Tuesday 31 January 2023

இது ஒரு குறையா?

 

கார் விபத்து ஒன்று நடந்துவிட்டது. அடுத்து நடக்க வேண்டியது என்ன?

அதனைக் காவால்துறைக்குப் புகார் செய்ய சென்ற பெண்ணுக்கு காவல்துறையில்  வேறொரு புகார் அவர்மீது  காத்திருந்தது!  

ஆமாம்! அங்கிருந்த காவல்துறை அதிகாரிக்கு அந்தப் பெண் அணிந்திருந்த சிலுவார் அவரின் கண்களை உறுத்தியது.  அவர் அந்தப் பெண்ணை காவல்நிலையத்திற்குள் வர அனுமதிக்கவில்லை!  "முதலில் உன் சிலுவாரை மாற்றிவிட்டு வா! அதன் பின்னர் தான் நீ புகார் செய்ய முடியும்!" என்று கண்டிப்பாக  கூறிவிட்டார்!

நாம் யாருக்கும் வக்காளத்து  வாங்கவில்லை. அந்தப் பெண் அணிந்திருப்பது  எது போன்ற சிலுவார் என்று கவனியுங்கள். அது முழுக்கால் சிலுவார் இல்லை என்பது உண்மை தான். அதே போல அரைக்கால் சிலுவாரும் இல்லை என்பதும் உண்மைதான். ஒரு முக்கால் கால் சிலுவார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!  அதனால் என்ன கெட்டு விட்டது?

அந்தக் காவலர் அவரது காவல் நிலையத்தை புனிதமாக நினைப்பதில் தவறு இல்லை!   ஆனால் அவரது  முதல் வேலை புகார் கொண்டு வந்தால் அந்தப் புகாரைப் பெற வேண்டியது அவரது கடமை. புகாரை கண்டு கொள்ளாமல் அவரது ஆடையைப் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பது அவர் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. உடனடியாக பாஸ் கட்சியிலிருந்து அவரை நியாயப்படுத்தி அறிக்கைகள் வரும்.!அவர்களே அவரை அரசியலுக்கும்  கொண்டு வரலாம்! 

இந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டியதும் உண்டு.   உடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஒரே வழி. எந்த உடைகள் இந்த நாட்டு நலனுக்கு ஏற்ற உடைகள்  அல்ல என்று  பாஸ் கட்சியும்  அரசாங்கமும்  தீர்மானிக்கிறதோ  அந்த ஆடைகளை தடை  செய்து விடுங்கள். தடை செய்து விட்டால் மக்கள் இது போன்ற உடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம்!

இதை நான் ஏன்  சொல்லுகிறேன் என்றால் இதே கார் விபத்தில் அந்தப் பெண் மருத்துமனைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால், அங்கும் இதே போன்ற ஓர் அதிகாரி இருந்திருந்தால், அப்போது என்ன நடந்திருக்கும்?  அங்கும் இவர்கள் சேவை இப்படித்தான் இருக்குமோ என்கிற பயம் இயற்கையாகவே வரத்தான் செய்கிறது!

அரசாங்கம் அல்லது அரசாங்க அதிகாரிகள் உடைகளைப் பற்றியான ஓரு தெளிவு பெற வேண்டும். இதையும்  ஒரு பிரச்சனையாக்கி, இதையும் ஓர் அரசியலாக்கி, அது தொடர்வதை நிறுத்தப்பட வேண்டும்.

Monday 30 January 2023

குற்றம் அவருடையதல்ல!

 

ஏ.ஆர். ரகுமானின் கலை நிகழ்ச்சி நடந்து முடிந்துவிட்டது! 

இப்போது குறை நிறைகளைச் சொல்லுகின்ற நேரம்! அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. விவாதப் பொருளாக மாறியிருக்கிறது! ஆனாலும் இது பற்றி பேச பெரிதாக ஒன்றுமில்லை! வழக்கம் போல  நாம் பேசிக் கொண்டிருப்பது தான்!

இதற்கு முன்னும் சரி, இப்போதும் சரி, இனிமேலும் சரி நாம் இப்படி பேசிக்கொண்டுதான்  இருப்போம்! பணம் போட்ட ஒவ்வொரு இரசிகனும் சரி அவன் போட்ட பணத்திற்கேற்ப அல்லது அவனது இரசனைக்கேற்ப அல்லது அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை!   அதிருப்தி என்பது இருக்கவே செய்யும்.

ஏ.ஆர்.ரகுமான்  என்பவர் உலகப்புகழ் பெற்ற இசை மேதை. அதை முதலில் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏதோ தமிழ் திரைப்படங்களில் தன்னை அடைத்துக்கொண்டு வாழும் மனிதரல்ல!    அவரை ஏதோ ஒரு தமிழ்ப்பட இசையமைப்பாளர் என்கிற கோணத்தில் பார்ப்பதை  நமது இரசிகர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

உலகப்புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞனின் நிகழ்ச்சி எப்படி அமைய வேண்டும் என்பது ஏற்பாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கேற்றவாறு தான் அனைத்தையும் அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

நிகழ்ச்சியின் கட்டணங்கள் 700 வெள்ளி வரை விற்றதாக சொல்லப்படுகிறது. தமிழ்ப்பட இரசிகன் 150  வெள்ளிக்கு மேலே, பெரும்பாலும்,  போகமாட்டான் என்பது  ஓரளவு நம்மால் கணிக்க முடியும்! ஆனால் ஏற்பாட்டாளர்கள் 700 வெள்ளி டிக்கட் வாங்கிய  நம், பிற இனத்தாரையும்  திருப்திப்படுத்த கடமைப்பட்டவர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்  அனைவரும் தமிழர்கள் மட்டும் தான் என்று சொல்லிவிட முடியாது. கூட்டம் சுமார் 60,000 பேர் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் தமிழர்கள் மட்டும் அல்ல, பிற இனத்தவரும்  இருந்திருப்பார்கள். ஏன் வட இந்தியர்களும்  இருந்திருப்பாளர்கள். இப்படி கலவையான ஓர் இரசிகர் கூட்டத்தில் இந்த மொழியில் தான் பாட வேண்டும் என்று சொல்லுவதை ஏற்பாட்டாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். 

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் நிகழ்ச்சியைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. இந்தி பாடல்கள் என்பது எல்லா இனத்தவராலும்  விரும்பப்படுபவை.  அதிலும் குறிப்பாக மலாய்க்காரர்கள். இப்படி பலதரப்பட்ட இரசிகர்கள் கொண்ட  ஒரு கலை நிகழ்ச்சியில் "தமிழ் மட்டும்" என்று சொல்லுவது  சரியல்ல.

நமது உரிமை என்று வரும் போது தமிழை விட்டுவிடுகிறோம். தேவையற்ற ஓர் இடத்தில் உரிமை கொண்டாடுகிறோம்! என்னத்தைச் சொல்ல!

Sunday 29 January 2023

மீண்டும் குழப்பங்கள் வருமா?

 

                    மலேசிய அரசியலில் மீண்டும் குழப்பம் வருமா?

மலேசிய அரசியலில் மீண்டும் குழப்பம் வருமா என்று அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வருவது தான் இப்போதைய கடைத்தெரு கல்வீச்சுகள்!

ஆனால் மக்களிடையே ஏதோ ஒரு வகையில்  பிரதமர் அன்வார்  மீது அலாதி நம்பிக்கையுண்டு. "இதுவும் கடந்து போகும்"  என்பது போல இதனையும் அவரால் சமாளிக்க முடியும்  என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏன் என்னைப்போன்ற சாதாரணர்களே அப்படித்தான் நினைக்கிறோம்!

ஆமாம் அன்வாரின் அரசியலுக்கு இப்போது என்ன ஆபத்து வந்துவிட்டது? நேரடியாக அப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் மறைமுகமாக  வேலைகள் ஆரம்பமாகிவிட்டன என்று தான்  பேசப்படுகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற அம்னோ மாநாட்டில் சில முக்கியமான நபர்கள் முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கின்றனர்! இன்னும் சிலர் சில ஆண்டுகளுக்குக் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்! அதில் மிக மிக முக்கியமானவர் என்றால் அது ஹிஷாமுடின் ஹுசேனாகத்தான்  இருக்க முடியும்! மிக ஆபத்தான மனிதர் என்று நம்பப்படுபவர். இவரும் முன்னாள் பிரதமர் முகைதீனும் ஒன்று சேர்ந்தால்  நாட்டில் எல்லா விதக்குழப்பத்தையும் ஏற்படுத்தும் திறன் பெற்றவர்கள்! யாரும் எதிர்பாராத திசையிலிருந்து அம்பை எறிபவர்கள்!

சமீப தேர்தலில் பெரிகாத்தான்  நேஷனல் பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு அவர்கள் அள்ளி வீசிய பணம் தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!

முகைதீன் எந்தக் காலத்திலும் எதைப்பற்றியும் கவலைபடாத ஒரு மனிதர். அவரது நலன் ஒன்றே அவருக்குப் பிரதானம்!  அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வரவேண்டும் என்பதில் குறியாய் இருப்பவர்! அவரது கட்சியிலோ அல்லது அவரது கூட்டணி கட்சியிலோ வேறு யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக கண்காணித்து வருபவர்! மக்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலைபடாதவர்!  பிரதமருக்கு உள்ள தகுதி அவருக்கு இல்லை என்றால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!

அம்னோவில் நேர்ந்த களையெடுப்பு அது பல வழிகளிலும் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.  இன்னும் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வரப்போகின்ற நிலைமையில் அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. முகைதீன் எந்த அளவுக்கு பண அரசியலில் ஈடுபடுவார்  என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தேர்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் பண அரசியல் பெரிய அளவில் எடுபடாது என்று சொல்லலாம்.

மீண்டும் குழப்பங்கள்  வந்தாலும் அவை தயவு தாட்சண்யமின்றி  தீர்க்கப்படும் என நான்புகிறோம்!

Saturday 28 January 2023

பள்ளிகளில் இனப்பாகுபாடு!

 


பள்ளிகள் என்பது வருங்காலத் தலைமுறையை - அறிவார்ந்த சமூகத்தை - இனப்பற்று - நாட்டுப்பற்றோடு வாழ வழிகாட்டுவது பள்ளிகள் தான்.

நாட்டில் தேசியப் பள்ளிகள், சீனப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் என்று மூன்று வகையாக பிரிந்திருந்தாலும்  இந்த மூன்று வகைப் பள்ளிகளிலுமே எந்த இனத்தவர் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம், தடையில்லை. தடை சொல்ல யாருக்கும் உரிமையில்லை.  எல்லா மொழிப் பள்ளிகளுமே நாட்டின் ஒருமைப்பாட்டை  நோக்கித்தான் மாணவர்களை அழைத்துச் செல்லுகின்றன. அதில் ஏதும் ஐயப்பாடு இல்லை. 

ஆனால் ஒரு சில விஷயங்கள் இந்திய, சீன பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இளம் சிறாரிடையே பாகுபாட்டை வளர்ப்பது நிச்சயமாக அது தாய் மொழிப்பள்ளிகளிலிருந்து வரவில்லை. எல்லா இனங்களும் சேர்ந்து கல்வி கற்கும் தேசிய பள்ளிகளிலிருந்து தான் வருகின்றன! 

இது ஒன்றும் புதிதாக - இன்றோ நேற்றோ - பேசப்படுகின்ற பிரச்சனை அல்ல. நீண்ட காலம், இந்தக் குற்றச்சாட்டு,  தேசிய பள்ளிகளின் மேல்  தான் சுமத்தப்படுகின்றது. 

ஆனால் மலாய் ஆசிரியர்களோ, மிக எளிதாக, எந்தக் கவலையுமின்றி,  பொறுப்புணர்ச்சியுமின்றி அதனை -  தாய் மொழிப்பள்ளிகளின் மீதே திருப்பி விடுகின்றனர்!  அவர்கள் குரல் பலமாக ஒலிப்பதால் நாம் சொல்லுவதை கேட்பாரில்லை என்கிற நிலை தான்!

தேசிய மொழிப்பள்ளிகளில் சீன, இந்திய மாணவர்கள் பலவாறாக புறக்கணிக்கப்படுகின்றனர்.  ஆசிரியர்களே,   இந்திய மாணவர்கள் என்றால் ஒரு குழுவாக ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.  நன்றாக படிக்கிறார்களோ இல்லையோ "நீங்க எல்லாம் ஒன்னு!"  என்று அவர்கள் மீது அக்கறை காட்டுவதில்லை. அதே வேளை சிலருக்கு  அனைவற்றிலும் முன்னுரிமை கொடுக்கின்றனர்! அது கல்வி மட்டும் அல்ல, விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் இது நடக்கத்தான் செய்கிறது!

இந்த புறக்கணிப்பின் ஊச்சம் தான் சமீபத்தில் ஜோகூர்பாருவில் நடந்த நிகழ்வு. சீனப்புத்தாண்டு கொண்டாடத்தின் போது எஸ்.பி.எம்.  மலாய் மாணவர்களுக்கு என்றே தனியாக வகுப்பு எடுத்தது! அவர்களைப் பொறுத்தவரை அது ஒன்றும் புதிதல்ல. எல்லா ஆண்டுகளிலும் நடைபெறும் நிகழ்வு தான்.  இந்த ஆண்டு எப்படியோ  அது கசிந்துவிட்டது!  அது தவறாக நடந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கில்லை!

இது போன்று பிரித்துப் பிரித்துப் பார்ப்பது தான் இன்றைய நமது கல்வி முறை. ஒரு பக்கம் இப்படி செய்வதும் இன்னொரு பக்கம் தாய்மொழிப்பள்ளிகள் தான் பிரிவினையை வளர்க்கின்றன என்று சொல்லுவதும் கதை தான்! வேறு என்ன?

Friday 27 January 2023

நாம் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்!

 

நண்பர் ஒருவர் புதிதாக உணவகம் திறந்திருந்தார். 

நாம் அதனை நல்ல செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் வியாபாரங்களில் ஈடுபடுவது  நமக்கு நல்ல செய்தி தான். நம் இனத்தவர் நாலு பேர் நல்லா இருந்தால் நமக்கும் நல்லது தானே என்பதாகத்தான் நான் அதனைப் பார்க்கிறேன். 

நம் இனத்தவர் தொழில் செய்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். அதையெல்லாம் மீறித்தான் நம்மில் பலர் பெயர் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்;  வெற்றியும் பெறுகிறார்கள்

மேலே சொன்ன உணவகம் திறந்த அந்த நபர் தொழிலுக்குப் புதியவர். அவரிடம் ஆர்வமிருந்தது.  தொற்று நோயின் தாக்கம் குறைந்து மீண்டும் தொழில்கள் தலையெடுக்கும் நேரம் அவர் தொழிலை ஆரம்பித்திருந்தார்..

ஆரம்பித்த சில நாள்களிலேயே பிரச்சனைகளை எதிர்நோக்கினார். அவருக்குப் பழக்கமில்லாத உணவகத் தொழில் இது. வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை. குடும்ப உறுப்பினர்கள் உதவினர். ஆனால் போதவில்லை.  வேலை செய்த ஓரிருவரை வைத்து அவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். விடுவதாக இல்லை!

ஆனாலும் அவருக்குத் தொடர்ந்து அடி விழுந்து கொண்டே இருந்தது. வேலை செய்தவர்களோ அக்கறை இன்றி வேலை செய்தனர். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்கிற நிலை உருவாகிவிட்டது. நண்பர் தள்ளாடிப் போனார்.  அந்த நிலையிலும் அவர் கலங்கவில்லை. எப்படியாவது தொழிலை சரிசெய்ய வேண்டும் என்று தான் நினைத்தார்.  ஓடிப்போகும் எண்ணம் இல்லை. முன் வைத்த காலை பின் வைக்க விரும்பாதவர். "என்ன நடந்தாலும் போராடுவேன்!"  என்கிற மன உறுதி அவரிடம் இருந்தது.

இதற்கிடையே வாடிக்கையாளர்  ஒருவர் "இந்த உணவகத்தில் சாப்பாடு நன்றாக இல்லை!"  என்று  ஒரு செய்தியைப் பரப்பி விட்டார்! புதிய உணவகம் என்று தெரிந்தும் இது போன்ற செயல்களினால் அந்த உணவகம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும்  அந்த வாடிக்கையாளர்  எதைப்பற்றியும் கவலையில்லாமல் செய்தியைப் பரப்பிவிட்டார்!

நண்பர்களே!  நாம் காசு கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடுகிறோம். சும்மா யாரும் சாப்பாடு போடவில்லை. உண்மை தான்.   சாப்பாட்டில் குறை இருந்தால் அதற்கு அந்த உணவகத்தார் தான் பொறுப்பு என்பதில் மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆனாலும் நமக்கும் தார்மீக பொறுப்பு என்று ஒன்றிருக்கிறது. 

தொழிலுக்குப் புதியவர் என்பதால் அதனைப் பெரிது படுத்தாமல் அவர்களை மன்னித்து விடலாம். ஒரு வேளை அங்குப் போவதை நிறுததலாம். சில மாதங்கள் கழித்து அங்குப் போனால் அவர் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்.  

நம் இனத்தவரிடையே பெரிய குறைபாடு என்பது நம்மை நாமே காட்டிக் கொடுப்பது தான். நம்மவர் செய்கின்ற தொழிலை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து  பூதாகாரமாக மாற்றிவிடுகிறோம்! ஏதோ நம்ம ஆள் தானே என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் நம் தொழிலுக்கும் நல்லது.

சீனர் கடைகளில் தவறு நேர்ந்தால் அங்கே மீண்டும் போகக் கூடாது என்கிற முடிவுக்கு வந்து விடுகிறோம். மலாய்க்காரர் கடைகளில்  தவறு செய்தாலும் மீண்டும் அங்குப் போவதைத் தவிர்க்கிறோம். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் சீனர் கடையில் மீ சாப்பிடும் போது  அதில் புழு இருந்ததைச் சுட்டிக்காட்டியதும் அவர்கள் அதனை மாற்றி புதிதாக வேறு ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்தப் பெண் அதனைப் படம் எடுத்து வைத்திருந்ததை  என்னிடம் காட்டினார்.

இதனையே நம் இனத்தவர் தவறு செய்தால் மட்டும் பெரிதாக - பெரிய பிரச்சனையாக மாற்றியமைத்து விடுகிறோம். தவறுகளை மன்னியுங்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.

என்ன தான் சொன்னாலும் பேசினாலும் தவறு என்னவோ தவறு தான்!

Thursday 26 January 2023

புதிய பதவியை ஏற்கிறார் அருள் குமார்!

                                     நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார்

நீலாய் சட்டமன்ற உறுப்பினரும்,  நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினருமான அருள் குமார் ஜம்புநாதன் பதவி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் 

ஒன்று தெரிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு இடமில்லை  என்பது உறுதியாகிறது. அந்த ஏமாற்றத்தைச் சரிகட்டவே இந்தப் புதிய பதவி அவருக்குக் கொடுக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை!

ஆனாலும் நம்மிடையே ஒரு கேள்வி உண்டு.  வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அருள் குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட  அவரின் நீலாய் சட்டமன்றம் யாருக்குக் கொடுக்கப்படும் என்பது  நமக்கு முக்கியம்.

அதற்குக் காரணம் உண்டு. போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலங்காலமாக இந்தியரின் தொகுதி என்று ஒரு நிலை இருந்தது. ஆமாம், அம்தக் காலத்தில் மாண்புமிகு மகிமா சிங் தொட்டு அது இந்தியரின் தொகுதியாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இடையே இன்றைய பிரதமர் அன்வார் இப்ராகிம் அங்கு ஒரு இடைத்தேர்தலை நடத்தி அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது அங்கு  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பாலகோபாலன்.  அது இந்தியர் தொகுதி என்றாலும் அன்வார் என்றவுடன் யாரும்  எதிர்ப்பைக் காட்டவில்லை. அது வருங்கால பிரதமரின் தொகுதி என்கிற ஒரு எண்ணம் இந்தியரிடையே இருந்தது. 

ஆனால் 15-வது பொதுத் தேர்தலின் போது அன்வார் வேறு தொகுதியில் (தம்பூன், பேராக்) போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் காலங்காலமாக இந்தியர் தொகுதி என்று வர்ணிக்கப்பட்ட போர்ட்டிக்சன் தொகுதியை அன்வார் அதனை மலாய்க்காரர் தொகுதியாக மாற்றிவிட்டுப் போய்விட்டார்! அப்படியென்றால் ஒரு நாடாளுமன்ற தொகுதி இருந்ததும் போய்விட்டது!

இப்போதும் அதுவே நடக்கலாம் என்கிற ஐயம் ஏற்படத்தான் செய்கிறது. அதாவது  இந்தியரின்  ஒரு சட்டமன்ற தொகுதி  குறைக்கப்பட்டு வேறு யாருக்கோ கை மாறப்போகிறது  என்று நம்மால் கணிக்க முடிகிறது!  அந்தோணி லோக் சும்மா ஒருவரை தனது அரசியல் செயலாளராக வைத்துக்கொள்ள அவர் என்ன அரசியல் அறியாதவரா?

நமது கவலையெல்லாம் ஒரு நாடாளுமன்றம் நமது கையைவிட்டுப் போய்விட்டது. இப்போது ஒரு சட்டமன்றம் கையை விட்டுப் போகப்போகிறது. அந்த சட்டமன்றம் இந்தியருக்குக் கொடுக்கப்பட்டால் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால், வழக்கமாக சொல்லுவது போல, இது அரசியல். எதுவும் நடக்கலாம்.   தொடர்ந்து நம்மீதே கைவைப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மாண்புமிகு அருள்குமார் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

Wednesday 25 January 2023

கல்வி அமைச்சரின் பொறுப்பு!

கல்வி அமைச்சு என்பது சாதாரண 'ஏதோ ஒரு துறை' என்பதல்ல. அது நாட்டின் முதுகெலும்பு.  அது நாட்டின் வருங்காலம்.

நாட்டில் அரசாங்கம் மாறலாம்; மாறிக் கொண்டிருக்கலாம்.  ஆனால் கல்வீத்துறை என்பது அரசியல்வாதிகளின்  விருப்பத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்க முடியாது  அது கல்வி அல்ல! அராஜகம்!

நம் நாட்டில் ஆட்சி மாற்றத்தின் போது கல்வி அமைச்சர்கள் மாறுவது இயல்பானது.  நாம் எதிர்பார்ப்பது தான்.

ஆனால் அப்படி  கல்வி அமைச்சர்களாக வருபவர்கள் நம் நாட்டின்  சூழலை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். நாட்டில் மூன்று இனங்கள் வாழ்கின்றனர்.   நாட்டில் மலாய் மொழியே பிரதான மொழி.  நாட்டில் மூன்று மொழி பள்ளிகள் இயங்குகின்றன. தேசிய மொழி பள்ளிகளைத் தவிர்த்து  தாய் மொழி பள்ளிகளான  சீனம், தமிழ் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தாய் மொழி பள்ளிகள் என்பது நமது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் மொழி பள்ளிகள் மட்டும் இருநூறு ஆண்டுகளுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளன.

ஆக, தாய் மொழி பள்ளிகள் என்பது மலேசியர்களுக்குப்  புதிதல்ல. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளால்  கல்வி அமைச்சராக நியமிக்கப்படும் அமைச்சர்கள் தாய் மொழி பள்ளிகளைப்பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரியுமா, தெரியாதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை!

அப்படிப்பட்ட ஒரு சந்தேகத்தைத் தான் சமீப கால நிகழ்வு ஒன்று நம்மை அதிர வைக்கிறது.  கல்வி அமைச்சரினால் சமீபத்தில் அமைக்கப்பட்ட  தேசியக்கல்வி  குழு  ஒன்றுக்கு தமிழ் அறிந்த அறிஞர் பெருமக்கள் யாரும் இடம் பெறவில்லை. சீனர்கள் குழு என்று ஒன்று அமைக்கப்பட்டால் நிச்சயம் தமிழ் அறிந்த குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்பது சராசரி நடைமுறை என்பது கூட கல்வி அமைச்சருக்குத் தெரியவில்லை. அப்படி தமிழ் அறிந்த ஒருவர் இடம் பெறவில்லை என்றால் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை அமைச்சர் எப்படி அறிவார்?

ஏன் அந்தக் குழுவில் சீனர்கள் இடம் பெற வேண்டும்? அது ஏன் என்பது அமைச்சருக்குத் தெரியும். அதாவது சீனப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அமைச்சர் அறிந்திருக்க மாட்டார் என்பது அவருக்கே தெரியும். அப்படியிருக்க தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் அவருக்கு எப்படித் தெரியும்? இங்கும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ள தமிழ் அறிந்த கல்விமான்  அக்குழுவில் இடம் பெற வேண்டும்   என்பதை ஏன் கல்வி அமைச்சர் புரிந்துகொள்ளவில்லை?

கல்வி அமைச்சர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  தாய்மொழிப்  பள்ளிகள் இந்நாட்டில் இருக்கத்தான் செய்யும்.  இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் இருக்கும்.  கல்வி என்று வரும்போது இந்த மூன்று பள்ளிகளையும் சேர்த்துத் தான் கல்வி அமைச்சர் முடிவுகள் எடுக்க வேண்டும்.

அது தான் உங்களின் பொறுப்பு!

Tuesday 24 January 2023

வெளி நாட்டவரின் வியாபாரம் !

 

வெளி நாட்டவரின் வியாபாரம் என்று சொல்லும் போது  பெரும் பெரும் நிறுவனங்களைச் சொல்லவில்லை.

நமது நாட்டில் வேலை செய்ய வந்தவர்கள். குறிப்பாக வங்காளதேசிகள், இந்தியர்கள், பாக்கிஸ்தானியர், மியன்மார், நேப்பாளிகள் - இவர்கள் அனைவரும்  இங்கு வேலை செய்ய வந்தவர்கள்.  நமது நாடு மட்டும் அல்ல மற்ற நாடுகளிலும் வேலை தேடி போகுபவர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. நம் நாட்டிலும் உண்டு. இதில் ஏதும் அதிசயம் இல்லை.

ஆனால் மற்ற நாடுகளில் இல்லாத ஒன்று நம் நாட்டில் உண்டு. இங்குப் பிழைக்க வந்த வெளிநாட்டவர் பலர் இங்கு வியாபாரம் செய்ய தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர்.  அதில் தான் சிக்கல்.  வேறு எந்த ஒரு நாட்டிலும் இது போன்ற சிக்கல் இல்லை!

இன்று நாடு முழுவதிலும் சிறிய, பெரிய வியாபாரங்களில் வங்காளதேசிகள், பாக்கிஸ்தானியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். சிறிய வியாபாரங்கள் என்றால் வங்காளதேசிகள், பெரிய வியாபாரங்கள் என்றால் பாக்கிஸ்தானியர்!  இது எப்படி சாத்தியமாகும் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.  அதுவும் குறிப்பாக இந்தியர்கள் செய்கின்ற சிறு சிறு வியாபாரங்கள் அனைத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும் பாக்கிஸ்தானியரும்  அதே வேலையைத் தான் செய்கின்றனர்!

இப்போது நாம் வெளிநாட்டவர் இங்கு வந்து வியாபாரம் செய்ய முடியுமா என்று பார்த்தால்  முடியாது என்பது நமக்குத் தெரியும். இங்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை  அது தான். வெளிநாட்டவர் இப்படி வியாபாரங்களில் ஈடுபட்டால் உள்நாட்டவர்  செய்கின்ற சிறு சிறு தொழில்கள் பாதிக்கப்படும் என்பதற்கு அரசாங்கத்திற்குத் தெரியாமலா போகும்? தெரியும் ஆனால் கண்டு கொள்வதில்லை!  இலஞ்சம் என்று ஒன்று  வந்துவிட்டால் அது அதிகாரிகளின் கண்களை மறைத்துவிடும் என்பது நாம் அறிந்ததுதான். அதுவும் வங்காளதேசிகள் நமது நாட்டைப்பற்றி தேவைக்கு அதிகமகாவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.  பணத்தை வீசினால் எதுவும் கிடைக்கும் என்பது தான் மலேசியாவைப் பற்றிய அவர்களின் பார்வை!

இப்போது நாட்டின் ஒரு சில இடங்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள்  மீது நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன. கோலாலம்பூர் மாநாகர் மன்றமும்  எடுக்க ஆரம்பித்திருக்கிறது.  இன்னும் அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இது தற்காலிக நடவடிக்கையா  என்பதும்  தெளிவில்லை!

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது!

Monday 23 January 2023

இது எப்படி சரியாக வரும்?

 

இனி வருங்காலங்களில் ஊராட்சி மன்றங்களில் ம.இ.கா.வினருக்கு வாய்ப்புகள் வழங்குவது சரியாக வருமா?

ம.இ.கா.வின் தேசியத் தலைவர்,  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள்,  நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர்,  புதிய அமைச்சரவை அமைத்த பின்னர், அவரே வருங்காலங்களில் இந்தியர்களின் பிரச்சனைகளை ம.இ.கா. கண்டு கொள்ளாது, இனி அது பி.கே.ஆர். கட்சியின் வேலை  என்று கூறியாதாக பத்திரிக்கைகளில் அறிக்கைவிட்டார்.   தொடர்ந்து அவர் நாங்கள் ம.இ.கா,வில் உள்ள இந்தியர்களின் நலனில்  மட்டும் அக்கறை காட்டுவோம்  என்பதாகவும் கூறியிருக்கிறார்.

ம.இ.கா. வில் உள்ள இந்தியர்களின் மீது  தான் நாங்கள் அக்கறை காட்டுவோம் என்று அவர் கூறியிருப்பது நம்மைக்  கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

ஊராட்சி மன்றங்களின் நியமனம் என்பது குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் பணிபுரிய அல்ல. எல்லா இனத்தவருக்கும் தான். அது  மட்டுமல்ல. இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை   மேல்மட்டத்துக்கு எடுத்துச் செல்லுவதும்  அவர்களின் வேலை.

இப்படி ஒரு நிலையில் ம.இ.கா.வினர் ஊராட்சி மன்றங்களில் நியமிக்கப்பட்டால்  இவர்களின் பொறுப்பு என்னவாக இருக்கும்?  இவர்கள் சேவை எவ்வாறு அமையும்? சீனர், மலாய் மக்கள் என்றால் அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்தியர்கள் என்றால் அப்படியல்ல. அவர்கள் ம.இ.கா. அங்கத்தினராக இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அப்படியென்றால் அவர்களை ஆதரிக்காதவர்களின் நிலை என்ன? 

இன்றைய நிலையில் ம.இ.கா.வை ஆதரிக்காத இந்தியர்கள் எண்பது விழுக்காட்டுக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் ம.இ.கா. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்பது விழுக்காட்டினருக்குச் சேவை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்! சரி, அந்த இருபது விழுக்காடு இந்தியர்கள் கூட எத்தனை பேர் ம.இ.கா. அங்கத்தினர்கள்? இப்படி பல சிக்கல்கள் உண்டு.

இப்படி ஒரு சூழலில் ம.இ.கா.வினரை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக சேர்ப்பது யாருக்குப் பயன்? முறைப்படி  பார்த்தால் அவர்கள் மக்களுக்குப் பயனாக இருக்க வேண்டும்.  ம.இ.கா.வினரை நியமிப்பதால் யாருக்கும் பயன் இல்லை! அவர்களுக்கு அது ஏதோ அலங்காரப்  பதவியாக மட்டுமே இருக்கும்!  மற்றபடி எந்தப் பயனும் இல்லை!

ம.இ.கா. தலைவர்கள், முன்னாள் பிரதமர் முகைதீனின் பெரிகாத்தான் நேஷனல்  ஆட்சியைத்தான் விரும்புகின்றனர். அவர்களின் ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் சொல்லலாம்.  அவரது கட்சி ஆட்சியில் இருந்த போது ம.இ.கா. பெரும் பயன் அடைந்தது. அதனால் அவர்கள் மீண்டும் முகைதீன் ஆட்சிக்கு வரமாட்டாரா என்று அக்கறை காட்டுவதில் இயல்பு தான்!

எது எப்படி இருப்பினும் ஊராட்சி மன்றங்கள் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும். இப்போதைக்கு ம.இ.கா. வினருக்குக் கொடுப்பது பிரச்சனைகளைத்தான் உருவாக்கும்!

Sunday 22 January 2023

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

 

                      நண்பர்கள் அனைவருக்கும் சீனப்புத்தாண்டு வாழ்த்துகள்!


   வெறும் வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் போய்விடுவதில்  எந்தப் பயனும் இல்லை.

சீன இனத்தவர் நம்மோடு காலம் காலமாக  வாழ்பவர்கள். மற்றவர்கள் எந்த அளவுக்கு அவர்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனாம் நாம் அவர்களைப்பற்றி அதிகமாகவே அறிந்து வைத்திருக்க வேண்டும்.

நாம் இந்நாட்டிற்கு வந்த காலம் சீனர்கள் இந்நாட்டிற்கு வந்த காலம் எல்லாம் ஒரே காலகட்டம் தான். 

சீனர்களும் நம்மைப் போல பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத் தூண்களாக  விளங்குகின்றனர். நாமோ இன்றும் யார் யாருக்கோ கையேந்தும் கையேந்திகளாகத்தான் இருக்கிறோம்.

பொருளாதாரத்தில் நாம் முன்னோக்கி நகர வேண்டும். அதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் சீனர்களின் வளர்ச்சியைப் பாருங்கள், கவனியுங்கள்.  அவர்களின் முன்னேற்றத்தைக் கூர்ந்து பாருங்கள். அவர்களின் பலம் என்ன.  நமது பலவீனம் என்ன என்பதைக் கவனமாக ஆராயுங்கள்.

நம் நாட்டில், நம்மைச் சுற்றியுள்ள சீனர்களே நமக்கு நல்ல உதாரணம். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ன என்ன பக்கபலமாக இருக்கின்றனவோ நமக்கும் அது பலமாக இருக்கும்.

சீனர்கள் முன்னேறிவிட்ட சமூகம் தான். அவர்கள் மட்டும் தானா? நம் இனத்திலும் செட்டியார்கள், குஜாராத்தியர்கள்,  தமிழ் முஸ்லிம்கள் அனைவருமே தொழில் செய்யும் சமூகம் தான். நாம் அனைவரிடமும் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. ஆனால் சீனர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கின்றன. 

அதனால் தான் சீனர்களின் எப்படி தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வந்தாலே போதும். அதனையே நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு நமக்கான பாதைகளை அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்த்துகள்!

Saturday 21 January 2023

ஏன்? ஏன்? ஏன்?

 

                                               மாண்புமிகு  எம்.குலசேகரன்

ஒய்.பி. சார்! அன்றைக்கும் எதிர்ப்புக் குரல்! இன்றைக்கும் எதிர்ப்புக் குரல்! என்னா சார்!  எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கப் போகிறீர்களோ?

பரவாயில்லை! அநீதியைக் கண்டு கொதிப்பது நமது இயல்பு. நாங்கள் குரல் கொடுப்போம் என்று நினைக்கும் போதே நீங்கள் எங்களை முந்திக் கொள்கிறீர்கள்!

தேசிய கல்வி ஆலோசனைமன்றத்தில் தமிழ் அறிந்த இந்திய கல்வியாளர் ஒருவரை நியமனம் செய்யாதது மிகவும் அதிருப்தியான ஒரு செயல். இதற்கான பழியை கல்வி அமைச்சர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதெப்படி? மலேசிய நாட்டில் முப்பெரும் இனங்கள் வாழ்கின்ற ஒரு நாடு. மலாய், சீனர், இந்தியர் என்பது அனைவரும் அறிவர். இங்கு மலாய்,  சீன, தமிழ்ப்பள்ளிகள் நடைமுறையில் இருக்கின்றன  என்பது இதற்கு முன்னர் மாண்புமிகு  ஃபாட்லினா சிடேக் அறிந்திராவிட்டாலும் இப்போது, அவர் கல்வி அமைச்சர் ஆன பின்னர், கட்டாயம் அறிந்திருக்கவே வேண்டும்.

இப்போது நடந்திருப்பது என்னவென்றால் மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு இங்கிருக்கும் 528 தமிழ்ப்பள்ளிகள் கண்ணுக்குத் தெரியவில்லை. மேலும் இந்தப்பள்ளிகளில் படிக்கும் 80,000 த்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. ஒன்று அவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லது அவர் தமிழ்ப்பள்ளிகளை அலட்சியப்படுத்தபவராக  இருக்க வேண்டும்.  அலட்சியப்படுத்துவது என்பது அவர் தமிழ்ப்பள்ளிக்ளின் மீது அக்கறை இல்லாதவர் என் நாம் புரிந்து கொள்கிறோம். இது நாள்வரை நடந்த ஆட்சியில் அப்படி ஒரு சூழல் இருந்தது. அதனையே  இன்றைய கல்வி அமைச்சரும் தொடர விரும்புகிறார் என்பது நமக்குப் புரிகிறது.

கல்வி அமைச்சர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரை நடந்தது ஆட்சி என்பதை விட அது கொள்ளையர்களின் ஆட்சி. கிடைத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடலாம்  என்பது தான் அவர்களின் கொள்கை. மற்றபடி நாட்டின் நன்மை, நாட்டின் நலன் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள்!  கொள்ளையடிப்பவர்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்குச் சென்றகால ஆட்சி ஓர் உதாரணம்!

ஆனால் அது போன்ற ஆட்சி இனி வேண்டாம் என்பதால் தான் இப்போது வந்திருக்கிற ஆட்சி மாற்றம். பழையதையே மீண்டும் பாதையாக மாற்றுவதை இனி வருங்காலம் விரும்பாது!

கல்வி அமைச்சருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தமாக எழும் பிரச்சனைகளை அமைச்சர் தலைமையில் தமிழ் கல்விமான்கள் மூலமாகத்தான் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். சம்பந்தமில்லாமல் தமிழை அறியாதவர்கள், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளை அறியாதவர்கள் தீர்க்க முயற்சித்தால்  அதற்கு நிரந்தர தீர்வை எட்ட முடியாது. அதிருப்தி இருந்து கொண்டே இருக்கும்!

மாண்புமிகு எம்.குலசேகரன் போலவே ஏன்? ஏன்? ஏன்? என்று நாமும் கல்வி அமைச்சரைப் பார்த்துக் கேட்கிறோம்!

Friday 20 January 2023

இங்கும் அது நடக்க வேண்டும்!

 

          கார் பெல்ட் போடத் தவறிய பிரிட்டீஷ் பிரதமர் ரிஷு சுனாக்

"இது தாண்டா போலீஸ்!" என்று  காவல்துறையினர் மார்தட்டிக் கொள்ளலாம்.  காலரை இழுத்துவிட்டுக் கொள்ளலாம்.

ஆனால் நடந்தது என்னவோ நம் நாட்டில் அல்ல. நடந்தது வெள்ளைக்காரன் வாழும் பிரிட்டனில் அல்லது பிரித்தானியாவில்!

நம் நாட்டில் நடக்குமா என்று நாமும் ஏக்கத்தோடு ஏங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமோ?   "இல்லை! இல்லை! நடக்கும் பார்!"  என்று சொல்லும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

சமீபத்தில் நமது பிரதமர் கூட்டமொன்றில் பேசும் போது "நானே தவறு செய்தாலும் என் மீது நடவடிக்கை எடுக்கலாம்!" என்று பகிரங்கமாகவே  கூறியிருக்கிறார்.  இதுவரை எந்த ஒரு பிரதமரும் இப்படி சொன்னதில்லை! அதனால் அவர் சொன்னதையே "என்னா பெருந்தன்மை!"   என்று நாம் திருப்தியடைந்து விட்டோம்! மற்றபடி இதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு  என்று  என்றோ  நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்!

போன ஆண்டு வந்த ஒரு செய்தி என்று நினைக்கிறேன். அப்பன் நாடாளுமன்ற உறுப்பினன். மகனுக்குப் போலிஸ் பாதுகாப்பு! இது தான் இங்குள்ள காவல்துறையின் நிலை! இந்தச் செய்தி எப்படியோ கசிந்துவிட்டது. அவ்வளவு தான். மற்றபடி கசியாத செய்தி இன்னும் எத்தனையோ இருக்கலாம்.  அது பொது மக்களின் வெளிச்சத்துக்கு  வரவில்லை.  வந்திருந்தால் இணையதளவாசிகள் பின்னி பெடல்  எடுத்திருப்பார்கள்!

ஆனாலும் என்னவோ கொஞ்சம் நம்பிக்கை தருகிறது.  பிரதமர் அன்வார் வந்த பிறகு  வேலைகள் எல்லாம் சீராக நடந்து கொண்டிருக்கின்றன. "திடாப்பா!"  என்கிற போக்கு  குறையத் தொடங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இது தொடர வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் நாம் பார்ப்பதெல்லாம் தலைவன் சரியான பாதையில்  போனால் மக்களும் தலைவனைத்தான்  பின்பற்றுவார்கள. நல்ல தலைவன் இருந்தால் நல்ல மக்கள் இருப்பார்கள்.  இலஞ்சம் வாங்கும் தலைவனால்  நாடே இலஞ்சம் தான் வாங்கும்! அதனை நாம் பார்த்தோம்.

பிரிட்டன் பிரதமர் காரில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு பட்டையை அணியவில்லையென்பதால்  அவர் மீது அவர்கள் நாட்டு காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாயின. காவல்துறையின் நடவடிக்கை என்பதே நாமெல்லாம் அண்ணாந்து பார்க்க வேண்டிய ஒரு செய்தியாயிற்று!

நமது நாட்டிலும் இது போன்ற செய்திகள் இனி வரக்கூடும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. காரணம் எல்லா அநீதிகளிக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு. அதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. நமது நாட்டிற்கு இப்போது தான் நேரம் காலம் கூடி வந்திருக்கிறது! 

நாட்டின் வளம் நீதி நேர்மை நாட்டில் தலைவர்கள் மூலமாகத்தான்  வர வேண்டும். நமக்கும் வருகின்ற காலம் வந்துவிட்டது என நம்பலாம்.

Thursday 19 January 2023

அப்படியெல்லாம் நடக்காது, தம்பி!

 

நம் இந்திய இளைஞரிடையே உள்ள பிரச்சனை என்ன? 

சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆசை இப்போது நமது இளைஞரிடையே  அதிகரித்துக் கொண்டு வருவது நமக்கு மகிழ்ச்சியே! 

வரும்போதே ஏதோ பெரிதாகச் சாதித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கலாம். தவறில்லை. எல்லாருமே சாதனைகள் புரிய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்

ஆனால் இவர்கள் நினைப்பு இன்னும் அதிகம்! தொழில் ஆரம்பித்து இரண்டு, மூன்று மாதங்களில் பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு வருவது தான் பேராபத்து!

அப்படியெல்லாம் நடக்க வழியில்லை தம்பி! அதனை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு மூன்று மாதங்களில் எதையும் சாதித்துவிட முடியாது.

பணத்தை வேண்டுமானால் வாரி இறைக்கலாம்.  பணம் உள்ளவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். பணம் இல்லாதவர்களும் தொழில் செய்ய வருகிறார்கள். நோக்கம் என்னவோ ஒன்று தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

ஆனால் இதற்கெல்லாம் மேல் நாம் முதலில் அனுபவத்தைப் பெற வேண்டும். அனுபவம் என்பது சும்மா வந்து விடாது. தொழில் செய்ய செய்யத் தான்  நமக்கு அனுபவம் கிடைக்கும். அனுபவம் இல்லாவிட்டாலும் நாம் செய்கின்ற தொழில் மூலம் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்கின்ற தொழில் மூலமே நமக்கு அனுபவம் கிடைத்துவிடும். 

நமது இளைஞர்கள் பலர் உடனடியாக இலாபம் வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். இலாபத்தை மறந்து விடுங்கள். நட்டம் ஏற்படாமல்  தொழில் செய்தாலே நீங்கள் சரியான பாதையில் செல்லுகிறீர்கள் என ஏற்றுக் கொள்ளலாம். அல்லது குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கூட அதுவும் சரியான பாதை தான்.

இலாபம் என்பதெல்லாம் உடனடியாக வருவதில்லை. படிப்படியாகத்தான், தொழில் வளர வளர, இலாபமும் அதிகரிக்கும். எந்தத் தொழிலும் உடனடியாக அள்ளிக்கொட்டி விடாது.

தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் பணமே பிரதானம் என்று நினைத்துக் கொண்டு வராதீர்கள். ஒரு சில இளைஞர்கள் "இரண்டு மூன்று மாதங்கள் வியாபாரம் செய்து பார்ப்போம்!  சரிப்படவில்லை என்றால்  மீண்டும் வேலைக்குப் போய்விடுவோம்" என்கிற எண்ணத்தில் வருகிறார்கள். இந்த மனப்பான்மை தொழிலுக்குச் சரிப்பட்டு வராது.  அரைமனதோடு வருபவர்கள் நம்பிக்கை இல்லாமல் வருகிறார்கள். வந்த வேகத்தில் போயும் விடுகிறார்கள்!

தொழில் என்பது சும்மா தட்டிவிட்டு  ஓடிவிடுவதல்ல! அது ஒரு நீண்ட கால பயணம்.  அது தொடர்ந்து பயணிக்க வேண்டும். பலதலைமுறைகள்  பயணிக்க வேண்டும். அதைத்தான் சீனர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழ் முஸ்லிம்கள் செய்கின்றனர். அதைத்தான் குஜாராத்தியர்கள் செய்கின்றனர். அதைத்தான் தமிழர்களும் செய்ய வேண்டும்.

தொழில் செய்ய வருபவர்கள் அப்படி ஒரு நீண்டகால திட்டத்தோடு வரவேண்டும். தொழிலில் நாம் வளர்ந்து வருகிறோம். தொடர்வோம்!

Wednesday 18 January 2023

நாம் நம்மை நம்புவோம்!

 

நாம் யாராக இருந்தாலும் யாரையோ நம்பி வாழ்கின்ற வாழ்க்கை கடைசியில் மகிழ்ச்சியற்றுப் போகும்.

கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்தால் முதலில் கடவுளை நம்புங்கள். அதன் பின்னர் உங்களை நம்புங்கள்.

நாம் எதைச் செய்தாலும் அதனைச் செய்து முடிப்போம் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும். நம்முடைய காரியத்தை இன்னொருவர் வந்து செய்து முடிப்பார் என்று நினைப்பது அது தோல்வியில் தான் முடியும் என்பது நமக்கு எப்படி தெரியாமல் போகும்?

நாம் ஒரு செயலை செய்கின்ற போது நம்மால் முடியும் என்கிற எண்ணத்தில் தான் ஆரம்பிக்கிறோம். அதாவது நம்பிக்கையோடு தான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஏதோ கொஞ்சம் இடறல் வரும் பொது உடனே தடம் புரண்டு விடுகிறோம். நம்பிக்கை இழந்துவிடுகிறோம். தளர்ந்து விடுகிறோம்.

இது தான் நம்மில் பெரும்பாலானோரின் குணாதிசயமாக விளங்குகிறது. எதைச் செய்தாலும் ஒவ்வொன்றிலும் தடைகள் என்பது இருக்கத்தான் செய்யும். தடைகள் இல்லாமல் எதைத் தான் செய்ய முடியும்?  ஒன்றுமே இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக 'இனி மேல் தொடர வேண்டாம்' என்று முற்றுப்புள்ளி வைத்தால் நமக்குத் தான் தோல்வி.

நமது முயற்சியின்மையால் இழந்தது பல. எல்லாம் கஷ்டம் கஷ்டம் என்கிற எண்ணத்தோடேயே செயல்பட்டால் எதுவும் ஆகப்போவதில்லை. கஷ்டம் என்பது நமக்கு மட்டுமல்ல. உயிர் இருக்கும் வரை மனிதனுக்குக் கஷ்டம் தான்.  அதற்காக சும்மா இருந்தவிட முடியுமா?   எதுவும் எளிதாக கிடைத்து விடாது. ஒவ்வொன்றுக்கும் முயற்சிகள் தேவை.

நாம் மற்றவர்களை நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும். ஆலோசனைகள் கேட்பதில் தவறில்லை. நமது நண்பர்களிடம் கேட்கலாம்.   பலதரப்பட்ட ஆலோசனைகள் வரும். பிறகு நாமே வடிகட்டி எது சிறந்தது என்கிற முடிவுக்கு வரவேண்டும்.

ஆனால் நமது தோல்விக்கு நாமே பொறுப்பு. வேறு யாரும் அல்ல என்பது நமக்குப் புரிய வேண்டிய முதல் பாடம். நமது ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பு! நம்மையே நம்புவோம்! நம்பி செயபடுவோம்!

Tuesday 17 January 2023

பரவாயில்லை! நம்புவோம்!

 

பரவாயில்லை! எத்தனையோ ஆண்டுகள் நாம், இந்த இந்திய சமுதாயம், ம.இ.கா. வை நம்பி ஏமாந்திருக்கிறோம். நல்லதும் நடந்திருக்கிறது! கெட்டதும் நடந்திருக்கிறது!

நல்லது நடந்தது, அது ஒரு காலகட்டத்தில்.  துன் சம்பந்தன் அவர்கள்  அவர் காலத்தில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தை அமைத்தார். மக்களிடமிருந்து பத்து பத்து வெள்ளியாக  வசூல் செய்து  தோட்டங்களை வாங்கினார். 

அவருக்குப் பின் வந்தவர்கள் ஆயிரம் ஆயிரமாக வாங்கினார்கள். காசு போன இடம் தெரியிலே!  இந்தியர்கள் வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்கள் தான்! அதன் பிறகு எழுந்திருக்க முடியவில்லை.

அது முடிந்து போன கதை. அதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்! "இனி எங்களை நம்ப வேண்டாம்!  நம்பிக்கைக் கூட்டணி,  பிரதமர் அன்வாரை நம்புங்கள்" என்று சரண் அடைந்து விட்டார்கள்!  அவர்களைப் பற்றி பேசியும் நமக்கு ஓய்ந்துபோய் விட்டது!

அதனாலென்ன? இனி நம்பிக்கைக் கூட்டணியை நம்புவோம். ஆனால் எல்லாக் காலங்களிலும் யாரையோ ஒருவரை நம்பி உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதீர்கள்.  இந்திய சமுதாயத்திற்கு எது நன்மை பயக்குமோ அதற்காக நாம் போராடித்தான் ஆக வேண்டும். சான்றுக்கு, கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், தாய்மொழி பள்ளிகள், குடியுரிமை பிரச்சனைகள் - இவைகள் எல்லாம் நமது உரிமைகள்.  அவைகளைப் பாதுகாப்பது  இனி நம்பிக்கைக் கூட்டணியின்  கடமை.

வருங்காலங்களில் நாம் அனைத்து - எந்த இனத்தவராக இருந்தாலும் -  அவர்களைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். நாம் எந்தக் காலத்திலும் இந்தியர்களை  நம்பி நமது பிரச்சனைகளைக் கொண்டு செல்வதை நாம் தவிர்க்க வேண்டும். இந்தியர்கள் மட்டுமே என்கிற ஒரே வழி நமக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதனால் தான் ம.இ.,கா. வினர் இந்திய சமூகத்தை இளிச்சவாய சமூகமாக மாற்றிவிட்டனர்.  நாம் எந்த சமுகத்தவராக இருந்தாலும் நம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்  என்கிற ரீதியில் அவர்களை அணுக வேண்டும். ஆரம்ப காலங்களில் நமக்கு அது ஏற்புடையதாக இருக்காது! காரணம் கடந்து வந்த வழி அப்படியில்லை!  இப்போது நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பரவாயில்லை! கடந்த வந்த பாதை நம்மை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது  என்பதற்காக யாரையுமே நம்பக்கூடாது என்பதில்லை. கறுப்பு ஆடுகள் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளின் இயல்பு அப்படித்தான். அதனை யாரே மாற்றவல்லார்?

நாம் நம்மை நம்புவோம்.  அது தான் அறுபது ஆண்டு பாடம் நமக்குக் கற்பிப்பது!

Monday 16 January 2023

இது தவறான முன்னுதாரணம்!

 

எப்படி பார்த்தாலும் இது ஒரு தவறான முன்னுதாரணமாகவே நமக்குப் படுகிறது.

துணிவு படத்தைப் பற்றியோ அல்லது நடிகர் அஜித் குமார் பற்றியோ நாம் எந்தக் கருத்தும் சொல்லப் போவதில்லை. அது அவசியமும் இல்லை. அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை!

ஆனால் இது போன்ற ஒரு கட் அவுட் வைப்பதும், அதனை 30 அடி உயரம் என்று சொல்லுவதும், மலேசிய சரித்திரத்தில் ஆகப்பெரிய கட் அவுட் என்பதும், அதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதும் நமக்கு என்னவோ அது நல்லதாகப்படவில்லை.

இது போன்ற சாதனைகள் நமக்குத் தேவையா? இதனால் யாருக்கு என்ன பயன்? அந்த கட் அவுட்டைக் கூட ஒரு சீனர் தான் செய்திருப்பார். ஒரு சீனர் நிறுவனம் தான் பொருளாதார ரீதியில் பயன் அடைந்திருக்கும்! அதனால் நாம் என்ன பயன் அடைந்திருக்கிறோம்?

சாதனை என்றால் ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் சாதனை,  ஓர் ஏழை மாணவனின் சாதனை -  இப்படியோ எத்தனையோ சாதனைகளை நமது இந்திய இளைஞர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  சும்மா இது போன்ற கட் அவுட் ஒன்றைச் செய்துவிட்டு அது ஒரு சாதனையாக, சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதை  என்னவென்று சொல்லுவது?

ஏன் ஆங்கிலப்படங்களுக்கோ, சீனப்படங்களுக்கோ இது போன்ற சாதனைகளைப் படைக்க அவர்களுக்குத் தெரியாதா? அவர்களை விடவா நாம் உயர்ந்து நிற்கிறோம்? அவர்கள் அதனை ஒரு சினிமாவாகப் பார்க்கிறார்கள். அத்தோடு முடிந்தது! நமக்கு மட்டும் ஏன் இப்படி? போட்டியாகப் பார்த்தால் கூட பரவாயில்லை! சண்டையை அல்லவா மூட்டி விடுகிறீர்கள்!

இன்று அஜித் கட் அவுட் நாளை விஜய் கட் அவுட்! இது தொடரத்தான் செய்யும்!  விஜய் ரசிகர்கள் இப்போது மனதுக்குள்ளே கருவிக்கொண்டு தான் இருப்பார்கள்!  இது தான் அறிவுகெட்ட சமூகம் ஆயிற்றே!  ஒன்றுமே இல்லாததற்கு அடித்துக் கொள்பவர்களாயிற்றே! உரிமைக்காகக் கூட இப்படியெல்லாம் அடித்துக் கொள்ள மாட்டார்கள்! ஒரு சினிமா நடிகனுக்காக உயிரைக் கொடுக்கும் சமூகம் நாமாகத் தான் இருக்க முடியும்!

சினிமாத்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக விளங்கும் மாலிக் ஸ்ட் ரீம்ஸ் கார்போரேஷன்  நிறுவனம் சினிமாத்துறையில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ரசிகர்களை மோதவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பது தான் நமது வேண்டுகோள்.

இது போன்ற பெரிய பெரிய விளம்பரங்கள் எல்லாம் நமது நடிகர்களுக்குத் தேவை இல்லை. அவர்களுக்கு இருக்கின்ற விளம்பரங்களே போதும்!

தவறான முன்னுதாரணங்கள்  தவிர்க்கப்பட வேண்டும்!


Sunday 15 January 2023

பொங்கல் வாழ்த்துகள்!

 



                                                இனிய பொங்கல் வாழ்த்துகள்!



Saturday 14 January 2023

தேவையான ஒன்று தான்!

 

இன்று மக்காவ் மோசடி கும்பல் என்றாலே மலேசியர்கள் பயப்படும்படியான ஒரு  சூழல் ஏற்பட்டுவிட்டது!

அதனைத் தீர்க்க முடியுமா, முடியாதா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இது நாள்வரை இந்த மோசடிக் கும்பலிடமிருந்து காவல்துறையினரால் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்த மோசடி பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருந்தாலும் இப்போது தான்  காவல்துறையிடமிருந்து ஒருசில நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான  முறையில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. .  தாமதம் தான் என்றாலும் பாதகமில்லை! நல்லது எப்போது நடந்தாலும் நல்லது தான்!

இணைய மோசடிகளை உடனடியாக காவல்துறை கவனத்திற்குக் கொண்டுவர நிகழ்வு நடந்த மறு நிமிடமே அல்லது 'நான் ஏமாந்து போனேன்!' என்று நினைத்த மறு நிமிடமே மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 997 எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். ஒரு சில நிகழ்வுகளை காவல்துறை உடனடியாகவும் கண்டுபிடிக்கலாம் அல்லது  தாமதமும் ஆகலாம்.  ஆனால் புகார் தெரிவிப்பது நமது கடமை. அதனைத் தவறாமல் செய்ய வேண்டும்.

கடந்த  ஜனவரி 14-ம் தேதி முதல்  997 சேவைமையம் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதாக காவல்துறை அறிவிக்கிறது.

இணைய மோசடி நாட்டில் மிகப்பரவலாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில்  எத்தனை மோசடிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பது சரியான விவரங்கள் இல்லை. நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும்  மோசடி செய்பவர்கள் பலவிதமான யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடுகின்றனர்.

இவர்களின் மோசடிகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதே நமது எண்ணம். அவர்கள் எங்கிருந்து, எந்தக் கோணத்திலிருந்து செயல்படுவார்கள் என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் ஏமாற்றினால் அவர்களைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அப்படியல்ல! வெவ்வேறு யுக்திகள்!

இப்போது காவல்துறை சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. நாமும் நமது ஒத்துழைப்பை அவர்களுக்குக் கொடுப்போம். 

புகார் மையம் தேவையான ஒன்று. அதனைப் பயன்படுத்துவது நமது கடமைகளில் ஒன்று!


Friday 13 January 2023

இது தான் கொண்டாட்டமா?

 

                                            நன்றி: வணக்கம் மலேசியா

இந்த செய்தியைப் படிக்கும் போது யாரை நொந்து கொள்வது என்பது நமக்குப் புரியவில்லை.

பரத் குமார் என்னும் அந்த 19 வயது இளைஞருக்கு இப்படி ஆகும் என்று அவரது குடும்பத்தினர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். அந்த ஏழை குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டிய இளைஞன் இப்படி ஒன்றுமில்லாமல் போனானே என்று நினைக்கும் போது மனம் கசந்து போகிறது.

என்ன செய்ய? இளைஞர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்களே? சினிமா நடிகர்களுக்கு. உலகெங்கிளுமே, விசிறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. தமிழ் நடிகர்கள் மீதும் எல்லாகாலங்களிலும்  அதீதமான பற்றுள்ள இரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர்; இருக்கவும் செய்கின்றனர்.  எதுவும் புதிதல்ல.

அப்போதும் அப்பா அம்மா சொல்லைக் கேட்காமல் நடிகர்களை நம்பி கெட்டுப் போனவர்கள் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். அவர்களை யார் என்ன செய்வது? அவர்களாகப் பார்த்து திருந்தாவிட்டால் அப்புறம்,   இதோ,  இந்த இளைஞர் காட்டிய வழிதான்!

அதிலும் நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்குப் பலமுறை அறிவுரைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார். "உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்" என்று பலமுறை சொல்லியிருந்தும் அவர்கள் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை.

இப்போது நாம் யாரைக் குற்றம் சொல்வது?  நடிகர்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லை. அதுவும் அஜித்குமாரோ தனக்கு எந்த ரசிகர் மன்றமும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியவர்.

அந்த இளைஞனின் குடும்பமோ இப்போது முற்றிலுமாக அஜித்குமார் ஏதாவது தங்களுக்கு உதவமாட்டாரா என்று தான் நினைப்பார்கள்.  அது  இயல்பு தான். ஆனால் அது கட்டாயம் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.

இன்றைய ரசிகர் கூட்டம் இந்த இளைஞனுக்கு நடந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்த கதாநாயகனின் படங்களைப் பார்க்கலாம்! ரசிக்கலாம்! ஓகோ என்று புகழலாம்! அது போதும்!

அந்தக்  கதாநாயகர்கள் போலவே  நமது வாழ்க்கையும் 'ஓகோ' என்று அமைய வேண்டும். அது தான் அவர்களுக்கும் பெருமை! நமக்கும் பெருமை!

கொண்டாட்டங்கள் பெருமை சேர்க்க வேண்டும்! துணிவு என்று சொல்லி சரிந்து விடக்கூடாது!


Thursday 12 January 2023

பண அரசியல் வேண்டாம்!

 

சமீபத்திய  இளைஞர் அம்னோ மாநாட்டில்  கட்சியின்  துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் கவனித்தக்கது.

காலங்கடந்து சொல்லப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் அது சொல்லப்பட வேண்டிய விஷயம். சொல்ல வேண்டிய இடத்தில் பேராளர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்!

அம்னோ கூட்டத்தில்  சொல்லப்பட்டிருந்தாலும் அது இந்தியர்களைப் பிரதிநிதிக்கும்  ம.இ.கா.வுக்கும் பொருந்தும். பொதுவாக இது போன்ற விஷயங்களில் ம.இ.கா. 'கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது'  என்று பூனையைப் போல யோசிப்பது தான் வழக்கம்! ஒரு சிலர் தாங்கள் தேர்ந்துடுத்த பாதையை விட்டு விலகுவதை விரும்புவதில்லை! தலைவன் காட்டிய பாதையை விட்டு விலகமாட்டார்கள்!

முகமட் ஹாசான் அப்படி என்ன தான் சொன்னார்? "பண அரசியலைக் கொன்றுவிடுங்கள்! இல்லையேல் அது அம்னோவைக் கொன்றுவிடும்!" 

புரியும் என நினைக்கிறேன். அரசியல்வாதிக்குப் புரியாததா! அம்னோவினர்  அரசாங்கத்தைக்  கொள்ளையடித்தனர். ம.இ.கா. வினர் இந்தியர்களைக் கொள்ளையடித்தனர். அது தான் வித்தியாசம். கடந்த இரண்டு தேர்தல்களிலும்  அம்னோவினருக்குப்  பலத்த அடி.  இந்த தேர்தலில் மக்கள் அவர்களைப் பாய் போட்டு படுக்க வைத்துவிட்டனர்! ம.இ.கா. வினருக்கும் அதே கதி தான்! அம்னோவினர் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டனர்.  ஆனால் ம.இ.கா.வினர் ஒப்புக்கொள்ளவில்லை! "நாங்கள் செய்த சாதனை என்ன, எங்களை விட்டால் எவன் உங்களுக்கு உதவப் போறான் அதையும் பார்ப்போம்!" என்கிற சவடால் தனம் அவர்களிடம் இன்னமும் உண்டு.  

என்ன தான் கத்தோ கத்து என்று கத்தினாலும் ம.இ.கா.வின் மேல் இந்தியர்களுக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! சரியான ஏமாற்றுக் கும்பல் என்கிற ஒரு மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்! இப்போது ம.இ.கா.வினர் என்ன நினைக்கிறார்கள்?  அவர்களிடம் திருந்துவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. இனி இந்தியர்களின் முகத்தில் விழிக்கப் போவதில்லை!  ம.இ.கா.வினர் முகத்தில் மட்டுமே விழிப்போம் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டார்கள்! நல்லது, நாம் என்ன செய்யமுடியும்?

இந்தியர்களின் பிரச்சனைகளை நல்லபிள்ளை  போல அப்படியே தூக்கி நம்பிக்கைக் கூட்டணியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்! "இனி உங்கள் பொறுப்பு!" இனி ஹாயாக தங்களது  'பணிகளைச் செய்யலாம்! அதென்ன பணி?  அப்படியென்ன தெரியாமலா போய்விடும்? சீக்கிரம் தெரியவரும்!

அம்னோவின் துணைத் தலைவர் சொன்னதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இனி பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் காண்பிக்க முடியாது! எந்தக் கட்சியாக இருந்தாலும் சரிதான். அம்னோ மட்டுமல்ல, பெரிகாத்தான் கூட்டணியாக இருந்தாலும் சரி "பண அரசியல்" ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே நம்புகிறோம்!

Wednesday 11 January 2023

தொடர வேண்டாம்!

 

பொதுத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. எப்படியோ ஒற்றுமை அரசாங்கம் என்னும் பெயரில் அன்வார் இப்ராகிம் தலைமையில் அரசாங்கம் அமைந்துவிட்டது.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ.கா. இடம் பெறவில்லை. அதற்குக் காரணம் தேசிய முன்னணியின் அம்னோ கட்சியினரைத் தான் குறை சொல்ல வேண்டும். நம்பிக்கைக் கூட்டணியை அல்ல. அவர்கள் முற்றிலுமாக அம்னோவில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை! அதன் இரகசியம் என்னவோ நமக்குத் தெரியாது.

அதைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  நாம் பேசப் போவதெல்லாம்  தேர்தல் முடிந்துவிட்டது. மூன்று மாதங்கள் ஆகின்றன. இனி நாம் ம.இ.கா.வும்  வேண்டாம். நம்பிக்கைக் கூட்டணியும் வேண்டாம்.

நாம் முற்றிலுமாக நம்பிக்கைக் கூட்டணியின் பக்கம் சாய்ந்துவிட்டோம்.  இனி இந்தியர் பிரச்சனை என்பது நம்பிக்கைக் கூட்டணியின் கையில்.  நமது பிரச்சனை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும்.  அவர்கள் தான் பிரச்சனைகளைக் கையில் எடுக்க வேண்டும். வேண்டுமானால் திட்டங்கள் போடட்டும். ஆனால் நீண்ட காலதிட்டங்கள் வேண்டாம்.` ம.இ.கா. போட்ட திட்டங்கள் எதுவும் உருப்பெறவில்லை! நீண்ட காலத் திட்டங்கள் என்பது ஓர் ஏமாற்று வேலை. அடுத்த ஐந்த ஆண்டுகளுக்குள் என்ன திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பது தான் இப்போதைய தேவை.

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவது நம்பிக்கைக் கூட்டணியின் பொறுப்பு.  தமிழ் கல்வி, உயர் கல்வி,  தனியார் துறை  வேலைவாய்ப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், தொழில் செய்வதற்கான கடன் உதவிகள் - இவைகள் எல்லாம் உடனடடியாக செய்ய வேண்டியவை. இதற்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நேரத்தில் ம.இ.கா. வைப்பற்றி எந்த விமர்சனமும் வேண்டாம். அவர்களால் முடியாது என்பதால் தான் நாம் அவர்களைக் கை கழுவிவிட்டோம்! திரும்பத் திரும்ப அவர்களைப் பற்றி பேசி வம்பு இழுப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இப்போது நமது தேவை எல்லாம் நமது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது தான். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

ம.இ.கா. செய்தது போல எந்த இரகசியமும் நமக்கு வேண்டாம்.  அது அவர்களது பாணி. இரகசியம் என்றால் கொள்ளையடிப்பதைத் தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை! அது நமக்கும் தெரியும்.

இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் ம.இ.கா.வினர் அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும். இனி கட்சியைப் பலப்படுத்துவதே தான் அவர்களது வேலை. அவர்களது பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். நம்பிக்கைக் கூட்டணி தங்களது வேலைகளைச் செய்யட்டும். நாம் அவர்களுடன் ஒத்துழைப்போம். காரணம் இவர்கள் மூலம் நாம் இழந்ததை மீட்டெடுக்க வேண்டும்.

சண்டை சச்சரவு இல்லாமல் நமது பணிகளை நாம் செய்வோம்!

Tuesday 10 January 2023

அதிகரித்துக் கொண்டே போகிறது!

 

மக்காவ் மோசடிகளைப் பற்றி நிறையச் செய்திகள் வருகின்றன. ஆனாலும்  பலருக்கு இந்த முடிவில்லா ஏமாற்று வேலையில் ஏமாந்து  தான் போகின்றனர். ஏமாற்றுவதும் தொடர்கிறது ஏமாறுவதும் தொடர்கிறது! நின்ற பாடில்லை! முற்றுப்புள்ளியும் வைக்க முடியவில்லை!

இந்த மோசடிக் கும்பல் பல வகையான வழிமுறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். பல நூதனமான வழிமுறைகள். நாம் நினைத்துப் பார்க்காத வழிமுறைகள்!

ஆனால் அவர்கள் எந்த வகையைப் பயன்படுத்தினாலும் கடைசியில் அவர்களுக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தான்: உங்களது வங்கி கணக்கு எண் மட்டும் தான்!  அந்த எண் அவர்களுக்குக் கிடைத்துவிட்டால் அத்தோடு முடிந்தது அவர்களின் வேலை!  அப்போது தான் ஆரம்பிக்கும் உங்களது  வேலை!

எப்போது தான் ஒரு முடிவுக்கு வரும் இந்த மக்காவ் மோசடிக்கும்பலின்  ஏமாற்று வேலை?  எந்த ஒரு வெளிச்சமும் இதுவரையில் காணோம். காவல்துறையும் திணறுகிறது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது! ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயம் நம்பலாம். நாம் நினைப்பது போல காவல்துறை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது  என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் அப்படியில்லை. காவல்துறையினர்  சும்மா இருக்க நியாயமில்லை.  வெகு விரைவில்  காவல்துறையினர் இதற்கு ஒரு முடிவு கட்டுவர் என நாம்  நம்பலாம்.

பொது மக்களைப் பொறுத்தவரை இந்த மோசடியில் நமது பங்கு என்ன?  இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  காவல்துறையும், வங்கியும் நம்மைத் தொலைப்பேசி வழி  தொடர்பு கொள்ளாது என்பதை  முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறை நிச்சயமாக அதனைச் செய்யாது.  வங்கி ஒருசில விஷயங்களுக்காக தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் உங்கள் வங்கிக்கணக்கு எண் போன்றவைகளைக் கேட்க மாட்டார்கள்.

அப்படியே வங்கிகள் ஏதேனும் பேச வேண்டுமென்றாலும் நீங்களே அவர்களிடம் "நான் நேரடியாகவே வங்கிக்கு வருகிறேன்" என்று  சொல்லி தொலைப்பேசி உரையாடலை முடித்துக் கொள்ளலாம்.  அல்லது நீங்கள்  வங்கியின் தொலைப்பேசி எண், பேசும் நபர் யார் என்று நன்கு தெரிந்து கொண்டு  நீங்களே அவர்களுடன் தொடர்பு கொள்வது உத்தமமான காரியம்.  ஏமற்றுபவர்கள் நீங்கள் தொலைப்பேசியில் அவர்களைத் தொடர்பு கொள்வதை விரும்ப மாட்டார்கள். அவர்களின் தொலைப்பேசி எண், அவர்களது பெயர் போன்றவை நிச்சயமாக அவர்களிடமிருந்து கிடைக்காது என்பதை நீங்கள் நம்பலாம்.

இந்த மக்காவ் மோசடிக்கும்பலைப் பற்றி நாம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் அவர்களின் கை ஒங்குகிறது. மக்கள் நிறையவே ஏமாறுகிறார்கள். ஏமாறுவதை நிறுத்த முடியவில்லை. நம்முடைய ஒத்துழைப்பு இல்லாதவரை எந்த மோசடிக்கும்பலானாலும்  நம்மை ஏமாற்ற முடியும்! நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்.

ஆமாம்! மோசடி வேலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன! நாமும் ஏமாந்து கொண்டே போகிறோம்! எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு!  இதற்கான முடிவும் நிச்சயம் ஒரு நாள்  வரும்!

Monday 9 January 2023

யாருக்கு என்ன பயன்?

 


இந்த இருவரின் படங்களான 'வாரிசு - துணிவு'  இரண்டு படங்களும் வருகின்ற பொங்கலன்று வெளியாகின்றன.

படங்கள்  வெளியாவதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல விஜய் - அஜித்  நடிக்கிறார்கள். அவர்கள் படங்கள்  வெளியாகின்றன. அதைத் தவிர வேறொன்றுமில்லை!

ஆனால் இந்தப் படங்களுக்கு ஏன் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்படுகின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! இது தமிழ் இளைஞர்களை அடிமைகளாக மாற்றுகின்றன என்பது மட்டும் உண்மை.

எவனோ பணம் போடுகிறான்! எவனோ நடிக்கிறான்! அட! நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும். நம் தமிழ்  இரசிகன் அடித்துக் கொள்கின்றான்! அவனைத் தூண்டி விடுவதற்கென்றே  ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது! 

நன்றாகக் கவனியுங்கள். இந்த இரண்டு படங்களுமே ஆந்திராவில் தான்  எடுக்கப்பட்டன. தமிழ் நாட்டிலுள்ள  சினிமாத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு காசு கூட போய்ச் சேரவில்லை. அந்த வகையில் இருவருமே ரொம்பவும் பெருந்தன்மையானவர்கள்!  படத்தை தயாரித்த ஒருவர் ஆந்திர மாநில, டாலிவூட்டைச்  சேர்ந்தவர் இன்னொருவர் பம்பாய், பாலிவூட்டைச்  சேர்ந்தவர்.  இந்தப் படங்களின் மூலம் வருகின்ற வருமானம் ஆந்திராவுக்கும், பம்பாய்க்கும் போய்ச் சேரும். இந்த இரு படங்களின் மூலம் தமிழ் நாட்டுக்கு ஒரு காசு இலாபம் இல்லை!

ஆனால் தமிழனுக்கு எந்த இலாபமும் இல்லாத இந்த இரு படங்களும்  தமிழ் நாட்டு வசூலை நம்பித்தான் எடுக்கப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இந்த இரு படங்களுமே தமிழ் நாட்டில் ஓடவில்லை என்றால்  நமது கதாநாயகர்களின் புகழ், பணம் அனைத்தும் அரோகரா!

இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதற்காக தமிழ் நாட்டு இரசிகன் அடித்துக் கொள்கிறான், கடித்துக் கொள்கிறான், உயிரையே கொடுக்கிறேன்  என்கிறான்! தமிழ் நாட்டுக்கு இலாபம் இல்லாத இரு படங்களும் தமிழ் இரசிகனை நம்பித்தான் வெளியாகின்றன!

ஒன்று செய்யலாமா? இந்த இரு படங்களுமே வெளி மாநிலங்களில் ஓடட்டும். வெளி நாடுகளில் ஓடட்டும். உலகம் எங்கும் ஓடட்டும். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் சுமாராக ஓடட்டும்!  அது ஒன்றே போதும்.  இந்த நடிகர்களுக்கு  தமிழ் இரசிகன்  ஓரஙகட்டிவிட்டான் என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ் இரசிகனின் பணம் வேண்டும் ஆனால் படங்கள் மட்டும் வேறு மாநிலங்களில்  எடுக்க வேண்டும். ஏன்? நடிகனுக்கு  மட்டும்  தமிழன் பிழைக்கக் கூடாது! ஆனால் அவன் மட்டும் பிழைக்க வேண்டும்! தமிழன் வாரி வழங்க வேண்டும்! ஓகோ  என்று அவன்  பெயர் வாங்க வேண்டும். தமிழனுக்கு மட்டும் என்ன தலையெழுத்து? நடிகன் பேர் வாங்கினால்  என்ன வாங்கவிட்டால் என்ன?

தமிழ் இரசிகன் இவர்களுக்குப் பாடம் புகட்டுவான்  என நம்பலாம்!

Sunday 8 January 2023

சிறுபான்மை, ஆனால் ஏகப்பட்ட கட்சிகள்!

 

                                         சிறுபான்மை உரிமை செயல் கட்சி (மிரா)

நமது நாட்டைப் பொறுத்தவரை மூன்று பெரும் இனத்தவர்களில்  நாம் மூன்றாவது பெரும்பான்மை இனத்தவர்கள்.  சுமார் 32,00,000 இலட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் வாழ்வதாக கூறப்படுகின்றது. மலாய்க்காரர்களும், சீனர்களும்  முதலாவது இடத்திலும் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஆனாலும் ஒரு சிறுபான்மை இனத்தினருக்கு கணக்கில் அடங்கா சிறு சிறு கட்சிகள் நிறையவே உண்டு! இத்தனை கட்சிகளும் இந்தியர்களுக்கு என்ன தான் சேவைகள் செய்திருக்கின்றன என்று கேட்டால் அவர்களுக்குக் கோபமே  வந்துவிடும்! அதெல்லாம் நாம் கேட்கக் கூடாது!

தேர்தல் காலங்களில் நிறைய புதிய புதிய இயக்கங்கள்  அரசியல் கட்சிகள் தீடீரென உதயமாவதை நாம் பார்த்திருக்கிறோம்.  இயக்கங்கள் என்றால் ஏதோ  நிகழ்ச்சிகள் என்று சொல்லி பணம் சம்பாதிப்பதை நாம் பார்க்கிறோம்.

புதிய கட்சிகள் ஆரம்பிக்கிறார்களே இவர்களுக்கு என்ன இலாபம்? உண்டு. வசதி உள்ளவர்  அல்லது செல்வாக்கு உடையவர் அல்லது கொஞ்சம் பணம் படைத்தவர் - இவரைப் போன்றவர்கள்  கட்சி ஆரம்பிப்பதில் சில நடைமுறைகளையெல்லாம் தாண்டி எளிதாக தலைமைப் பீடத்திற்கு எளிதாகச் சென்றுவிடுவார்கள்!  கீழிருந்து  மேல்  நிலைக்குச் செல்ல இந்தச் சிறிய கட்சிகள் அவர்களுக்கு ஊன்றுகோலாக இருக்கும்! 

ஒரு கட்சியை ஆரம்பித்த பின்னர் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். அப்படி இணைந்து கொளவதன் மூலம்  தலைவர் சில சுகபோகங்களை அனுபவிப்பார்.  ஒரு வேளை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கலாம்! செனட்டர் பதவி கிடைக்கலாம்! டத்தோ போன்ற பட்டங்கள் கிடைக்கலாம்! அரசாங்க நிறுவனங்களில் பதவிகள் கிடைக்கலாம்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்று புரியும். இந்த சிறு கட்சிகளின் தலைவர்கள் எந்த ஒரு கட்சியிலும்  அடிமட்டத்திலிருந்து சேர்ந்து பணியாற்றவில்லை. கட்சிக்காக உழைக்கவில்லை.  மற்றவர்களுடன் போட்டி போட்டு எந்த பதவிக்கும் வரவில்லை. அதெல்லாம் நீண்ட நாள் உழைப்பு என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள்  கட்சி ஆரம்பித்து பதவிகளையடைவது  எளிது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! மற்றபடி அவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லாதவர்கள்!

ஆக இப்போது புரிந்திருக்க வேண்டும். ஏன் திடீர் திடீரென கட்சிகள் புதிது புதிதாக முளைக்கின்றன என்பதற்கான காரணங்கள்! சிறுகட்சிகள் - ஏன் இவர்களை சிறுகட்சிகள் என்கிறோம் என்றால் - இவர்களால் கட்சிகளை வளர்க்க முடியாது - அதோடு வரவு செலவு அனத்தும் தலைவரே பார்த்துக் கொள்வார்! அவர்கள் வளர விரும்புவதில்லை! யாரும் போட்டிக்கு வந்துவிடுவார்களோ என்கிற பயம் வேறு!

பெரிய கட்சிகள் இவர்களை அண்ட விடக்கூடாது என்பது தான் நாம் விடுக்கும் அறைகூவல்!

Saturday 7 January 2023

இவர்களை நம்பலாமா?

 

இத்தனை ஆண்டுகள் கண்ணில் அகப்படாத ஒரு விளம்பரம் திடீரென முகநூலில் பார்க்க நேர்ந்தது!

இது அதிசயம் தான், இல்லை என்று சொல்லவில்லை. நமது நாட்டில் குடியுரிமை பிரச்சனை என்றாலே  அதிகம் பாதிக்கப்பட்ட இனம் என்றால் அது இந்தியர்கள் தான். அதுவும் குறிப்பாக தமிழர்கள். 

மக்கள் இந்தக் குடியுரிமைக்காக எத்தனையோ ஆண்டுகள் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அரசாங்கம் கேட்கின்ற அத்தனை ஆவணங்கள் இருந்தும் அவ்ர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகின்றது. அது ஏன் என்று யாருக்கும் புரியவில்லை!

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது குடியுரிமைப் பெற  தகுதிப்பெற்றவர்கள்  யார் என்று எப்போது ஓர் அரசாங்க அலுவலர் அவரே ஒரு முடிவுக்கு வருகிறாரோ அப்போது தான் அவரின் தயவு  குடியுரிமைக்காக காத்திருப்பவருக்குக் கிடைக்கும்! அதுவும் எப்போது?  குடியுரிமைக்காக முப்பது, நாற்பது ஆண்டுகள் காத்திருந்து அவர் கண்ணை மூடுப்போகின்ற காலத்தில் தான் அவருக்குக் குடியுரிமை கிடைக்கும்! இப்படி ஓர் நடைமுறையைத் தான் இதுநாள் வரை அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்றது.  இப்படி ஒரு பெருந்தன்மையை உலகில் எந்தவொரு நாடும் வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை! பாராட்டுவோம்!

"உங்களது குடியுரிமை பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறோம்" எனறு மலேசிய இந்து சங்கம் ,  லோபாக், சிரம்பான் நகரிலுள்ள அமைப்பு  மக்களுக்கு உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.

ஆனாலும் ஒரு சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. முதலில் இந்த செயதி எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் செய்திகள் வரும் பின்னர் 'அது நான் இல்லை!' என்பது போன்று மறுப்புத் தெரிவித்து இன்னொரு செய்தியும் வரும்!  அப்படி எந்த மறுப்பும் இந்நாள் வரை ஒன்றையும் காணவில்லை!

நம்மைப் பொறுத்தவரை இவர்கள் மூலம் உங்களுக்கு ஏதேனும் உதவி கிடைத்தால்  அதனை நாங்களும் வரவேற்கிறோம். நல்லதை யார் செய்தாலும் நாம் அவர்களை வரவேற்போம். ஆனால், யாராக இருந்தாலும் சரி உங்கள் கைப்பணத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அவர்கள் செய்வது உதவியாகவே இருக்கட்டும்.

நமது சமுதாயம் பணத்தைக் கொடுத்து எல்லாவற்றிலும் இழந்த சமுதாயம். யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம்  என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு ஏமாளிச் சமுதாயம். அதனால் உதவி செய்பவர்கள் உதவி செய்யட்டும்.  பணத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அதுவே நமது அறிவுரை.

அனைத்தையும் அறிந்து கொண்டு செய்யுங்கள். ஏமாற்றுபவர்கள் எனத் தெரிந்தால் காவதுறையில் புகார் செய்யுங்கள். நல்லது நடக்கும் என்பதே நமது நம்பிக்கை.

Friday 6 January 2023

அசுத்தமான உணவகங்கள்!

 

                                        அசுத்தமான உணவு தட்டுகள்

பெரும்பாலான உணவகங்கள் விலைகளை ஏற்றிவிட்டன. நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம். பல உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. நமக்குப் புரிகிறது.  கோவிட்-19  தொற்று வந்த பின்னர் பல பல பிரச்சனைகள் உருவாகிவிட்டன. உணவகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. வேலைக்கு ஆளில்லை.  அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை.  வேலையில்லாத நிலையில் உணவகப் பணியாளர்கள் பலர் தங்களது தாயகம் திரும்பிவிட்டனர்.

இப்போது தான் உணவக உரிமையாளர்களால் கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது. வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனனர். ஆனால் இப்போது பிரச்சனை மாறிவிட்டது. குறைவான வேலையாட்களை வைத்துக் கொண்டு தொழிலைச் செய்ய வேண்டி உள்ளது.

ஆனாலும் அந்தப் பொறுப்பு வியாபாரிகளுடையது. வேலையாட்கள் குறைவு.   அவர்கள் மீண்டும் வேலையாட்களை அதிகரிக்க வேண்டும். அது அவர்களுடைய பொறுப்பு. 

விலைகளைல்லாம்  அதிகரித்துவிட்டன. அதனால் உணவு விலைகளையும் ஏற்ற வேண்டிய கட்டாயம்.  எல்லாம் சரி தான். எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் உணவுகளின் தரம்  ஒரு பக்கம் குறைந்து போய்விட்டது. தரம் குறைந்த உணவுகளைக் கொடுத்துவிட்டு, விலைகளையும் ஏற்றிவிட்டு, தரமற்ற உணவு பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு பரிமாறுவது என்பதில்  எந்த நியாயமும் இல்லை.

சமீபகாலமாக உணவகங்களில் ஏகப்பட்ட குளறுபடிகளைக் காண்கின்றோம். நிறைய குறைபாடுகள்.  வாடிக்கையாளர்கள் முதலில் விலையைப் பார்க்கின்றனர். ஆமாம், பார்க்கத்தான் வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு  விலையேற்றம். இப்போதெல்லாம் விலைகளைக் கணிக்க முடியவில்லை.  முன்பு ஐந்து வெள்ளி என்றால் இப்போது முப்பது வெள்ளிக்கு எகிறிவிட்டன! விலையற்றத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த அளவுக்கா என்கிற மலைப்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது!

சரி, அதனையும் கொடுத்துவிட்டு வருகிறோம். ஆனால் எந்த அளவுக்குச் சுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் அதுவுமில்லை! சுத்தமற்ற உணவு பிளேட்டுகள், கீறல்விட்ட பிளேட்டுகள்! சமையல்கட்டுகளில் பயன்படுத்தும் சுகாதாரமற்ற தட்டுகள், சட்டிகள், பானைகள்! சமைக்கும் இடத்திலேயே கழிவறைகள் - இப்படி ஒர் பக்கம்  அசிங்கமான  காட்சிகள்!

என்ன செய்ய? இப்படித்தான் நமது உணவகங்களின் கண்கொள்ளாக் காட்சிகளைக் கண்கூடாகப் பார்த்து சகித்துக் கொண்டிருக்கிறோம்! ஆனாலும் இது தொடர்கதையாக தொடரக் கூடாது என்பது தான் நமது தாழ்மையான வேண்டுகோள்.

சுகாதாராமற்ற உணவகங்கள் என்றால் இங்கு நாம் எந்த இனம் என்று பார்ப்பதில்லை. ஆனால் நாம் இந்திய உணவகங்களைப் பற்றியே அதிகம் பேசுகிறோம். காரணம் நாம் தான் அவரகளின் முக்கியமான  வாடிக்கையாளர்கள். அதனால் தான் அவர்கள் அதிகம் கல்லடி படுகிறார்கள்.

ஒரு சில உணவகங்கள் செய்கின்ற தவறுகளினால் நாம் எல்லா உணவகங்களையும் குற்றம் சொல்ல வேண்டியுள்ளது. தவறு தான்.  வேறு வழியில்லை!

ஒரு பெரிய குறை என்னவென்றால் உணவகங்கள் சுகாதார அதிகாரிகளால் சரியாக கண்காணிக்கப்படுவதில்லை என்பது மட்டும் அல்ல  அங்கும் பணத்தைக் கொடுத்து சரிப்படுத்தும் வேலையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! அதனால் தான் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை!

Thursday 5 January 2023

விஜய் சார்! தவறு!


                                                        சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இப்போது தமிழக திரைப்பட உலகில் புதிதாக, மகா பெரிய பிரச்சனையாக, உருவாகியிருக்கிறது யார் சுப்பர் ஸ்டார் என்கிற விவாதம்! 

இது ஒன்றே போதும் தமிழ் நாட்டில் வேலைவெட்டி இல்லாத இளைஞர் கூட்டம் பெருகிக் கொண்டே போகிறது என்பது!

தமிழ் திரையுலகில் சுப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி காந்த்  மட்டுமே. அதனை பிற நடிகர்கள் சொந்தம் கொண்டாட நினைப்பது சரியல்ல.  நமது திரையுலக சரித்திரத்தப் பார்த்தால் இது போன்ற பிரச்சனை முன்பு எப்போதும் இருந்ததில்லை!

பார்ப்போமா?  ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன்,  நடிகையர் திலகம் சாவித்திரி,  நாட்டியப் பேரொளி பத்மினி  என்று இப்படித்தான் தமிழ் திரையுலகில்  முக்கிய நடிகர்களில் ஏதோ ஒரு வகையான அடைமொழி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அது தான் வரலாறாக இருக்கிறது. அதைத்தான் நாம் இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அதே போல சுப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினியைத் தான் குறிக்கும். தியாகராஜ பாகவதர்,  எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க வந்தவர்  ஏழிசை மன்னர் என்றால் அது அவர் மட்டும் தான். நடிகவேள் என்றால் அது எம்.ஆர்.ராதாவை மட்டும் தான் குறிக்கும். அதற்கு மேல் அந்தப் பட்டத்திற்கு இடம் காலியில்லை!

சுப்பர் ஸ்டார் என்றால் இன்னும் எண்பது ஆண்டுகள் போனாலும் அது ரஜினி மட்டும் தான். ஏன்? தல, தளபதி என்கிறார்களே அது யாரைக் குறிக்கிறது? தல அஜித், தளபதி விஜய் அவ்வளவு தான். தல தனக்கு எந்தப் பட்டமும் வேண்டாம் என்று  பெருந்தன்மையோடு ஒதுங்கிக் கொண்டார். தளபதி என்பது விஜய் பெயரோடு ஒட்டிக்கொண்டது! அதற்கு மேல் அது வேறு எங்கும் போகும் நிலையிலில்லை! 

இப்போது விஜய்க்கு என்ன வந்தது?  தனக்கு  தளபதியும் வேண்டும் சுப்பர் ஸ்டார் என்று  இன்னொரு பட்டமும் வேண்டும் என்று நினைப்பதே பெரும் தவறு. அவர் தனது ரசிகர்கள் மேல் குற்றம் சொன்னால் ஒன்று மட்டும் விளங்குகிறது. அவர் ரசிகர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பவர்  என்று புலனாகிறது!

விஜய் சார்!  தாய் தகப்பன் பேச்சைக் கேட்க மாட்டேன் ரசிகர்கள் பேச்சை மட்டும் தான் கேட்பேன் என்றால், மன்னிக்கவும்!  தடம் மாறுகிறீர்கள்!

Wednesday 4 January 2023

தமிழையும் பாதுகாப்போம்!

 


புத்தாண்டில் இது போன்ற செய்திகளைப் படிக்கின்ற போது நமக்கு அது மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது.

காரணம், நமது கலைகள் குறிப்பாக தமிழர்களின் கலைகள்,  நமது நாட்டில் இன்னும் தொய்வில்லாமல் கற்றுக்கொடுக்கப் படுகின்றனவே  என்பது நல்ல செய்தி தான்.

ஆனால் சிறு நெருடல்.  இது எனது முகநூலில் வந்த அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். விளம்பரம் அல்ல. 

தமிழர் சம்பந்தப்பட்ட இந்த கலைகளெல்லாம் ஏனோ, யாருக்கோ படித்துக் கொடுக்கின்ற கலையாக மாறிவிட்டனவோ என்று தான் தோன்றுகிறது. மேலே இந்த அறிவிப்பை தமிழில் வெளியிட்டால் யாருக்கும் புரியாதோ என்கிற நிலைமைக்கு நாம் வந்துவிட்டோமோ என்று தான்  நினைக்கத் தூண்டுகிறது!

கலைகள் நம்முடையவை. ஆனால் படித்துக் கொடுப்பவர்கள் தமிழை அறியாதவர்கள். எல்லாரும் அல்ல,  ஒரு சிலர்!  ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பவர்கள்! அதை நாம் தவறு சொல்லவில்லை. ஆனால் தமிழ் தெரிந்த பிள்ளைகளைக் கூட ஆங்கிலத்திற்கு  அவர்களை மாற்றி விடுவதில் வல்லவர்கள்!

தமிழர்கள் வாழுகின்ற ஒரு சில நாடுகளில் தமிழ் மொழியைப் படிக்க  வாய்ப்பில்லாதவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது அந்நாட்டு மொழியிலோ அதனைத் தங்களுக்கு ஏற்றவாறு மொழிமாற்றம் செய்து  நமது கலைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்டுகிறோம். ஆனால் நமது நாட்டில் தமிழ் மொழி படிக்கின்ற வாய்ப்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இங்கே தமிழ் மொழியே இல்லை என்கிற நினைப்பில் செயல்படுவதும் நமது கலைகளை எல்லாம் ஆங்கில மயமாக்குவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

நாம் சொல்ல வருவதெல்லாம் நமது கலைகளில் எப்படி ஆர்வத்தைக் காட்டுகிறோமோ  அது போல நமது மொழியிலும் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்பது தான்.

இது போன்ற அறிவிப்புகளை நாம் வெளியிடும் போது அதைக் கொஞ்சம் தமிழிலும் அறிவிக்கலாம். ஏதோ ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தக் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல செயல்படுவது மனதுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.

நமது மனங்களைக் கொஞ்சம் விசாலப்படுத்துவோம்!


Tuesday 3 January 2023

இது வெற்றியா?

 


நான்கு இலக்க சூதாட்டம் கெடா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுவிட்டது. பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இந்த சூதாட்டம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.

சூதாட்டம் தடைசெய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.   சூதாட்டத்தினால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. அன்றும் சரி இன்றும் சரி அது ஒரு தொடர்கதையே. 

சரி, இந்தத் தடையினால் சூதாட்டம் முற்றிலுமாக துடைத்து ஒழித்து விடமுடியுமா?  அதுவும் கெடா மாநிலம் ஓராண்டு காலத்திற்கு முன்னரே சூதாட்டம் தடை செய்யப்படும்  என்று அறிவித்துவிட்டது!  ஓராண்டு காலம் என்பது போதுமான காலம்.  சூதாட்ட மையங்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட போதுமான அவகாசம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது!

சட்டத்தைக் கொண்டு வரும் முன்னரே சூதாட்ட நிறுவனங்களும் பல மாற்று வேலைகளைச் செய்து கொண்டு, தயார் நிலையில் உள்ளனர்.  இத்தனை ஆண்டுகள் கடைகளை வைத்து அதிகாரபூர்வமாக சூதாட்டத்தை நடத்தியவர்கள் இனி மறைமுகமாக செய்வார்கள். அவ்வளவு தான். எந்த வித்தியாசமும் இல்லை!  அவர்கள் எங்கெங்கு செய்வார்கள்  என்பதெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு அத்துப்படியான விஷயம்! வாடிக்கையாளர்களுக்கு எதுவும் புதிதல்ல!

சூதாட்டத்தை நடத்தி வந்த கடைக்காரர்களும்  சும்மா கையை வீசிக்கொண்டிருக்கப் போவதில்லை. கடைகள் இருக்காதே தவிர அவர்கள் வழக்கம் போல இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். சூதாட்ட நிறுவனங்களும் தங்களது செயல்பாட்டை நிறுத்தப் போவதில்லை.  அது எப்படி எப்படியோ, ஏதோ ஒரு வழியில் அது செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும்!

சூதாட்டத்தை ஒழிப்பது நல்ல காரியம்.  ஆனால் அப்படியெல்லாம் அதனை அவ்வளவு  எளிதில் ஒழித்துவிட முடியாது.   நமது நாட்டைப் பொறுத்தவரை  சூதாட்டம் என்பது நீண்ட நாள் நிலைத்துவிட்ட ஒன்று. எனது சிறு வயது  காலத்திலிருந்தே, எனது பள்ளிப்பருவ காலத்திலிருந்தே நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது இந்தத் தடை அல்லது 'ஒழித்துவிட்டோம்' என்று சொன்னாலும் சரி அப்படியெல்லாம் ஒழித்துவிட முடியும் என்று  நான் நம்பவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யலாம்; கொஞ்சம் ஆட்டம் காட்டலாம்! 

இன்றைய அரசாங்கம் இதற்குத் தடை விதித்தாலும்  நாளைய அரசாங்கம் அதனை மீண்டும் கொண்டு வரலாம்! அது தான் மலேசியா! பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சில விஷ்யங்களை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது!

இதனை ஒரு தற்காலிக வெற்றி என்று சொல்லலாம்!

Monday 2 January 2023

தவறான நடவடிக்கை!

 

மிகவும் தவறான ஒரு நடவடிக்கை!  மலாக்காவில் நடந்து நிகழ்வு.

கைப்பந்து (வாலிபால்) விளையாட்டில்,  பதினான்கு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளின் போட்டி ஒன்றில்,  போட்டியில் குறைவான புள்ளிகளை எடுத்தனர் என்பதற்காக அதன் பயிற்றுவிற்பாளர்  இரண்டு மாணவிகளைக்  கன்னத்தில்  அறைந்த சம்பவம்   இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.   பெற்றோர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி என்பது தான் உண்மை.

அடித்து வேலை வாங்குவது எல்லாம் பயிற்றுநரின்  பாட்டனார்  காலத்தில் நடந்திருக்கிலாம். இப்போது அதெல்லாம் நடக்கின்ற காரியமா?  இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் மீது கை வைப்பதே குற்றம் என்கிற சூழல்  நிலவுகிறது.

பள்ளிக் குழந்தைகளாக இருந்தாலும் சரி, வேலை செய்கின்ற  பெரியவர்களாக ஒருந்தாலும் சரி இப்போதெல்லாம் யாரிடமும் அதிகாரம்  பண்ணுகின்றவர்களை  யாருக்கும் பிடிப்பதில்லை.  அதிகாரம் பண்ணி இப்போதெல்லாம் யாரிடமும் வேலை  வாங்க முடியாது!

பள்ளிப்பிள்ளைகளா?  இன்னும்  தொட்டா சிணுங்கிகள்! இப்போதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது தான்.

அந்தப் பயிற்றுநர், பாராட்டுவதன் வழி அந்த மாணவிகளை நல்ல விளையாட்டாளர்களாக உருவாக்கியிருக்கலாம். பாராட்டுதல்களுக்கு  மயங்காதார் யார்? நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவர்களை இன்னும் நல்ல விளையாட்டாளர்களாக மாற்றி அமைத்திருக்கலாம். 

ஆனால் நடந்தது என்ன?  இப்போது அந்த மாணவிகள் தொடர்ந்து விளையாட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறி! அந்த மாணவிகளுக்கும் கைப்பந்தில் இருந்த ஆர்வமும் குன்றிப் போயிருக்கும்.

பயிற்றுநர் ஓர் ஆசிரியர். அவருக்கு நாம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. குழந்தைகளோடு எப்படி பழகுவது என்பதை அறிந்தவர். ஆனால் என்ன செய்வது? சுழி சரியில்லையே!