Friday 31 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! ( 32)

நாமும் பின்பற்றலாம்!

கூடைப்பந்து விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தவர். ஓர் அமெரிக்கரான, கோபே பிரியண்ட்.

இவர் சமீபத்தில்   ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். கூடவே பயனம் செய்த அவர்து மகளும் அந்த விபத்தில் கொல்லப்பட்டார் என்பதாக் அந்த துக்கச் செய்தியை நாம் பத்திரிக்கைகளில் கண்டோம்.

ஆனால் நாம் அது பற்றி ஒன்றும் பேசப்போவது இல்லை.

அவர் தொழில் முனைவோருக்கு நல்லதொரு பாடமாக இருந்தார் என்பது தான் நாம் இங்கே காணப்போவது. கூடைப்பந்து போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பின்னர் அவர் வியாபாரத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அவர் தேந்தெடுத்த துறை அனைத்தும் விளையாட்டுத் துறை சம்பந்தமானது. 

அவர் சார்ந்த ஒரு துறையைத் தேர்ந்து எடுத்தது தான் அவரின் முதல் வெற்றி. விளையாட்டுத் துறை அவரது பலம். அதனை விளாவாரியாக அறிந்தவர் அவர்.

அதைவிட இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். விளையாட்டுத் துறை அவரது பலமாக இருந்தாலும், அந்தத் துறையில் ஜாம்பவானாக இருந்தாலும் அடுத்து அவர் செய்த காரியம் தான் மிகவும் போற்றத்தக்கது. 

"அவர் வணிகத்துறையில் இறங்குவதற்கு முன்னர் வணிகத்துறை குறித்துப் பல நூல்களைப் படித்துத் தெரிந்து கொண்டார். அத்தோடு காணொளி மூலம் பல தகவல்களையும், பல உரைகளையும் கேட்டு தனது வணிக அறிவையும் வளர்த்துக் கொண்டார்." 

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  கோபே தொழிலை ஆரம்பிக்கும் முன்னேரே விளையாட்டுத் துறையில் நிறையவே சம்பாதித்திருக்கிறார்.  அதாவது கோடி கோடியாக சம்பாதித்தவர். தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அவர் யாரையோ நம்பி அவர் தொழிலுக்கு வரவில்லை. தொழிலுக்கு வரும் போது தனக்கு இருக்கும் அரைகுறை அறிவே போதும் என்று அவர் நினைக்கவில்லை. 

தொழிலைப் பற்றி தனக்குப் போதுமான அறிவு இருக்க வேண்டும் என்று நினைத்து அது பற்றியான தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.  அது தான் முக்கியம். அதனால் தான் தொழில் உலகில் அவர் பெரிய வர்த்தகராக உலக அளவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இங்கு நாம் சொல்லுவது எல்லாம் வர்த்தகத் துறைக்குப் புதியவரோ, பழையவரோ நீங்கள் உங்க துறை சம்பந்தமான அறிவை  வளர்த்துக் கொள்ளுங்கள் என்பது தான். கோடிசுவரரான கோபே தனக்குத் தொழில் அறிவு தேவை என்று நினைக்கும் போது  உங்களுக்கும் எனக்கும் தேவை இல்லாமலா போகும்!

Thursday 30 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்..! (31)

எவ்வளவு சேமிக்கலாம்...?

தொழில் செய்பவர்களுக்கு  சேமிப்பு அவசியமா என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். சேமிப்பு என்பது பொதுவானது.  அதனைப் பிரித்துப் பார்ப்பது என்பது தேவையற்றது.

ஒரு சிலர் "நாம் தான் தினசரி பணத்தைப் பார்க்கிறோம்.  இதில் வேறு தனியாக சேமிப்பா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.  தினசரி நீங்கள் பார்க்கின்ற பணம் உங்களுடையதல்ல. பலருடைய பணத்தை நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 

உங்களுடைய வருமானத்தில் முதல் செலவு என்பது சேமிப்பு தான். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அது தான் உங்கள் செலவுகளில் முதன்மையானது. மற்ற செலவுகள் எல்லாம் அதன் பின்னால் தான் வர வேண்டும்.   வீட்டு வாடகை, கார் தவணை, தர்மம் செய்தல் இப்படி எந்த செலவாக இருந்தாலும்  சேமிப்புக்குப் பின் தான் வர வேண்டும். 

சேமிக்க வேண்டும் என்பது சரி ஆனால் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதில் ஏதேனும் வரைமுறை உண்டா? பத்து விழுக்காடு என்கின்றனர் சிலர், இருபது விழுக்காடு என்கின்றனர் சிலர்.  அதற்கு மேல் முடிந்தாலும் பாதகமில்லை. அல்லது குறைந்தாலும் பாதகமில்லை. தொடர்ந்து சேமிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ஒன்றுமே முடியவில்லை என்றால் தினசரி பத்து வெள்ளியை உங்களது சேமிப்பாக ஒதுக்கி விடுங்கள். அதனை முடிந்தவரை வங்கியில் போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.  உங்களுக்கு அறுபது வயது ஆகும் போது மட்டும் அதில் கை வைத்தால் போகும். பத்து வெள்ளி என்பது ஒரு சிறிய தொகை தான். ஆனால் அதனை ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பாருங்கள்.  ஓர் ஆண்டு ரிம 3650.00. பத்து ஆண்டுகள் ரிம 36500.00  இருபது ஆண்டுகள் ரி.ம.73000.00. முப்பது ஆண்டுகள் ரிம 109,500.00. 

இந்த  சிறிய சேமிப்பை ஒரு நீண்ட கால சேமிப்பாக கணக்குப் பண்ணி பாருங்கள் அது எப்படி பெரிய ஒரு தொகையாக மாறுகிறது என்பது புரியும். எல்லாமே இப்படித்தான் கணக்குப்போட்டு பழகிக் கொள்ள வேண்டும். ஒரே நிபந்தனை எந்தக் காரணத்தைக் கொண்டும் அதில் கை வைக்கக் கூடாது என்பது மட்டும் தான்.

எவ்வளவு சேமிக்கலாம்? எவ்வளவு ஆனாலும் இருக்கட்டும்.  சேமிப்பு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். 

சேமிப்பு மட்டுமே நம்மை தலை  நிமிர வைக்கும்!

Wednesday 29 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (30)

வியாபாரம் மந்தம் ஆகும் போது...!

வியாபாரம் மந்தம் ஆகும் போது நாம் என்ன செய்வோம்?  வியாபாரம் கீழ் நோக்கிப் போகும் போது நமது எண்ணங்களும் கீழ் நோக்கித் தான் போகும் என்பது தான் சராசரி மனநிலை.

முதலில் வேலையாள்களைக் குறைக்க முயற்சி செய்வோம். அது ஒரு சில ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.  விளம்பரங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்போம். அதன் மூலம் சில நூறுகள் அல்லது ஆயிரங்கள் மிச்சம் ஆகும்.  ஒரே வெளிச்ச மயம். தெனாகா நேஷனலுக்கு ஏன் தெண்டமாக காசு கட்ட வேண்டும் என்று நினைப்போம். 

இது தான் சராசரி மனநிலை என்பது. நாம் செய்தவை அனைத்தும் நமது தொழிலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறியாமல் செய்கிறோம். எதைச் செய்யக்கூடாதோ அதையே மிகவும் சாதாரணமாக எதையோ சாதித்துவிட்டது போல செய்கிறோம்!

தொழிற்சார்ந்த நிபுணர்கள் கூறுவது என்ன? நாம் மேலே செய்தவை அனைத்தும் தவறு என்று கூறுகின்றனர். ஆமாம் தொழில் மந்தம் அடைகின்ற நிலையில் நாம் மேலும் மேலும் பொருள்களைக் குறைத்து வியாபாரத்தையும் குறைத்துக் கொள்ளுகிறோம்!

நிபுணர்களின் அறிவுரை என்ன?  விளம்பரத்தை அதிகப்படுத்துங்கள் என்பது தான்.  அதனால் தான் வானொலி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒரு சில பொருள்கள் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன! முகநூல்களில் விளம்பரங்கள் வருகின்றன. நேரடியாக மின்னஞ்சல் அனுப்பபடுகின்றன.  வாட்ஸப் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. இன்னும் எந்த எந்த வகையில் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியுமோ அத்தனை வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.

விற்பனையை அதிகரிக்க விறபனையாளர்கள் ஊக்கப்படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா பயணங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இவைகளெல்லாம் வியாபாராம் மந்தமாக நடைபெறும் காலங்களில்  வியாபாரத்தைத் தூக்கி நிறுத்த செய்யப்படுகின்ற முயற்சிகள்.  அவர்கள் தான் வெற்றி பெறுகின்றனர். 

ஒவ்வொன்றையும் குறைக்க நினைத்தவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர். 

வெற்றி தான் நமது இலக்கு.   வெற்றியாளர்களின் அறிவுரைகளை ஏற்று வெற்றி பெறுவோம்!

நமது இலக்கு மந்தம் அல்ல! வெற்றி மட்டுமே!

Tuesday 28 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (29)

சேமிப்பு  அவசியமா...?

தொழில் செய்பவர்களுக்கு சேமிப்பு அவசியமா என்னும் கேள்வி எழுவது நியாயம் தான். 

எல்லாவற்றுக்கும் ஓர் ஒழுங்குமுறை உண்டு. அதே போல நீங்கள் வேலை செய்தாலும் தொழில் செய்தாலும் அந்த ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது  அவசியம். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. 

சேமிப்பு என்பதை யாரும் ஒதுக்கிவிட முடியாது. அது இளம் வயதிலேயே ஒவ்வொரு குழந்தைக்கும் சேமிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் கடமை.

சேமிப்பு என்று வருகிற போது சீனர்கள் தான் நம் கண் முன்னே நிற்பவர்கள்.  சேமிப்பைப் பற்றியான அதிகமான விழிப்புணர்வைப் பெற்றவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும். ஆரம்பகாலங்களில் பஞ்சத்தால் அடிபட்டு வந்து   சேர்ந்த அவர்களுக்குத் தான் சேமிப்பின் அருமை தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்.  

ஏழ்மை நிலையில் இருந்த ஒரு சீன குடும்பத்தை அறிவேன். ஒரு மகன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஓரு கணினி வாங்க வேண்டும். தாய்க்கு ஒரு கடையில் வேலை. பாட்டி பழைய பேப்பர்களையெல்லாம் பொறுக்கிக் கொண்டு வருவார். அவைகளையெல்லாம் விற்று காசாக்குவார். போதுமான பணம் சேர்ந்ததும் தாயும், பாட்டியும் பையனுக்குக் கணினி வாங்க வந்தார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர் கொண்டு வந்த நோட்டுக்கள் அனைத்தும் தினசரி சேர்த்து வைத்த பணம்.  அத்தனையும் கசங்கிய நோட்டுக்கள். எல்லாம் ஒரு வெள்ளி, ஐந்து வெள்ளி, பத்து வெள்ளி அத்தோடு ஷில்லிங் காசுகள்!  

நமது இனத்தவர்களாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள்?  பையனின் படிப்பையே நிறுத்தியிருப்பார்கள்! கணினியே வேண்டாம் என்றிருப்பார்கள்.  யாராவது தலைவன் வந்து உதவ மாட்டானா என்று தலைவனுக்காக காத்திருப்பர்கள். பத்திரிக்கையிலே அறிக்கை விடுவார்கள்! அவர்களின் கஷ்டத்தைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பிடிங்கி திங்க ஒரு குழு வேலை செய்யும்! ஆனால் உழைப்பும், சேமிப்பும், தன்னம்பிக்கையும் இல்லாமல் இருப்பார்கள்!  

நமக்கு உழைப்பும் வேண்டும், சேமிப்பும் வேண்டும்.  என்ன தான் சிறிய வேலையோ, சிறிய தொழிலோ சேமிப்பு மிக மிக அவசியம். 

சேமிப்பை கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள்!

        

Monday 27 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (28)

வியாபாரம் குறையும் போது என்ன செய்யலாம்?

வியாபாரம் என்பது எப்போதும் கொடிகட்டிப் பறக்கும் என்பதை மறந்து விடுங்கள்!  எப்போதும் சீராக இருக்கும் என்பதையும் மறந்து விடுங்கள்!

சீராக, ஒரே மாதிரியாக வியாபாரம் இருக்கும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்காதீர்கள்.

ஏற்றம் இறக்கம் என்பதெல்லாம் வியாபாரத்தில் சாதாரண விஷயம்.  வியாபாரம் அப்படித்தான் இருக்கும்.  ஒரு சில கிழமைகளில் வியாபாரம் அமோகமாக இருக்கும். ஒரு சில கிழமைகளில் மந்தமாக இருக்கும்.  ஒரு சில மாதங்களில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும்.ஒருசில மாதங்களில் வியாபாரம் நமக்குப் பாரத்தைக் கொடுக்கும்! வியாபாரத்தில் இதனை எல்லாம் அனுசரித்துத் தான் போக வேண்டும்.

எல்லா வியாபாரங்களும் அப்படித்தான்.  சீனனுக்கு ஒரு மாதிரி, மலாய்க்காரனுக்கு ஒரு மாதிரி, இந்தியனுக்கு ஒரு மாதிரி என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  

ஒரே சீராக இருக்க வேண்டுமென்றால் அது மாத சம்பளம் வாங்குபவர்களுக்குத் தான் ஒத்துவரும். 

வியாபாரத்தில் மேடு பள்ளங்கள் உண்டு. வியாபாரம் மேல் நோக்கி இருக்கும் போது ஒரு சிலர் படு அட்டகாசமாக நடந்து கொள்ளுவார்கள். இன்று மேல் நோக்கி இருந்தால் நாளை அது சரிந்து விழலாம்! எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். தினசரி வருமானத்தை அல்லது மாத வருமானத்தைக் கணிப்பது சிரமம். கூடுவதற்கும், குறைவதற்கும் பல காரணிகள் உண்டு.

ஆனால் நாம் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.  வருமானம் அதிகரிக்கும் போது நமது தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கிவைத்து விட வேண்டும். வாடகை, கல்வி செலவுகள், சம்பளம் - இப்படி தலையாய செலவுகளுக்கு தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக சேமிப்புக்காக ஒரு தோகையை ஒதுக்கி விட வேண்டும்.

அதிக வருமானம் வரும் போது ஆடம்பரத்தைக் காட்ட வேண்டாம்! அடுத்து வருமானம் குறையும் போது அவதிப்பட நேரிடும்!   மேலும் வருகின்ற பணம் எல்லாம் நம்முடையது அல்ல.  நம்மை நம்பி மொத்த வியாபாரிகள் நமக்கு இரண்டு மூன்று மாதம் கடன் கொடுக்கிறார்கள்.  அவர்களுக்குச் சேர வேண்டிய கடன்களைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டவில்ல என்றால்  நம்மால் தொழிலை நகர்த்த முடியாது.  அவர்கள் கடன் கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள்.  அப்புறம் விற்பதற்குப் பொருள்கள் இல்லாமல் போய்விடும்!

அதனால் வியாபாரம் குறையும் காலத்தில் நிறையப் பொருள்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். விற்பனையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். விற்பனைக் குறைவு என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்தால் இருப்பதையும் இழந்து விடுவோம்!

வியாபாரம் குறையும் போது விற்பனையை அதிகப்படுத்துங்கள்!  விளம்பரத்தை அதிகப படுத்துங்கள்.இதை மட்டும் தான் நாம் சொல்ல முடியும்.

மற்றவை உங்கள் புத்திசாலித்தனம்!

Sunday 26 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (27)


நேர்மை தான் நம்மை வாழ வைக்கும்!

உலகையே நாம் கட்டி ஆண்டாலும் நேர்மை என்று ஒன்று இல்லென்றால் அது நரக வாழ்க்கை தான்!

அதுவும் தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மை, நாணயம் மிகவும் முக்கியம்.  நமக்கு நீண்டகால வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றால் நமக்கு நேர்மை மிக மிக அவசியம்.  நாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் போது  அவர்களை நாம் தக்கவைப்பது கடினம்.

நமது வாடிக்கையாளர்களில் பலர் நம்மிடம் தொடர்ந்து நம்மோடு வாடிக்கையாளர்களாகவே இருக்க விரும்புகின்றனர். நாம் அவர்களை ஏமாற்றினால்  அவர்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். 

நாம் தொழில் செய்யும் இடத்தில் எத்தனையோ வியாபார நிலையங்கள் இருக்கலாம். இது போட்டி நிறைந்த உலகம்.  நாம் ஒரு நடுத்தர பேரங்காடி வைத்திருந்தால் ஏறக்குறைய  நமது வாடிக்கையாளர்களை நாம் அறிந்து வைத்திருக்கலாம்.  அவர்கள் எதனால் நம்மிடம் வருகிறார்கள் என்பதையும் நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.  ஒரு வேளை நமது அருகாமையில் இருக்கலாம்.  விலை குறைவாக இருக்கலாம். நாம் தமிழர் என்பதற்காக நமக்கு ஆதரவு கொடுக்கலாம்.  தமிழர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களும் ஒரு காரணமாக இருக்கலாம் - இப்படி பல காரணிகள் உண்டு. 

இது போன்ற வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுவது நமது கடமையாக கொள்ள வேண்டும்.  நாம் ஓர் இனத்தை வைத்து எந்தத் தொழிலையும் செய்வதில்லை. வியாபாரம் என்பது அனைத்து இனத்தையும் சார்ந்தது.  

நம்மைப் பொறுத்தவரை மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என்கிற வரிசை தான் எப்போதுமே. திறமையுள்ளவர்கள் சீனர்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள்! சீனர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் அவர்களுடன் எளிதாக வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடலாம். 

யாராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது ஒன்று தான்.  தாங்கள் ஏமாற்றப்படக் கூடாது என்பதைத் தான் விரும்புகிறார்கள். 

அதற்குத் தேவை நேர்மை ஒன்று மட்டும் தான். நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் வேண்டும் என்றால், நீண்ட நாள் வியாபாரத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்றால் நேர்மை, நாணயம் - இவைகள் மட்டும் தான்!

Saturday 25 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (26)


நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தொழிலாக இருந்தாலும் சரி,  வாழ்க்கையாக இருந்தாலும் சரி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதாவது நேர்மறை எண்ணங்களாகவே மாறி விடுங்கள்!

மிகவும் கஷ்டமான  காரியம் தான்!  நம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தும் நம்மை எதிர்மறையான எண்ணங்களுக்குத் தான் இட்டுச் செல்கின்றன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.  நாமும் அவர்களோடு இழுத்துச் செல்லப்படுகிறோம்.

குழந்தை முதல் நமக்கு ஊட்டப்படுவது எல்லாம் எதிர்மறையான எண்ணங்கள் தான். அப்படியே வளர்ந்துவிட்ட பிறகு நேர்மறையான எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்ளுவது?

"மழையில் நினைந்தால் சளி பிடிக்கும்!" என்று சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம்! அது எந்த அளவுக்கு உண்மை? எனக்கு அப்படியெல்லாம் சளி பிடித்ததில்லை! என்னை விட மூத்த ஒரு மருத்துவ உதவியாளர் நன்றாக மழையில் நினைந்து போனார். "போச்சு! போச்சு!: என்று ஒரே புலம்பல்! வயதான காலம் வேறு. கடைசியில் இறந்தே போனார்!  எண்ணங்கள் அந்த அளவுக்கு வலிமையாக இருக்கின்றன.

எல்லாமே நமது மனதில் தான் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக வியாபாரத் துறையில் இருக்கும் ஓர் இளைஞன் தனது வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய ஒரு சூழல். தயங்கவில்லை. மாறிவிட்டான்.  அத்தோடு ஒரு கணக்கையும் போட்டு விட்டான்.  புதிய இடத்தில் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகரிப்பார்கள் என்றும் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதும் அல்லாமல்  அதையே நம்பவும் செய்தான். கடுமையாகவும் உழைத்தான்.அதாவது நேர்மறையான எண்ணங்களை மனதில் பதிவு செய்தான்! எதிர்பார்த்த வெற்றியும்  அவனைத் தேடி வந்தது.

இது தான் நேர்மறை எண்ணங்களுக்கான வலிமை. 

"மனம் போல் வாழ்வு",  "மனம் போல மாங்கல்யம்"  என்பதெல்லாம் சும்மா பொழுது போக்குக்காக சொல்லப்பட்டவை அல்ல. மனதை சரியான வ்ழியில் கொண்டு சென்றால் அனைத்தும் சரியாகவே நடக்கும் என்பது தான் அதன் பொருள். 

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சீனர்களின் பொருளாதார முன்னேற்றம் எப்படி அமைகிறது?  நாம் அவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

"மலேசியாவின் பொருளாதாரம் எங்கள் கையில். அதனை யாரும் எங்களிடமிருந்து பறித்துவிட முடியாது. இன்னும் புதிய புதிய சீன தொழில் முகவர்களை உருவாக்குவோம். இன்னும் புதிய தொழில்களை உருவாக்குவோம். நீங்கள் எங்கே போய் முட்டிக் கொண்டாலும் எங்களை நீங்கள் மிஞ்ச முடியாது!  இப்போதும் நாங்கள் தான் பொருளாதார ரீதியில் வலிமையானவர்கள்.  தேவை என்றால் எங்கள் வலிமையைக் காட்டுவோம்!  அதுவரை எங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டே போவோம்!"  என்கிற நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மேலே மேலே கொண்டு செல்கிறது!

சீனர்களின் பொருளாதாரத்தை யாராலும் தட்டிப் பறிக்க முடியுமா?  அது நமக்கு தேவை இல்லாத விஷயம். நம்மைப் பொறுத்தவரை நம்மை நாம் உயர்த்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைத் தான் யோசிக்க வேண்டும். 

நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நமது எண்ணங்கள் நம்மை உயர்த்தும்.

வளர்வோம்! வளர்வோம்! வளர்வோம்!

Friday 24 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (25)

இது இளைஞர்களின் காலம்...!

நமது இனம் நிறைய தவறுகளைச் செய்திருக்கின்றது. அதனை நினைத்தால் வயிறு எரியும்.

இப்போது பல தவறுகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம்.  தவறுகள் எல்லாம் நமது முன்னோர்கள் அறியாமல் செய்தது.

இப்போது நிலைமாறிவிட்டது. இப்போது படித்த இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர், 

இப்போது அனைத்தும் இளைஞர்களின் கையில். எப்போதோ படித்த ஒரு சம்பவம் ஞாபத்திற்கு வருகிறது.   இன்றைய  தொழில் சாம்ராஜ்யங்கள் என்று சொன்னால் உலகளவில் அது பெரும்பாலும் யூதர்களின் கையில். இந்த யூத இளைஞர்கள் கல்லூரிகளில் படிக்கின்ற காலத்திலேயே தங்களது கல்வி முடிந்ததும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்து விடுவார்களாம்.

நமது இளைஞர்களுக்கும் இது போன்ற மனமாற்றம் தேவை என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.  வேலை செய்து  கொண்டு பெரிய முன்னேற்றத்தைக் காண நினைப்பது   என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது.  ஏதோ வாழ்க்கையை ஓட்டலாம்! அதனால் தான் இன்று பெண்களும் வேலை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  கார் வேண்டும், சொந்த வீடு வேண்டும் என்கிற ஆசை நம் அனைவருக்கும் உண்டு. பிள்ளைகள் மேற்கல்வி பயில வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெற்றோரிடமும் உண்டு, கடைசியில் வீட்டை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய சூழல்.  தரமான கல்வி என்றால் பணத்திற்கு வரைமுறை இல்லை! 

அதனால் தான் நமது இளைஞர்கள் படிக்கின்ற காலத்திலேயே 'தொழில் செய்ய வேண்டும்' என்கிற எண்ணத்தை மனத்தில் விதைக்க வேண்டும். எந்த துறையை விரும்புகிறோமோ அந்த துறை சம்பந்தமாக நிறைய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். படிக்க வேண்டும். ஈடுபாடு காட்ட வேண்டும். 

இளைஞர்களே! நமது சமுதாயத்தின் வருங்காலம் என்பது உங்களது கையில்.  இழந்துபோன அனைத்தையும் மீட்டு எடுக்க வேண்டும்.

பொருளாதார பலம் நம்மிடம் இல்லை என்பதற்காக எவன் எவனோ கண்ட நாய்களெல்லாம் நமது சமுதாயத்தைப் பற்றி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் அறியாதவரா!  நம்மால் என்ன செய்ய முடிகிறது? ஒன்றும் செய்ய முடியவில்லை!  ஒண்ட வந்த பிடாரி கூட நம்மைப் பார்த்து நையாண்டி பண்ணுகிறது!

இந்த நையாண்டி, நக்கல், நரகாசுரன் வேலை எல்லாம் ஓரு வலிமையான சமூகத்திடம் செல்லுபடியாகுமா? பொருள் இருந்தால் ஒழிய அந்த வலிமை எப்போதுமே வராது!  கேலிக்கைக்குரிய மனிதர்களாகவே நமது இனம் அடையாளப்படுத்தப்படும்!

அதனால் பொங்கி எழுங்கள் இளைஞர்களே!  பொருளாதாரத்தை மீட்டு எடுக்க இன்றே முயற்சியில் இறங்குவோம்!

பெருகுக நமது பொருளாதாரம்!

Thursday 23 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (24)


நாம் எதனால் தொழில் செய்ய வேண்டும்?

நாம் தொழில் செய்து தான் ஆக வேண்டும். நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க ஒரே வழி தொழில் செய்வது தான்.

நமது நாடு எல்லா வசதிகளையும் வாய்ப்புக்களையும் கொண்ட ஒரு நாடு. இந்த வாய்ப்புக்களையும் வசதிகளையும் எதனையும் பயன்படுத்திக் கொள்ளாமல் 'அது சரியில்லை! இது சரியில்லை!' என்று நாம் புதிது புதிதாக காரணங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம்! காரணங்களைக் கண்டு பிடிப்பதில் நம்மை விட்டால் வேறு ஆள் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டார்கள்!

இந்த நாட்டில் மட்டும் அல்ல உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தொழில் செய்வதற்கான ஆர்வம் இருந்தால் இருக்கிற இடத்தில் இருந்தே முன்னேற்றம் அடைந்து விடலாம். 

எல்லாம் நம் பார்வையில் தான் இருக்கிறது. வாய்ப்புக்களும் வசதிகளும் நம்மைச் சுற்றி தான் இருக்கின்றன. அங்கு இங்கும் ஓட வேண்டாம். 

ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. தோட்டப்புறங்களிலே நமது மக்களில் பலர்  இரண்டு மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.  எங்கோ ஒர் ஈய லம்பத்தில் வேலை இழந்த  நடுத்தர வயதுள்ள சீனர் ஒருவர் அந்த தோட்டத்திற்கு வேலைக்கு வந்தார்.ஓரிரு மாதங்கள் போயின. இப்போது அவர் அங்குள்ள பால்மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உளிகளை தீட்டிக் கொண்டிருந்தார்! அந்த உளிகளைத் தீட்டுவதற்கு ஒவ்வொரு மாதமும் அவருக்கு இரண்டு வெள்ளி கொடுத்து வந்தார்கள்.! இது நடந்தது ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்! என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொருளாதார உயர்வு என்று வரும் போது நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத் தெரியவில்லை. அதுவும் நம் மக்களுக்கு கண்ணுக்குத் தெரிவதேயில்லை! இது ஒரு சிறு தொழில் தான்.  அதன் மூலம் அதிகப்படியான வருமானைத்தை அவர் பெருகிறார்!

நமது மக்களில் ஒரு சிலர் கூட தங்களது சிறு சிறு கொல்லைகளில் வெற்றிலை பயிர் செய்து அதனை சிங்கப்பூருக்கு இரயில் மூலம் அனுப்புவதை நான் பார்த்திருக்கிறேன்.  இவர்கள் பிள்ளைகள் தான் பிற்காலத்தில் வியாபாரிகளாக மாறியிருக்கிறார்கள். வாழ்த்துகிறேன்!

அது போல நம்மைச் சுற்றியுள்ள தொழில் வாய்ப்புக்களும் சிலருக்குத் தெரிகிறது. பலருக்குத் தெரிவதில்லை.  தெரிந்தவர்களுக்கு அதிக வருமானம். தெரியாதவர்களுக்கு அதே சம்பளம், அதே செலவுகள் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த வழி தெரியவில்லை அல்லது சோம்பேறித்தனம்!

ஏன் தொழில்செய்யவேண்டும்?  வருமானத்தை அதிகரிக்க வேண்டும். பிள்ளைகள் பட்டதாரிகளாக வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும். நாலு பேருக்கு நடு வே நல்லபடியாக வாழ்ந்து காட்ட  வேண்டும்.  அதற்குப் பணம் தேவை. அது தொழில் செய்வதன் மூலமே கிட்டும்.

அதனால் சிறிய தொழிலோ, பெரிய தொழிலோ தொழில் செய்வதே முக்கியம். வருமானத்தைப் பெருக்குவதே முக்கியம். நமது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே முக்கியம்.

தொழில் செய்வோம்! உயருவோம்!

Wednesday 22 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (23)


குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு!

மிகவும் அனுபவித்து சொல்லப்பட்ட அனுபவ மொழி! ஆனால் அது குடிகாரனுக்கு மட்டும் அல்ல. அதனை விற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானே அவனுக்கும் சேர்த்துத் தான் இந்த பழமொழி!

ஒருவன் குடித்துவிட்டு உளறுபவன். ஒருவன் குடிக்காமலேயே குடும்பங்களைக் குதறுபவன்! ஒருவனின் குடும்பம் அவன் வீட்டோடு போச்சு.   பல குடும்பங்களின் சாபம் விற்பவனின் வாரிசுகளுக்கும் தொடரும்!

நண்பர்களே! தொழில் செய்யுங்கள். அது உங்களுக்குக் கௌரவத்தைக் கொடுக்கும். உங்கள் குடும்பத்தை உயர்த்தும். சமுதாயத்தின் பொருளாதரத்தை உயர்த்தும்.  கையில் பணம் இருந்தால் நாலு பேர் மதிப்பார்கள்.

ஆனால் தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் குடும்பத்தை நாசமாக்கும். ஒரு சில இந்தியர்கள் "எங்களைக் குறை சொல்லுகிறீர்களே சீனர்களை யாரும் குறை சொல்லுவதில்லையே! அவர்கள் தானே மது விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறார்கள்!"   என்கிறனர்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்நாட்டில் மது விற்பனை என்பதே சீனர்களை நம்பித்தான்.  ஆனால் அவர்கள் குடிக்கிறார்களா என்பதைக் கூட நாம் நம்ப முடியவில்லை!   அந்த அளவுக்கு அவர்கள் குடிகாரர்கள் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை! குடித்தாலும் அவன் பொறுப்போடு நடந்து கொள்ளுகிறான். அவனால் அவன் குடும்பம் அதிக பாதிப்பு அடைவதில்லை.

நம் நிலைமை அப்படியா?  கண்ட கண்ட சாரயத்தைக் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழிக்கிறான்.  பிள்ளைகள் கல்வியைத் தொடர முடியவில்லை. குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறது. நடு வீதியில் சண்டை போடுகிறான். செத்த பிணத்தை வைத்துக் கொண்டு நியாயம் பேசுகிறான். ஒருவனை ஒருவன் வெட்டிக் கொண்டு சாகிறான்.

இது தான் நமது நிலை.  இந்த நிலையில் நாம்  குடியை வைத்து சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு கேவலமான நிலைமை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எந்த அளவுக்கு நமக்குச் சாபத்தைக் கொடுப்பார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

நமது சமுதாயம் இன்று வீழ்ந்து கிடப்பதே குடியினால் தான்! இதில் சந்தேகமே இல்லை! இதில் வேறு நாம் அவர்களைக் கெடுக்க வேண்டுமா, யோசியுங்கள். குடிகாரன் என்னும் பெயர் நமக்கு வேண்டாம்!

வீழ்ந்து கிடப்பவனை இன்னும் வீழ்ந்து கிடக்க நாமே காரணமாக இருப்பதா? வேண்டாம்! அந்த பழிச்சொல் நமக்கு வேண்டாம். அந்த குடும்பங்களின் சாபம் நமக்கு வேண்டாம்.

மது விற்பவனுக்கு....எதுவுமே விடியாது!

Tuesday 21 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (22)


ஆரம்பமே கடனா? வேண்டவே வேண்டாம்! 

தொழில் செய்பவர்கள் கடன் இல்லாமல் தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்பது உண்மை தான். ஆனால் அந்த கடன் எப்போது  உங்களுக்குத் தேவை என்பது தான் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய  விஷயம்.

   தொழில் தொடங்கி ஓர் ஆண்டுக்குள் நீங்கள் பெரிதாக எதனையும் சாதித்திருக்க மாட்டீர்கள். தொழிலில் வளச்சி இருக்கிறதா, வளர்ச்சி தெரிகிறதா  என்பதையெல்லாம் உங்களால் துல்லியமாக கணக்கிட முடியாது.

அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் பல விஷயங்களைச் செய்து கொண்டு வர வேண்டும். முதலில் ஆரம்ப முதலீடு,  தினசரி கணக்கு வழக்குகள், போக்குவரத்து செலவுகள், உங்களின் உழைப்பு, உங்களுக்கான சம்பளம் - இவைகள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எழுதி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் உங்களின் நிதி நிலைமை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் மொத்த வியாபாரிகளிடம் வாங்கும் பொருட்கள் அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  ஒரு வேளை விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டால் நீங்கள் பாதிப்பு அடைவீர்கள்.  ஒரு சில வேளைகளில்  மொத்த வியாபாரிகள் விற்பனையாகாத பொருள்களை உங்களிடன் தாராளமாகத் தள்ளி விடுவதில் தயாராக இருப்பார்கள்!

மொத்த வியாபாரிகளிடமும் உங்கள் கடன்களை அதிகம் வைத்துக் கொள்ளாதீர்கள்.  எல்லாமே ஒர் அளவு தான். 

விற்பனை ஆகும் பொருள்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.  மொத்த வியபாரிகளுடனான கடன்களையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் உங்களை மீறி செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 

உங்கள் தொழில் வளர்ந்துவிட்ட பிறகு நீங்கள் தாராளமாக கடன் வாங்கலாம்.  கடன் வாங்காமல் தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்த செல்ல முடியாது என்பது உண்மை தான்.  இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வங்கிகளிலிருந்து  கடன் வாங்குவதில் பிரச்சனை இல்லை. 

ஆனால் ஆரம்ப காலங்களில் ஒரு சில ஆயிரங்கள் கூட நம்மை வீழ்த்திவிடும்! நம்மை தூக்கம் இல்லாமல் செய்து விடும். முறையாக அதனை பயன்படுத்த தெரியாவிட்டால் பிறகு எல்லாக் காலத்திலும் நமக்கும் வங்கிக்கும் உள்ள இடைவேளி அதிகமாகி விடும். 

அதனால் கடன் வாங்க வேண்டுமா? குறைந்தபட்சம், நீங்கள் தொழிலில் ஒரு பத்து ஆண்டுகளாவது தாக்குப்பிடித்த பிறகு, கடன் வாங்குவது பற்றி யோசியுங்கள். வெற்றிகரமான தொழிலுக்கு வங்கிகள் காத்துக் கிடக்கின்றன. 

கடனா? யோசியுங்கள்!

Monday 20 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (21)


நாட்டையே வீணாக்கிட்டானுங்க..!

நாட்டையே குட்டிச் சுவராக்கிட்டானுங்க!  ஆளுங்ககிட்ட  கையில காசே இல்லை!  எதை வாங்குவாங்க?  எல்லாம் விலை ஏறிருச்சி! சம்பளம் மட்டும் ஏறல!

இப்படிபேசுபவர்களை நாம் பார்த்திருக்கலாம்.   ஏன் நாம் கூட இப்படி பேசுபவராக இருக்கலாம்!

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இப்படித் தான் பேசுவார். அவரும் ஒரு சிறிய தொழிலை செய்து வருபவர். அந்த தொழிலை அவரால் விட முடியாது.  காரணம் யாரிடமும் போய் வேலை செய்த பழக்கம் அவருக்கில்லை. முக்கி முனகிக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டு வருபவர்!

ஆனாலும் என்னிடம் ஒரு கேள்வி உண்டு.  இப்படி பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு.  சீனர்கள் உண்டு,மலாய்க்காரர்கள் உண்டு, இந்தியர்களும் உண்டு. இது பொதுவானது. 

மலாய்க்கரார்களும் சரி, இந்தியர்களும் சரி நாம் உண்மையைத்தான் பேசுகிறோம்.  சீனர்களும் உண்மையைத் தான் பேசுகிறார்கள். ஒரு வித்தியாசம். நாம் பேசுவதை மனத்தில் ஆழ பதித்துவிடுகிறோம். அது தான் உண்மை என்று நூறு விழுக்காடு நம்புகிறோம். ஏதாவது வேலை செய்து பிழைப்போம் என்கிற நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்! 

ஆனால் இதே கருத்தைக் கொண்டிருக்கும் சீனர்கள் வேலைக்குப் போவதைப் பற்றியோ, தொழிலை மாற்றிக் கொள்ளுவதைப் பற்றியோ சிந்திப்பதில்லை. அவர்கள் வழக்கம் போல் தங்களது தொழில்களைப் பார்த்துக் கொண்டும் வளர்த்துக் கொண்டும் போய்க் கொண்டே இருக்கிறார்கள்!  அது எப்படி?

ஒன்று: தொழில் தான் சீனர்களின் வாழ்வாதாரம். வேலைக்குப் போவோம் என்னும் எண்ணமே அவர்களுக்கு எழுவதில்லை! தொழிலை வளர்த்துக் கொண்டே போக வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது! நாமோ எல்லாக் காலங்களிலும் வேலைக்குச் சம்பளம் எவ்வளவு என்று கணக்குப் போட்டு வாழ்ந்த கூட்டம்! அந்த ஞாபகத்தை நம்மால் விட முடியவில்லை!

சரி விலைவாசிகள் ஏறிவிட்டன. சம்பளம் மட்டும் உயரவில்லை என்பது சரியாக இருக்கலாம்.  ஒன்றை நாம் மறந்து விட்டோம். 

உணவகங்களைப் பாருங்கள். கூட்டம் ஏதாவது குறைந்திருக்கிறதா?  வீட்டில் திருமணம் அதற்காக நகை நட்டுகள், துணிமணிகள் வாங்காமலா  இருக்கிறோம்.    கல்லூரிகளுக்குப் போகும் பிள்ளைகள் கணினிகள் வாங்காமலா இருக்கிறார்கள். சந்தைகளைப் பாருங்கள் காய்கறிகள் வாங்காமலா இருக்கிறோம்!  வீட்டில் பிள்ளைகள் கவுச்சி இல்லாமல் சாப்பிடமாட்டர்கள். அவர்களுக்கு, இறைச்சி, மீன்கள் தேவை. வாங்கிக் கொடுக்காமலா இருக்கிறோம். போக்குவரத்துக்குக் கார் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.  ஒரு கார் தேவை வாங்காமலா இருக்கிறோம்!

இதெல்லாம் நடந்து தான் ஆக வேண்டும். தினசரி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை.  கையில் பணம் இல்லை என்பதற்காக  வர்த்தக நிலையங்களை மூடிவிட்டுப் போய்விட முடியாது!  நாம் தான் அப்படி ஒரு முடிவை எடுக்கிறோம். சீனர்கள் வழக்கம் போல தங்களது வியாபாரங்களை நடத்திக் கொண்டும் பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்!

நாடு நாசமாகி விட்டது என்று நாம் சொன்னாலும் அந்த நாசமாகி போன நிலையிலும் சீனர்களின் வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியவில்லை! காரணம் என்ன தான் நாசம் என்று நாம் சொன்னாலும் அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்! 

அதனால் நாடு நன்றாகவே இருக்கிறது என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்! 

தொடர்ந்து நாம் நமது தொழில்களை வளர்த்து எடுக்கின்ற வேலைகளைப் பார்ப்போம். 

வியாபாரம் குறையும் போது இன்னும் அதிகமான உழைப்பைப் போட வேண்டும். இன்னும் அதிகமான விளம்பரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இது தான் வழி!  வளர்க!

Sunday 19 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (20)


தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்குவோம் 

இன்றைய ஒவ்வொரு சிறிய தொழிலும் நாளைய பிரமாண்ட தொழில் சாம்ராஜ்யம் என்பதை மறந்து விடாதீர்கள். 

உலகக் கோடிஸ்வரர் பில் கேட்ஸ் லிருந்து நம்ம ஊர் ஹோண்டா லோ பூன் சியு வரை இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

எல்லாமே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டவை. பின்னாளில் அந்த சிறிய அளவுகள் மாபெரும் பெரிய அளவுகளாக மாறிவிட்டன!  அவ்வளவு தான். 

அதனால் இப்போது நீங்கள் செய்கின்ற சிறிய தொழில்கள் நாளைய பெரிய தோழில்கள். அதில் சாந்தேகமில்லை.  ஒரே நிபந்தனை. உங்கள் தொழிலில் தொடர்ச்சி என்பது இருக்க வேண்டும். அந்த சிறிய தொழிலை பெரிய தொழிலாக மாற்றும் முயற்சிகள் இருக்க வேண்டும்.

சிறிய தொழில் செய்யும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும் என்றால் ....?  அதாவது எனது பள்ளி நாள்களிலிருந்தே எனக்குத் தெரியும். அப்போது அப்பா செய்தார்.  இப்போது அவர் இல்லை. இப்போது அவரின் இரண்டு பிள்ளைகளும் செய்கிறார்கள். 

குறை சொல்லவில்லை.  ஆனால் நான் சொல்லாமலேயே ஒரு குறை பளிச்சென்று தெரியும்.. அப்பா காலத்தில் அந்த தொழில் எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறது!  அப்பாவை விட பிள்ளைகள் கொஞ்சம் அதிகம் படித்தவர்கள். படிக்காத அப்பா எப்படி தைரியமாக ஒரு தொழிலை நடத்தி சிறப்பாக நடத்தி வந்தாரோ அத்தோடு அனைத்தும் முடிந்தது!   அப்பாவுக்கு இருந்த துணிவு இவர்களுக்கு இல்லை! இத்தனைக்கும் அவர்களைச் சுற்றி அனைவரும் வியாபாரிகள் அதிலும் குறிப்பாக சீனர்கள்!  சுற்றப்புறத்தை பார்த்தாவது இவர்களுக்கு ஓர் உத்வேகம் வந்திருக்க வேண்டும். ஆனாலும் வரவில்லை!

தொழில் செய்பவர்களுக்கு இலட்சியம் இருக்க வேண்டும். முன்னேறுவதற்கான அடுத்த வழி என்ன, வேறு என்ன செய்ய முடியும் என்கிற சிந்தனை இருக்க வேண்டும். 

தொழிலுக்கு வந்து விட்டோம். இனி நமது இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்கிற தேடல் எப்போதும் வேண்டும். தொழிலுக்கு வருவது எளிதான காரியம் அல்ல. அப்பாவே ஒரு தொழிலை விட்டுவிட்டுப் போகும் போது அதனை வளர்ப்பது அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லுவது பிள்ளைகளின் தலையாய கடமை. 

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருந்தால் உடம்பு  தான் குண்டாகுமே தவிர மூளை முந்தானைப் போட்டு மூடிக் கொள்ளும்!

நமது தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் நமக்கு ஒரு வழியைக் காட்டி விட்டார்கள். இப்போது தொழில் நமது கையில். நமது முயற்சி என்ன என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஒரு தலைமுறை பல கஷ்டங்களுக்கு இடையே உருவாக்கிய ஒரு தொழிலை அடுத்த தலைமுறை அதனை தொழில் சாம்ராஜ்யமாக உருவாக்க வேண்டும். 

அது தான் நமது பெருமை!

Saturday 18 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (19)

ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமுன்..!

இது எங்களுக்கு ஏற்பட்ட புதிய அனுபவம்.   பகிர்ந்து கொள்வது எனது கடமை என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

எங்களுடைய முப்பது ஆண்டு கால அனுபவத்தை தகர்த்து  எறிந்து விட்டது இந்த அனுபவம்.

என் மகன் தனது கடையை வேறு ஒர் இடத்திற்கு மாற்றினான்.  அந்த கட்டடத்தின் உரிமையாளர் ஒருசீனர்.  அந்த உரிமையாளர் பெரிய மோசடி பேர்வழி என்பது எங்களுக்குத் தெரியவில்லை. 

கடை ஒப்பந்தம் தானே தயாரித்துக் கொடுப்பதாகச் சொன்னார். வழக்கறிஞர் மூலம் போனால் வீண் செலவு என்று அவர் சொன்னார். முன்பே வாடகை பற்றியெல்லாம் பேசி விட்டோம்.  அவர் கையில் கடை சாவியையும் கொடுத்து விட்டார். நாங்கள் கடையில் உள்ளே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக கொடுக்க வேண்டிய முன் பணத்தையும் கொடுத்து விட்டோம். ஒரு சில வேலைகளையும் செய்து விட்டோம்.

ஆனாலும் ஒப்பந்தம் வந்தபாடில்லை! ஒப்பந்தம் கிடைத்த பிறகு மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்ளுவோம் என்று பொறுத்திருந்தோம். ஒரு மாதம் வரை இழுத்தடித்தார். நாங்கள் மற்ற வேலைகளையும் செய்வோம் என்று அவர் எதிர்பார்த்தார். நாங்கள் செய்யவில்லை. 

கடைசியாக ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்.   ஒரே அதிர்ச்சி. நாங்கள் எதிர்பார்க்கவில்லை.ஒவ்வொரு வாக்கியமும் அவருக்குச் சாதகமாகவே இருந்தன. கடை எடுத்த எங்களுக்கு ஒன்று கூட சாதகமாக இல்லை. அதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட முடியாது என்று சொல்லி விட்டோம்.

அவர் வருந்துவதாகத் தெரியவில்லை. காரணம் எங்களுடைய பணம் ஏழாயிரம் வெள்ளி அவரிடம் மாட்டிக்கொண்டது.  பணத்தைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்! இதே போல அவர் பலரை ஏமாற்றிய விஷயம் பிறகு தான் தெரியவந்தது!

இப்போது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.  வீடு தெரியும். ஆளை பார்க்க முடியவில்லை!  தலை மறைவாகி எத்தனை நாளைக்கு மற்றவர்களை ஏமாற்ற முடியும்?

ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  முதலில் ஒப்பந்தத்தைப் படித்துவிட்டு பின்னர் பணம் மற்ற வேலைகளை ஆரம்பியுங்கள்.

 இது போன்ற நபர்களுக்கெல்லாம் சாம, தான, பேத, தண்டம் தான் சரியோ!

Friday 17 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (18)

நான் பட்ட கஷ்டம்.....!

எனக்குத் தெரிந்து பல தொழில்களை நாம் சீனர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டோம்.

குறிப்பாக சிகையலங்காரம்,  கேக் வகைகள் அதனை ஒட்டிய இனிப்பு வகைகள்,  ச்லவைத் தொழில், தையல் தொழில். அச்சகத் தொழில் - இப்படி பல தொழில்கள் நம் கையை விட்டுப் போய்விட்டன. ஏன்?  சீனர்களிடம் போய்விட்டன என தாராளமாகச் சொல்லலாம்.

அதற்கு ஒரே காரணம் ஒருசில தொழில்கள் கேவலம் என்று சொல்லி நாமே ஒதுக்கி விட்டோம். ஒரு சில தொழில்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல நாம் அக்கறை காட்டவில்லை.

சிகைத் தொழில், சலைவைத் தொழில் என்பதை நாம் ஒரு வியாபாரமாக பார்க்கவில்லை. அதனை சமூகத்தின் அவலமாக பார்த்து நாம் பழகி விட்டோம்.  அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றவனும் அது குடிகாரர்களுக்கான ஒரு தொழிலாக மாற்றிவிட்டான்!

இப்போது இந்த தொழில்கள் சீனர்களுக்கு முற்றிலுமாக கை மாறிய பிறகு தான் நமக்குப் புத்தி வந்தது! இப்போது பெரிய மனமாற்றம் நம்மிடையே வந்திருக்கிறது. இப்போது நமது இனத்தவரும் அந்த தொழில்கள் பையை நிரப்பும் தொழில்களாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் சிகையலங்கார கடைகள் கடைகளாக இல்லை. நவீன ஒப்பனை தொழிலகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சலவைத் தொழில்கள் இப்போது நவீன இயந்திரங்களோடு நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கின்றன.  போட்டிகள் இருந்தாலும் போதுமான வரவுகளைப் பார்க்க ஆராம்பித்து விட்டனர். ஆக இந்த தொழில்களுக்கு இனி உயர் ஜாதி முத்திரை தான்! ஆமாம், பணம் இருந்தால் உயர்ந்த ஜாதி!

ஒரு சில தொழில்களுக்கு நாமே குழி பறித்துக் கொண்டோம். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்லவில்லை. ஒரே காரணம் தான். "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது!" என்கிற நல்லெண்ணம் தான் காரணம்.  அதனால் அவர்கள் டாக்டர் ஆக வேண்டும்,  வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று நம் பிள்ளைகள் மேல்  நமது கனவுகளைத் திணித்து அவர்களை தொழில் துறையில் இருந்து ஓட செய்துவிட்டோம்!

எல்லாத் தொழில்களிலும் கஷ்டம் உண்டு, நஷ்டம் உண்டு.  வியர்வை சிந்தித்தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ வேண்டும். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் படுகின்ற கஷ்டம் அவர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் விரும்பிய தொழில் அது தான் என்றால் அவர்களுக்கு ஊக்கம் ஊட்டங்கள்.

ஆனால் வியாபாரத்தில் ஆர்வம் காட்டுபவர்களை வேறு பாதைகளுக்குத்  திசை திருப்பாதீர்கள்.  நம்முடைய தொழில்களை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்துச் செல்வது நமது கடமை.  நமது பாரம்பரிய தொழில்களை நவீனத் தொழில்களாக மாற்றும் திறமை படித்தவர்களுக்கே உண்டு. அதனை நாம் தவற விட்டுவிட்டோம்.

இனி  நமது தொழில்களை  அடுத்த  தலைமுறைக்கு எடுத்துச் செல்லுவதைப் பற்றி யோசிப்போம்.

இருக்கிற தொழிலையும் வங்காள தேசத்தவருக்கு விற்றுவிட்டுப் போகின்ற நிலை இனி வேண்டாம். 

சிறிய தொழிலாக இருந்தாலும் அது நமது கையில் இருக்க வேண்டும். நமது வாரிசுகளின் கையில் இருக்க வேண்டும்.

சீனர்கள் செய்கிறார்களே அவர்களுக்கு மட்டும் கஷ்டம் இல்லையா?  எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்!

Thursday 16 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (17)


ஏதோ ஒரு திறன் நம்மிடம் இருக்க வேண்டும்!

வேலை வாய்ப்புக்கள் நாட்டில் நிறையவே  இருக்கின்றன. வேலை வாய்ப்புக்கள் இருக்கும் போது தொழில் வாய்ப்புக்களும் இல்லாமல் போகாது.

நாம் ஏதோ ஒரு துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதுவுமே தெரியவில்லை! எதிலும் பயிற்சியில்லை என்றால் என்ன தொழிலில் உங்களால் இறங்க முடியும்?

நண்பர் ஒருவர் உணவகத் தொழில் உள்ளவர். மிகவும் எளிமையாக ஆரம்பித்தவர். பெரிய முதலீடு எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால் சாலை ஓரத்தில் இருந்தது அவரின் உணவகம். அவருக்கும் பெரிய அளவில் சமையல் தெரியாது. இருந்தாலும் அவருக்குப் பிடித்த தொழில் அது.  தொழிலைக் கற்றுக் கொண்டார்.  அரசாங்க உரிமம் கிடைப்பதில் பல தடங்கல்கள்.  எல்லாவற்றையும் சமாளித்து தொழிலில் நிலைத்து நிற்பதற்கு நீண்ட காலம் ஆயிற்று.

இதற்கிடையே அவருக்கு நல்ல  பெரிய உணவகத்தை நடத்த ஆசை.  நீண்ட காலம் தொழிலில் இருந்ததால் போதுமான பொருளாதார பலம் அவருக்கு இருந்தது. தொழிலை அடுத்த தலைமுறைக்கு எடுத்த செல்ல வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்தது. காரணம் விரும்பி செய்த தொழில் அத்தோடு வியாபார நெளிவு சுளிவுகள் அறிந்த தொழில், நல்ல பணம் புரளும் தொழில் அதனை விட மனமில்லை.

மகனிடம் பேசி அவனுக்கும் ஆசையை ஏற்படுத்தினார். மகனும் கெட்டிக்காரன். புரிந்து கொண்டான். மேற்படிப்பு படிக்க ஹோட்டல் நிர்வாகத்துறையைத்  தேர்ந்தெடுத்தான். அவனது கல்வியை முடித்ததும் தந்தையோடு சேர்ந்து கொண்டான்.  இப்போது அவரது உணவகம் சாலை ஓரத்து உணவகம் அல்ல. நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில் அவரது உணவகம் அமைந்திருக்கிறது. இப்போது தொழில் கொடி கட்டிப் பறக்கிறது!

பிள்ளைகளிடம் தொழிலை ஒப்படைக்கும் போது அவர்களுக்குப் போதுமான பயிற்சிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.   இந்த இளைஞன் தனது விடுமுறை காலங்களில் தந்தையோடு சேர்ந்து பயிற்சி பெற்றவன். அதனால் சமையல் தொழிலில் ஓரளவு பயிற்சி உள்ளவன்.

இப்படித்தான்  பயிற்சிகளை நாம் பெற்றிருக்க வேண்டும். பயிற்சிகள் இல்லை, எந்த திறனும் இல்லை! என்ன செய்யப் போகிறீர்கள்? 

கையில் ஒரு திறனை வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களை வாழ வைக்கும்!

Wednesday 15 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (16)

நம்பிக்கையோடு செயல்படுங்கள்!

தொழில் செய்வதாகட்டும், கை கட்டி வேலை செய்வதாகட்டும் எதுவாக இருந்தாலும் சரி எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பது நம்பிக்கை தான்.

நம்பிக்கை தான் வாழ்க்கை என்பார்கள். எல்லாமே நம்பிக்கையில் தான் சுழன்று கொண்டிருக்கிறது. 

தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று வந்தவர்கள் நாம். நமக்கு இன்னும் அதிகமான நம்பிக்கை வேண்டும்.  ஒவ்வொன்றிலும் நம்பிக்கை வேண்டும்.நாட்டின் மீது நம்பிக்கை வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வேண்டும்.

மக்கள் நமக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நாம் தான் அவர்களைச் சரிவர கவனிப்பதில்லை. சீனர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பவர்கள் நமக்கு மட்டும் கொடுக்க மாட்டார்களா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.  நாம் அவர்களைக் கவனிக்காவிட்டால் அவர்களும் நம்மை உதாசீனப்படுத்துவார்கள் என்பது தான் உண்மை.

 தொழில் செய்கிறவர்கள் மக்களை நம்ப வேண்டும். நாம் அவர்களை நம்பினால் தான் அவர்கள் நம்மை நம்புவார்கள். இது ஒரு வழி  சாலை . இல்லை. கிடைத்தால் போதும் என்கிற எண்ணம் எழக் கூடாது.

நம்பிக்கை தான் தடைகளை முறியடிக்கும்.  எப்போதும் இலக்குகளை வைத்து செயல்பட வேண்டும். ஓர் இலக்கை வைப்பதே நம்பிக்கை தான். 

நாம் எல்லாருமே நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையோடு தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  தொழிலும் அதே சிந்தனை தொடர வேண்டும். தொழில் செய்வோருக்கு அந்த நம்பிக்கை இன்னும் அதிகம் வேண்டும்.  நம்பிக்கை தளர்ந்தால் தொழில் ஆட்டம் கண்டு விடும்!

நம்மால் முடியும் என்கிறோமோ அது தான் நம்பிக்கை.  நம்மால் முடியும் என்னும் எண்ணத்தை எப்போது வளர்த்துக் கொள்கிறோமோ அது தான் நம்பிக்கை. எண்ணம் போல் வாழ்வு  வாழ வேண்டுமென்று நினைத்தால் போதாது. அதற்கான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஆகவே நம்பிக்கையோடு செயல்படுங்கள்.  உங்களின் நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்து ,கொள்ளுங்கள்.

நம்பிக்கையே வாழ்க்கை!

Tuesday 14 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (15)


நினைத்தால் விடுமுறை?

தொழில் ஈடுபட்டிருப்பவர்கள் நினைத்தால் விடுமுறை எடுக்கலாமா? 

உண்மையைச் சொன்னால் அதெல்லாம் சாதாரண விஷயமல்ல.  விடுமுறை எடுப்பது சுலபமான காரியம் அல்ல. ரொம்பவும் ஆபத்து  ஆவசரம் என்றால் மட்டுமே விடுமுறை போட முடியும். அதுவும் சம்பளமில்லா விடுமுறை! சம்பளமில்லா விடுமுறையை யார் விரும்புவார்?

அனைத்துத் துறையிலும் போட்டிகள் என்று வந்து விட்ட பிறகு விடுமுறை எடுப்பது அவ்வளவு சுலபமா, என்ன?  எனக்குத் தெரிந்த சீனர் ஒருவர் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படும் நாள்களில் கூட வியாபாரம் செய்து கொண்டிருப்பார்!  கேட்டால் "அதெல்லாம் இளைஞருக்குத் தானே!"  என்பார்!

சொந்த வியாபாரம் செய்வர் பலர் விடுமுறை எடுப்பது குதிரைக் கொம்பு என்பார்களே அது தான் உண்மை! அதனால் தான் இப்போதெல்லாம் பெரும்பாலோர் பெருநாள் காலங்களில் நீண்ட விடுமுறைகளை எடுத்து விடுகின்றனர். ஒரு வாரம், இரண்டு வாரம் என்று வெளி நாடுகளுக்குப் பறந்து விடுகின்றனர்!

விடுமுறை என்பது தேவை தான்.  எப்போதும் மன இறுக்கத்தோடு வாழ்பவர்களுக்கு அவ்வப்போது ஓய்வு தேவை என்பதில் ஐயமில்லை. வார விடுமுறையும் தேவை தான்.

ஆனால் தொழில் செய்பவர்கள்  'நினைத்தால் கடையை அடைத்துவிட்டு போகலாம்' என்று சொல்லுவது சரியாக வராது!  அப்படியெல்லாம் செய்யவும் முடியாது.

காரணம் வியாபாரம் என்பது வியாபாரம் செய்கின்றவரின் குடும்பம் மட்டும் அல்ல.  அந்த வியாபாரங்களை நம்பி  பல குடும்பங்கள்   இருக்கின்றன.

சாதாரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரிகளை மாற்றிக் கொள்வதில்லை.  தினசரி எந்த கடைகளில் தங்களது பொருள்களை வாங்குகிறார்களோ அங்கே தான் தொடர்ந்து அவர்கள் தங்களது பொருள்களை வாங்குவார்கள்.  காரணங்கள் பல உண்டு.  

அதனால் நினைத்தால் கடையை மூடுவேன்; விடுமுறை போடுவேன் என்பதெல்லாம் இயலாத காரியம்!

அவசியம் என்றால் மட்டுமே விடுமுறை!

Monday 13 January 2020

வாருங்கள் நாமும் முன்னேறுவோம்! (14)

கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள்!

இப்போது தான் ஒரு செய்தியைக் காண நேர்ந்தது. 

கே.கே. சுப்பர் மார்ட் என்னும் நிறுவனம் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அந்த செய்தி கூறியது. 

தொழில் துறையில் உள்ளவர்கள் இது போன்ற செய்திகளைப படிக்க வேண்டும். நம்மாலான உதவிகளையும் செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் சீனப்பள்ளிகள் தலை நிமிர்ந்து நிற்கக் காரணம்  சீன வர்த்தகர்களின் தாராள மனப்பான்மை தான்.  பள்ளிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்றனர்.  கொடுக்கின்ற பழக்கம் அவர்களிடம் அதிகமாக இருப்பதால் தான் கிடைக்கின்ற பழக்கமும் அவர்களுக்கு அதிகமாக இருக்கின்றது!  கொடுத்தால் தானே கிடைக்கும்.

நமது வர்த்தகர்கள் கோயிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறேன்  என்கிறார்கள்.  அது புண்ணியம் என்கிறார்கள்! பிள்ளைகள் கல்வி கற்பது என்பது புண்ணியம் இல்லையாம்.  இவர்கள் படித்து நமக்கு ஆகப் போவதென்ன?  என்கிற மனப்பான்மையை விட வேண்டும்.

தமிழ் நமது தாய்மொழி அல்ல என்னும் போக்கை விட வேண்டும். தமிழ் உங்களது தாய்மொழியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களது வாடிக்கையாளர்கள் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள்.

எது எப்படி இருப்பினும் கொடுக்கின்றவர்களுக்குத் தான் இறைவனால் திருப்பி உங்களுக்குக் கொடுக்க முடியும்.   கல்வி என்பது சாதாரண விஷயம் அல்ல. ஓர் இனத்தை, ஓர் சமுதாயத்தை உயர்த்துகின்ற விஷயம்.   கல்வி வழி தான் ஓரு சமுதாயத்தை உயர்த்த முடியும். அத்தகைய கல்விக்கு வர்த்தகர்கள் வாரி வாரி கொடுக்க வேண்டுமே தவிர அப்படிக் கொடுப்பதை நாத்திகமாக நினைக்கக் கூடாது.

சீனர்களின் கல்வி அறிவுக்கு சீன வர்த்தகர்களின் பங்களிப்பு  அளப்பறியது. ஏன் நம்மிடம் மட்டும் அத்தகைய பரந்த நோக்கங்கள் இருப்பதில்லை?  ஒவ்வொரு இந்திய வர்த்தகரும் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தத்து எடுத்தாலே போதும். அந்த பள்ளியின் முன்னேற்றத்திற்கு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களுடன் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்தாலே பல திறமையான மாணவர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்படுவார்கள்.

வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் "ஒரு வழிசாலையாக" இருக்கக் கூடாது. எந்த அளவுக்கு பொருள் ஈட்டுகிறோமோ அதிலிருந்து ஒரு பகுதியைப் பொது காரியங்களுக்கு ஒதுக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். 

வர்த்தகர்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது. கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

சீனர்களைப் பார்த்து நாமும் பழகிக் கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. . தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவும் பழக்கத்தை ஒரு கொள்கையாக நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கே.கே.சுப்பர் மார்ட்டை பாராட்டுவோம்! நாமும் அவர்களைப் பின்பற்றுவோம்!

Sunday 12 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (13)

தொழில் அனுபவமில்லையா? என்ன செய்யலாம்"

தொழிலில் அனுபவம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலர் நேரடியாக தொழிலில் இறங்கிவிடுவர்.  

பையில் பணம் இருந்தால் பயப்பட ஒன்றுமில்லை. ஆனால் சிறிய முதலீடு, மனதிலோ பெரிய ஆசை. அத்தோடு அனுபவமும் இல்லை - இவர்கள் நிலை என்ன?

என்னைக் கேட்டால் ஏதாவது, ஏதோ ஒரு துறையில் அனுவம் இருந்தால்கூட அதனை நீங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம். 

சான்றாக நேரடித் தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள்.  நேரடித் தொழில்கள் என்னும் போது நம் கண் முன் நிற்பது காப்புறுதி நிறுவனங்கள் தாம். காப்புறுதி விற்பனை என்பது கையில் எந்த ஒரு பொருளும் இல்லாத நிலையில் மனிதர்களின் பலவீனங்களை வைத்தே செய்யப்படும் ஒரு தொழில்.

ஆனால் பொருள்களை வைத்து விற்பனை செய்யும் பல நேரடி நிறுவனங்கள் இருக்கின்றன. எல்லா வித பொருள்களையும் இந்த நிறுவனங்கள் விற்கின்றன. வெளி நாட்டு நிறுவனங்களோடு உள்நாட்டு நிறுவனங்களும் இவர்களோடு போட்டி போடுகின்றன. 

அது மட்டும் அல்ல நமது இந்திய நிறுவனங்களும் பல இந்த நேரடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. துணிமணிகள் விற்பனை,  பாரம்பரிய மருந்து வகைகள் என்று பல நேரடி நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

இந்த நேரடித் தொழிலில்கள் ஈடுபடும் பல குடும்பப் பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் பலர் பயன் பெறுகின்றனர். வேலை செய்து கொண்டே பகுதி நேரமாக மருந்து வகைகளை விற்பனை செய்யும் ஒரு பெண்மணியை எனக்குத் தெரியும்.  குறைந்தபட்சம் மாதம் 700 வெள்ளி வரை சம்பாதிக்கிறார்.  அது மட்டும் அல்ல. வேலை கிடைக்காத நிலையில் இருந்த தனது மகளை அவரை முழு நேர விற்பனையாளராக மாற்றிவிட்டார். மகள், அம்மாவை விட பல மடங்கு மேலே போய் விட்டார்.

ஏன் இதனை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் வெளி உலகமே தெரியாத நமது பெண்கள் இப்போது ஒரு புதிய உலகத்தைப் பார்க்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள். வேலை மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் காப்புறுதி தொழிலின் மூலம் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.   அவர்களுக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன.

இந்த நேரடித் தொழில்கள் நமக்குப் பல அனுபவங்களைக் கொடுக்கின்றன. எந்த அனுபவமும் இல்லாத "பச்சை மண்ணாக"  தொழில் செய்ய வரும் புதியவர்களுக்கு இந்த நேரடி நிறுவனங்கள் ஒரு சில அனுபவங்களைக் கொடுக்கின்றன.  பண நிர்வாகத்தைக் கற்று கொடுக்கின்றன.

இந்த நேரடி நிறுவனங்கள் கொடுக்கும் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  அனுபவங்கள் பெற இதுவே நமது ஆலோசனை!

Saturday 11 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (12)


தொழில் செய்ய அனுபவம் தேவையா?

அனுபவம் இருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்த்து விடலாம்.  அனுபவம் இல்லாவிட்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கி நமக்கு நாமே அனுபவங்களை தேடிக் கொள்ள வேண்டி வரும்!  

காலம் தாழ்த்தாமல் காரியங்கள் ஆக வேண்டும் என்றால் அனுபவம் முக்கியம்.  

அனுபவம் இருந்தால் தேவையற்றவைகளை எல்லாம் தவிர்த்து விடலாம்.

நீங்கள் என்ன துறையில் வெற்றிநடை போட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ  அந்த துறையில் அனுபவம் இருந்தால் உங்களின் வெற்றி வெகு சீக்கிரத்தில் அமைந்துவிடும்.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்துறையில் பணி புரிந்து  வந்தார்.  பின்னர் அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. அந்த இளைஞர் பின்னர் தானே சொந்தமாக ஒரு கடையைத் திறந்தார். முன்பு அவர் பணி புரிந்த அந்த நிறுவனம் விற்ற பொருள்களையே அவர் கடையில் வைத்தார்.  அவருக்கு ஒரு பிரச்சனையும் எழவில்லை.  பழைய நிர்வாகத்தில் ஏற்பட்ட அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது.  மொத்த வியாபாரிகளிடமிருந்து பொருள்கள் அனைத்தும் மலிவு விலையில் கிடைத்தன  பொருள்கள் இரண்டு மூன்று மாதங்கள் கடனில் கிடைத்தன. இலவச விளம்பரங்கள் கிடைத்தன. இப்போது அது ஒரு வெற்றிகரமான நிறுவனம். அந்த நிறுவனத்தோடு இன்னும் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இது தான் அவருக்குக் கிடைத்த அனுபவம்.

அனுபவம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. இல்லாவிட்டால்...?  பொருள்களை அவர் தேடிப் போய் வாங்க வேண்டும். உண்மையான விலை தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். புதிய வியாபாரிகளுக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள். நாமே விளம்பரங்களைப் போட வேண்டும். நல்ல சரியான ஓர் அனுபவம் கிடைக்க ஒரு சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் ஒரு சிலருக்குப் பல ஆண்டுகள்!   அது தான் அனுபவம் என்பது!

மிகவும் வெற்றிகரமான மலேசிய தொழிலதிபர், ஏர் ஏசியா புகழ் டோனி ஃபெர்னாண்டஸ் அவர்களுக்கு எதுவும் அனுபவம் உண்டா? ஆமாம் அவர் இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த பின்னர் வெர்ஜினியா ஏர்வேஸ்  என்னும் மலிவு விலை விமான நிறுவனத்தில் பணி புரிந்திருக்கிறார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த அனுபவம் தான் அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தை வாங்கிய போது கை கொடுத்தது.  கையில் பணம் இல்லாத நிலையில் நொடித்துப் போன ஒரு விமான நிறுவனத்தை சூழியம் விலைக்கு வாங்கி இன்று வெற்றிகரமான மலிவு விலை விமான நிறுவனமாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது!

மேலே சொன்னது போல அனுபவம் இருந்தால் நல்லது. பல இடையூறுகளைத் தவிர்க்கலாம். வெற்றி பெறுவதில் கால தாமதத்தைக் குறைக்கலாம்!

அனுபவம் தேவை தான்!

Friday 10 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (11)

தொழில் நமக்குப் புதிதல்ல!

தொழில் செய்து பிழைப்பது என்பது நமக்குப் புதிதல்ல.

நமது நாடு வளர்ச்சி அடையாத ஆரம்ப காலங்களில் தொழில் வளர்ச்சிக்காக நிதி உதவிகள் கொடுத்து வியாபாரிகளை உயர்த்திவிட்டவர்கள் நமது செட்டியார் சமுகத்தினர் தான்.

அப்போதெல்லாம்ஆங்காங்கே ஒரு சில வங்கிகளே இருந்து வந்தன. அவைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கடன் கொடுப்பதில்லை.

நமது செட்டியார்கள் தான் வங்கிகளாக செயல்பட்டனர். அப்போது நமது சமூகத்தினர் பலர் பலவித தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். 

இப்போதும் கூட சிறிய நகரங்களிலோ, பெரிய நகரங்களிலோ நமது சமூகத்தினர் தொழில் செய்ததற்கான அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு நகர்த்திலும் ஓரிரெண்டு 'லிட்டல் இந்தியா' இருந்த அடையாளங்கள் இன்னும் இருக்கின்றன.

செட்டியார்களிடம் கடன் வாங்கி தொழில்களை ஆரம்பித்த சீனர்கள் தங்களது தொழில்களில் அசுர வேகத்தில்  ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.  அப்போதிருந்த அரசியலும் அவர்களுக்குச் சாதகமாக இருந்ததால் நம் தொழில்கள் அனைத்தும் முடங்கி விட்டன!

பரவாயில்லை!  இவைகளெல்லாம் நமக்குப் பாடங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய  விஷயம் தொழில் என்பது நமக்குப் புதிதல்ல என்பதுதான்.

இழ்ந்துவிட்டோம்.  இழந்துவிட்டவைகளை மீண்டும் நாம் மீட்டெடுக்க வேண்டும். ஒரே நிபந்தனை. நாம் அனைவரும் தொழில் துறைகளில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டும்.  நாம் செய்கின்ற தொழில்களையும் நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். சிறிய தொழில்களையும் பெரிய தொழில்களாக மாற்றக் கூடிய சக்தி அவர்களுக்குண்டு.

இப்போதெல்லாம் நம்பிக்கை தரும் ஒரு சில விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  தந்தை மூன்று லோரிகளை வைத்து தொழில் செய்து வந்தார். பட்டப்படிப்பு படித்துவிட்டு வந்த தனையன் அதனை பதினைந்து லோரிகளாக்கி வேறு புதிய தொழில்களிலும் ஈடுபட்டு விட்டார்.   தந்தை பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தார். தீடீரென அவர் மரணமடைந்தார்.  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவரது மகள் இப்போது அந்த நிறுவனத்தை தானே நடத்திக் கொண்டிருக்கிறார்.

இவர்களெல்லாம் நமக்கு நம்பிக்கை தரும் எதிர்காலங்கள்!

தொழில் உலகம் நமக்குப் புதிதல்ல!  தேவை அதற்கான ஆர்வம்! ஈடுபாடு மட்டுமே!

Thursday 9 January 2020

இந்தியாவின் முதல் வாக்காளர்!


                                              ஷியாம் சரண் நேகி                        

சுதந்திர இந்தியாவில் 1951 -ம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக, தனது வாக்கைப் பதிவு செய்தவர் ஷியாம் சரண் நேகி.

ஷியாம்,  இமாலயப் பிரதேசம், கல்பா என்னும் ஊரில் 1917 - ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர். (1.7.1917)  அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்தியா 1947 - ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் நடந்த முதல் இந்தியப் பொதுத் தேர்தலில்  - 1951 - ஆண்டு, அக்டோபர் மாதம் 25-ம் தேதி - இந்தியாவின் முதல் வாக்கைப் பதிவு செய்தவர் ஷியாம். 1951 - ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து இந்தியப் பொதுத் தேர்தல்களிலும் அவர் வாக்களித்து வந்திருக்கிறார். முதல் வாக்காளர் என்னும் முறையில் அவருக்கு ஓர் இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!

ஷியாமுக்கு இப்போது 103 வயதாகிறது. முதுமையின் காரணமாக இப்போது அவர் உடல் நலம் குன்றி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில முதலமைச்சர் ஷியாமுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஷியாம் சரண் நேகி  நீண்ட நாள் வாழ நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்!

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (10)

ஏமாற்றுவது என்பது தான் தொழிலா?

தொழில் செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களா? உண்டு என்றும் சொல்லலாம். இல்லையென்றும் சொல்லலாம்.

ஏமாற்று வேலை என்பது இங்கும், அங்கும். எங்கும் வியாபித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரத் துறையில் அது கொஞ்சம் அதிகம் என்பது உண்மை தான். ஆனால் எல்லாருமே ஏமாற்றுக்காரர்கள் என்று முத்திரைக் குத்துவது சரியல்ல.

நம்முடைய அளவுகோள் என்பது சீனர்களை வைத்துத்தான். காரணம் ஏதோ ஒரு வகையில் அவர்கள் நம்மை அனுதினமும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள! 

இப்போது நமது வியாபாரிகளுக்குப் பல சிக்கல்கள் உண்டு.  நாம் பொருள்களை வாங்குவது சீனர்களிடமிருந்து தான். சீனர்கள் தான் மொத்த வியாபாரிகளாக இருக்கின்றார்கள். பொதுவாக சீனர்கள், சீனர்களுக்கு மட்டும் தான் விலைகளைக் குறைத்துக் கொடுப்பார்கள். மற்ற இனத்தவருக்கு மிகவும் 'தாராளமாகப்' போட்டு அடிப்பார்கள்!

இதனால் தான் நமது கடைகளில் பொருள்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  இது மக்களை ஏமாற்றுவது அல்ல. வேறு வழியில்லாததால் அவர்கள் விலையை ஏற்றி விடுகிறார்கள்!

ஆனாலும் இப்போது மாற்றங்கள் தெரிகின்றன. போட்டிகள், சாதாரண போட்டிகள் அல்ல, கடும் போட்டிகள்,  அதிகமாகி விட்டன. அதனால் யாரும் அவர்கள் விருப்பத்திற்கு விலைகளை ஏற்றிவிட முடியாது. ஏற்றினால் அவர்களின் தொழிலில் பாதிப்பு ஏற்படும். அதனால் நியாயமான விலையில் தான் மொத்த வியாபாரிகள் விற்கின்றனர். சில்லறை வியாபாரிகளும் நியாயமான விலையில் தான் தங்களது பொருள்களை விற்கின்றனர்.

அதனால் விலைகளில் ஏமாற்றுவது என்பது இப்போது குறைந்திருக்கின்றது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால் வேறு வகையான ஏமாற்று வேலைகள்?  நாம் ஏமாளி என்றால் நம்மை ஏமாற்றுவது என்பது எப்போதும் நடக்கும் கதை தான்! அதுவும் இந்தியர் என்றால் ...சொல்லவே வேண்டாம்!

விலையில் ஏமாற்றுவது என்பதெல்லாம் இப்போது குறைந்து விட்டது. காரணம் நமக்குத் தெரியும். நம்மைச் சுற்றி ஏகப்பட்ட பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவர்களோடு நாம்  போட்டியிட வேண்டிய சூழல்.

அதனால் ஏமாற்று வேலை என்பதெல்லாம் இப்போது மிக மிகக் குறைவு.  விரும்பினாலும் வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது!

தொழிலில் ஏமாற்றுவது என்பது கட்டாயம் அல்ல! 

Wednesday 8 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (9)


முடியும் என்று நினையுங்கள்

தொழில் செய்து  பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அப்புறம் பின் வாங்காதீர்கள். 

பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள தொழில் செய்வதே சிறந்த வழி. இல்லாவிட்டால் சீனர்கள் ஏன் தொழிலை நோக்கியே தங்களது கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்பதை கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

'தொழில் செய்யலாமா?' என்று எந்த ஒரு சீனரிடமும் ஆலோசனையோ அல்லது அறிவுரையோ கேட்காதீர்கள். அவர்களைப் பொறுத்தவரை சீனர்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் மற்றவர்கள் தங்களிடாம் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்! அவர்கள் அப்படித்தான் உருவாக்கப்பட்டவர்கள்! அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் சீனர்கள் மட்டுமே பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்! மற்ற இனத்தவர்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை!

அப்படியே நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால் அவர்களின் பதில் எப்படி இருக்கும்?  முதலில்:  தொழில் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்! என்பார்கள். ரொம்ப பிரச்சனை! என்பார்கள். அரசாங்கம் அப்படி செய்கிறது, இப்படி செய்கிறது! என்று குற்றம் சாட்டுவார்கள்.  அதாவது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் உங்களால் முடியாது! என்பது தான் அதன் சுருக்கம்!  இவ்வளவு கஷ்டம் என்று சொல்லுபவர்கள் தொழிலை விட்டு  அவர்கள் ஓடிவிட்டார்களா? அது மட்டும் நடக்காது!

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அவர்களின் ஆரம்ப காலத்தில் தொழில் செய்ய வங்கிகள் கடன் கொடுக்கவில்லை. நமது இன செட்டியார்கள் தான் அவர்களின் உயர்வுக்கு ஏணியாக இருந்தார்கள்! ஆக, நாம் தான் அவர்களுக்கு உதவினோம்.  செட்டியார்களிடம் பணம் கடன் வாங்கிய நேரம் சீனர்களுக்கு அது நல்ல  நேரமாக அமைந்து விட்டது! இன்று வரை அவர்களுக்கு ஏற்றம் தான்!

அதே ஆரம்ப காலத்திலிருந்து, சீனர்களுக்கு முன்பே - யார் தொழில் செய்து வந்தார்கள்? நமது செட்டியார்கள், நமது தமிழ் முஸ்லிம்கள், நமது குஜாராத்தி சகோதரர்கள் - இப்படித்தான் அந்த வரிசை அமைந்திருந்தது.

ஆக, தொழில் நமக்குப் புதிதல்ல. ஆனால் எண்ணத்தில் மாற்றம் வேண்டும். நம்மால் முடியும்  என்பதை மனத்தில் பதிய வைக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை எடுத்து எறிய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உடையோரை நாம் பேச அனுமதிக்கக் கூடாது. அவர்களுடன் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும்!

முடியும்! முடியும்!


Tuesday 7 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (8)

ஏன் கவனம் சிதறுகிறது?

தொழில்களில் ஈடுபடும் ஆரம்பகாலத்தில் நம்மில் பலர் தொழிலைவிட்டு வேறு எங்கேயோ கவனத்தைச் செலுத்தி தொழிலை 'அம்போ' என்று விட்டு விடுகிறோம்!

காலங்காலமாக தொழில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவித கவனச் சிதறல்களும் ஏற்படுவதில்லை. ஒரே காரணம் தான். செய்யும் தொழிலே தெய்வம் என்பது தான் அவர்களது கொள்கை. 

சான்றாக சீனர்களைப் பாருங்கள். வெளியே பலருக்குத் தெரியும்படியாக அரசியல் பேசுவதில்லை. அவர்கள் கவனம் என்பது அவர்கள் செய்யும் தொழிலில் மட்டும் தான் இருக்கும். மற்றவைகள் அனைத்தும் அவர்களுக்கு தேவை இல்லாதவை. அவர்கள் நன்கு வளர்ந்த பின்னர் தான் பொது வாழ்க்கைக்கு வருகிறார்கள்.அதனால் தான் அரசியலுக்கு வந்த பின்னரும் யோக்கியமாக அவர்களால் இருக்க முடிகிறது!  நமது அரசியல்வாதிகளைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்!

சீனர்கள் மட்டும் அல்ல.  நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்களைப் பாருங்கள். அவர்கள் தொழில் தான் அவர்களுக்கு முக்கியம்.  இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் தான் அரசியலுக்கோ பொது வாழ்க்கைக்கோ வருகிறார்கள். ஏன்? வீட்டு தளவாட சாமான்கள் விற்கும் குஜாராத்தி = அல்லது பட்டேல் - சகோதரர்களைப் பாருங்கள். அவர்களின் தொழிலுக்குத் தான் முதலிடம். தொழிலை விட்டு அவர்கள் நகருவதில்லை. இப்போது குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் தலைமுறை தலைமுறையாக தொழிலில் 'கொட்டை' போட்டவர்கள்! அவர்கள் தங்களது தொழிலுக்குத் தான் முதலிடம் கொடுக்கிறார்கள்! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொழில் தான் அவர்களின் வாழ்வாதாரம்.  தொழிலை விட்டுவிட்டு யாரிடமும் போய் கை கட்டி அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை.

ஆனால் நமது நிலை என்ன? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பார்கள்.  தொழிலில் வெற்றியைக் காணும் முன்பே எவனோ ஓர் அரசியவாதி வருவான். அவனுக்குக் கால் கை பிடிக்க வேண்டும். அப்போது தான் ஏதோ பட்டம் பதவிகள் கிடைக்கும்! நமது எண்ணங்கள் திசை மாறிப்போகும்! நமது பல தொழில்கள் இப்படித்தான் அரசியல்வாதிகளை நம்பி ஒன்றுமில்லாமல் போய் விட்டன.

இப்போது சொல்லுகிறேன். மன உறுதியோடு செயல்படுங்கள். நீங்கள் வெற்றி பெற்று விட்டால் உங்களைத் தேடி பட்டம் பதவிகள் தானாக வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வெற்றி பெறும் வரை உங்கள் கவனத்தைச் சிதறிடிக்காதீர்கள்.

Monday 6 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (7)

சிறு வியாபாரங்களை மதிப்போம்!

இன்று பெரும் பெரும் வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மிக எளிமையான துவக்கத்தைக் கொண்டவை என்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. 

இன்றைய பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து விடவில்லை! ஒரு மனிதர், ஒரே மனிதர் அவருடைய உழைப்பு அல்லது கணவன் - மனைவி உழைப்பு, அல்லது ஒரு குடும்பத்தினரின் உழைப்பு, அவர்களுடைய தியாகங்கள் = இப்படித் தான் பல நிறுவனங்கள் உருவகியிருக்கின்றன! அதிலும் தனி மனித உழைப்புத் தான் அதிகம்.

ஒரு வியாபாரி வானொலியில் தனது அனுபவத்தைச் சொன்னார். கையில் இருந்த ஐம்பது வெள்ளியில் தான் தனது வியாபாரத்தைத் தொடங்கினாராம்.  தானே செய்த பொருட்களை ஒவ்வொரு தோட்டமாக சென்று அந்தப் பொருட்களை விற்றாராம். இப்படித்தான் அவரது நிறுவனத்தை அவர் வளர்த்திருக்கிறார். இன்று அவரது நிறுவனம் பல நாடுகளுக்கு தனது பொருட்களை அனுப்புகின்றது.

பொதுவாக சிறு வியாபாரிகளின் ஆரம்ப காலம் என்பது மிகவும் கஷ்டமான காலம்.  இந்த நேரத்தில் அவர்களின் பொருட்களை நாம் வாங்கி  ஆதரிப்பது அவர்களுக்கு அது மிகவும் பேருதவியாக இருக்கும். அவர்கள் மரியாதையாக அழைப்பதும் து அவர்களுக்கு ஓர் உற்சாகத்தைத் தரும்.

அஞ்சடியில் வியாபாரம் செய்யும் சிறு சிறு வியாபாரிகளிடம் நான் ஏதாவது ஒரு பொருளை வாங்கி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது எனது வழக்கம். அத்தோடு அவர்களை நான் "முதலாளி" என்று அழைப்பதும் உண்டு. பாட்டுப் புத்தகங்கள், நாளிதழ்கள் விற்பனை செய்த ஒரு நண்பரை நான் முதலாளி என்று தான் அழைப்பேன். பிற்காலத்தில் அவர் ஓர் உணவகத்தைத் தொடங்கி பெரிய முதலாளியாகி விட்டார். பின்னர் அவரே இரண்டு உணவகங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். .  இந்த முன்னேற்றமெல்லாம் அவருடைய உழைப்பு தானே தவிர வேறொன்றுமில்லை.  நாம் அவர்களை முதலாளி என்று அழைப்பதன் மூலம் அவர்கள் முதலாளிகள் ஆக வேண்டும் என்கிற ஆசையை நாம் உசுப்பிவிடுகிறோம்!  நம் இனத்தாருக்கு நாம் தானே தூண்டுகோளாக இருக்க வேண்டும்!

நம்மிடையே ஐஸ்  செண்டோல் வியாபாராம் செய்பவர்கள், கச்சாங்பூத்தே வியாபாரம் செய்பவர்கள்,  தோசை தேனீர் விற்பவர்கள், பூ வியாபாரம் செய்பவர்கள் - இப்படி எத்தனையோ பேர் சிறு சிறு வியாபாரங்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கின்ற்னர்.  அவர்கள் எல்லாம் இன்றைய சிறு சிறு முதலாளிகள். நாளைய தொழில் அதிபர்கள்.

சிறு வியாபாரிகளை அலட்சியம் செய்யாதீர்கள்.  ஆதரவுக் கரம் நீட்டுங்கள். அவர்களும் முன்னேற்றம் காணட்டும்! அதைவிட அவர்களை முதலாளி என்று அழைத்துப் பெருமைப் படுத்துங்கள். அதுவே அவர்களை நாளை முதலாளியாக்கும் ஊக்குசக்தியாக அமையும்!

Sunday 5 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (6)

ஆயிரம் முறை சிந்தியுங்கள்!

சந்தேக  மனத்தோடு அல்லது அரைகுறை மனத்தோடு தொழில் செய்ய வராதீர்கள். 

அது தான் சொன்னேன்.  ஆயிரம் முறை சிந்தியுங்கள். உங்களுடைய சுற்றம், உற்றார், சொந்தம், நட்பு என அனைவருடனும் ஆலோசனைக் கெளுங்கள்.  ஒன்று, தோல்வியாளரிடம் எந்த ஓர் ஆலோசனையும் கேட்காதீர்கள்.  அவர்கள் நச்சுக் கிருமிகள். 

ஆயிரம் பேரிடம் ஆலோசனைக் கேட்கலாம் ஆனால் முடிவு உங்களுடையது தான். முடிவு எடுத்த பின்னர் 'அவன் சொன்னான். இவன் சொன்னான்' என்கிற குற்றச்சாட்டுகள் வரக்கூடாது! அது உங்கள் முடிவு. எது நடந்தாலும் அது உங்களுடைய முடிவு.  வெற்றி பெற்றாலும் அது உங்கள் முடிவு. தோல்வி அடைந்தாலும் அது உங்கள் முடிவு. 

ஆனால் தோல்வி அடைவதற்காக யாரும் தொழில் செய்ய வருவதில்லை. வெற்றி தான் குறிக்கோள்.  தொழில் செய்ய ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே உங்களை வெற்றிகரமான 'தொழிலதிபர்' என்பதாக நினைத்துச் செயல்படுங்கள்!  அதனால் யாரும் கெட்டுப்போகப் போவதில்லை! யாருக்கும் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை! அதெல்லாம் ஒரு வெற்றி மனப்பான்மை. அவ்வளவு தான். நாம் எப்போதுமே நமக்குள்ளே ஒர் உயர்வு மனப்பான்மையை   வைத்துக் கொள்வது நல்லது தானே!

உங்கள் மனம் வெற்றியை நோக்கியே சிந்திக்கட்டும். உங்கள் மனத்தை  வெற்றியாகவே வைத்திருங்கள். 

தொழில் என்றாலே நெருக்கடிகள் வரலாம். சில  நெஞ்சை அடைக்கலாம்.   சிரமத்தை ஏற்படுத்தலாம். சில்லறைத் தனமாக நடந்து கொள்ளலாம்.  அவமானங்கள் நேரலாம். எல்லாமே இருக்கும். அதனை எல்லாம் முறியடித்துத் தான் முன்னேற்றத்தைக் காண வேண்டும்.

நமக்கு வரும் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அது நமக்குத் தான் புதிது.  மற்றபடி தொழில் செய்பவர்களுக்கு அது புதிதல்ல. 

உலகெங்கிலும் இலட்சக்கணக்கான பேர் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாருமே நம்முடைய ஆரம்ப கால அனுபவங்களை அவர்களும் அனுபவித்திருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி தான் அவர்கள் இன்று பொருளாதார உலகில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்!   அவர்கள் அம்பானிகளாக இருந்தாலும் சரி ஆனந்த கிருஷ்ணன்களாக இருந்தாலும் சரி நம்முடைய அனுபவங்கள் தான் அவர்களுடைய அனுபவங்களும்!

அதனால் ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஆனால் முடிவு எடுத்துவிட்டால் அது உங்களுடைய முடிவு. முடிவு எடுத்த பின்னர் முன்னோக்கி நகருங்கள்! முன் வைத்த காலை ...முன்னோக்கியே இருக்க வேண்டும்! முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டும்!

முடிவு எடுத்த பின்னர் 'அவன் சொன்னான், இவன் சொன்னான்' என்கிற குற்றச்சாட்டுகள் வேண்டாம்! அது  உங்களுடைய முடிவு. உங்களுடையது மட்டுமே!

Saturday 4 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (5)


சீனர்களுக்கு மட்டும் தான் கடன் கொடுக்கிறார்கள்!

நம்மிடையே வங்கிகளைப் பற்றியான ஒரு குற்றச்சாட்டு உண்டு. வங்கிகள் சீனர்களுக்கு மட்டும் தான் கடன் கொடுப்பார்கள். காரணம் கொடுப்பவர்களும் சீனர்களாக இருப்பதால் வாங்குபவர்களும் சீனர்களாக இருப்பதால் அவர்களுக்குத் தான் முதலிடம் என்பது நமது வாதம்.

இருக்கட்டும். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள், சீனர்களா, இந்தியர்களா, மலாய்க்காரர்களா என்று இன ரீதியில் சிந்திப்பதில்லை.  அவர்களுக்கு  வேண்டியதெல்லாம் பணம்! கொடுக்கல் வாங்கல் சரியாக இருக்க வேண்டும். கொடுக்கும் பணம் திரும்ப வந்து வங்கிகளுக்குச் சேர வேண்டும். இழுத்தடிப்புகள் இருக்கக் கூடாது! 

அதனால் நீங்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் அந்தப் பணத்தைத் திரும்ப கொடுக்கும் சக்தி உங்களுக்கு உண்டா,  உங்களின் வியாபாரம் இலாபகரமாகப் போகிறதா என்று இப்படி சில அளவுகோள்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். 

அதனால் தான் அவர்களிடமிருந்து ஆயிரத்தெட்டு கேள்வி கணைகள் உங்களை நோக்கிப் பாய்கின்றன!  அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் ஏமாற்றுக்காரர் என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒன்றை நான் சொல்லுவேன். வியாபார மேம்பாட்டுக்காக வங்கியில் கடன் வாங்கியவர் அவரது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்!  இன்னொருவர் வீட்டை பழுது பார்க்க அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்!  அப்படியென்றால் அந்தக் கடனை எப்படி அவரால் திரும்பச் செலுத்த முடியும்? 

இப்படி பல குறைபாடுகள் நம்மிடம் உண்டு. ஆனால் நாம் வங்கிகளைக் குறை சொல்லுகிறோம்!

ஓர் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனர்கள் வியாபாரத்தில் மட்டும் தான் அவர்களின் ஈடுபாடு. வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும்.  வியாபாரத்தில் இன்னும் வளர வேண்டும். பெரும் பணக்காரனாக வேண்டும். சொத்து சுகங்கள் வாங்க வேண்டும்.  அதற்காக நாம் உழைக்க வேண்டும். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். முக்கியமாக வங்கியில் வாங்குகிற கடனை எந்த நிலுவையும் இல்லாமல் அதனை மாதாமாதம் கட்டிவிட வேண்டும். வாங்கிய கடனைக் கட்டினால் தான் வங்கியிடம் மீண்டும் மீண்டும் இன்னும் பெருந்தொகையாக கடனாகப் பெற முடியும் என்னும் அந்த அக்கறை, ஆர்வம் அவர்களிடம் உண்டு.

வியாபாரத்தை விட்டால் பிழைக்க வேறு வழியில்லை என்பதை சீன சமுகம் புரிந்து வைத்திருக்கிறது. அது அவர்களது பிழைப்பு. அது தான் அவர்களது உயிர். அதனால் கடன் வாங்கினால் அதனை முறையாகக் கட்ட வேண்டும் என்கிற அந்த ஒழுங்குமுறை! அதைத்தான் வங்கிகளும் விரும்புகின்றன.

நாம் வியாபாரத்தில் இருந்தால் அதன் வளர்ச்சிக்காக நூறு விழுக்காடு நமது பங்கை செலுத்த வேண்டும்.

வங்கிகள் ஏமாற்றுக்காரர்களை விரும்பமாட்டார்கள்! அவர்கள் இனம் பார்ப்பதில்லை!

கொஞ்சம் சிந்தியுங்கள்!

தாய்மொழிப் பள்ளிகள் இனப் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று  சொல்லுகின்ற எதிர்ப்பாளர்களுக்கு ஒரு விஷயத்தை கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

தாய்மொழிப் பள்ளிகள் தீடிரென்று இன்றோ நேற்றோ முளைத்தது அல்ல என்பதை  முதலில் புரிந்துகொள்ளுங்கள்.  சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்நாட்டின் அரசு மொழிகளாக வலம் வந்து  கொண்டிருக்கும் மொழிகள் இவை. 

இந்த இருநூறு ஆண்டுகளில்இந்தப் பள்ளிகளினால் எந்தக் காலத்தில் எந்த நேரத்தில் இனப் பதற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் வரிசைப்படுத்த முடியுமா?

ஆனால் எங்களால் வரிசைப்படுத்த முடியும். ஸாகிர் நாயக் என்கிற இஸ்லாமிய அறிஞர் இந்நாட்டிற்குள் என்று காலடி எடுத்த வைத்தாரோ அன்றிலிருந்து இனப்பதற்றம் தோன்ற ஆரம்பித்துவிட்டது!

அவரை ஆதரித்து பெர்லிஸ் முஃப்தி எப்போது வாய் திறந்தாரோ அன்றிலிருந்து இந்நாட்டில் இனப் பதற்றம் தோன்ற ஆரம்பித்து விட்டது!

இன்னொன்றும் சொல்லலாம். பெர்லிஸ் முஃப்தி போலவே பெர்லிஸ் பல்கலைக்கழகமும் - இருவரின் கூட்டு முயற்சியில் - இனப்பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. 

ஒரு முஃப்தியும் இந்தியர்களைத் தாக்குகிறார். ஒரு பல்கலைக்கழகமும் இந்தியர்களைத் தாக்குகின்றது என்றால் அவர்கள் நோக்கம் என்ன புனிதமானதா?  அல்லது இறைவனை நோக்கி நகருகின்ற ஒரு முயற்சியா? இனப்பதற்றத்தை ஏற்படுத்துகின்ற முயற்சிகள் தானே! 

ஒரு சிறிய பிரச்சனையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தரப்பினர் எடுத்ததெற்கெல்லாம்  :மே 13 திரும்ப வேண்டுமா?" என்று கூறி இனப்பதற்றத்தை ஏற்படுத்துவது  என்ன தாய்மொழிப்பள்ளிகளா?

இவர்கள் ஏன் தாய்மொழிப்பள்ளிகளை வெறுக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 

தேசியப் பள்ளிகள் தரமான கல்வியைத் தர தவறிவிட்டன. கல்வித்தரம் படுபாதாளத்திற்குப் போய்விட்டது என்பது அவர்களுக்கே புரியும்! நாம் சொல்லத் தேவை இல்லை! தேசியப் பள்ளிகளில் கட்டொழுங்கு என்பது பொதுவாகவே இல்லை என்பது பெற்றோர்களுக்குத் தெரியும். 

அதனால் தான் சீனப்பள்ளிகளில் மலாய் மாணவர்கள் 18 விழுக்காடு கல்வி கற்கின்றனர் என்கிறது புள்ளி விபரங்கள். ஏன் என்பதை எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சீனப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்கின்றன. கட்டொழுங்கு பிரச்சனைகள் இல்லை. மாணவர்கள் நல்ல தரமான கல்வியைப் பெறுகின்றனர்.

சென்ற ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதங்கள்  நாட்டில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. 

இவைகள் எல்லாம் தாய்மொழிப்பள்ளிகளின் தரத்தைக் காட்டுகின்றன. நல்ல தரமான கல்வியைக் கொடுக்கும் தாய்மொழிப்பள்ளிகளுக்கு  நாட்டில் இனப்பதற்றத்தை ஏற்படுத்த நேரமில்லை என்பதை எதிர்ப்போர் தெரிந்து கொள்ள வேண்டும்.

"எதிர்ப்போர்"  வாயைத் திறக்காமல் இருந்தாலே போதும் நாட்டில் எந்த இனப்பதற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை!

தரமான கல்வியைப் பெறாதவர்களே பிரச்சனைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்!

Friday 3 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (4)

பணம் ஒரு பிரச்சனை அல்ல!

வியாபாரம் செய்யத் துணிந்துவிட்டவனுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல!

உங்கள் பணத்தைப் போட்டுத் தான் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கிறீர்கள்.  அப்போது பணம் உங்களுக்கு ஒரு பிரச்சனை அல்ல. எப்படியும் முதல் முதலீடு என்பது  உங்களுடையதாகவே இருக்கும். அதில்  எந்த சமரசமும் இல்லை.
 
உங்களுக்குப் பணப் பிரச்சனை என்பது எப்போது ஆரம்பிக்கும்?  உங்கள் வியாபாரம் பெருகும் போது, உங்களது வியாபாரத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் போது பணம் என்பது ஒரு பிரச்சனையாக எழும்.

அதனை நீங்கள் மிக எளிமையாகக் கையாளலாம். 

நீங்கள் உங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும் போதே - அந்த முதல் நாளிலிருந்தே - உங்களின் வரவு செலவுகளை எழுதி வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்துவிடுங்கள்.  இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு சில ஆயிரங்கள் போட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களுடைய கணக்கு வழக்குகளை எழுதுவது என்பது சாதாராண விஷயம். மிகவு ம் அத்தியாவசியம் கூட.  உங்கள் வருமானத்தை  வருமானவரித் துறைக்கும் அறிவித்து விடுங்கள்.

நீங்கள் வியாபாரம் செய்வது  உங்கள் முன்னேற்றத்துக்குத்  தானே தவிர யாருடைய முன்னேற்றத்துக்கும் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் அனைத்து ஆவணங்களும் 'பக்கா' வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பொய், ஏமாற்று வேலைகள் வேண்டாம். 

உங்களுடைய ஆவணங்கள் சரியாக இருந்தால்  வங்கிகள் கடன் கொடுக்கத் தயாராக இருக்கின்றன.  வங்கிகளை ஏமாற்ற முடியாது. உங்களுடைய தொழிலை மேம்படுத்த வங்கிகள் உதவிகள் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இங்கு சொல்லப்படுபவை எல்லாம் உண்மையாகவே தொழில் செய்து பிழைக்க நினைப்பவர்களுக்கு மட்டும் தான்.  அரைகுறைகளுக்கு அல்ல. சும்மா "செஞ்சிப்பாப்போமோ!"  என்பவர்களுக்கு அல்ல.  

தொழில் என்பது அக்கறை, நாணயம், ஈடுபாடு, முன்னேற்றம், முனைப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தான்.  

பணமா? அது பிரச்சனை அல்ல! தொழில் செய்ய வந்து விட்டோம் அப்புறம் என்ன அது பிரச்சனை, இது பிரச்சனை? 

எல்லாவற்றையும் சமாளித்து முன்னேறுவது தான் தொழில்!

Thursday 2 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (3)


பணம் தான் பிரச்சனையா?

நம்மிடையே ஒரு பிரச்சனை உண்டு.  "நான் வியாபாரத் துறையில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை!" என்று யாரைக் கேட்டாலும் பதில் இப்படித்தான் வரும்.

ஒரு முறை நமது வானொலி வியாபார சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில் ஒரு நேயர் பங்கேற்றார்.   அவர் பேசும் போது மேலே சொன்ன அதே பதில் தான் அவரும் கொடுத்தார். பேசுவது என்னவோ வாய்ப்புக் கொடுத்தால் வியாபார உலகத்தையே மாற்றி அமைத்து விடுவேன் என்கிற ரீதியில் பதில் அளித்துக் கொண்டிருந்தார் ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி "உங்களிடம் நூறு வெள்ளி இருந்தால் போதும், உடனே வியாபாரத்தை ஆரம்பித்து விடலாம்" என்று தான் அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவரிடம் அந்த நூறு வெள்ளிக்கும் வாய்ப்பில்லை!

இவர்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்!  வியாபாரம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இப்படி ஒரு பதிலை வைத்திருக்க மாட்டார்கள். வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தங்களிடம் ஓரளவாவது பணம் வைத்திருப்பார்கள்.  மற்றவர்களிடம் கடன் வாங்கித்தான் தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள்! தங்களுடைய பணத்தை வெளியாக்கக் கூடாது என்பது தான் அவர்களது கொள்கை.  தொழில் தோல்வி அடைந்தால் அது அவர்களது பணம் இல்லை! ஊரான் வீட்டுப் பணம் என்ன ஆனால் நமக்கென்ன என்கிற அக்கறையின்மை!

"மற்றவர்கள் பணம் கொடுத்தால் நான் வியாபாரம் செய்வேன்! அரசாங்கம் பணம் கொடுத்தால் நான் வியாபாரம் செய்வேன்" என்பவர்கள் எல்லாம் வியாபாரம் செய்ய இலாயக்கில்லாதவர்கள்! அவர்களை வியாபாரம் செய்யச் சொல்லி யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

வியாபாரம் செய்பவர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக கடன் வாங்கலாம். அது அவசியம் தேவை. வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டால், அவர்களின் கணக்கு வழக்குகள் சரியாக இருந்தால், கடன் கொடுப்பதில் வங்கிகளும் தயாராக இருக்கின்றன.

வியாபாரத்தை ஆரம்பிக்க முன்னேரே உங்களுக்குக் கடன் தேவை என்றால் நீங்கள் வியாபாரம் செய்ய வேண்டாம்.  முதலில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். பின்னர் பணம் தானாக வரும்!

கல்வி அமைச்சர் பதவி விலகல்?


கல்வி அமைச்சர் பதவி விலகினார் என்கிற செய்தி மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப் பொறுத்தவரை அதனைச் சரியான நடவடிக்கையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பொதுவாக அமைச்சர்கள் யாராக இருந்தாலும் சரி அரசாங்கத்தின் கொள்கைகளைத்தான் செயல்படுத்த முடியும். இன்று இவர் போகிறார். நாளை வேறொருவர் வருகிறார்.  அவரால் மட்டும் என்ன செய்து விட முடியும்? 

புதிதாக வருகிறவருக்கு ஒன்றும் விசேஷ சலுகைகள் ஒன்றும் கிடையாது. அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரால் அரசாங்கக் கொள்கைகளை எதனையும் மாற்றி அமைத்து விட முடியாது. இருக்கிற கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அது தான் அவருடைய வேலை!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொன். வேதமூர்த்தி பதவி ஏற்ற போது இந்தியர்களுக்குக் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று எதிர்பார்த்தோம். எதுவும் கொட்டவில்லை! இப்போது அவர் யாருக்கு அமைச்சர் என்று யாருக்கும் தெரியவில்லை! ஏதோ பூர்விகக் குடியினருக்காகவது அவரால் சேவை ஆற்ற முடிகிறதே என்று திருப்தி அடைவோம்!

எந்தப் பதவியாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திபடுத்த முடியாது என்பது நமக்குத் தெரிந்தது தான்.

கல்வி அமைச்சர் பதவி என்பது மிகவும் சவாலான ஒரு பதவி.  அது மொழி சார்ந்தது.   ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்துக் கொண்டு போகிறார்கள்! முந்தைய அரசாங்கத்தின் போது கல்விக் கொள்கைகளை ஆதரித்தவர்கள் இப்போது எதிரிகளாகச் செயல்படுகிறார்கள்.  அத மட்டும் அல்ல இன ரீதியாக பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள்!

இவர்கள் எல்லாம் அடுத்த ஆட்சியை இனப்பகையை உருவாக்குவதன் மூலம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என நினைக்கிறார்கள்!

ஆக, இப்போது யார் கல்வி அமைச்சராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  கொள்கைகள் அப்படியே தான் இருக்கின்றன. செயல்படுத்துவதில் தான் சிக்கல்!

கல்வி அமைச்சர் மஸ்லி இன்னும் சில காலம் நீடித்திருக்கலாம்! 

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்! (2)

பொருளாதார வலிமை

நாம் முன்னேறி விட்டோம் என்றால் எதனை வைத்து  அதை அறிந்து கொள்ளுவது?  ஒன்றே ஒன்று தான். அது தான் பொருளாதார வலிமை. மற்றைவைகள் எல்லாம் அதன் பின்னால் வருவது தான். இது தான் உலகியல் பார்வை!  நாமும் ஏற்றுக் கொள்வோம்!

பொருளாதார வலிமையை எப்படிப் பெருக்கிக் கொள்வது?   வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்று சொல்லுவார்களே அதே போல வீட்டுக்கு ஒரு வியாபாரி என்கிற நிலை நமக்கு வர வேண்டும்.

அதே சமயத்தில் "நான் படித்து விட்டேன், அதற்கேற்ற வேலை எனக்கு  வேண்டும்!" என்று ஒரு சிலர்  வேலை அவர்களைத் தேடி வரும் வரை காத்துக் கொண்டிருப்பார்கள்!

நாட்டின் நிலைமை அப்படி இல்லை. கிடைத்த வேலையைப் பற்றிக் கொள்ளுங்கள் என்பது தான் நமது அறிவுரை.

ஆனால் நீங்கள் எந்தக் காலத்திலும் வேலைக்காக காத்திருக்காதீர்கள். ஒன்று கிடைத்த வேலையைச் செய்யுங்கள். அல்லது ஏதோ ஒரு நேரடித் தொழிலில் ஈடுபட்டு விடுங்கள். இதன் மூலம் ஒரு வேலையை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள்.  அதே சமயத்தில் புதிய அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறீர்கள். பொருளாதார வலிமையும் உங்களுக்கு வந்து சேரும்.

சும்மா இருப்பது சோத்துக்கு நஷ்டம் என்பார்கள்.  'சும்மா' என்பது மட்டும் வேண்டாம்!

எந்த வேலையைச் செய்தாலும் ஒரு வியாபார சிந்தனையோடு செய்யுங்கள். வேலையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அச்சகத்தில் வேலை செய்த நண்பர் ஒருவர் பிற்காலத்தில் தானே சொந்தமாக ஓர் அச்சகத்தை நடத்தி வெற்றிகரமாக தனது பிள்ளைகளுக்கு அந்தத் தொழிலை விட்டுச் சென்றார். இன்று அந்த தொழில் ஆலமரம் போல் தழைத்தோங்கி நிற்கிறது.

இப்படித்தான் ஒவ்வொரு தொழிலும்.  எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆரம்பம் என்னவோ  சிறிது தான். 

தமிழர்களின் பொருளாதாரம் வலிமை அடைய வேண்டும்.  அதற்குப் பொருளாதார சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் தலை நிமிர பொருளாதார வலிமை ஒன்றே வழி!

Wednesday 1 January 2020

வாருங்கள்! நாமும் முன்னேறுவோம்!! (1)


வாருங்கள் நாமும் முன்னேறுவோம்!   

இனிமேலும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்.  காத்திருந்தது போதும்.   

மற்றவர்களின் கதைகள் எல்லாம் நம்மிடையே நிறையவே இருக்கின்றன.  மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து மூக்கில் கைவைத்தது போதும்.  

இப்போது நமது நேரம். நம்மைப் பார்த்து மற்றவர்கள் வியக்க வேண்டும். வேர்த்துக் கொட்ட வேண்டும்!

முன்னேற்றம் என்று எதைப் பற்றி சொல்லுகின்றோம். இன்றைய உலகம் நம்மிடம் உள்ள காசு பணத்தை வைத்துத் தான் மதிப்பிடுகிறது.

காசு பணம், கல்வி - இதற்குத் தான் முதன்மை. காசு பணம் இருந்தால் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது!  அந்த காசு பணத்தை பாதுகாத்துக் கொள்ள கல்வி தேவை. 

கல்வி இருந்தால் பணம் சம்பாதிக்க ஒரு வழியைத் தேடிக் கொள்ளுகிறோம் . சம்பாதித்த பணத்தை எப்படி செலவழிப்பது என்று கற்றுக் கொள்ளுகிறோம். 

எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகள் தான்.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனால் உங்கள் வழி  எது என்பது தான் முக்கியம்.  ஒரே ஒரு வழியைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அதுவும் நீங்கள் விரும்பும் ஒரே வழி.

அந்த வழி எது என்பதைத் தேர்ந்தெடுங்கள். அந்த வழியிலேயே உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். 

எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்பது தவறான வழி!  நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டும். அப்போது தான் உங்கள் கவனம் சிதறாது.

பணம் சம்பாதித்துப் பணக்காரனாவது அவ்வளவு முக்கியமா? ஆமாம், முக்கியம் தான். பணம் இல்லாதவனை இல்லாளும் விரும்பால்  என்பது உண்மை தானே!

சரி, நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள்  பணம் இல்லாத நமது சமூகத்திற்கு என்ன மரியாதைக் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன? 

அதே சமயத்தில் சீன சமூகத்தினருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பற்றி சொல்ல வேண்டுமா? சொல்லவே வேண்டாம் அதுவும் நமக்குத் தெரிந்தது தான்!

மலாய் சமூகத்திற்கு உள்ள மரியாதை என்ன? கல்வியில் அவர்களின் மாபெரும் முன்னேற்றம். அடுத்து தொழில் துறையில் அவர்களின் ஏற்றமிகு வளர்ச்சி. 

நமது வளர்ச்சியில் எப்போதுமே ஒரு தேக்கம் உண்டு. தொழில் செய்வதாகட்டும் அல்லது கல்வியாகட்டும்  மகிழ்ச்சியடையும்படியாக ஒன்றும் இல்லை என்பது தான்!

இவைகள் மாற்றப்பட வேண்டும். நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காக யாரும் தலைவர்கள் வரமாட்டார்கள். நாம் தான் தலைவர்கள். நாம் தான் நமது தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்.