர் சொல்லலாம்! அல்லது  வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தாலும் முதல் தீர்மானம் வெற்றி பெற்றதைச் சுட்டிகாட்டி அதனையே வெற்றியாக எடுத்துக் கொள்ளலாம்!அதற்காக ஏதோ ஒரு சட்டத்தை தனக்குத் துணையாகக் கொண்டு வரலாம்! 

அடாடா! ஆளுகின்ற  நிலையில் உள்ளவனுக்கு எத்தனையோ முகங்கள்! அநியாயத்தையும் நியாயம் என்று சொல்லலாம்! அநீதியையும் நீதி என்று சொல்லலாம்!

அதனால் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பிரதமர் முகைதீனின் அரசாங்கம் கவிழும் என்று சொல்லுவதற்கில்லை! அது தொடரும் என்றே தோன்றுகிறது!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால் முகைதீன் யாசின் தனது பதவியில் தொடர்வார். அம்னோ தரப்புக்குத் தங்களைப் பணக்காரர்களாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

நாம் வழக்கம் போல, ம.இ.கா.வினர் போல, கிடைப்பதை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.  கிடைக்கவில்ல என்றால்? கிடைத்ததாக நினைத்து வாழ வேண்டும்!

வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமா? ஆம் நிறைவேறும் என்பதே நமது கணிப்பு!

Wednesday 25 November 2020

மீண்டும் தேசிய சேவை பயிற்சியா?

 இதற்கு முந்தைய பக்காத்தான் அரசாங்கம் `தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை என்பதால் அதனைக் கைவிட்டது என்பது நமக்குத் தெரியும்.

இன்றைய கொல்லைப்புற அரசாங்கம் அது தேவை என்று சொல்லி ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட்டை தேசிய சேவை பயிற்சிக்காக ஒதுக்கியிருக்கிறது!

ஏற்கனவே இந்த பயிற்சியைப் பற்றி ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்சனைகள்! முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் எதனையும் சரி செய்ய முடியவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் மக்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள். இந்த பயிற்சி தேவை என்றால் அது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பணம் பண்ணத் துடிக்கிறார்கள் என்பது மட்டும் தான்! ஏற்கனவே அது தான் நடந்தது. அம்னோவில் உள்ளவர்கள் பணக்காரர் ஆனார்கள். இந்த பயிற்சி திட்டம் பல பணக்காரர்களை உருவாக்கியது. அனைவரும் அம்னோ கட்சியினர்! இப்போது அது மீண்டும் தலை தூக்குகிறது என்பது வருத்தத்திற்குரியது.

அரசாங்கம் சொல்லுவது போல இந்த திட்டத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. தேசப்பக்தியை வளர்க்கும் என்பதெல்லாம் வெறும் கதை. பயிற்சி பெறாத அந்த காலாத்திலெல்லாம் தேசபக்தி இல்லாதவர்களா கம்யூனிஸ்டுகளுக்காக எதிராகப்  போராடினார்கள்? தேசபக்தி என்பது எல்லாக் காலத்திலும் உண்டு.  அது இப்போதும் உண்டு.

தேசிய சேவை பயிற்சி என்பது பல நாடுகளில் உண்டு.  இல்லையென்று சொல்லவில்லை.   ஆனால் நமது நாட்டில் அதனையும் ஒரு வியாபார யுக்தியாக பயன்படுத்துவது தான் நமக்குள்ள பிரச்சனை!

தேசபக்தி இருந்தால் ஏன் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது?  அடிப்படையில் நமக்கு தேசபக்தி என்பது இல்லை. அதற்குக் காரணம் அரசியல்வாதிகள். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறான். வெளிநாடு ஓட முடிந்தால் ஓடி விடுகிறான்!  ஓட  முடியாதவன் நாட்டிலேயே இருந்து கொண்டு வழக்குகளைச் சந்திக்கிறான்!

இப்படியெல்லாம் அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு எப்படி தேசபக்தி உணர்வை ஊட்ட முடியும்?

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சொல்லுவது போல இந்த பணத்தை உயர் கல்விக்காக செலவு செய்யுங்கள். வேறு பயன் உள்ள திட்டங்களுக்காகச் செலவு செய்யுங்கள். நாடு உங்களை வாழ்த்தும். ஏதோ ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக பழைய திட்டங்களை எல்லாம் ஞாபகத்திற்குக் கொண்டு வராதீர்கள்!

தேசிய சேவை பயிற்சி தேவை இல்லை!

 

Tuesday 24 November 2020

எதிர்க்கட்சிகள் கவிழுமா!

 அரசாங்கம் கவிழும் நிலையில் இருக்கிறது என்பது உண்மை தான்.

ஆனால் எதனையும் உறுதிப்படுத்த வழியில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்து விட முடியாது. அதுவும் அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும் புரளுகின்ற ஓர் இடம். அங்கு நீதி இல்லை. நேர்மை இல்லை. நியாயம் இல்லை.

இப்போது எவன் கையில் அரசு இருக்கிறதோ அவன் கை தான் உயர்ந்து நிற்கும். காரணம் அவனால் அதர்மத்தை தர்மமாக்கிக் கொள்ள முடியும்.  அநியாயத்தை நியாயப்படுத்த முடியும்.  அநீதியை நீதியென நியாயப்படுத்த முடியும்.

அரசாங்கம்,  நேற்று யார் கையில் நாளை யார் கையில் என்பதெல்லாம்  முக்கியமல்ல. இன்று, இப்போது யார் கையில் ஆட்சிப் பொறுப்பு  இருக்கிறது என்பது தான் முக்கியம். 

அந்த வகையில் பார்த்தால் பிரதமர் முகைதீன் கையில் அரசாங்கம் இருக்கிறது. சபாநாயகர்கள் அவர் கையில். ஏன்?  கோவிட் 19 கூட அவர் கையில் இருக்கிறது!  சபாவிலிருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதில் கூட ஏதோ அரசியல் இருக்கலாம்! அதன் பின்னணி என்ன  என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை!

இப்படி எல்லாம் அலசி ஆராயும் போது கவிழ்பவர் யார் என்கிற கேள்வி எழத்தானே செய்யும். அது ஏன் எதிர்க்கட்சிகளாக இருக்கக் கூடாது?

எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி என்னன்னவோ திட்டங்களைத் தீட்டுகிறார்கள். எல்லாம் சரி தான்.  அதே சமயத்தில் ஆளும் அரசாங்கமும் தன்னை தற்காத்துக் கொள்ள அவர்களும் பல அதிரடித் திட்டங்களைத் தீட்டத்தானே செய்வார்கள்? 

எதிர்க்கட்சிகள் என்ன செய்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஒளிவு மறைவு இல்லை.  ஆனால் எதிர்தரப்பு திரைமறைவில் என்ன செய்கிறது என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை. ஒளிவும் உண்டு மறைவும் உண்டு!

பிரதமர் முகைதீனைப் பற்றி அவ்வளவு எளிதில் எடைப்போட்டு விட முடியாது. கழுவுற மீன்ல  நழுவற தனமைக் கொண்டவர்! அப்படி இல்லாவிட்டால் இத்தனை மாதங்கள் பதவியில் நீடித்திருக்க மாட்டார்!

ஆகக் கடைசியாக சீனப்பள்ளிகளுக்கு அதிக நிதியும், தமிழ்ப்பள்ளிகளுக்கு குறைவான நிதியும் ஒதுக்குகிறார் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவர் அவர்!

வரவு செலவுத் திட்டத்தில் அவர் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படும் என்பது ம.இ.கா.வினருக்கு மட்டும் தான் புரியாது! நமக்குப் புரியும்.

இப்போது நமது கேள்வி எல்லாம் இன்றைய அரசாங்கம் கவிழும் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? பிரதமர் முகைதீன் ஏமாளி அல்ல என்பது மட்டும் உறுதி. எதிர்க்கட்சிகள்  ஏமாளிகளா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

Monday 23 November 2020

நேர்மையற்ற அதிகாரிகள்!

 நேர்மையற்ற அதிகாரிகள் அதிகாரத்தில் இருந்தால் என்னன்ன நடக்கும் என்பதை சமீபத்திய குடிநுழைவுத்துறை கைது நடவடிக்கை மெய்ப்பித்திருக்கிறது!

அதிகாரத் துஷ்பிரயோகம் என்றால் அதில்  குடிநுழைவுத்துறை தான் முதன்மையானது என்பதில் சந்தேகமில்லை! அந்த அளவுக்கு அதிகார அத்து மீறல்கள்!

ஒருவர் குற்றப் பின்னணியோடு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்பது நமக்குப் புரியவில்லை. ஆள் கடத்தல், கார்த் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட எளிதாக வேலையில் சேர வாய்ப்புக்கள் உண்டு என்பது ஓர் ஆச்சரியமான தகவல்.

அதை விட ஆச்சரியங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவர் பயன்படுத்திய கார்கள் நம்மை விழி பிதுங்க வைக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ், முஸ்தாங், ஆவ்டி, ரேஞ் ரோவர் போன்ற கார்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்!

ரோல்ஸ் ராய்ஸ் என்பது சாதாரண தொழிலதிபர் கூட பாவிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும்.   பெரும் தொழிலதிபர்கள் கூட பெரும்பாலும் பாவிப்பதில்லை. அவர்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியுமா? பணம் உண்டு.  ஆனால் மெர்ஸிடிஸ்  கார்களே போதும் என்று திருப்தி அடைபவர்கள்.

ஆனால் ஓர் அதிகாரி, அரசாங்கத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி, அவருக்கு எப்படி இந்த அளவுக்குத் துணிச்சல் வந்தது, பணம் வந்தது  என்பது நமக்குப் புரியவில்லை!  எப்படியும் ஒரு நாள் இது வெளிச்சத்துக்கு வரும் என்பது தெரியாத அளவுக்கு அவர் என்ன ஒன்றும் அறியாதவரா! ஆச்சரியம்!  ஆச்சரியம்!

அதைவிட இன்னும் கொடுமை அந்த அதிகாரி குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது!

பொது மக்கள் என்னும் முறையில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். இப்படி ஒரு மனிதர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார் என்றால் அவருக்கு பலம் வாய்ந்த அரசியல் பின்னணி இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் தான் இப்படியெல்லாம் ஏதோ ஒரு குறுக்கு வழியில் உள்ளே புகுந்து விடுகிறார்கள்!

ஆனாலும் என்ன செய்ய? அரசியல் அதிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது! எதிர்த்து நின்றாலும் அதனைத் தவிடுபொடியாக்கி விட அரசியல்வாதிகளால் முடியும்! அதற்காக நாம் வாய் மூடி மௌனியாக இருந்து விட முடியாது. நமது எதிர்ப்பை நாம் பதிவு செய்கிறோம்.

நேர்மையற்ற அதிகாரிகள் நாட்டின் அவமானச் சின்னங்கள்!

ஏன் நம்மிடம் நேர்மை இல்லை?

 நாம் எல்லாருமே நம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டிய கேள்வி இது.    

ஏன் நம்மிடம்  நேர்மை என்பது குறைந்து வருகிறது?  நாம் என்பது மலேசியர் அனைவரும் தான்.

தேசிய மிருகக்காட்சி சாலை, நமக்கு  "ஊழல்" வரிசையில் வந்த இன்றைய கடைசி செய்தி!

இன்னும் மூன்று மாதம் தான் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியுமாம். அதன் பிறகு என்ன செய்வது, கையைப் பிசைகிறார்கள் நிர்வாகத்தினர்.

அதன் பின்னால் ஒரு கதையும் உண்டு.  அதன் நிர்வாகம் அரசாங்கத்தின்  கையில் இல்லை.  மலேசிய விலங்கியில் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது.  

பிரச்சனை என்னவென்றால் முறையான நிர்வாகம் அமையவில்லை. கணக்கு வழக்குகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தகுதியற்ற மனிதர்கள் வேலையில் இருக்கிறார்கள்.   உணவுகள் விலங்குகளுக்கா அல்லது மனிதர்களுக்கா என்று புரியவில்லை!      

ஒரு காலக் கட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்த நிர்வாகம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது? 

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? இங்குப் பணி புரிபவர்கள் அனைவருடைய சொத்து விபரங்களை ஆராய வேண்டும். வரவுக்கு மீறிய சொத்துக்கள் இருப்பவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும்.

வேறு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!  ஊழல் என்று வரும் போது யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்  நிறுத்த வேண்டும். இந்த இனத்தார் தான் செய்யும் தகுதி உண்டு மற்ற இனத்தாருக்குத் தடை என்றெல்லாம் ஒன்றுமில்லை.      

ஊழல், இலஞ்சம் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருவது மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

படித்தவர்கள் அதிகமாகக் கொண்ட நாடு நமது நாடு. அதுவும் இல்லாமல் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம்.

நமது அண்டை நாடான சிங்கப்பூர் என்ன சமயத்தைப் பின்பற்றுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கு ஊழல் என்பது  உலகளவில் மிக மிகக் குறைந்து காணப்படுகிறது.

ஆனால் சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் உலகளவில் எந்த நிலையில் இருக்கிறோம்?  அப்படி ஒன்றும் மெச்சும் படியாக இல்லை என்பதே போதும்!    

இதற்கெல்லாம் ஒரே காரணம் நமது அரசியல்வாதிகள் தாம். அவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள்.  தங்களுக்குக் காரியம் ஆக வேண்டுமானால் மக்களுக்கே இலஞ்சம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்!

அப்படியானால் இவர்கள் படித்த படிப்பு, தங்கள் மதத்தின் மீதான் பிடிப்பு இதனைப் பற்றியெல்லாம் இவர்கள் காவலைப்படுவதில்லையா?

நேர்மை! நேர்மை! நேர்மை! எல்லாவற்றையும் விட நேர்மை தான் தேவை! மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்!

Sunday 22 November 2020

எது முக்கியம்?

 கேட்டாலும் கேட்டார் ஒரு கேள்வி, பதில் சொல்லத்தான் ஆளில்லை!

நம்மால் கேட்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் தேச பக்தியின் தலவர் முகமட் அர்ஷாத் ராஜி! 

கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்வான் என்பது உண்மை. நம்மால் கேட்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். கேட்க முடியாது என்பதால் தம்பி தண்டப்பிரசண்டம் செய்கிறான்!

ஆனால் நாட்டில் இன்னும் நியாயமானவர்கள் நீதிமான்கள் இருக்கிறார்கள் என்பதற்கு முன்னாள் இராணுவத் தலைவர் அர்ஷாத் ஒரு முன்னுதாரணம். 

பதவிக்கு வந்ததும் தங்களது கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்.  ஒரு கோவிலை உடைத்தார்கள், புனித நூலை புண்ணியமற்ற நூல் என்றார்கள் இப்போது குடியை ஒழிப்போம்  என்கிறார்கள்.  குடியை ஒழிப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. அங்கேயும் கீழ்த்தட்டு மேல்தட்டு என்று பிரித்து வைக்கிறார்கள்! ஆக குடிவகைகள் இடம் மாறியிருக்கின்றன.

இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். குடியைத் தடை செய்தால் போதப்பொருள்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும். இது வரை போதைப்பொருளை நாம் இன்னும் ஒழிக்கவில்லை. ஆக, மயக்கத்தில் இருப்பவன் தொடர்ந்து மயக்கத்தில் இருக்கத்தான் செய்வான்!

ஆனால் இவ்வளவு பேசும் இவர்கள் "ஊழலை ஒழிப்போம்!"  என்று சொல்ல இவர்களுக்கு வாய் வரவில்லை! இது தான் மிகப் பெரிய சோகம். குடித்துவிட்டு அலைபவனால் இந்த நாட்டுக்கு எந்த கேடும் வந்ததில்லை.  ஆனால் ஊழல் செய்பவனால் கீழ்மட்டத்திலிரிந்து மேல்மட்டம் வரை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

குடிக்குப் பேர் போனவர்கள் இந்தியர்கள். இவர்களால் இந்த நாட்டுக்கு என்ன கேடு வந்தது?  இவனால் மற்றவர்கள் தான் சம்பாதித்தார்கள்! இவன் தான் சம்பாத்தியம் இல்லாமல்  வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்!

ஊழலின் நிலை என்ன?  பக்காத்தான் அரசாங்கம் மட்டும் இடையிலே வரவில்ல என்றால் இந்த நாடு சீனாவின்  கைக்கு  ஏலம் போயிருக்கும்!  ஊழல் என்றால் சாதாரண ஊழல் அல்ல!  பல பல கோடிகள்! எண்ணமுடியாத அளவுக்கு ஊழல்கள்! ஆனால் இப்போது இந்தக்  கொல்லைப்புற அரசாங்கம்  அனைத்தையும் நியாயப்படுத்தப் பார்க்கிறது!

கொல்லைப்புற வழியாக வந்தார்கள்! அத்தனை பேரும் ஊழல் பேர்வழிகள்! இப்போது ஆட்சியில் இருப்பதால் இன்னும் ஊழலில் ஈடுபாடு காட்டுகிறார்கள்! அதனால் ஊழலைப் பற்றி பேசுவதில்லை!

ஏதோ இருக்கிற கோயில்களையும், கிறிஸ்துவர்களையும் மட்டம் தட்டினால் அவர்களுக்கு  ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்! ஏன் ஊழல் கூடாது என்றால் அதரவு கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி  ஒரு முடிவுக்கு வந்தார்கள்?

தேசபக்தி இல்லாத ஒரு கூட்டத்துக்கு (பேட்ரியோட்)தேசபக்தியின் தலைவர் முகமட் அர்ஷாத் ராஜி  ஒரு சவால் விட்டிருக்கிறார்!

என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.  குடியைக் கெடுக்கும் குடியா? நாட்டை அழிக்கும் ஊழலா? 

Saturday 21 November 2020

ஏன் இந்த போட்டி?

 பொதுவாக இப்போது அம்னோவில் ஒரு கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. 

யார் துணைப் பிரதமராக வர முடியும்,  யார் வர முடியாது  என்கிற போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா திரும்பத் திரும்ப ஒன்றைக் கூறி வருகிறார். ஊழல் வழக்குகள் உள்ள அம்னோ தலைவர்கள் துணைப் பிரதமராக வரக் கூடாது என்பது அவரின் கருத்து.

ஆனால் அவர் சொல்லுகின்ற காரணம்  சரியாகத்தான் இருக்கின்றது.  அதில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஏற்கனவே ஊழல் வழக்குகள் உள்ளவர்கள் துணைப் பிரதமராக வருவதில் பல சிக்கல்கள் உள்ளன.

துணைப் பிரதமர் பதவி என்பது,  நமது நாட்டைப் பொறுத்தவரை,  கொஞ்சம் கௌரவமான பதவி. மற்ற  நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த பதவி. நமது நாட்டில் அந்த பதவிக்கு யார் வர வேண்டும், எந்த மதத்தவர் வர வேண்டும் என்கிற ஓர்  வரையறையை  வகுத்து வைத்திருக்கிறார்கள்.  மற்ற இனத்தவர் என்ன தான் படித்து உலகை ஆளுகின்ற திறன் இருந்தாலும், அவர்கள்  வரக் கூடாது  என்று சட்டம் மட்டும் சொல்லவில்லை ஆளுகின்றவர்களும்  சொல்லுகின்றார்கள்!

அதனால் தான், கொல்லைப்புற வழியாக பதவியேற்ற இன்றைய அரசு,  தடுமாற்றத்தில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது!

காரணம் இன்றைய அரசில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலானோர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள்! ஊழல் இல்லையென்றால் இன்றைய அரசாங்கமே இருக்க வாய்ப்பில்லை.  அத்தனை பேரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்!

இப்படி ஒரு சூழலில் யாரைத்  துணைப் பிரதமராகக் கொண்டு வருவது என்று பார்த்தால்  சிக்கல் தான்  ஏற்படும்! ஏன் பிரதமரின் சென்ற காலத்தைக் கிளறிப் பார்த்தால் அங்கும் நாறத்தான் செய்யும்!

இந்த நிலையில் தான் அனுவார் மூசா "ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் துணைப் பிரதமராக வரக்கூடாது!" என்கிறார்!

அவர் சொல்லுவதெல்லாம் ஊழல் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் வழக்குகள் அவர்கள் மீது இருக்கக் கூடாது என்பது தான் அவர் சொல்ல வருவது!

ஆனால் நம்மைப் போன்ற வேடிக்கைப் பார்ப்பவர்கள் இரண்டுமே சரியில்லை  என்று தான் சொல்லுவோம். முன்னாள் பிரதமர் நஜிப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல வேண்டாம். இப்போது நமக்குத் தெரியும்.

ஊழல் செய்பவர்கள் பதவிக்கு வந்தால் ஊழல் இன்னும் அதிகமாகமே தவிர குறைய வாய்ப்பில்லை. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அனுவார் மூசா சொல்லுவதைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.  ஊழல் செய்யலாம் ஆனால் அவர்கள் மேல் வழக்குகள் இருக்கக் கூடாது என்பது தான்! ஆனால் அவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அத்தனை வழக்குகளும் தள்ளுபடி ஆகி விடும்!  அதன் பின்னர் அவர்கள் குற்றவாளிகள் அல்ல! நாட்டைத் தொடர்ந்து நாசமாக்கலாம்!

ஏன் இந்த போட்டி? ஊழல் செய்யத் தான்!