Monday 13 May 2024

மக்கள் தொகையில் சரிவா?

 

மலேசிய இந்தியர் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டிருப்பதாக புள்ளியல் துறை அறிவித்திருக்கிறது.  ஏற்கனவே இது பற்றி சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இந்தியர்களின் கணக்கெடுப்பு சரியாக  அமையவில்லை  என்பதாகப்பேசப்பட்டது. அவ்வளவு தான். மேலும் அது பற்றிப் பேசினாலும் காது கொடுப்பார் யாருமில்லை!

இந்தியர்கள் என்றால் எது வேண்டுமானாலும்  பேசலாம், செய்யலாம் என்பது தான் நாட்டு நிலைமை.

ஆனாலும் இதுபற்றியெல்லாம்  அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. உருப்படி இல்லாத ஒன்பது பிள்ளைகளைப் பெற்றுப்போடுவதை விட  உருப்படியாக ஒன்று இரண்டைப் பெற்று  மேன்மையான வாழ்க்கை வாழவதுதான்  இன்றைய நிலையில் சரியான முடிவாக இருக்கும்.

இந்தியாவில்  பிராமணர்கள்   இந்திய மக்கள் தொகையில் மூன்று விழுக்காட்டினர் தான் . ஆனால் அவர்கள் தான் இந்தியாவை ஆளுகின்றனர்! அனைத்துத்  துறைகளிலும் அவர்கள் தான் முன்னணி வகிக்கின்றனர்.  தொண்ணூற்றேழு விழுக்காடு   இந்தியர்கள்  அவர்களின்  கட்டுப்பாட்டில் தான்  உள்ளனர்!    ஆக மிகச் சிறுபான்மை எனப்படும்  பிராமணர்கள்  என்ன தாழ்ந்து போனார்கள்?  கல்வி ஒன்று மட்டுமே அவர்களின் உயரத்தை நிலைநிறுத்தியது.  நமக்கும் அதே நிலை தான்.  கல்வி மட்டும் போதும். எந்தக் காலத்திலும் கல்வியில் நாம் தான் முன்னணியில் இருக்க வேண்டும். அது போதும் நமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடும்.  பட்டம் பதவிகள் கிடைத்துவிடும்.

இந்தோனேசிய மக்கள் தொகையில் சீனர்கள் மூன்று விழுக்காட்டினர் தான்.  ஆனால் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் கையில்!  பெரும் தொழில்களானாலும் சரி, சிறிய தொழில்களானாலும் சரி  அவர்கள் தான் செய்கின்றனர்.  என்ன தான் அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்தாலும் சீனர்களின்  வியாபார ஆதிக்கத்தை  யாரராலும்  அசைக்க முடியவில்லை என்பது தான் உண்மை.  ஆமாம், மூன்று விழுக்காடு  தான்   ஆனால் அதன்  ஆழம் அகலத்தை  அகற்றிவிட  முடியுமா?  அரசாங்கத்தின் கஜானாவை யார் நிரப்புகிறார்கள்? சீனர்கள் தான்.  ஒரு சிறிய விழுக்காடு தான்.  ஆனால் அதன் சக்தியைப் பார்த்தீர்களா? அந்த பலம் தான் நமக்குத் தேவை.

என்ன இருக்கிறதோ இல்லையோ இந்த உலகம் நம்முடைய  பொருளாதாரத்தை உற்றுக் கவனிக்கிறது.  கல்வியை உற்று நோக்குகிறது.  ஒருவன்  கல்வி கற்றால் அவனின் வெற்றி உறுதி.  பொருளாதாரத்தில் வெற்றி பெற உழைக்கத் தயங்கக் கூடாது. சீனர்கள் உழைக்கத் தயங்குவதில்லை.

இந்தியர்களில் குஜாராத்தியர் வியாபாரம் தவிர்த்து வேறு எது பற்றியும்  சிந்திப்பதில்லை.  அவர்களிடம் தான் தங்கம் கொட்டிக்கிடக்கிறது.  தமிழர்களில் முஸ்லிம்கள், செட்டியார்கள் - இவர்களுக்கு  வியாபாரம் மட்டும் தான் அவர்களின்  பிழைப்பு. மற்ற சிந்தனைகள் எதுவும் எழுவதில்லை.  நாமும் நமது சிந்தனை ஓட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதனால் மக்கள் தொகையில் சரிவு என்றால் கவலைப்பட் ஒன்றுமில்லை. நம்முடைய பொருளாதார வலிமை தான் கணக்கில் எடுக்கப்படும். சீனர்கள் கேட்காமலேயே பல விஷயங்கள் கிடைத்து விடுகின்றன. நமக்குக் கிடைப்பதில்லை.  காரணம் நாம் இன்னும் அரசாங்கத்தை நம்பிதான்  இருக்கிறோம்.  மற்றவர்களை நம்பியிருப்போரை யார் மதிப்பார்?

Sunday 12 May 2024

ஆட்டுக்கறி விருந்து!

 

ம.இ.கா.வின் இது போன்ற அரசியலைத்தான் நாம் வெறுக்கிறோம்!

ஏற்கனவே அவர்களின் அரசியலைப்பற்றி நமக்குத் தெரியாமலில்லை. கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குத் 'தண்ணி'  வாங்கிக் கொடுப்பது, உணவுகளை வாங்கிக் கொடுப்பது -இப்படி  எல்லாம் செய்வதால்  யாருக்கு என்ன இலாபம்? சாப்பிடுகிறவன்  அந்த நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைவான்! படித்தவனாக இருந்தால் அவனுக்கு ஏதாவது பட்டம் கிடைக்கும். அவனுக்கு அது போதும்!

ஆனால் இப்படிச் செய்வதால்  இந்த சமுதாயத்திற்கு என்ன கிடைக்கப் போகிறது?  சமுதாய பிரச்சனைகள் தீர்க்கப்படப் போகிறதா? நம்மிடையே நிறைய பிரச்சனைகள் உண்டு. பிரச்சனைகளை விட்டுவிட்டு  இதுபோன்ற சில்லறைத்தனங்களால் என்னத்தை நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள்?

கோலகுபுபாரு வீடமைப்புத் திட்டம் என்பது ம.இ.கா. காலத்துப் பிரச்சனை. அப்போது இவர்கள் தான் பதவியில் இருந்தார்கள்.   ஒரு மைல் தூரத்திற்கு ஒரு கிளை வைத்திருந்தார்கள். அந்தத் தொகுதியில் ஐந்து  தோட்டங்கள் எல்லா தோட்டங்களிலும் கிளைகள் இருந்திருக்க வேண்டும்.  ஏன் அவர்களால் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை? அவர்கள் செய்ய மாட்டார்கள்! காரணம் இது தின்னு  கொழுத்த  கூட்டம்! அரசாங்கத்திடமிருந்து இன்னும் எவ்வளவு கறக்கலாம்  என்று நினைக்கிற கூட்டம்!

அவர்களைப்பற்றி அறிந்திருப்பதால்  தான் இன்று மக்கள் அவர்களை ஒரேடியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள்!  அவர்களின்  தானைத்தலைவர் போகும் போதே  அனைத்தையும்  பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டார். அவர்களுக்கு இந்தியரிடையே எதிர்காலம் இல்லை. ஆனால் அவர்களுக்கு ம.இ.கா. தேவைப்படுகிறது.  கல்வி நிலையங்கள் இருக்கின்றன.  அதை வைத்தே காலத்தை ஓட்டலாம்! ஆனால் அதன் மூலமும் இந்திய மாணவர்களுக்குப் பயனில்லை!

நமது மக்கள் இன்னும் திருந்தவில்லை. ஆட்டுக்கறி விருந்து வைத்தால்  அதனைப் புறக்கணித்திருக்க வேண்டும்.  மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி இது போன்ற சில்லறத்தனங்களை யார் செய்தாலும் அவர்களைப் புறக்கணியுங்கள். அது போதும். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.

கோலகுபுபாருவில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அதனையே மீண்டும் மீண்டும் எதிரொலிப்போம்!

Saturday 11 May 2024

இடைத் தேர்தலுக்குப் பின்!


 கோலகுபுபாரு இடைத்தேர்தல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!

இந்தத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக்கு மலாய் மக்களின் ஆதரவு கூடி இருக்கிறதாம். அதாவது பிரதமர் அன்வாருக்கான ஆதரவு கூடி வருகிறதாம்.

வாக்களிப்பதில் மலாய் மக்கள் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.  சீன வாக்காளர்கள் எப்போதுமே ஜ.செ.க.  ஆதராவளர்கள். இந்திய வாக்களர்கள் எங்கே  பின் தங்கி விடுவார்களோ  என்று சீனர்களின் கூட்டம் கூடுவதில் வியப்பு ஏதுமில்லை! இந்தியர்களின் வாக்கு இன்னும் ஏனோதானோ நிலையில் தான்!  அது அவர்களின் குற்றமல்ல.  காலங்காலமாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம் அப்படித்தான் இருக்கும்.

நமது அபிப்பிராயங்கள் எப்படி இருப்பினும் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. செய்ந்நன்றி கொன்றவருக்கு உய்வில்லை!   அந்தத் தொகுதியில் உள்ள அங்குள்ள மக்களுக்கு சுமார் 245 வீடுகள் கட்டிக்கொடுக்க உறுதி அளித்திருக்கும் போது  நாம் ஏன் எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்கட்சியால் ஒரு செங்கல்லைக் கூட தூக்கிவைக்க முடியாது! ஏன் ஆளுங்கட்சியாக இருந்த போது கூட ம.இ.கா.வால் ஓரு ஆணியைக் கூட புடுங்க முடியவில்லையே!

கோலகுபுபாரு மக்கள் நல்ல தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்கள். அதுவும் இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  அவர்களின் ஆதரவு  தக்க சமயத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கைகொடுத்திருக்கிறது. அவரகளது கோரிக்கைகள் அனைத்தும் தொகுதியைச் சார்ந்தவை.

இப்போது நாம் ஒரு சவால் விடுகிறோம்.  தேர்தல் பிரச்சாரத்தின்  போது  அத்தனை தலைகளும் இந்தியர்களின் காலில் விழுந்தீர்களே  அதனை அப்படியே போய்  பிரதமர் காலில் விழுந்து இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகைக் காணுங்களேன்!  ஏன்? இன்னும் அடுத்த  தேர்தல்வரை காத்திருக்கப் போகிறீர்களோ?  நீங்கள் ஒன்றும் செய்யவில்லையானால்  இப்போதே நான் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன்.  காரணம் இந்திய இளைஞர்கள் இனி உங்களைச் சும்மா விடப்போவதில்லை!

Friday 10 May 2024

தேர்தல் அன்று!

 


கோலகுபுபாரு  இடைத்தேர்தல் அன்று தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும்  காலை மணி 8.00 க்கு  தயாராகிவிட்டன.  அனைத்தும்  மாலை மணி 6.00 வரை திறந்திருக்கும்.

சுமார் 30,269 வாக்களார்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் இரவு 10.00 மணி அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க காவல்துறை  குவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு நான்கு முனை போட்டி என்றாலும் இரண்டு கட்சிகளே பிரதானமாகத் தோன்றுகின்றன. பிரதமர் தலைமையில் இயங்கும் பக்காத்தான் ஹராப்பானும் முன்னாள் பிரதமர் முகமது யாஸின் தலைமையிலான  பெரிக்காத்தான் நேஷனலும் முக்கியமானவை.  இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்  போட்டியிடும் நான்கு பேருமே தொகுதியில் வாக்களிக்க  தகுதி பெறவில்லை!   அனைவருமே வேறு தொகுதிகளைச்  சேர்ந்தவர்கள்!

பல்வேறு காரணங்களுக்காக இந்திய வாக்களார்கள் வாக்களிக்கமாட்டார்கள், சீனர்கள்  வாக்களிக்கமாட்டார்கள் என்று சொன்னாலும்  பின்னர் அவர்கள் அனைவருமே சமரசமாகி விட்டார்கள். மலாய், சீன  வாக்காளர்கள்  காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கி விட்டாலும் இந்திய வாக்களர்கள் தாமதமாகத்தான்  வாக்களித்திருக்கின்றனர்.  அன்று வேலை நாள்  என்பதால் அந்தத் தாமதம்.

இந்திய வாக்களர்களைப்பற்றி பலவாறு குறைகள் சொன்னாலும் இந்த இடைத்தேர்தலில்  ஆளுங்கட்சிக்குச் சரியானதொரு பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். தொகுதியில் பல்வேறு பணிகள் உறுதியளித்தவாறு நடைபெறவில்லை.  நடைபெறும் என்பதாக உறுதிமொழி  கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை, இந்தியர்கள்,  வாக்குச்சாவடிக்கு சும்மா ஓட்டுப் போட போகவில்லை. சில உறுதிமொழிகளுடன் தான்  ஓட்டு போடுகின்றனர். இதனை நாம் ஓர் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம். வருங்காலங்களில் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பலாம்.

Thursday 9 May 2024

இடைத் தேர்தலுக்கு முன்!

 

iகோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கு முன் நடந்த சரித்திரபூர்வமான  சம்பவங்கள்!

எல்லாத் தலைவர்களும் ஒன்று கூடினார்கள்.  ஒன்று சேர்ந்து கும்மியடித்தார்கள்!

"தேர்தலை புறக்கணியுங்கள்!"  என்றது ஒரு கூட்டம்.  குறிப்பாக பெரிகாத்தான்  நேஷனல். அப்படிப் புறக்கணித்திருந்தால் புதிய வருகையான முன்னாள் ம.இ.கா.வினருக்கு  நல்ல பெயர் கிடைத்திருக்கும்!

"தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்களியுங்கள்.  ஆனால் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்காதீர்கள்!"  பின்னர் தொனியை மாற்றிக் கொண்டு இப்படி ஒரு பிரச்சாரம்!

"பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவா?  கெடா மாநிலத்தைப் பார்த்தீர்களா?  அத்தனை உரிமைகளும்  பறிபோகும்!"  இப்படி ஒரு தீர்க்கதரிசனம்!

"எதிர்கட்சிக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்! உங்களை அம்போ என்று விட்டுவிடுவார்கள்! எங்களை நம்புங்கள். எங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்!"   என்று எல்லா தலைகளும் புருடா விட்டன!


இப்படி எல்லாம் பேசினால் யாருக்குத் தான் வாக்களிப்பது?  குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் என்ன தான் பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை. இது நாள் வரை என்ன  தான் குறை என்று அறிந்து தெரிந்து  அதனைச் சரி செய்ய யாருக்கும் துணிவில்லை.  வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஏற்கனவே சொல்லப்பட்ட, உறுதி கூறப்பட்டவைகள் எதனையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை.  அந்தக் கட்சியினர்  வியாதியால் துன்பப்பட்ட ஒருவரை அங்கே நிறுத்தியிருந்தனர். அதனால் எந்த வேலையும் ஓடவில்லை என்பது தான் உண்மை.

எப்படி இருந்தாலும்  அந்தத்  தொகுதி மக்கள் தான் அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்தனர்.  சும்மா இருந்தால் சோத்துக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தான் அத்தனை தலைகளும் பேச ஆரம்பித்தன!  மீண்டும் மீண்டும் உறுதி மொழிகள்  கொடுக்கப்பட்டன. பேசப்பட்டன. விவாதிக்கப்பட்டன.

அதன் பின்னர் தான் மக்கள் பஞாயத்தை ஏற்றுக் கொண்டனர். இது தான் தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை.


Wednesday 8 May 2024

இடைத் தேர்தலுக்கு ரெடியா?

 

நாடு எதிர்பார்க்கும் மிகப்பிரமாண்டமான இடைத்தேர்தல் என்றால் அது கோலகுபுபாரு இடைத்தேர்தல் தான்!

எப்போதும் அலட்சியமாக பார்க்கும் நமது அரசியல்வாதிகள்  இப்போது நமக்கும் ஒரு காலம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை.   யானைக்கு  ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பார்கள்!  இப்போது  அது வந்திருக்கிறது!  ஒவ்வொரு அரசியல்வாதியும் குனிந்து குனிந்து வாக்கு அளிக்குமாறு  கூனிக்குறுகுகிறான்!

இதில் நமது ம.இ.கா.வினரை நினைக்கும் போது தான்  நமக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  பேசுபவர்கள் அனைவருமே "அறுபது ஆண்டுகளாக செய்யாதவர்கள் இப்போது செய்வார்களா?"  என்கிற கேள்வி வரும் போதெல்லாம் அது அவர்களைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியாமலா போகும்!  என்ன செய்ய? அது தான் அரசியல் என்று மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!  நாம் ஏன் ம.இ.கா.வின் மேல் இத்தனை அக்கறை காட்டுகிறோம்? காரணம் நம்மில் பெரும்பாலோர் முன்னாள் ம.இ.கா.வினர் தான்.  மற்றவர்கள் எப்படியோ நான் கட்சியின் கிளையோன்றில் செயலாளராக இருந்தவன்! எப்படியோ இருக்க வேண்டிய கட்சி......இப்படி ஆனதே என்பதில்  வருத்தம் தான்! 

அரசியல்வாதிகளுக்கு நாம் நினைவுறுத்துவது ஒன்று தான்.  அரசியலை வைத்துப் பணம்  சம்பாதிக்க நினைத்தால் அது கடைசியில்  சாபத்தைத்  தான் கொண்டுவரும்.  இது தடித்த 'தோலர்' களுக்குப் பொருந்தாது!  இப்போது பாருங்கள் வரிசையாக வழக்குகள். டாக்டர் மகாதிர், டைம் ஜைனுடின்,  முகைதீன்யாஸின் இப்படிப் பல பிரபலங்கள் இன்று  அவமானப்பட்டு நிற்கிறார்கள்! 

இன்றைய நிலையில் எந்த ஒரு கட்சியும் வீரவசனம் பேசும் நிலையில் இல்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் ஏமாற்று வேலையைத்தான் செய்கிறார்கள்! நம்மை ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள்.  நம்முடைய உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் தயாராக இல்லை!

இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதி மக்களே சிந்தித்து வாக்களிக்கட்டும்.  யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது அங்குள்ள மக்களுக்குத் தான் தெரியும்.  ஒரு வீடமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற ஏன் இத்தனை ஆண்டுகள் பிடித்தன? என்கிற கேள்விக்கு  ஜ.செ.க.   தான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களே!  வாக்கு யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

Tuesday 7 May 2024

ஹி! ஹி! பொறாமையா!

 

பிரதமர் அன்வார் சொன்ன ஒரு கருத்து வேடிக்கை என்று நினைத்தாலும் அது விஷமத்தனமான  கருத்து என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.

மலாய்க்காரர்களைப் பார்த்து இந்தியர்கள் பொறாமைப் படுகிறார்கள்  என்று அவர் சொன்னது  வேறு எப்படி எடுத்துக் கொள்வது?  உண்மையைச் சொன்னால் நமது மேல் தான் மற்றவர்களின் கொள்ளிக்கண் பட்டு விட்டதோ  என்று நினைக்க  வேண்டியுள்ளது!

ஒரு காலகட்டத்தில் முன்னாள் பிரதமர்  டாக்டர் மகாதிர் சொன்னார்: மலேசிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் அனைவரும் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்று.  அதன் பின்னர் தான்  இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் பயில  மலேசியப் பல்கலைக்கழகங்களில்  இடம் மறுக்கப்பட்டது.  அது இன்னும் தொடர்கதையாகவே போய்க் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் மருத்துவம் பயில பெற்றோர்கள் தங்களது சொத்துகளை விற்று வெளிநாடுகளில்  படிக்க வைக்க  வேண்டியுள்ளது.  இப்போது சொல்லுங்கள்.  யார், யார் மீது பொறாமைப்  பட்டது?

இன்னொரு சம்பவமும் நமது ஞாபத்திற்கு வருகிறது.  மைக்கா ஹொல்டிங்ஸ் ஆரம்பித்த காலகட்டம்.  அதே பிரதமர் தான். அப்போது இந்திய மக்களிடமிருந்து பத்து கோடி வெள்ளி வசூலிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில்  அது மிகப்பெரிய தொகை.  டாக்டர் மகாதிரே அசந்து போனார் என்பதாக  துன் சாமிவேலுவே அதனை வெளியிட்டார்.  இந்தியர்களிடமிருந்து இந்த அளவு  பணம் கிடைக்கும் என்று தான்  எதிர்பார்க்கவில்லை என்று டாக்டர் மகாதிர் சொன்னதாக செய்திகள் வெளியாயின.

இது பாராட்டாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது பொறாமையின் வெளிப்பாடு என்பது பின்னர் தான்  நமக்குத் தெரியவந்தது.  மைக்கா ஹொல்டிங்ஸ்  என்ன நிலைக்குத் தள்ளப்பட்டது  என்று பிற்கால வரலாறு நமக்குத் தெரியும்.  இந்தியர்கள் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்  என்கிற எண்ணமே எழாதபடி  அது நமக்கு மறைமுகப் பாடமாக அமைந்துவிட்டது!

பொறாமை என்கிற எண்ணம் யார் மீதும் நமக்கு எழுந்ததில்லை.  ஆனால்  நம்மீது மற்றவர்களுக்குப் பொறாமை எப்போதும் உண்டு!  பல வழிகளில்! அதனால் தான் எங்கும் எதிலும் தடைகள்.  ஒவ்வொன்றையும் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.  நமது உரிமைகளுக்குக் கூட நாம் போராட வேண்டியுள்ளது. என்ன காரணம்?  ஆட்சியில் உள்ளவர்கள் நம்மீது உள்ள பொறாமை தான்!

Monday 6 May 2024

மக்களின் போராட்டத்திற்கு வெற்றி!

 

கோலகுபுபாரு  தோட்ட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததில்  நமக்கும் மகிழ்ச்சியே.

எல்லாகாலங்களிலும் இந்தியர்களை மடையர்களாக  நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடம்.  இந்தியர்கள் என்றாலே எப்படியாவது  மடக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு  ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு ஏற்பட்ட பிணக்கு என்பது  பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேல்  கிடப்பில் போடப்பட்ட வீடமைப்புத் திட்டம் தான்.  சமீபகாலம் வரை அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த ஒரு சீனப்பெண்மணி. ஜ.செ.க. ஏழைகளின் நலனுக்கு பாடுபடும்  கட்சி என்று சொன்னாலும்  அவர்கள் ஏன் மௌனம் சாதித்தார்கள்? ஒரே காரணம் அங்கு ஏற்பட்டது இந்தியர்களின் பிரச்சனை.  அதனால் தான் அவர்கள் அதனைச் செயல்படுத்த  எந்த முயற்சியும்  எடுக்கவில்லை.

ஒர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜ.செ.க. சீனர்கள் கட்சி என்பதில் சந்தேகமில்லை.  அவர்கள் சீனர்களின் பிரச்சனைக்குத் தான்  முக்கியத்துவம் கொடுப்பார்கள். நமது அங்கத்துவம் என்பது சும்மா 'பல்லின கட்சி'  என்று  வெளியே காட்டிக்கொள்ளத்தான்!  மற்றபடி  நமக்கு எந்த மரியாதையும் இல்லை! 

இப்போதும் கூட பார்த்தால் சீனர்களின் பிரச்சனைக்கு வாய் திறப்பார்களே தவிர இந்தியர்களின் பிரச்சனைக்கு 'கப்சிப்' அவ்வளவு தான்!

எப்படியோ இந்த வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்,  செயல்படுத்தியவர், வாதாடியவர், போராடியவர்,  என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணமானவர் Parti Sosialis Malaysia கட்சியின் திரு.அருட்செல்வன் அவர்கள் தான் என்று ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

                                                        அருட்செல்வன் (PSM)
திரு அருட்செல்வன் நல்ல சேவையாளர் என்பது நமக்குத் தெரியும்.  ஆனால் அவரை நம்மால் ஆதரிக்க முடியவில்லை. எல்லாகாலங்களிலும் ஏமாற்றுபவர்களையே ஆதரித்துப் பழகிவிட்டோம்! அதனை மாற்றிக்கொள்ள  முடியவில்லை! நாம் உயிர்வாழ டத்தோ, டான்ஸ்ரீ, டத்தோஸ்ரீ - இவைகளெல்லாம் தேவை!  மீண்டும் மீண்டும் ஏமாறத்  தயாராக இருக்கிறோமே தவிர, திருந்த தயாராக இல்லை! அது தான் நமது நிலைமை!

எப்படியோ இந்த வெற்றியை அங்குள்ள மக்களுடன் சேர்ந்து  நாமும் கொண்டாடுகிறோம். இனி நமது  போராட்டங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக  இருக்கட்டும்.   ஒன்று  சேர்ந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பது இந்த நிகழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

வாழ நினைத்தால் வாழலாம்!

Sunday 5 May 2024

ஏன் வாய் திறக்கவில்லை?

 

பிரதமர் அன்வார்,  இந்திய சமூகத்திற்கு நான் தொடர்ந்து செய்ய வேண்டியதை  செய்து கொண்டு தான்  இருக்கிறேன்  என்று சொல்லி வருகிறார்.

ஆனாலும் அப்படி என்ன செய்து விட்டார் என்கிற கேளவி தான் தொடர்ச்சியாக  எழுப்பப்படுகிறது.  அதில் உண்மை உண்டு என்று  தான் நமக்கும் படுகிறது.

பிரதமர் அடிக்கடி சொல்லுவது என்ன வென்றால்  வணிகம் செய்ய பண உதவி செய்கிறோம்  என்கிறார்.  நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.  மித்ரா மூலம் உதவிகள் கிடைக்கின்றன. அது பெரும்பாலும் ஏழைகளுக்குப் போய் சேருவதில்லை. இருந்தாலும் கிடைக்கின்றது. அதே போல சிறுகடன் உதவிகள் பெற மேலும்  இரு  அமைப்புக்களின் மூலம் கிடைக்கின்றன.  பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அந்த இரு அமைப்புகளும் மலேசியர்களுக்குப் பொதுவானவை.   இருந்தாலும் நமக்கும் அதில் வாய்ப்புக் கொடுப்பதற்காக  நன்றி கூறுகிறோம்.

பிரதமர் மேற்சொன்னவைகளைத் தான் அடிக்கடி குறிப்பிட்டுக்  கூறி வருகிறார்.  இருக்கட்டும் அதனை நாம் மறுக்கவில்லை.  ஆனால் மெட் ரிகுலேஷன் கல்வி இட ஒதுக்கீடு பற்றி மட்டும் பேச மறுக்கிறார்.  இப்போது எத்தனை இடங்கள் கிடைக்கின்றன என்பது பற்றியும் பேசுவதில்லை.  எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்பது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

முன்பு ஒரு காலத்தில பிரதமராக இருந்த நஜீப் ரசாக் 2500 இடங்கள் ஒதுக்கி இருந்தார். அதனையே இலக்காக வைத்து இப்போது நாமும் 2500 இடங்களை ஒதுக்கும்படி  கேட்கிறோம்.  பிரதமரோ அது பற்றி பேசுவதில்லை!  எவ்வளவு தான் கொடுக்கலாம் என்கிற முடிவை அவரால் எடுக்க முடியவில்லை.

இந்திய சமுகத்தைப் பார்த்து, தேர்தலுக்கு முன்பு,  மிகவும் ஏழ்மையான சமுகம் என்று மிகவும் அனுதாபப்பட்டார்.  அவர்கள்  ஏழ்மை நிலையிலிருந்து விடுபட  கல்வி எத்துணை முக்கியம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.  ஆனால் அந்தக் கல்வியைப் பற்றி பேசாமல் கடந்து போய் விடுகிறார்!  இந்திய சமுகத்திற்குக்  கல்வி  தேவை இல்லை என்று நினைக்கிறார் என்று தான் நமக்குத் தோன்றுகிறது.

அதிகாரம் வலிமையானது என்பார்கள்.  அந்த அதிகாரத்தை நாம் அளவுக்கு மீறியே கொடுத்து விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

பிரதமர் இந்திய மாணவர் நலன் கருதி  குறிப்பாக மெட்ரிகுலேஷன்  பற்றியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று நினைவுறுத்துகிறோம்.

Saturday 4 May 2024

இலஞ்சம் தவிர்!

இப்போது நம் கண் முன்னே இருப்பது கோலகுபுபாரு  இடைத்தேர்தல் மட்டும் தான்!

அத்தொகுதியில் உள்ள மக்கள் தான் அவர்களுக்கு எது நல்லது  எது கெட்டது என்கிற முடிவை எடுக்க வேண்டும்.  இத்தனை ஆண்டுகள் அவர்களைப்  பிரதிநிதித்தவர்கள்  எத்தகைய சேவைகளைக் கொடுத்தார்கள்  என்பது அவர்களுக்குத்தான்  தெரியும்.

வெளியே இருந்து கொண்டு பல நூறு அவதூறுகளை அள்ளி வீசலாம். பொதுவாக எடுத்துக் கொண்டால் சிலாங்கூர்  அரசாங்கம்  ஏழைகளுக்குப் பல  நல்ல செயல் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது  என்பதை  ஏற்றுக் கொள்ளலாம். அதில் இந்தியர்களும் பயன் பெறுகின்றனர்  என்பதை மறுக்க முடியாது.

ஆனால் நாம் பேசுவது அந்தத் தொகுதி அளவில் என்ன நடந்திருக்கிறது  என்பது தான்.  நிச்சயமாக அதே தொகுதியில்  மலாய்க்காரர்களும் சீனர்களும் கூடவே இந்தியர்களும்  காலங்காலமாக வாழ்ந்து கொண்டு தான் வருகின்றனர்.

நமக்குத் தெரிந்தவரை  மலாய்க்காரர்களை ஏமாற்ற முடியாது.  அது தானாகவே வந்து சேரும்.  சேராவிட்டால் அதன் பலனை அரசியல்வாதிகள்  அனுபவிக்க நேரும்!   அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் உண்டு .  சீனர்களுக்கு அனைத்தும் 'உள்ளுக்குள்ளேயே'  பேரம் முடிந்துவிடும்.  அவர்களை ஏமாற்றுவது கடினம்.

இதில் இந்தியர்கள் தான் வாயில்லா பூச்சிகள்! ஏமாற்றுவது எளிது. நமது தேவைகள் புறக்கணிக்கப்படுவது  இயல்பு.  நமது தேவைகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  உணவு பொட்டலங்களைக் கொடுத்து சரிபண்ணுவது நமக்கு மட்டும் தான் நடக்கும்!    இது தான் நமக்குக் கிடைக்கும்  இலஞ்சம்!  இதனைக் கொடுத்தே இந்திய சமுதாயத்தை சரிசெய்துவிடலாம் என்கிற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு உண்டு!

நமது கோரிக்கை என்ன என்பதற்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அங்கு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படாத ஒரு திட்டம் என்று கூறப்படுகிறது.  அதனை நிறைவேற்றக் கூறி நாம் அழுத்தம் கொடுக்கலாம்.  இந்த நேரத்தில் அது நிறைவேற வாய்ப்புகள் உண்டு. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் போராட வேண்டும்.

இத்தனை நாள்கள் நடந்த பேச்சுவார்த்தைகள், பிரச்சாரங்கள், பல்வேறு கருத்துகளை அங்குள்ள தொகுதி தலைவர்கள்  கேட்டிருப்பார்கள்.  அதன் மூலம் அவர்களுக்கு நல்ல தெளிவு கிடைத்திருக்கும்.  யாரை நம்பலாம், யார் போலிகள்  போன்ற விபரங்கள் இப்போது  தெரிந்திருக்கும்.

நீங்களே யாருக்கு உங்கள் வாக்கு என்பதை முடிவு செய்யுங்கள்.   குடிமுழுகிப் போக ஒன்றுமில்லை. இலஞ்சம் தவிர் என்பதை மறந்து விடாதீர்கள்!

 

Friday 3 May 2024

வெறும் வார்த்தைகள் போதா!

 

அசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லையா? அதைத்தான் கேட்கிறோம் இந்த இடைத்தேர்தலில்!  அதனை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் உருட்டல்களை நம்பித்தான் வாக்குகள் அளிக்கிறோம். பதவிக்கு வந்தவுடன்  அவன் மேலே போகிறான்  நாம் கீழே போய்விடுகிறோம்!

அது பற்றி நமக்குக் கவலையில்லை.  அவனுக்கு இருக்கிற அதே உரிமை நமக்கும் இருக்கிறது.  சில தேசிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை.  ஆனால் அந்தத் தொகுதி மக்கள்  ஏமற்றப்பட்டிருக்கிறார்களே  அது பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும். 

அந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜ.செ.கட்சியைச் சேர்ந்தவர்.  மூன்று தவணைகள்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தும்  அவர் அங்கு நிலவிய வீடமைப்புத் திட்டத்திற்கு  ஆதரவு தரவுமில்லை; முடிவுக்குக் கொண்டு வரவுமில்லை.  அதனால் தான் இது நாள் வரை இத்தனை இழுத்தடிப்புகள்.  இழுத்தடிப்பு என்றால் ஜ.செ.க. செயல்படவில்லை என்பது தான் பொருள். 

என்ன காரணமாக இருக்கும்?  வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது  நிலம் சீனர்களுடையது வீடுகள் இந்தியர்களுக்கானது - என்று தான் இருக்க வேண்டும். அது தான் மலேசிய சூழல்.  சீனர்கள் என்னும் போது ஜ.செ.கட்சி செயல்படாது என்பது நமக்குத் தெரியும்.  இந்தியர்களுக்கு என்றால் ஜ.செ.க. அலட்சியம் காட்டத்தான் செய்யும்!  அது தான் அவர்களது வாடிக்கை!

அதனால் தான் அங்குள்ள இந்தியர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். வீடமைப்புப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையென்றால்  "எங்கள் வாக்கு எதிர்கட்சியினருக்கே!"  என்கிற கோஷம் சரியானது தான்!

அரசாங்கம் நமது உரிமைகளுக்கு மரியாதை தரவேண்டும். கல்வி, வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான். அது தேசியப் பிரச்சனை.  நமக்கு இந்தத் தொகுதியே இப்போதைய பிரச்சனை. கோலகுபுபாரு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்கிற உறுதிமொழி இருந்தால் பக்காத்தானுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம்.

Thursday 2 May 2024

அவதூறுகளைப் பரப்ப வேண்டாம்!

 

பொதுவாக இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு  அமைச்சர் பதவி  கிடைத்திருப்பது,  அது இப்போது தான் நடந்திருக்கிறது. அதுவும் பிரதமர் அன்வார் காலத்தில் நடந்திருப்பது  மேலும் விசேஷம் என்று தான் சொல்ல வேண்டும்.

பிரதமர் அன்வார் பற்றி பலவேறு கருத்துகள் நமக்கு இருந்தாலும்  அவருடைய அமைச்சரவையில்  ஒரு  தமிழ் பெண்ணுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். 

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பிரதமரின் இந்த முடிவை அவருடைய கட்சியின், அல்லது ஒற்றுமை அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்களே  அவருக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான்! அதனை நாம் சமீபத்தில் கண்டோம்.  ஆமாம், மித்ரா அமைப்பை பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்பதில் ஏன் அத்தனை வன்மம்? அத்தனை பேரும் மாற்றியே ஆக வேண்டும் என்று பொர்க்கொடி தூக்கினார்கள்,  எதனால்?  "எங்களுக்குத் துணை அமைச்சர் மேல் நம்பிக்கையில்லை!"  என்கிற  ஆவேசம்  தானே! இவர் ஒரு பெண், இவரால் என்ன செய்ய முடியும்? என்கிற வயிற்றெரிசல்  ஒருபுறம்!  ஒரு தமிழ் பெண் என்றால்  உங்களுக்கு எவ்வளவு இளக்காரம் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது.  சீன, மலாய் பெண்கள் என்றால் காலில் விழத்தயார்! ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்களைவிட அவர் எந்த வகையிலும் தகுதியில் முறைந்தவர் அல்ல.

ஒற்றுமைத் துறையிலிருந்து  பிரதமர் துறைக்கு மித்ராவை மாற்றியது  பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது.  அதனை மாற்றுவதற்கு நீங்கள் காட்டிய முனைப்பு 'ஹின்ராப்' முனைப்பு என்று சொல்லலாமா?    அதனையே இன்று இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு  அந்த முனைப்பைக் காட்டியிருந்தால் இன்று பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குமே!  ஒரு பெண் என்பதால்  அவ்வளவு தீவிரம் காட்டினீர்கள்!  ஏன் இப்போது நம் கண்முன்னே உள்ள பிரச்சனைகளுக்கும் அதே தீவிரத்தைக் காட்டுங்களேன்!  சும்மா வெத்து வேட்டுகள் என்று தான் உங்களைப்பற்றி நான் சொல்லுவேன்!

இப்போதும்  அவரைப்பற்றி புரளி கிளப்புகிறீர்கள் என்பது நமக்குத் தெரிகிறது.  உங்கள் வேலையை நீங்கள் பார்த்தாலே போதுமானது. யாருக்கும் புண்ணியமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நமக்கும் விளங்குகிறது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.  நீங்கள் தேர்தலுக்குப் போகும் போது உங்கள் சேவை தான் முன் நிறுத்தப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.  ஒரு பெண் அமைச்சரை உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்றால்  வேறு யாரை மதிக்கப் போகிறீர்கள்?